[X] Close

கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்! 23: வாழவைக்கும் வாஞ்சியம்!


kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum-23

ஸ்ரீவாஞ்சியம் சுவாமி, அம்பாள்

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Aug, 2018 09:33 am
  • அ+ அ-

காசும்பணமும்தான் முக்கியம் என்று அல்லாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் செல்வங்களில் குழந்தைச் செல்வம்தான் உன்னதம் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அதேபோல், இன்னொரு செல்வமும் சான்றோர் சொல்லிவைத்திருக்கிறார்கள். ஆன்றோர் இதன் உயிர்ப்பை விவரித்திருக்கிறார்கள். முன்னோர்கள், இதுவே முக்கியம் இதுவே முக்கியம் என்று போற்றிக்கொண்டாடியிருக்கிறார்கள். அது... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

ஆனால், மூக்கிருக்கும் வரைக்கும் சளி இருக்கும் என்பது போல், உடலிருக்கும் வரை ஏதேனும் வியாதிகள் தடக்தடக்கென்று எட்டிப்பார்த்து, அழையா விருந்தாளியாய் உள்ளே நுழைந்து, களேபரப்படுத்தும். கலவரமாக்கும். நொய்மையாக்கிவிடும். நம் மீது நமக்கே கழிவிரக்கம் வரச்செய்யும்.

இங்கே, மனித குணங்களில் மிக அல்லாட்டமும் ஆசையும் கொண்டது... வாழவேண்டும் என்பதுதான்! எப்படி வாழவேண்டும் என்பது முக்கியமில்லை. இப்படித்தான் வாழவேண்டும் என்கிற நியதிகளின்படியான கவலைகளெல்லாம் இல்லை. ஆனால் வாழவேண்டும். எத்தனை வயதானாலும் வாழவேண்டும். இதுதான் மனித குணங்களின் விசித்திரம். பிறப்பவர் அனைவருமே இறப்பர் என்பது விதி. ஆனாலும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று நீட்டித்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்குகிறோம். தவிக்கிறோம். அழுகிறோம். ஆண்டவனை முறையிடுகிறோம்.

‘நான் கஷ்டப்படும்போதெல்லாம் இருந்த அப்பா அம்மா, இன்னிக்கி நல்லாருக்கும்போது இல்லாமப் போயிட்டாங்களே...’ என்று சாகும்வரைக்கும் இறந்துவிட்ட அப்பாவையும் அம்மாவையும் இழக்காமல் இருந்திருக்கலாமோ என்று புலம்பிக்கொண்டே இருக்கும் பலரைப் பார்த்திருக்கலாம்.

’நல்லாத்தான் இருந்தாரு. இந்த ரெண்டுவருஷமாத்தான் படுத்த படுக்கையாகிட்டாரு. பயமா இருக்கு எங்களுக்கு. இதோ... என் மனைவி கர்ப்பமா இருக்கா. பேரக்குழந்தையைப் பாக்கமாட்டோமானு புலம்பிக்கிட்டே இருந்தாங்க அப்பா. இன்னும் கொஞ்சகாலம் இருந்தா நல்லாருக்குமே...’ என்று தலையிலடித்துக்கொள்கிற மகன்கள் இங்கே உண்டு.

தடாலென்று வந்துவிட்ட சர்க்கரை வியாதி, திடீரென்று உடலில் எகிறிவிட்ட உப்பின் அளவு, இதயத்துடிப்பின் மாற்றங்களால் செய்யப்பட்ட ஆபரேஷன், வாரம் மூன்று முறை டயாலிசிஸ் செய்யவேண்டிய உடல் என்று இந்த உலகில், யாருக்கோ, திடீர்திடீரென நோய்த்தாக்குதல் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நோயில் இருந்து மீளவேண்டும், நோய்த்தாக்கங்கள் குறையவேண்டும், உயிரைக் குடிக்காமல், படுக்கையிலேயே கூட வைத்திருந்தால் போதுமே... என்று நோயாளிகள் குறித்து அவர்களின் உறவுகள் கண்ணீர்மல்க வேண்டிக்கொள்ளும் போது, அந்தப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பயமின்றி வாழ்தல் இனிமை. அதிலும் மரண பயம் இல்லாத வாழ்க்கை வரம். இன்னும் சொல்லப்போனால், மரணபயம் சம்பந்தப்பட்டவரை விட, சம்பந்தப்பட்டவரின் உறவுக்காரர்களுக்குத்தான் மிகப்பெரிய பயத்தையும் கலவரத்தையும் தருகிறது.

