[X] Close

தொங்கட்டான் 25: பொற்கொல்லர்களின் அவலம் பாரீர்! கலைஞர் முரசொலியில் எழுதிய கடிதம்!


thongattan-25-mana-baskaran

கலைஞர் கருணாநிதி

  • மானா பாஸ்கரன்
  • Posted: 22 Aug, 2018 11:55 am
  • அ+ அ-

ராத்திரி   ரெண்டு  மணி  வரைக்கும்  முருகேசனும்  பக்கிரியும்  கலாம்புலாமென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு  தூங்கியதால்  காலையில்  ஒன்பது மணிக்குத்தான்  வீடே கண்  முழித்தது.

முருகேசனும்   கோகிலாவும்  எல்லார்ட்டேயும்  சிரிச்சிச்  சிரிச்சிப்  பேசினாலும் கூட அவர்கள் முகத்தில் அசாத்தியமானதொரு  நிழல்  படிந்திருப்பதை  படித்துவிட்டான்  பக்கிரி.

அவர்களாக  அது  பற்றி பேசட்டும், நாமாக  எதுவும்  பேச வேண்டாம் என்றிருந்தான்.

அந்த  எண்ணம்  வீண் போகவில்லை.

முருகேசனாகவே  வாயைத்  திறந்தான்.

 ‘’மாப்ள… சாமி இல்ல. கடவுள கண்டுபுடிச்சவன் காட்டுமிராண்டின்னு நெனக்கிறவன் நான்.  பத்தாததுக்கு கருப்புச் சட்டை போடறவன்  வேற. கேட்கவா வேணும். பொட்டுத் தங்கம் கைக்கு வர மாட்டேங்குது மாப்ள. அசந்து மசந்துகூட எவனும்  நகை செய்ய வர மாட்ரான்.’’

’’நீ வேற… காது மூக்குக் குத்திக்கக்கூட யாரும் வரலைன்னா பார்த்துக்குயேன்…’’ என்றான் முருகேசன்.

மேலும்   -  அவன்  என்னச்  சொல்லப்  போகிறான்  என்பதற்காக  காதைத்  தீட்டி  வைத்துக் காத்திருந்தான்  பக்கிரி.     

’’இப்ப  என்னன்னா… நம்ம  பத்தர்  வேலையும்  படுத்துட்டு; தங்கக் கட்டுப்பாட்டு சட்டம் வேற நம்ம சிம்லானுங்கள தொவச்சி எடுக்குது.  வெவசாயமும் சரியா வர்ல. அதான் பொட்டிய கட்டிக்கிட்டு திருவாளூருக்குப் போயிடலாம்னு பார்க்குறேன்…’’ என்றான்,

‘’முருகேசு மாப்ள இப்படித்தான் சட்டுப்புட்டுன்னு முடிவெடுக்கணும். ஒண்ணும் ஒத்து வர்லையா…   இப்படித்தான்  நம்மள  மாத்திக்கணும்…’’

‘’ஆமாம் மாப்ள.    அய்யாவும்  அண்ணாவும்  அப்டித்தானே நமக்குச்  சிந்திக்க  சொல்லிக் குடுத்திருக்காங்க.  சரி மாப்புள திருவாளூருக்கு  ஜாகை மாத்தணும். புள்ளங்கள அங்கே   கொண்டுபோயி   பள்ளிக்கோடத்துல   சேர்க்கணும்.  எல்லாத்துக்கும் தருப்பு (பணம்) வேணும்…’’

‘’புருசன்   பொண்டாட்டி  ரெண்டுபேரும் சேந்து வந்தப்பயே தெரிஞ்சுக்கிட்டேன். என்னமோ தாக்கீதுக்குத்தான் வந்திருக்கீங்கன்னு…’’    

ஆமாம் மாப்ள… இந்த சந்தர்ப்பத்துல உதவினீங்கன்னா… பின்னாடி சம்பாரிச்சிக் கொடுத்துடுவேன்…’’

பக்கிரி யோசித்தான். இதுபற்றி பாப்பாத்தியிடம் கலந்தாலோசித்தால் பிலுபுலுவென்று பிடித்துக்கொள்வாள். பக்கிரி மோட்டுவளையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘’என்ன மாப்ள எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க?”’

