[X] Close

எதிரே நம் ஏணி! 24 : கல்யாணப்பரிசு, அந்த 7 நாட்கள்!


edhire-nam-yeni-tirupur-krishnan

அந்த ஏழு நாட்கள்

  • திருப்பூர் கிருஷ்ணன்
  • Posted: 20 Aug, 2018 14:24 pm
  • அ+ அ-

வாழ்க்கையே மூன்று வகையான போக்குகளைக் கொண்டதுதான். அந்த மூன்றையும் எதிர்பார்த்து அந்த மூன்றில் எதுவந்தாலும் ஏற்கத் தயாராக இருந்துவிட்டால் நிம்மதிக்குக் குறைவே இருக்காது. இந்த  அற்புதமான கருத்தை தாம் எழுதிய `நல்வழி` என்ற நூலில் ஒரு வெண்பாவில் சொல்கிறார் அவ்வையார்.

 நாம் ஒன்றை எதிர்பாரக்கிறோம். அது தொடர்பாக மூன்று விஷயங்கள் நேரலாம். ஒன்று அது நாம் விரும்பியவாறே நடக்கலாம். இன்னொன்று, அது நடக்காமல் போகலாம். மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. நாம் முற்றிலும் எதிர்பாராத வேறு ஏதோ ஒன்று திடீரென்று நடக்கலாம்.

 `எல்லாம் இறைவன் சித்தம். எது நடந்தாலும் அது நன்மைக்காகத் தான் நடக்கிறது` என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் மன நிம்மதி கிடைக்காது. இந்த அரிய கருத்தைச் சொல்லி, நல்வழி காட்டும் அவ்வையாரின் `நல்வழி` நூலில் வரும் வெண்பா இதோ:

`ஒன்றை நினைப்பின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்

அன்றி அது வரினும் வந்தெய்தும் - ஒன்றை

நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்!`

அண்மையில் நடந்தது திருமணம் ஒன்று. பலப்பல திருப்பங்களோடு நடந்த விந்தையான திருமணம் அது. ஒரு பெண் ஒருவனைக் காதலித்தாள். அவனையே மணந்துகொள்ள விரும்பினாள். அவனும் அவளை விரும்பினான். அந்தக் காதலை, பெற்றோர் ஏற்று, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அது.

 ஆனால் அந்த மணமகனுக்குத் தெரியாது இன்னொருவன் அவளை விரும்பினான் என்பது! ஆனால் அந்த இன்னொருவன் காதலை அவள் நிராகரித்து விட்டாள். அவளால் நிராகரிக்கப்பட்டவனும் அவள்மேல் ஒருதலைக் காதல் கொண்டவனுமான அந்த இன்னொருவனும் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தான்.

 அவனைப் பற்றி மணநாளன்று அறிந்ததும் மணமகனுக்கு சந்தேகம். அவனும், தான் மணந்து கொள்ளப் போகிறவளும் எப்படியெல்லாம் பழகியிருப்பார்களோ? அந்த வீண் சந்தேகத்தை முன்னிலைப்படுத்தி, மணமகள் என்ன விளக்கங்கள் சொல்லியும் கேட்காமல், அவளை நிராகரித்து மணமாலையைக் கழற்றி வைத்துவிட்டு மணமேடையிலிருந்து விலகி பார்வையாளர்களோடு உட்கார்ந்துவிட்டான் அந்த மணமகன்!

 மணமகளின் விழிகளில் கண்ணீர். பலர் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அவமானம் அவளை வருந்தச் செய்தது. முக்கியமாகத் தன் பெற்றோருக்கு நேர்ந்த சங்கடமும் துயரமும் அவளைப் பெரிதும் வருத்தின. ஆனால் அவள் கதறி அழுது ஒரு சராசரிப் பெண்ணைப் போல அந்த மணமகனைக் கெஞ்சத் தயாராக இல்லை.

இப்போது சுயமரியாதை நிறைந்த அந்த மணமகளின் மனநிலையில் நியாயமான இரண்டு எண்ணங்கள் எழுந்தன. ஒன்று மணமேடை வரை வந்து தன்னை நிராகரித்தவனை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. அது இயல்பானதுதான். எந்தப் பெண்ணுமே அப்படித்தான் நினைப்பாள்.

இன்னொன்று தன்னை ஒருதலையாகக் காதலித்தவன்தான் இந்தத் திருமணம் நின்று போனதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என அவள் சரியாகவே ஊகித்தாள். இல்லாததும் பொல்லாததுமான வதந்தி அவனால் பரப்பப்பட்டிருக்க வேண்டும். எனவே அவனையும் அவள் மணக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. அவன்மேல் அவளுக்குக் காதலும் இல்லை. 