‘எமன் அழைச்சுக்கற நேரம் வந்துருச்சு. அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்’ என்று அலுப்பும்சலிப்புமாக, விரக்தியும் துக்கமுமாகச் சொல்வார்கள். அந்த எமனைத் தரிசித்து மனதார வேண்டிக்கொண்டால் போதும்... ஆயுளும் நீடிக்கும்; ஆரோக்கியத்துடனும் வாழலாம். அப்படியொரு உன்னதமான திருத்தலம் இங்கே, சோழ தேசத்தில்  இருக்கிறது. அந்தத் திருத்தலம்... ஸ்ரீவாஞ்சியம்!

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள அற்புதமான தலங்களில், ஸ்ரீவாஞ்சியமும் ஒன்று. ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் உள்ள மிகப்பெரிய அழகான திருக்கோயில்.

இறைவன் சிவனார் குடிகொண்டிருக்கும் புண்ணியம் மிகுந்த க்ஷேத்திரம் இது. ஸ்ரீவாஞ்சியம் வந்திருக்கிறார்களா. ஆலயத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஆலயத்துக்குள் நுழைந்து பிராகாரத்தையும் நுட்பமான சிற்பங்களையும் ரசித்திருக்கிறீர்களா?

எல்லாவற்றுக்கும் மேலாக சிவ சந்நிதியில் மனமுருகி, உள்ளம் கசிந்து, ஆத்மார்த்தமாக, மனமொருமித்து நின்று தரிசித்திருக்கிறீர்களா?

வாழ்வில், ஒருமுறை... ஒரேயொருமுறை... ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். இந்த பரந்துபட்ட உலகில், உங்களுக்கே உங்களுக்கு என இருக்கிற சொந்தபந்தங்களில், நட்பு வட்டாரத்தில், படுத்தபடுக்கையாக நோயுடன் போராடிக்கொண்டிருப்பவர்களுக்காக, நீங்கள் இங்கே வந்து, ஸ்ரீவாஞ்சிநாதரை தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். படுக்கையே கதியெனக் கிடந்தவர்கள் கூட சீக்கிரமே எழுந்து உட்கார்ந்துகொள்வார். எழுந்தவர் நடமாடத் தொடங்குவார். நடமாடுபவர் விரைவிலேயே பழையபடி சகஜநிலைக்குத் திரும்புவார். இது சத்தியம். கண்கூடு. அம்பாள் - ஸ்ரீமங்களநாயகி. அவள் வரப்பிரசாதி. வளம் தரும் நாயகி. சுபகாரியங்கள் அனைத்தையும் நடத்தித் தரும் சுபிட்ச சக்தி கொண்ட நாயகி.

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும்  வழியில் உள்ளது அச்சுதமங்கலம். அங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம்.

அதாவது, குடவாசலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். ஆரூர் எனப்படும் திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம்.

இங்கே கருவறையில் குடிகொண்டிருக்கும் வாஞ்சிநாதர் மட்டுமா விசேஷம்? இந்தத் திருத்தலத்தில் எமதருமனுக்கும் சந்நிதி என்பதுதான், ஆலயத்தின் ஸ்பெஷல்!

வாழவைக்கும் வாஞ்சியத்தின் பெருமைகளும் சக்தியும் இன்னும் இன்னும் இருக்கின்றன. அவற்றை இன்னும் இன்னுமாகப் பார்ப்போம்!

- தரிசிப்போம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close