[X] Close

குரு மகான் தரிசனம் – 11: பாபா படேசாகிப் : சிரிப்பு... பாட்டுச்சத்தம்... தம்பூரா இசை!


guru-mahan-dharisanam-11

  • kamadenu
  • Posted: 17 Aug, 2018 11:30 am
  • அ+ அ-

திருவை குமார்

“இனியும் இந்தக் கிராமத்தில் எந்தவொரு உயிருக்கும் விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது” என்று விஷ ஜந்துக்களின் மீது ஆணையிட்டார் சுவாமிகள். அதன்பின்பாக அந்த கிராமங்களில் எவருக்குமே விஷ ஜந்துக்களால் ஒரு பிரச்சினையும் வந்ததில்லையாம். இப்பேர்ப்பட்ட வரமளித்த படாசாகேப் பாபாவை ‘ஆத்மஞானி தெய்வம்’ என்றே ஊரார் அழைத்து மகிழ்ந்தனர்.

தன்னை நம்பி சரண் அடைந்த மக்களுக்கு ஏற்பட்டிருந்த எப்பேர்ப்பட்ட வியாதிகளையும் நீக்கித் தரும் சர்வ வல்லமை படைத்தவராகவே வலம் வந்தார். இவருக்கு குழந்தைகள் மீது அலாதி பிரியம் உண்டு. குழந்தைகளைக் கண்டுவிட்டால் தானும் அவர்களாகவே மாறி விட்டிருப்பார்.

சில சமயங்களில் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடையே கலந்து விடுவார். ‘தாத்தா…’ என்று அக்குழந்தைகளும் அன்பு பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில்… ஆற்று மணலை ஒரு பிடி அள்ளி எல்லா குழந்தைகளின் கையிலும் கொடுத்து விட்டு அவர்களை ஆடவிடுவார். ‘குட்டிங்களா! கையைத் திறங்க… அத தின்னுங்க’ என்று சொல்லி சிரிப்பார். குழந்தைகளின் முகமோ சுளித்துப் போயிருக்கும்.

‘அய்யே! தாத்தா மண்ணைத் திங்கனுங்கறாரே’ என்று சந்தேகம் கொண்டவாறே தங்கள் கைகளை விரித்தால் அதில் சர்க்கரையோ, மிட்டாயோ, பிஸ்கெட்டோ வந்திருக்கும். அடுத்த நிமிடம் அக்குழந்தைகள் அனைவருமே தாத்தாவின் செல்லக் குட்டிகளாக மாறியிருப்பர்.

இப்போதுதான் தனது விளையாடலைத் தொடங்கிவைப்பார். “குட்டிப்பசங்களா! தாத்தா எல்லாமே தந்தேனுல்ல! நீங்க இப்ப தாத்தாக்கு ஒரு உதவி செய்யணும். எல்லா புள்ளைங்களுமா சேர்ந்து இங்க ஒரு குழி பண்ணுங்க!” என்பார். குழந்தைகள் குதூகுலத்துடன் மணலை பரபரவென்று அள்ள விசிறி எறிய ஒரு ஆள் படுக்கும் அளவு குழி ஏற்பட்டிருக்கும்!

அடுத்த நொடியே அந்தக் குழியில் படுத்துக் கொண்டு குழந்தைகளிடம் “இப்ப மணலைத் தள்ளிவிடுங்க” என்பார். சொல் பேச்சு கேட்டவர்களாக மணலைத் தள்ளி மூடிவிட்டு அந்த குழியின் மீதும் ஏறி திம்… திம்… என்று குதிக்கவும் செய்வார்கள். பிறகு விளையாட்டு கவனத்திலேயே இருந்துவிட்டு வீடு சென்றதும்தான் தங்கள் பெற்றோர்களிடம் தாத்தா கதையை ரசனையாக விவரிப்பார்கள்.

குழந்தைகள் பேசுவது உண்மையா, பொய்யா என்ற பதற்றத்தில் செய்தி கேட்ட ஒவ்வொரு வீட்டு பெற்றோர்களுமே தாத்தாவான படாசாகேப் புதையுண்ட இடத்திற்கு ஓடோடி வருவார்கள்! பெற்றோர்கள் பரிதவிப்புடன் அக்குழியை வியர்க்க விறுவிறுக்க தோண்டினால் உள்ளே ஒன்றுமிருக்காது.

‘தாத்தாவை இங்கேதான் படுக்க வச்சு மண்ணு போட்டோம்…’ குழந்தைகள் கோரஸாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறிய பாட்டுச் சத்தமும், தம்பூரா ஒலியும் கேட்கும்.அனைவரும் திடுக்கிட்டுப் பார்க்கையில், சிரித்தவாறே நமது மகான் அவர் முன் நின்றிருப்பார்.

“குழந்தைகள் சொன்னதும் – நீங்கள் கேட்டதும் – நான் படுத்ததும் எல்லாமே மெய்தான்…” என்று சொல்லிவிட்டு சென்று கொண்டேயிருப்பார்.

