[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 21 - சோஷியல் மீடியா


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 23 Aug, 2018 17:32 pm
  • அ+ அ-

“எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவியா?” என்று கேட்ட ப்ரேமியை என்ன என்பது போல பார்த்தான் ஸ்ரீதர்.  அவள் குரலில் தயக்கமிருந்தது. ஸ்ரீதர் பார்த்த பார்வையில் இருந்த நம்பிக்கை அவளுக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது.

“ஒண்ணு இந்த படத்துலேர்ந்து என்னை வேணாம்னு சொல்லிடு. இல்லை. என்னை அவர்கிட்டேயிருந்து காப்பாத்த ஏதாச்சும் வழி சொல்லு” என்றாள்.

ஸ்ரீதர் சிறிது யோசித்தான். என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. நிச்சயம் ப்ரேமி வேண்டாம் என்று சொல்ல மனமில்லை. அப்படிச் சொன்னால் இந்த படமே நடக்குமா என்பதே சந்தேகம் .

அது மட்டுமில்லாமல் ப்ரேமியின் நடிப்பு மிக இயல்பாய் இருந்தது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் பயிற்சி அளித்தால் நிச்சயம் மிளிர்வாள். அவளை காப்பாற்றுவதற்காக தான் எடுக்கும் முயற்சி சுரேந்தரனுக்கு தெரிந்துவிட்டால் படம் பணால் தான். அந்த ரிஸ்கை எப்படி எடுப்பது என்று அவனுக்கு புரியவில்லை.

அத்தோடு எவளோ ஒருத்தியின் கற்போ என்ன எழவையோ காப்பாற்ற தான் யார்? என்னை அடிக்கிறவனையே இந்தாடா அடிச்சிக்கோன்னு என்று காட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது தேவையா என்ற குழப்பம் மனதினுள் எழுந்தது.

’என்னால ஏதும் பண்ண முடியாது. அது உன் பிரச்சனை நீ பார்த்துக்கோ’ என்று கழன்று விடலாமா? என்று தோன்றினாலும், ப்ரேமியின் பரிதாபமான முகத்தை அவ்வளவு கிட்டத்தில் பார்க்கும் போதும் கொஞ்சம் மனமிறங்கித்தான் போனது.

அழகி.

இயல்பிலேயே முகத்தில் இருக்கும் இன்னொசென்ஸ்.

அந்த கண்களில் தெரியும் அப்பாவித்தனம்.

கொஞ்சமே கொஞ்சம் குவிந்த உதடுகளின் மேல் படிந்திருக்கும் வேர்வை எல்லாம் சேர்ந்து அவனாலேயே அவளை மறுதலிக்க முடியவில்லை.

“தப்பாரு ப்ரேமி.. என்னால ஏதும் அஷூர் பண்ண முடியாது. உங்க சித்திகிட்ட சொல்லி, மேட்டர் எல்லாம் சிட்டியில வேண்டாம். அவுட்டோர்ல வச்சிக்கலாம்னு சொல்லு. நான் அதை கடேசி ஷெட்டியூலா வச்சி போஸ்ட்போன் பண்ணப் பாக்குறேன். தட் டூ ஐ வில் ட்ரை. மத்ததெல்லாம் உன் கைய்லதான் இருக்கு” என்றான்.

ப்ரேமியின் முகத்தில் பெரிய சந்தோஷம். சட்டென டேபிளின் மேல் இருந்த டிஷ்யூவை எடுத்து முகத்தை ஒற்றிக் கொண்டாள். மேலுதட்டு வியர்வை போனது. கண்களில் சிரிப்பு தெரிந்தது.

“நல்ல ஐடியா. நீங்க சொல்றதும் சரி தான். போஸ்ட்போன் பண்ணப் பாக்குறேன். ரொம்ப தேங்க்ஸ் ” என்றாள்.

எழுந்து தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள். ஸ்ரீதரும் எழுந்தான். “பை” என்று கையசைத்து கிளம்பும் முன் ஸ்ரீதர் எதிர்பாராமல் சட்டென அவனை அணைத்து, கழுத்தில் முத்தமிட்டு, “தேங்க்ஸ் “ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போனாள்.

ஸ்ரீதர் அவள் போன திசையையே கழுத்தை தடவியபடி பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் பர்ப்பியூம் அவனை சுற்றி வர ஆரம்பித்தது.

*******************

ரவிக்கு எல்லாமே ஆச்சர்யமாய் இருந்தது. மணியின் சினிமா ஆர்வம் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். ரிலீஸாகும் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு, அதைக் குறித்து பேசிக் கொண்டிருப்பான்.

ஏற்கனவே ஒரு முறை பட்ட சினிமா அனுபவத்தை பற்றி வருத்தத்துடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான். இந்த முறை அடிக்கடி சென்னைக்கு போவதைப் பார்த்து எனக்கு ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுப்பா என்று தானாய் கேட்ட பின் தான் படம் எடுப்பதைப் பற்றி பேசினான்.

