[X] Close

குரு மகான் தரிசனம் 12 : ஶ்ரீ பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்


guru-mahan-dharisanam-12

பாடகச்சேரி சுவாமிகள்

  • kamadenu
  • Posted: 30 Aug, 2018 13:58 pm
  • அ+ அ-

என் கடமை பணி செய்து கிடப்பதே…! என்ற வாக்கிற்கேற்ப… தனது பணியினை செம்மையுற அமைத்துக் கொண்டு மக்களுக்கு தன் அருளாசியை வாரி வழங்கிச் சென்ற இறையருட் செல்வர்... பாடகச்சேரி சுவாமிகள். ‘இறைவன் அளித்த வாழ்வு பிறர்க்கு பயன்படுவதற்காகவே’ என்ற உயரிய நோக்குடன் 19 -20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மகாயோகி. பசிப்பிணி, உடற்பிணி இந்த இரண்டையும் அறவே போக்கிய அருளாளர்.

நடமாடும் தெய்வமாக பார்க்கப்பட்ட நமது காஞ்சிமகா சுவாமிகளே பாடகச்சேரி சுவாமிகளை தனது பேருரையில்  சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.

சுவாமிகளின் அவதார ஆண்டு 1876… பிறப்பிடம் கோயம்புத்தூர். அவதாரம்  நடந்தது  என்னவோ இங்கு, பிறகு கங்கைக்கு இணையாக கருதப்பட்ட தூகத்திய நதி (வெட்டாறு) பாயும் பாடகச்சேரிக்கு 12- வயதில் வந்துவிட்டார். இந்த நதியின் பெருமை... தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாயும் தன்மை கொண்டது!

நதி போல் தனது சுபாவத்தை உருவாக்கிக் கொண்ட சுவாமிகள் தனது 12-வது வயதில் பாடகச்சேரிக்கு வந்து சேர்ந்ததே மாபெரும் பாக்கியம். கும்பகோணம் – மன்னார்குடி சாலை மார்க்கத்தில் வலங்கைமானுக்கு 4 கி.மீ. தொலைவில் அமையப்பெற்ற தலமே பாடகச்சேரி!

சுவாமிகள் இங்கு வந்ததும் ஏற்றுக் கொண்டது மாடு மேய்க்கும் தொழிலே!  அந்த வயதில் இந்த ராமலிங்கத்தை அருட்பெரும் ஜோதி ராமலிங்கம் ஆட்கொண்டது.

தனது உபதேசத்தை மனமுவந்து அளித்தார். பிறகு அவரது ஆன்மிகபயணம் தொடங்கியது.

பெரும்பாலும் பைரவ சுவாமிகளை ஆராதித்து வந்ததால் அவர் ப்ரத்யக்ஷ தெய்வமாகிப் போனார். குறிப்பாக எங்கோ ஒரிடத்தில் எவருக்கும் தெரியாமல் அமர்ந்திருப்பார். இவரைத் தேடி வரும் பக்தர்கள் அவர் காணக்கிடைக்காமல்  அங்கே, இங்கே அலைந்து கொண்டிருக்கும் நாய்களிடம் ‘குருநாதர் எங்கே?’  என்று கேட்பார்கள்.

அவ்வளவுதான். அடுத்த நிமிடம் அதே நாயுடன் அவர்களின் எதிரில் வந்து நின்றிருப்பார். பைரவர் ஸ்வரூபமாகவே காட்சி தந்திட்ட இவருக்கு நாய்கள் என்றால் அவ்வளவுப்  பிரியம்:

ஒரே சமயத்தில், நூறு தலைவாழை இலைகளைப்போடச் சொல்லி அதில் அறுசுவை உணவுகளை இட்டுவிட்டு கண்மூடி வேண்டி நிற்பார். அடுத்த நிமிடம்... நூறு நாய்கள் நூறு இலைகளையும் ஆக்கிரமித்திருக்கும். அந்த ஊரில் அதற்கு முன் இத்தனை நாய்களைப் பார்த்திருக்க மாட்டார்கள்.  ஆனாலும், அந்த அதிசயத்தை அவர் நிகழ்த்திக் காட்டுவார்.