 மணமகளின் பெற்றோர் என்ன செய்வதென்று அறியாத மிக நெருக்கடியான இக்கட்டான சூழல். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்தான் மூன்றாமவன். வெளிதேசத்தில் உள்ள அவர்களின் தூரத்து உறவினன்.

 நடந்த அனைத்தையும் அறிந்த அவன், தனக்கு மணமகளைப் பிடித்திருப்பதாகவும் மணமகளுக்கும் தன்னைப் பிடித்திருந்தால், தான் அவளை அங்கேயே அப்போதே மணந்துகொள்ளத் தயார் என்றும் அறிவித்தான்.

 மணமகள் தன்னை நன்றாகப் புரிந்துகொண்டு தன் இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்ற முன்வந்த அவனையே தான் விரும்புவதாகச் சொல்லி சம்மதித்தாள். அந்த மூன்றாமவனோடு அவள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

 தான் விரும்பியவன், தன்னை விரும்பியவன் ஆகிய இருவரையும் ஓர் ஏளனப் பார்வை பார்த்துவிட்டுத் தன் கழுத்துத் தாலியை கம்பீரமாகச் சரிசெய்துகொண்டாள் அவள்!

 அவ்வையின் வெண்பாதான் என்ன அழகாக இந்த நிகழ்வுக்குப் பொருந்துகிறது! அந்தப் பெண் முதலில் நினைத்தது நடக்கவில்லை. அதற்கு எதிரானதும் நடக்கவில்லை. முற்றிலும் புதிதாக ஒன்று நடந்திருக்கிறது.

  `இதுதான் வாழ்க்கை. எனவே இந்த மூன்று வகை அனுபவங்களுக்கும் தயாராக இருங்கள்!` என அறிவுறுத்துகிறார் அவ்வையார்.

  இன்றைய இந்தக் காலம், நிறைவேறாத ஒருதலைக் காதலின் காலமாக இருக்கிறது. தங்கள் தகுதி அறியாது, அழகிலும் செல்வ வளத்திலும் தங்களை விட மேம்பட்ட பெண்களை இளைஞர்கள் உருகி உருகிக் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

 இத்தகைய காதல், திரைப்படங்களில் நியாயப்படுத்தப் படுவதால், தாங்கள் செய்வது நியாயம்தான் என்றும் அந்தப் பெண்கள் தங்களைக் காதலித்தாக வேண்டும் என்றும் அவர்களாகவே முடிவு செய்கிறார்கள். அவர்கள் தங்களைக் காதலிக்கவில்லை என்ற உண்மை தெரிந்ததும் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 இந்தப் போக்கால் இரண்டு விபரீதங்கள் நேர்கின்றன. யதார்த்தத்தை ஏற்கும் மனவலிமையற்ற அந்த இளைஞர்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது தங்களால் காதலிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்கிறார்கள். அடுத்தவர்களுக்கும் மனம் உண்டு, அவர்களுக்குத் தாங்கள் விரும்பியபடி வாழும் உரிமை உண்டு என்பதை வசதியாக இந்த பலவீனமான மனம் படைத்த இளைஞர்கள் மறந்து போகிறார்கள். நாளிதழ்களிலும் புலனாய்வு இதழ்களிலும் இத்தகைய சம்பவங்களைப் பற்றி நாம் நிறையப் படிக்கிறோம்.

 காதல் என்பது இருதரப்பு சம்பந்தப்பட்டது என்பதை அந்த இளைஞர்கள் உணராமல் போனது ஏன்? வாழ்வின் குறுகிய வாலிபக் காலத்தில் தோன்றும் தற்காலிக உணர்வான காதலுக்காக உயிரையே துறந்து முழுவாழ்க்கையையும் இழப்பது ஏன்? ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலிக்கும் இளைஞர்களுக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையைக் காதலிக்கத் தெரியாமல் போனது ஏன்? `கிட்டாதாயின் வெட்டென மற!` எனத் தன்னை விரும்பாதவளைத் தானும் விரும்பாமல் வெறுத்துத் துறக்கும் சுயமரியாதை உணர்வு அந்த இளைஞர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே விடை, அவர்கள் அவ்வையார் சொல்லும் வெண்பாக் கருத்தை உணர்ந்துகொள்ளாமல் போனதுதான்.