எல்லாவற்றையும் ஷேர் செய்கிறவன் இத்தனை நாள் வரை ஏதும் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் இருந்தது.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாய் மணியிடம் ரவி கடன் கேட்டுக் கொண்டிருந்தான். இருபது லட்ச ரூபாய். தன் தொழில் லாஸ் ஆனதை சரி செய்ய வேண்டுமென்று.

“இத பாரு ரவி உன் லாஸுக்கு என்னால ஈடு கட்ட முடியாது. உனக்கும் அந்த வியாபரத்துக்கும் சரிபட்டு வரும்னு தோணலை. எப்படி நீ திரும்பக் கொடுப்பேன்னு சொல்லு நான் இன்வெஸ்ட் பண்ணுறேன். லாபத்துல பங்கு போட்டுப்போம். உன் கடனெல்லம் அடையுற வரை நான் 25 சதவிகிதம் எடுத்துக்குறேன்” என்று சொல்வானே தவிர உதவுகிறேன் என்று என்றைக்கும் சொல்லவேயில்லை.

எங்கே படமெடுப்பது தெரிந்துவிட்டால் நான் பணம் கேட்பேன் என்று சொல்லாமல் விட்டிருக்கிறான் என்று புரிந்தது ரவிக்கு.

இங்கே தினம் ஆபீசுக்கு, அட்வான்ஸ் கொடுக்க என ஆகும் செலவுகளை எல்லாம் அவன் கையிலிருந்து கணக்கு பார்த்துக் கொடுக்க, கொடுக்க, அவனால் அங்கலாய்ப்பை தாங்க முடியவில்லை. ஒரு நாள் இரவு மணியுடன் சரக்கு அடிக்கும் போது கேட்டே விட்டான்.

“மணி கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நான் என்ன வியாபாரம் பண்ணேன்னு உனக்கு தெரியும். எப்படி லாஸ் ஆச்சுன்னும் தெரியும். அதை எப்படி சரி பண்றதுன்னு உனக்குதெரியும். ஆனா எனக்கு ஹெல்ப் பண்ணனும் நீ நினைச்சா முடியும். ஆனா இது எதுவுமே உறுதியாகாத இந்த சினிமாவுக்கு லட்சம் லட்சமா செலவு பண்றே? என் மேல இருக்குற நம்பிக்கை நட்பு அவ்வளவுதானா?” என்று கேட்டான்.

மணி சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. இன்னொரு பெக்கை எடுத்து ஊற்றிக் கொண்டார். ஏதும் சொல்லாமல் மடக்கென அதை குடித்துவிட்டு, “ ரவி உன்னை பத்து வருஷமா எனக்கு தெரியும். என் ப்ரெண்ட் தான் ஆனா வியாபாரத்துல உன் வாக்கு சுத்தமில்லை. அதனாலத்தான் நீ தோத்திருக்க. அதையும் மீறி உனக்கு நான் ஹெல்ப் பண்ண தயாராத்தான் இருக்கேன். பணமா இல்லாம தொழிலா. ஆனா உனக்கு பணமாத்தான் வேணும்னா என்னால முடியாது.

சினிமா என்னோட கனவு. நான் செய்யுற ஒவ்வொரு தொழில்லேயும் கனவு காணுறேன். அதை நிஜமாக்க உழைக்குறேன். அது போலத்தான் இந்த சினிமாவும். என் மிகப் பெரிய கனவு. அதுக்காக உழைக்கிறேன். எனக்கான டீமை உருவாக்கி, அவங்களோட என் நம்பிக்கையை விதைச்சிருக்கேன் ஜெயிக்கிறதுக்காக.

நான் ஒவ்வொரு ரூபாயா கனவை நிஜமாக்க சேர்த்து வச்சிருக்கேன். வாழ்க்கையில நான் ரிஸ்க் எடுக்க யோசிச்சதில்லை.  ஆனா ரிஸ்கையே வாழ்க்கையா வச்சிட்டிருக்கிறவங்க சினிமாக்காரங்க. ராமராஜ் போல தங்களோட திறமையை மட்டுமே நம்பிட்டு உழைச்சிட்டிருக்கிறவங்க லட்சம் பேர் இருக்காங்க. சினிமாவுல வெற்றிங்கற வார்த்தைய நம்பி  ரிஸ்க் எடுக்குறாங்க.

ஒரு இயக்குனர் காணுற கனவை தயாரிப்பாளர் நம்பி, அதை மொத்த டீமும் நம்பித்தான் இறங்குறாங்க. அந்த நம்பிக்கையை ஆடியன்ஸுங்கிற கடவுள் ஏத்துக்கிட்டாத்தான் வெற்றி. இல்லாட்டி திரும்பவும் கனவு காண ஆரம்பிக்கணும்.