உடல் நலிவுற்றுப்போய் இனி பிழைக்க மார்க்கமில்லை என்ற நிலையில் வந்து நிற்பவர்களுக்கும் ஒரு துளி விபூதியில் காப்பாற்றி கரை சேர்ப்பார்  சுவாமிகள்.

பாடகச்சேரியை விட்டும் எங்கும் நகரமாட்டார். வியாதியில் வந்தவர்களுக்கு விபூதியும் – மூலிகையும்தான் கண்கண்ட  வைத்தியம். இதுவாவது பரவாயில்லை! இறந்து விட்டார்கள் என்று மருத்துவர் கைவிரித்தவர்களைக் கூட எழுப்பி உட்கார வைத்துள்ளார்.  இதனாலேயே இவர் புகழ் பரவியது. மக்கள் திரண்டனர். சிதிலமடைந்துபோன எத்தனையோ ஆலயங்களை புனர்நிர்மாணம்  செய்வித்தார். புது ஆலயங்களையும் கூட நிர்மாணம் செய்துவைத்தார்.

திருநாகேஸ்வரம் திருத்தலம் தெரியும்தானே. கும்பகோணம் அருகே பெருமை வாய்ந்த ராகு ஸ்தலம். நாகநாத சுவாமிகள் அருளாட்சி செய்யும் இடம். ஒரு காலகட்டத்தில் இந்த ஆலயத்தின் மதிற்சுவர்கள் இடிந்து பாழடைந்திருந்தது. பெரும் தனவந்தர்களே… இதன் செலவு மதிப்பீடு என்ன ஆகுமோ?... என்று அஞ்சி நடுங்கிய தருணத்தில் தனி ஒருவனாக சுற்றி அலைந்து பெரும் நிதி திரட்டி 1928-ல் திருப்பணியை நிறைவேற்றிக் காண்பித்தார்  சுவாமிகள். அதனாலேயே அந்தத் தலத்தில் சுவாமிகளுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே நற்குருமார்களானவர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய சீடர்களைத் தேடியபடியேதான் இருப்பார்கள். அந்த வகையில், நமது சுவாமிகளுக்கு அருட்திரு ராமலிங்க அடிகளாரின் உபதேசத்திற்கு முன்பே வேறொரு குருவின் அருட்கடாட்சமும் வந்து சேர்ந்தது.

ஆம்! அவர்தான் எரிதாதா சுவாமிகள் எனும் மகாயோகி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் எப்படியோ தனது தவயோகத்தால் ராமலிங்கத்தை அடையாளம் கண்டு கொண்டார். அடுத்த தினமே அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். யோகரகஸ்யங்கள் முழுவதையும் சொல்லிக் கொடுத்தருளினார். கிட்டத்தட்ட ராமலிங்க சுவாமிகளைப் புடம் போட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒரு யோகநிலையை அடைந்ததால்தானோ என்னவோ நோய்ப்பிணிகளை எல்லாம் திக்கு திசை தெரியாமல் விரட்டி அடித்தார் சுவாமிகள்.

சுவாமிகள் குருநாதர்தான் ஆந்திராவிலிருந்து வந்தாரா என்றால் இல்லை! நமது சுவாமிகள் பூர்வீகம் கூட ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள உறவகொண்டா… (உருவிகொண்டா) என்ற சிற்றூர். இந்த ஊரில்தான் சுவாமிகளின் பெற்றோர் வசித்துவந்துள்ளனர். காலப்போக்கில் அவர்கள் கோவைக்கு குடிபெயர்ந்ந்த நிலையில் அங்கு அவதரித்தார்  சுவாமிகள்.

சுவாமிகளின் தந்தையோ திண்ணைப்பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். சிறுவயதிலேயே பெற்றோர்  காலமாகிவிட்டதால் வெகு சீக்கிரத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.