‘’ஒண்ணுமில்ல முருகேசு மாப்ள. திடுதிப்னு தருப்பு வேணும்னு கேட்டுட்டீங்க… அதான் என்ன பண்ணி ஒங்களுக்கு தருப்பு கொடுக்கிறதுன்னு யோசிக்கிறேன்…’’ என்றான் பக்கிரி.

*****

 திருவாருக்கு  வந்திருந்த  மு.கருணாநிதியிடம்  நகைத்  தொழிலாளர்கள்  எல்லாம் சேர்ந்துபோய்   கொடுத்த  மனுவை  அவர்  தூக்கி  குப்பைக்  கூடையில்  போடவில்லை என்பது  உடனடியாகத்  தெரிந்தது.

திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலி பத்திரிகையில் ‘தமிழக பொற்கொல்லர்களின் அவலம் பாரீர்… பாரீர்’ என்கிற கட்டுரையை கருணாநிதி எழுதியிருந்தார்.

நகைத் தொழிலாளர்கள் மட்டும் அனுபவித்த கஷ்டங்களை, தமிழ் பேசும் எல்லோரிடத்திலும் கருணாநிதி எழுதிய அந்தக் கட்டுரை கொண்டுச் சேர்த்தது. அதில் அவருடைய தமிழ் அந்தக் கட்டுரையை வாசிப்பவர்களுடன் நேரிடையாக உரையாடல் நிகழ்த்தியது.

அந்த எழுத்துக்கலையை,  வசீகரத் தமிழை  இயற்கை அவருக்கு தாராளமாக வழங்கியிருந்தது.

முருகவேல் பத்தர் தகட்டாலையில் கிடந்த  முரசொலி பேப்பரை காலையில் இருந்து மத்தியானத்துக்குள்  ஒரு  அம்பது  அறுவது  பேராவாது படித்திருப்பார்கள். ரொம்பவும் அடி வாங்கிய  சொம்பைப் போல அந்தப் பேப்பர் நைந்து போயிருந்தது.

தகடு போட வந்த திருமருகல் முத்துப்பத்தர் அந்த முரசொலி பேப்பரை எடுத்து வாய்விட்டுப்  படித்தார்…   பவுன் தகடு  போட  வந்த மத்தவங்களும் அவர் படித்ததை காது கொடுத்துக் கேட்டார்கள்.

‘தமிழக பொற்கொல்லர்களின் அவலம் பாரீர்… பாரீர்’

மத்திய அரசு புதிய தங்கக் கட்டுப்பாடு சட்டத்தைக்  கொண்டு வந்திருக்கிறது.  இந்திய பண மதிப்பில் மாற்றங்களைக்கொண்டு   வருவதற்காக இந்தச்  சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக காசுக் கடை என்று சாதாரண, எளிய தமிழ் மக்களால் அழைக்கப்படுகிற், நகை வணிகத்தை மேற்கொள்கிற  நகைக்  கடைக்காரர்கள்  மத்திய  அரசாங்கம் குறிப்பிட்டு வரையறை  செய்திருக்கிற அளவில்தான் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்க முடியும். மேலும்  இதுவரையில் இல்லா விட்டாலும்கூட இனிமேல் நகை வணிகம்  மேற்கொள்பவர்கள்   ஒவ்வொருவரும் –  தங்க இருப்பு எவ்வளவு உள்ளது? நாள்தோறும்  எவ்வளவு  (எடை)  தங்க நகை  வாணிபம்   ஆகிறது  என்கிற  கணக் கையும் வைத்துக்கொள்ள  வேண்டும்  என்று  சட்டத்  திட்டங்களைக்  கொண்டு  வந்துள்ளது.

