[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 25: நீங்க மன்னிச்சிருக்கீங்களா? உங்களுக்கு மன்னிப்பு கிடைச்சிருக்கா?


chinnamanasukkul-seena-perunchuvar-25

  • நாகூர் ரூமி
  • Posted: 24 Aug, 2018 09:17 am
  • அ+ அ-

இது நடந்தது 2007-ல். ஈரான் நாட்டில். இரண்டு பதின்பருவத்தினர். அப்துல்லாஹ், பிலால். இருவரும் ஒன்றாக கால்பந்து விளையாடியுள்ளனர். ஆனால் ஒருநாள் ஏதோ கோபத்தில், இருவருக்கும் நடந்த தெருச்சண்டையில் அப்துல்லாஹ்வை கத்தியால் குத்தி பிலால் கொன்றுவிட்டான். ஏற்கெனவே அவனது அம்மா சமீரா அலீநிஜாத் தன் முதல் மகனை பதினோரு வயதிலேயே ஒரு ‘பைக்’ விபத்தில் இழந்திருந்தார். இப்போது இரண்டாவது மகனும் போய்விட்டான். கொலைகாரனை மக்கள் பார்க்கும்படி தூக்கிலிட வேண்டும் என்பதுதான் அவளது விருப்பம். அந்நாட்டு வழக்கப்படி அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இடையில் இரண்டு மூன்று முறை சமீராவின் கனவில் இறந்த அவரது மகன் வந்து தன்னைக் கொன்றவனை மன்னிக்கும்படி சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால் சமீராவின் மனம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கொலை செய்த பிலால் தூக்கில் தொங்கினால்தான் மனம் சாந்தியடையும்.

அந்த நாளும் வந்தது. ஈரான் நாட்டு வழக்கப்படி, முகம் மூடப்பட்டு, தூக்குக்கயிறு கழுத்தில் மாட்டப்பட்டு, நாற்காலியின் மீது கைதி நிற்கவைக்கப்பட்டான். அவனால் கொல்லப்பட்டவரின் அம்மாவோ அப்பாவோ அந்த நாற்காலியை உதைத்து அவனைத் தூக்கில் தொங்கி இறக்கும்படிச் செய்யலாம். அந்த வாய்ப்பை தன் மனைவி சமீராவுக்கு விட்டுக்கொடுத்திருந்தார் சமீராவின் கணவர் அப்துல்கனி. தூக்கிலிடப்பட இருந்த கொலைகாரனின் அம்மாவும் அங்கே இருந்தார். ஏதாவதொரு அதிசயம் நடந்துவிடாதா? தன் மகனை எப்படியாவது காப்பாற்றிவிட முடியாதா என்ற நப்பாசை அவருக்கு, பாவம்.

கடைசிக்கணத்தில் சமீராவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. தன் காலால் பிலால் நின்றுகொண்டிருந்த நாற்காலியை உதைத்து அவனைத் துடிக்கத்துடிக்க சாகடிக்க இருந்தவர் அவனருகில் வந்து கருப்புத்துணியால் முகம் மூடப்பட்டிருந்த அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பிறகு கணவர் அப்துல்கனி மனைவி சமீரா இருவரும் சேர்ந்து அவனது முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினர். அது அவனை மன்னித்ததற்கான அடையாளம். உடனே அவன் மன்னிக்கப்பட்டவனாக அறிவிக்கப்பட்டான். அந்த அதிசயம் நடந்ததை நம்ப முடியாத கொலைகாரன் பிலாலின் தாயார் அழுதுகொண்டே சமீராவின் காலில் விழ வந்தார். அவரை அப்படிச் செய்ய விடாமல் தூக்கிய சமீரா அவரது கையைப் பிடித்துக்கொண்டு தானும் அழுதார். பிலாலின் தாயாரும் ரொம்ப அழுதார். இரண்டு தாய்மார்களையும் பார்த்து கூட்டம் அழுதது.

அந்த மன்னிப்புக்குப் பிறகே தன் மனதில் அமைதி ஏற்பட்டதாக சமீரா கூறினார். உலகம் முழுவதிலுமிருந்த பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அந்தக் கடைசிக் கண மன்னிப்பால் பிலால் உயிர் பிழைத்த காட்சி காட்டப்பட்டது. யூ டியூபில் இன்றும் அதைப் பார்க்கலாம்.