சுவாமிகளுக்கு பைரவ உபாசனை ஏற்பட்டது அல்லவா. அந்த உபதேசத்தை அவருக்கு வழங்கியவர் நேபாளத்தின் மகாராஜாவாக விளங்கிய ராஜாராம் சுவாமிகள். பைரவ உபாசனையில் தேர்ந்தவரான சுவாமிகள், தனது முக்கிய நடவடிக்கையாக நாய்களுக்கு உணவளிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டார்.

அடுத்த நாள் அன்னதானம் என்றால் முதல்நாளே பக்கத்து கிராமங்களில் உள்ள நாய்களுக்கு தகவல் அனுப்பிவிடுவாராம். அல்லது நேரில் சென்று அழைப்பு வைப்பாராம். நாய்கள் தேவர்களின் அம்சம் என்றே சொல்லி வருவாராம்.

விருந்து அறிவிக்கப்பட்ட தினத்தில் நூற்றுக்கணக்கான வாழை இலைகள் பரிமாறப்பட்டு அதில் வடை பாயசத்துடன் விருந்து காத்திருக்க, சுவாமிகள் ‘விருந்து தயார்’ … என்று சொல்லியபடியே தனது கையிலிருக்கும் ஒரு கோலால் தரையில் தட்டுவாராம். அடுத்த நிமிடம் எங்கிருந்துதான் அவ்வளவு நாய்க்கூட்டம் வருமோ தெரியாது. வந்தவை எதுவுமே ஒரு சிறு குரைப்பு கூட இல்லாமல் ஒவ்வொரு இலை முன்பும் அமர்ந்து கொள்ளுமாம். சாப்பிட்டு முடித்தபிறகு சுவாமிகளிடம் தலைசாய்த்தபடி நன்றி தெரிவித்துவிட்டு புறப்படுமாம்.

வள்ளலாரின் மறு அவதாரமாகவே கருதப்பட்ட இவருக்கு, பாடகச்சேரியில் இருந்து சற்றே சிறு தொலைவில் உள்ள பட்டம் என்ற கிராமத்தில்தான் உபதேசம் வள்ளலாரின் சூட்சம ரூபத்தில் கிடைத்திருக்கிறது. அந்த காலகட்டத்தில்தான் சுவாமிகளுக்கு நவகண்ட யோகம் வரம் ஸித்தி பெற்றிருந்தது. உடலினை ஒன்பது பாகங்களாக பிரித்தெடுக்கும் யோகக் கலை அது!

ஒருநாள்... மாடு மேய்க்கும் பணிமுடிந்தும் இருப்பிடம் திரும்பாமல் இருக்கவே, இவரது எஜமானனுக்கு சந்தேகம் ஏற்பட்டு வேலையாட்களை அனுப்பி தேடினார்.  அந்த சமயத்திலோ சுவாமிகள் நவகண்ட யோகம் என்ற அந்த சித்து விளையாட்டை நடத்திக் கொண்டிருந்தார்.  தலை வேறு, கால் – கை வேறு என்று பார்த்ததும் அலறியடித்து திரும்பிய வேலையாட்கள் , எஜமானனிடம் மூச்சிரைக்க விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுவாமிகள் கால்நடைகளுடன் ஆஜராகியிருந்தார். நம்மிடம் வேலையாளாக இருப்பவர் மகாயோகி என்பதைத் தெரிந்து கொண்ட அடுத்த நொடியே சகலமரியாதைகளுடன் வழி அனுப்பிவைத்தார்.

தனது வழக்கமான பாணிக்கு திரும்பிய சுவாமிகள் வெட்டாறு நதிக்கு எதிர் திசையிலேயே ஒரு வேல் ஒன்றை ஸ்தாபித்து தனது வழிபாட்டினைத் தொடங்கினார். அது முருகனது ஆலயமாக இருக்கவும் பலரும் வழிபடத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் ஒரு சில சமூக விரோதிகள் தவறான பணிகளைச் செய்து வரவே அவர்களைக் கண்டிக்கத் தொடங்கவே.. வந்தது வினை. அவர்கள் ஒன்று கூடி இவரைக் கொல்ல திட்டமிட்டபடி தேதி குறித்தனர்.