அரசாங்க   விதிகளுக்குரிய  கட்டுப்பாட்டுக்குள்  தங்க நகை வியாபாரி களைக்  கொண்டு வரும்  என்றாலும்  கூட,  இந்தச்  சட்டத்தின்  வேறோரு  தன்மை –  நகைத்  தயாரிப்பில்

ஈடுபட்டுள்ள  அப்பாவி பொற்கொல்லர்களுக்கு பெரும் இன்னல்களை விளைவிப்பதாக நகைத் தொழிலாளர்கள் கவலை கொள்கின்றனர்.

சுரங்கங்களிலிருந்து தாதுவாக வெட்டியெடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டு வரும் தங்கக்கட்டிகள், தங்கநகைகளாக உருமாற்றம் பெற, தங்கநகைத் தொழில் செய்யும் கைவினைக் கலைஞர்களால் பல்வேறு வேலைகள் செய்யப்படுகின்றன. கட்டித் தங்கத்தை நகைகளாக மாற்றும் தங்க நகைத் தொழிலாளர்கள் நகைகளாக மாற்றும் தங்க நகைத் தொழிலாளர்கள் தமிழகத்தில் இன்று பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.

இந்தத் தங்கக் கட்டுப்பாடுச் சட்டத்தின்படி தங்க நகை செய்பவர்கள் மத்திய கலால் வரி அலுவலகத்தில் (சென்ட்ரல்  எக்சைஸ்) உரிமம் பெற்றுத்தான் வேலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாழ்கிற நகைத் தொழிலாளர்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அவர்கள் நாள்தோறும் எவ்வளவு தங்கம்  தங்கள்வசம்  உள்ளது  என்றும்,  எத்தனை எடை  உள்ள் நகை செய்யப்பட்டது என்றெல்லாம் கணக்கு எழுத வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த விதிமுறைகள் பொற்கொல்லர்களின் வாழ்வில் சுமையைக் கூட்டும்.  மேலும்,  நகைத் தொழிலாளர்கள்  14  காரட்    தங்கத்தில்தான்  நகை  செய்ய  வேண்டும்  என்றும் அந்தச்  சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்தக்  காலத்தில்  மத்தியத் தரைக் கடல்  /  மத்திய  கிழக்கு  நாடு களில், தங்கம் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்களை தராசில் வைத்து எடை போட படிக்கற்களாக ‘கேரப் விதைகளை’ (Carom seeds)  பயன்படுத்தி இருக்காங்க. அதிலயிருந்து உருவனாதுதான் கேரட் (carat / Karat). ஒரு கேரட் என்பது 24ல் ஒரு பங்கு. 24  கேரட்  தங்கம் நகைகள்  செய்ய  உதவாது. எனவேதான் வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் முதலியன  உடன் சேர்க்கப்படுகின்றன. 18 கேரட் என்றால் 75 ரூபாய்க்குரிய தங்கம்; 14 கேரட் என்றால் 58 ரூபாய்க்குரிய  தங்கம்; 10  கேரட்  என்றால்  47.7  ரூபாய்க்குரிய  தங்கம் ஆகும்.  உள்ளார்ந்து பார்த்தால் -  இந்தச் சட்டம் நகைத் தொழிலாளர்க ளின் வாழ்வை முடக்கும் தன்மை கொண்டிருப்பதால்… இச்சட்டத்தை மாற்றியமைத்து நகைத் தொழிலாளர்கள் வாழ்வில் மத்திய அரசு ஒளியேற்ற வேண்டும்!”

-கருணாநிதி  முரசொலியில் தங்களுக்குச் சாதகமாக எழுதியிருப்பதாக, முரசொலியை மடித்துக்கொண்டே திருமருகல் முத்துபத்தர் சொன்னபோது… சேப்பரசனும், சிவராமனும் வாய் பிளந்து கேட்டார்கள்.

-  தொங்கட்டான் அசையும்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close