’நீங்கள் மன்னிக்க முடிவு செய்யும்போது வேதனையின் ஒரு பகுதியை குணப்படுத்துகிறீர்கள். நீங்கள் மன்னித்துவிடும்போது வேதனையை முழுமையாக குணப்படுத்திவிடுகிறீர்கள்’ என்றார் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா.

தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக, சிலுவையில் தொங்கிக்கொண்டே இயேசு, அவர்கள் செய்வதறியாது தவறிழைத்துவிட்டார்கள், அவர்களை மன்னித்து விடுங்கள் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்!

யூதப்பெண்ணொருத்தி முஹம்மது நபி அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் விஷம் வைத்த உணவை வேண்டுமென்றே வைத்தாள். அதில் ஒரு கவளம் எடுத்து உண்ட தோழர் இறந்து போனார். நபிகள் நாயகத்தின் உயிர் போகவில்லை என்றாலும் அவர்கள் வாழ்ந்தகாலம் பூராவும் அந்த விஷத்தின் பாதிப்பு தொடர்ந்து இருந்தது. அந்த யூதப்பெண்ணை எப்படிக் கொல்லலாம் என்று தோழர்கள் கேட்டனர். அந்தக் காலத்தில் பழிக்குப்பழி வாங்கும் முறை அதுவாகத்தான் இருந்தது. ’அ’ என்ற கோத்திரத்தில் உள்ள ஒருவர் ‘இ’ என்ற கோத்திரத்தில் உள்ள ஒருவரைக் கொலை செய்துவிட்டால் அதற்குப் பரிகாரமாக கொலைசெய்தவரைத்தான் கொல்ல வேண்டும் என்பதில்லை, ‘அ’ கோத்திரத்தினர் யாரையாவது கொன்றாலும் போதும். அந்தக்கால அரேபியாவின் நீதி அதுவாகத்தான் இருந்தது. நாம் வாயாடுவதைப்போல அவர்கள் வாளாடினார்கள். மன்னிப்பு என்ற புதுமையை அவர்கள் அறிந்ததில்லை. ஆனால் அவளை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று நபிகள் நாயகம் உத்தரவிட்டார்!

ஈவா, மிரியம் இருவரும் இரட்டைச் சகோதரிகள். ஆறுவயதானபோது குடும்பம் நாஜிகளால் பிடிக்கப்பட்டது. மே 1944-ல், ஹிட்லரின் ஆஷ்விஷ் சித்திரவதை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது ஈவா மிரியமுக்குப் பத்து வயது. அப்பாவையும் அக்காக்களையும் அவர்கள் கடைசியாகப் பார்த்தது அங்கேதான்.

அந்த சித்திரவதை முகாமில் நடத்தப்பட்ட பரிசோதனைகளைப் பற்றியெல்லாம் பல ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். இப்படியெல்லாம்கூட மனிதனால் கொடூரமாகக் கற்பனை செய்ய முடியுமா, இப்படியெல்லாம்கூட நடந்துகொள்ள முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே பயங்கரமான பரிசோதனைகள், சித்திரவதைகள் அங்கே நடந்தேறின. அவற்றில் ஒன்று இரட்டைக் குழந்தைகளை வைத்து ஜோசஃப் மெங்க்லீ என்ற ஒரு டாக்டர் ஷைத்தானால் செய்யப்பட்ட பரிசோதனைகள்.

வந்து இறங்கிய அரைமணி நேரத்தில் ஈவா, மிரியம் இருவரும் இரட்டைக்குழந்தைகள் என்று தெரிந்தவுடனேயே அம்மாவிடமிருந்து அவர்கள் பிரிக்கப்பட்டனர். அம்மாவை அவர்கள் கடைசியாகப் பார்த்தது அப்போதுதான். ஆனால் அம்மாவை தாங்கள் இறுதியாகப் பார்க்கிறோம் என்று அப்போது அவர்களுக்குப் புரியவில்லை. கதறிய குழந்தைகள் இருவரையும் தனியறையில் அடைத்து வைத்தனர். கைகளை நீட்டியவண்ணம் குழந்தைகளைப் பார்த்துக் கதறிய தாயின் உருவம் தன் கண்ணில் இன்னும் நிழலாடுவதாக ஈவா கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் இரட்டைக் குழந்தைகளை வைத்து பலவித பயங்கரமான பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. கிட்டத்தட்ட 1500 ஜோடி இரட்டைக் குழந்தைகள் மனிதத்தன்மையற்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 200 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ஈவாவும் மரியமும் உண்டு.