மகான் அறியாத செய்தியா?... அவர்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் நொடித்துளிகளில் தனது உடல் பாகங்களை கழற்றி அக்குவேறு ஆணிவேறாக போட்டு வைத்தார். வந்தவர்கள் வாயடைத்து முகம் வெளிறி நின்றனர். தங்களுக்கு முன்பாகவே எவரோ சுவாமிகளைக் கொலை செய்துவிட்டதாக நினைத்து ஓடத்துவங்க… சற்றும் எதிர்பாராமல் எதிர்பட்ட சுவாமிகள் ‘என்னப்பா? என்னய வெட்டிப் போட்டீகளாக்கும்?’ என்றார். அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பாடகச்சேரியிலிருந்து தனது குடியிருப்பை கும்பகோணத்துக்கு மாற்றிக் கொண்டார் சுவாமிகள். அந்த ஊரில் முத்துப்பிள்ளை மண்டபத்தில் தங்கியவாறே யோகமார்க்கத்தில் சென்றார். அவர் அங்கிருந்த காலங்களில் ஊரில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடியது. உடனடியாக ‘கூழ்சாலை” ஒன்றைத் துவங்கி மக்களின் பசித்துயர் போக்கும் பணியினை மேற்கொண்டார்.

இந்த நேரத்தில் ஆதப்ப செட்டியார் என்ற அன்பரின் வாழ்க்கையில் மிகப்பெரும் வினை தீர்த்துவைத்தார்  சுவாமிகள். ராமநாதபுர வாசியாகிய ஆதப்பருக்கு குன்மநோய் வாட்டி எடுத்தது.  முருக பக்தரான அவர் மனமுருக பிரார்த்தித்து மன்றாடவே அன்றிரவே முருகன் வேலுடன் ஆதப்பரின் கனவில் வந்து நின்று “ நீ பாடகச்சேரி ராமலிங்கத்தினைச் சந்தித்து துயர் நீக்கிக் கொள்” எனச் சொல்லி மறையவே, அடுத்தநாளே அடித்துப் பிடித்து மகான் முன்பு ஆதப்பச் செட்டியார் நின்றார். தனது நோயையும் தனக்கு வந்த கனவையும் விவரித்தார்.

மெலிதான புன்முறுவலுடன் ஜ்வலித்த மகான் ஆதப்பரிடம் நோய் தீர்க்கும் குளிகை ஒன்றைத் தந்தருளினார். அதை உட்கொண்ட அடுத்த மணித்துளிகளில் குன்மம் ஓடிப்போயிருந்தது.

ஆதப்பச் செட்டியார் உடல் தகதகவென மின்னியது. தந்தையின் தீராத நோயினை தீர்த்தருளிய மகானுக்கு ஏதாவது கைம்மாறு செய்தே ஆக வேண்டும் என்று விரும்பிட்ட அவரது மகன்கள்… சுவாமிகளிடம் மன்றாடி கேட்கவும்… “சரி! உங்கள் விருப்பப்படி மடம் ஒன்றைக் கட்டித் தாருங்கள்” என்று கோரினார்.  அடுத்த சில  தினங்களிலேயே அதை சாதித்து முடித்திருந்தனர் ஆதப்பரின் புதல்வர்கள். பிறகும் கூட சுவாமிகள் உத்தரவுப்படி திருநாகேசுவரம் நாகேஸ்வரன் கோவில் நடராஜர் சன்னதியை கட்டித் தந்தனர். புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சை கீழ்வாசல் வெள்ளப்பிள்ளையார், சென்னை கிண்டி முனீஸ்வரர் ஆலயம், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஆலயம் என்று பல கோயில்களுக்கு திருப்பணிகள் செய்தார்.

- தரிசனம் தொடரும்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close