நம்பிக்கை தான் இந்த தொழிலுக்கு மூலதனமே. உனக்கு உன் தொழில் மேலயும் நம்பிக்கையில்லை. உன் மேலயும் நம்பிக்கையில்லை. இருந்திருந்தா என் இன்வெஸ்ட்மெண்டை அக்ஸப்ட் பண்ணியிருப்பே. இப்ப கூட நான் இங்க உன்னை அக்கவுண்ட்ஸ் பாக்க சொல்றது எனக்காக இல்லை. உனக்காக.

உன் பலம் எதுன்னு நீ புதுசா யோசிச்சு செயல்பட முடியாம இருக்க. இந்த சினிமா வாய்ப்பு உனக்கான பல கதவுகளை திறக்கலாம். நீ சரியா இருந்தியானா? “ என்று சொல்லிவிட்டு, “மிச்சத்த நீயே முடிச்சிரு” என்று அவரின் அறைக்கு போய் கதவை சார்த்திவிட்டு படுக்கப் போனார். ரவி மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

*******************

”உடனடியா உங்களுக்கு ஒரு எப்.பி பேஜ் ஓப்பன் பண்ணிருவோம். அதே போல ட்விட்டர்ல ஒரு ஐடி, என்னதான் எப்.பி டிவிட்டர்னு இருந்தாலும் இன்னைய யூத்துக்கு லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம்தான் அதுலேயும் ஒரு ஐடி.

உங்க படத்தை பத்தின நியூஸ் எல்லாத்தையும் எல்லா ஹேண்டிலேயும் போடுவோம். பேஜஸ் லைக் கொண்டு வர்றது என் கவலை. அதை நான் பாத்துக்குறேன். என்ன கொஞ்சம் செலவாகும். பத்ரி உங்க படத்தைப் பத்தி சொல்லியிருக்காரு. நிச்சயம் நியாயமான சார்ஜ் மட்டுமே பண்ணுறேன். கவலைப் படாதீங்க.

நல்ல பக்காவான ட்ரெண்டிங், பர்ஸ்ட் லுக் ஏற்பாடு பண்ணுங்க ப்ரோ. எல்லாத்தையும் அடிச்சு தூள் பறத்திரலாம்” என மூச்சு விடாமல் சுரேஷ் பேசியதை ராமராஜ் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன பட்ஜெட் ஆகும்? இது எல்லாத்துக்கு?”

“உங்க இஷ்டம் தான் சார். உங்க படம் பட்ஜெட்டுக்கு ஒரு ரெண்டு ரூபா இருந்தா டைட்ட பண்ணலாம். பத்ரி ப்ரோ சொல்லியிருக்காப்ல.. அதெல்லாம் பார்த்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்” என்றான் சுரேஷ்.

ரெண்டு லட்சம் என்பது ஒரு சினிமாவுகான ப்ரோமோஷனுக்கு ஒன்றும் பெரிய காசில்லை. ஆனால் வழக்கமான  பி.ஆர்.ஓ, பேப்பர், டிவி பப்ளிசிட்டியுடன் இது எக்ஸ்ட்ராவாகிக் கொண்டிருக்கிற செலவு எனத் தோன்றியது ராமராஜுக்கு. அதை வெளிப்படுத்தவும் செய்தார்.

“சார். தப்பா நினைக்காதீங்க.. இன்னைக்கு படம் பாக்குறது யூத்தான். அதுலேயும் மொத மூணு நாள் அவங்க தான் வருவாங்க. அப்புறம் படம் நல்லாயிருந்துச்சுன்னா பிக்கப் ஆகப் போவுது. அந்த யூத் யாரும் இன்னைக்கு டிவி பாக்குறதேயில்லை.

அவன் பாக்குற ப்ரோக்ராம்ல நாம விளம்பரம் கொடுக்கவே முடியாது. ஏன்னா அவன் பாக்குறது சீரீஸ் இல்லாட்டி ஸ்போர்ட்ஸ். ஆனா அவன் கையில எப்பவுமே வச்சிருக்கிறது மொபைல். அதுல அவன் உலகம் பூராவும் உள்ளங்கையில வருது. ஸோ அவங்களை டார்கெட் பண்ண இதான் கரெக்ட் மீடியம்”  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணி உள்ளே நுழைந்து “பப்ளிச்சிட்டிக்கெல்லாம் ரொம்ப யோசிக்க வேணாம் சார். தம்பி சொல்றது கரெக்ட் தான் நானும் கேட்டுட்டுதான் இருந்தேன்.

தம்பி.. எல்லாத்தையும் செய்யுங்க. ஆனா இது எங்களுக்கு மொத படம். பாத்து பண்ணுங்க. ரவி, சாருக்கு என்ன அமெளண்டுன்னு பேசி அட்வான்ஸ் கொடுத்துரு” என்றார் மணி.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 20 - https://bit.ly/2o3q1kD

பகுதி 19 - https://bit.ly/2N1J3lW

பகுதி 18 - https://bit.ly/2MkvvFd

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close