ஒரு தனியறையில் அக்குழந்தைகள் நிர்வாணமாக குறைந்தது எட்டு மணி நேரம் வைக்கப்பட்டனர். அவர்களது ஒவ்வொரு அங்கமும் அளக்கப்பட்டது. அவர்களுக்கு பலமுறை ஊசிகள் போடப்பட்டன. அதில் என்ன கருமம் இருந்தது என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஈவா இவ்வாறு வைக்கப்பட்டார். செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் ஈவாவின் கைகளை இறுக்கமாகக் கட்டி அவரது இடது கையிலிருந்து நிறைய ரத்தம் எடுத்தனர். பிறகு குறைந்தது ஐந்து ஊசிகளாவது போட்டனர்.

அப்படி ஒரு ஊசி போடப்பட்ட பிறகு கடுமையான காய்ச்சல் வந்தது ஈவாவுக்கு. கை கால்களெல்லாம் கடுமையாக வீக்கம் கண்டன. ரொம்ப வலித்தது.

பிறகு வந்து பார்த்த சாத்தான்களின் தலைவனான டாக்டர் மெங்க்லீ, ‘நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. இரண்டு வாரங்கள்தான் இவள் உயிருடன் இருப்பாள்’ என்று கூறிச்சென்றான். நெரிசலான அந்த முகாமில் ஈவா நடக்க முடியாமல் தவழ்ந்தாள். மயக்கம் வருவதும் தெளிவதுமாக இருந்தது. ஆனால் ஆழ்மனதில் ‘நான் எப்படியாவது உயிர்வாழவேண்டும்’ என்ற உறுதி அவளிடம் இருந்தது. இரண்டு வாரம் கழித்து காய்ச்சல் குறைந்து மறைந்தது.

குழந்தைகளின் கண்களில் ஊசிகள் செருகப்பட்டன. நிறம் மாறுகிறதா என்று பார்த்தார்களாம்! சில இரட்டைக் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் சேர்த்து வைத்து தைக்கப்பட்டனர்! ஒரு குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அது செத்துப் போனால் இன்னொரு குழந்தையும் உடனே கொல்லப்பட்டது!

உடலில் இருந்து எலும்பு, எலும்பு மஜ்ஜை, தசை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எந்த வித மயக்க மருந்தும் கொடுக்காமல் கதறக்கதற உருவி, உடைத்து, நொறுக்கி, பிய்த்து – இப்படி என்னென்னவோ செய்து எடுக்கப்பட்டன! அந்த சித்திரவதையில் உயிர் பிழைத்த பலருக்கு வாழ்நாள் ஊனம் ஏற்பட்டது.

பதினொன்று அல்லது பன்னிரண்டு வயதுடைய ஆண் குழந்தையை ஒரு நாற்காலியில் நகரமுடியாமல் கட்டி வைத்து மண்டையில் ஒரு சுத்தியலால் சில வினாடிகளுக்கொருமுறை அடித்துக்கொண்டே இருந்தார்கள்! தலையில் காயம் ஏற்படுத்தி பரிசோதிக்கிறார்களாம்!

இப்படி அந்த சைத்தான்கள் செய்த அட்டூழியங்களை எழுதவே கை நடுங்குகிறது. ஆனால் ஈவாவும் மிரியமும் அதையெல்லாம் தாண்டி இறையருளால் உயிரோடு இருந்தனர் என்பது ஆச்சரியமே. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இப்படிப்பட்ட சித்திரவதைகளை அவர்கள் அனுபவித்தனர். ஜனவரி 12, 1945-ம் ஆண்டு சோவியத் படையினரால் அந்த முகாமிலிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். அதில் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளில் ஈவாவும் மிரியமும் இருந்தனர்.

பின்னர் சொந்தக்காரர்களின் உதவியுடன் படித்து, வளர்ந்து, பேராசிரியையாகவும் எழுத்தாளராகவும் ஆனார் ஈவா. திருமணமான பிறகு முகாம் சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்ட சிறுநீரகக் கோளாறுகளால் மிரியம் இறந்துபோனார்.