அப்துல்கலாம் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். காதல் என்ற மாய வலையில் அவர் ஒருபோதும் சிக்கவில்லை. குடிசையில் பிறந்த அவர் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். காரணம் தம் வாழ்க்கையை அவர் காதலித்தார். மேலான தகுதியை அடைந்து வாழ்வில் உயர்வதற்காகத் தனக்கெனக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு கடுமையாக உழைத்தார்.

  வாழ்க்கை என்ற ஏணி அதையே எதிர்பார்க்கிறது. அது யாரை வேண்டுமானாலும் உயர்த்தத் தயாராகவே இருக்கிறது. ஆனால் ஒரே குறிக்கோளோடு கடின உழைப்பை முன்வைத்து தன் படிக்கட்டுகளை மிதிப்பவர்களையே அது உயர்த்துகிறது. உணர்வு வழிப்பட்டு வாழ்கிறவர்களை விட அறிவு வழிப்பட்டு வாழ்கிறவர்களை அது பெரிதும் விரும்புகிறது.

 `கல்யாணப் பரிசு` என்ற பழைய புகழ்பெற்ற திரைப்படத்தைத் திரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. மேலே சொன்னது போன்ற ஒரு சம்பவத்தை இயக்குநர் ஸ்ரீதர் அந்தத் திரைப்படத்தின் இறுதியில் சித்திரிக்கிறார்.

 கதாநாயகி சரோஜாதேவிக்கு ஒருவனால் தாலி கட்டப்பட்டுவிட்டது. தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தபின் வருகிறான் கதாநாயகனான ஜெமினி கணேசன். தாலி கட்டியவன் முற்போக்குச் சிந்தனை உள்ளவன். தாலி கட்டப்பட்டாலும் அதைக் கழற்றிக் கொடுத்துவிட்டுக் காதலனோடு அவள் வாழ்வதே சரி என்று எண்ணுமளவு நல்லவன். அந்தத் திரைக்கதையில் எல்லோருமே நல்லவர்கள்தான். காலம் தான் வில்லனாகச் செயல்படுகிறது. கதாநாயகி தன் காதலைத் துறந்து தாலி கட்டியவனோடு வாழ முடிவு செய்கிறாள்.   

 இதுபோலவே பாக்யராஜ் இயக்கி நடித்த `அந்த எழு நாட்கள்` திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. கதாநாயகி (அம்பிகா) கழுத்தில் நடிகர் ராஜேஷ் தாலி கட்டி ஏழு நாட்களாகி விட்டன. காதலன் (பாக்யராஜ்) அதன்பின்னால் வருகிறான். இப்போது என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கிறாள் காதலி. காதலன் அவள் தன் கணவனோடு வாழ்வதுதான் சரி என எடுத்துச் சொல்கிறான். அவள் சம்மதிப்பதாகக் கதை முடிகிறது.

 ஆனால் அமரர் அகிலன் எழுதிய `சித்திரப் பாவை` என்ற நாவல் முற்றிலும் வேறுபட்ட முடிவைக் காட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய கணவனின் தாலியை அவனிடமே விட்டுவிட்டுக் காதலனோடு வாழ முடிவு செய்கிறாள் அதன் கதாநாயகி என்பதாகக் கதை முடிகிறது. சித்திரப்பாவை அகில இந்திய அளவில் ஞானபீடப் பரிசு பெற்ற நாவல் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் திரைப்படக் கதாநாயகிகள் இருவர் சம்பிரதாய முடிவை எடுப்பதாகத் தோன்றுகிறது. அகிலனின் கதாநாயகி மாறுபட்ட முற்போக்கான முடிவை எடுப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த இரு முடிவுகளுமே இந்தியப் பெண்மையின் இயல்பை நமக்கு விளக்குகின்றன. இந்த இரு முடிவுகளின் பின்னணியிலும் ஒரே வகைப்பட்ட பெண்மனம்தான் செயல்படுகிறது என்றறிந்தால் வியப்பாக இருக்கும்.

 அது எப்படி இரண்டு முரண்பட்ட முடிவுகளை ஒரே வகைப்பட்ட பெண்மனம் எடுக்க முடியும் என்ற கேள்வி எழலாம். தாலி கழுத்தில் ஏறியதற்காகக் கணவனோடு வாழ்வதும் காதலனோடு வாழ்வதற்காகத் தாலியைத் துறப்பதும் ஒரே வகைப்பட்ட சிந்தனையின் விளைவாக எப்படி இருக்க முடியும்?

 இதற்கான விளக்கம் என்ன தெரியுமா? பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் நிலைப்படுத்திக் கொள்ள, காதலை விடவும் வேறொன்றை நம்புகிறார்கள் என்பதுதான். அந்த வேறொன்று என்ன?

- இன்னும் ஏறுவோம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close