எண்பத்து மூன்று வயதாகிறது ஈவாவுக்கு இப்போது. ஆஷ்விஷ் முகாமில் சித்திரவதை அனுபவித்துப் பிழைத்த குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். ’நாஜிகளை மன்னித்த பெண்’ என்று ஒரு டாக்குமெண்டரியும் இவரைப்பற்றி 2016-ல் எடுக்கப்பட்டது. இவர்களை சித்திரவதை செய்த டாக்டர் மெங்க்லீயை மன்னித்தல் என்ற டாக்குமெண்ட்ரியும் எடுக்கப்பட்டது.

ஆஷ்விஷ் சித்திரவதை முகாமிலிருந்து தப்பித்த ஒரு பெண் தன்னை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய டாக்டர் மேங்க்லீயை மன்னித்து ஒரு கடிதம் எழுதினார். முதலில் விஷக்காற்றை அனுப்பி மக்களைக் கொன்றதற்குச் சாட்சியாக இருந்த முன்ச் என்ற நாஜி டாக்டர் ஒருவரை மன்னிக்கும் கடிதத்தை ஈவா எழுதினார். ஆனால் ஈவாவின் ஆங்கில எழுத்துப் பிழைகளை சரிசெய்து கொடுத்த ஒரு தோழிதான் டாக்டர் மேங்க்லீயைத்தான் நீங்கள் மன்னிக்க வேண்டும் என்று விளக்கினார்.

அதை ஈவா ஏற்றுக்கொண்டாலும் அவரால் மேங்க்லீயை முதலில் மன்னிக்கத் தோன்றவில்லை. முதலில் அவரைத் திட்டி இருபது கெட்ட வார்த்தைகளை எழுதிய ஈவா, மேங்க்லீயின் உருவத்தை தன் எதிரில் கற்பனை செய்து அந்த கெட்ட வார்த்தைகளை உரக்கச் சொன்னார். பின்னர் இதையெல்லாம் தாண்டி நான் உங்களை மன்னிக்கிறேன் என்று சொன்னார்.

அப்படிச் சொன்ன பிறகு அவரது மனம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு அமைதியை அடைந்தது. ’மன்னிக்கும் ஆற்றல் என்னிடமிருந்தது என்பதை நான் கண்டுபிடித்தேன். அதை எனக்கு யாரும் கொடுக்க முடியாது. என்னிடமிருந்து அதை யாரும் எடுத்துக்கொள்ளவும் முடியாது’ என்று ஈவா கூறுகிறார். பின்னர் டாக்டர் முன்ச் உடன் ஆஷ்விஷ் முகாமுக்குச் சென்ற ஈவா அங்கே தனது ’டிக்லரேஷன் ஆஃப் அம்னெஸ்டி’ என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டார். மன்னிப்பு உங்கள் ஆன்மாவை விடுதலை செய்யும் என்று ஈவா கூறினார்.

பலகீனமானவர்களால் மன்னிக்கவே முடியாது. மன்னித்தலானது பலம் பொருந்தியவர்களின் பிரிக்க முடியாத குணாம்சமாகும் என்றார் மகாத்மா காந்தி. தன்னை நையப்புடைத்தவர்களையெல்லாம் காந்தி ஒருமுறைகூட திருப்பி அடித்ததில்லை. தான் கொண்ட கருத்தில் உறுதியாக இருந்தாரே தவிர உடல்ரீதியான வன்முறையை அவர் எப்போதுமே பயன்படுத்தியதில்லை. ஆனால் அவர் உடலில் திருப்பி அடிப்பதற்கான பலம் இல்லை என்று சொல்ல முடியாது. மன்னிப்பையே அவர் தன் ஆயுதமாகப் பயன்படுத்தினார். வன்முறையால் செய்ய முடியாததை மென்முறையால் சாதித்தார்.

ஒரு வயலட் பூவை காலால் மிதித்து நசுக்கும்போது அது சுகந்தமான மணம் பரப்புகிறதே அதுதான் மன்னிப்பு என்று மிக அழகாகச் சொன்னார் அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன். இயேசு, முஹம்மது நபிகள், மண்டேலா, சமீரா, ஈவா இவர்களெல்லாம் செய்தது அதுதான். அந்த நறுமணத்தை நாமும் பரப்பினால் என்ன?

இன்னும் தாண்டுவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close