பொதுவாகவே மகானின் அருமை பெருமைகளை உணர்ந்தவர்கள்தான் அந்த கிராமத்து மக்கள். வியாதி… வியாதி என்று வரிசை கட்டி தன்னிடம் வந்தவர்களுக்கெல்லாம் விபூதி தந்தே சுகம் தந்திட்ட விந்தையெல்லம் பார்த்தவர்கள்தானே அவர்கள்.

நோய் தீர்ப்பது கூட எப்படி நடந்தது? ஆச்சரியப்படுவீர்கள்.

வந்தவர்கள் வேதனையினை விலாவரியாகச் சொல்லிக் கொண்டே போக ‘ஒரே ஒரு தலை அசைப்பு’ நிகழும். அடுத்த நிமிடம் வியாதி – விசித்திரமாக ஓடிப்போயிருக்கும். ஒரு சிலருக்கு அங்கிருக்கும் மரம் ஒன்றைச் சுட்டிக் காட்டி பல முறை வலம் வரும்படி ஜாடை காட்டுவார். அவர்களும் அவ்வாறே சுற்றி வந்து கொண்டிருக்கும் போதே அவர்களின் வேதனை மாயமாகியிருக்கும்.

பெரும்பாலும் மெளனகுருவாகத்தான் காட்சி தந்திருக்கிறார். இவரது பூர்வீகம் பற்றிய எந்தவிதமான குறிப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால், சின்னபாபு சமுத்திரத்திற்கு இந்த தியாகசமுத்திரம் எப்படி வந்து சேர்ந்தது என்பது யாருக்கும் பிடிபடாத அதிசயமாகவே ஆகிவிட்டது.

 குழந்தைகளிடையே பிரபலமாகிவிட்டிருந்த மகானுக்கு ஒரு நாள் ஆத்மசாதனை முடிந்துபோனதாக இறைகுறிப்பு வந்துவிட்டதோ என்னவோ?

வழக்கம்போல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மணற்பகுதிக்குச் சென்றார். வழக்கம்போல் குழிபண்ண வைத்தார். ஆனால்,இம்முறை சற்று பெரிதாக செய்து உள்ளே உட்கார்ந்து விட்டு மணலைத்தள்ளச் சொல்லவே, குழந்தைகளும் மணலை இட்டு மூடின…

இந்த காட்சியை ஊர்க்காரர்கள் சிலர் பார்த்துவிடவே செய்தி காட்டுத்தீயாய் பரவியது.

எல்லோரும் அங்கே கூடிவிட்டார்கள். ‘பாபா எப்பவுமே இப்படித்தான் செய்வார். அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியே வந்து விடுவாராக்கும்…’ என்று சொல்லியபடியே நின்றார்கள்! நின்றார்கள்! நின்றார்கள்!... நின்றபடியே இருந்தார்களே தவிர பாபாவும் வரவில்லை. பாட்டு சத்தமும் வரவில்லை. தம்பூரா இசையும் ஒலிக்கவில்லை. அப்பொழுதுதான் அவர்கள் புரிந்து கொண்டனர். ‘இனி பாபா வரமாட்டார்! அவரது சகாப்தத்தை நிறைவு செய்து கொண்டார்!... என்று!

குழந்தைகள் பயத்தில் அழுதனர். தாத்தா!... தாத்தா வெளியே வா!..  என்றனர்.

பெரியவர்கள் தங்கள் குழந்தைகளைச் சமாதானம் செய்து கொண்டிருக்கும்போதே தங்களையும் அறியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தனர்.

திருமூலர் இப்படிச் சொல்கிறார்.

உகம் கோடி கண்டு ஒசிவற நின்று

அகம் கோடி கண்டு அயர்வறக் காண்பார்கள்

சிவம் கோடி விட்டுச் செறிய இருத்தங்கு

உகம் கோடி கண்டு அங்கு உயர் உறுவாறே”

சிவ சிந்தையால் ஒன்றிப் பல்லாண்டுகாலம் மனந்தளரா உறுதியுடன் யோகம் பயில்வோர்க்கு அகம் கோடி கண்டு – உள்ளத்தின் எல்லை அறிந்து, முழுமூச்சுடன் ஆழ்ந்த தியானத்தில் இடையறாது தொடர்ந்து பரம்பொருள் காட்சி காண்பவர்கள்; சிவம் கோடி விட்டுச் செறிய இருத்தங்கு சிவசிந்தனையைத் தொடர்ந்து செய்தபடி ஆழ்ந்த தவத்தில் சிவனோடு கலந்து நிற்பவர்கள் பல கோடி காலம் அங்கேயே இருந்தபடி உயர்நிலை அடைவர்.

மகானாகப்பட்டவர் மண்ணிற்குள் சென்று கொண்டாரே தவிர சிவம் காண தவம் கொண்டு பல காலம் இம்மண்ணின் மக்களுக்கு – மாறா அருள் செய்யும் அருட்கடலாகவே சமாதி நிலையைக் கொண்டிருப்பதை நீங்கள் இப்போதும் காணலாம்.

அங்கு வந்து செல்லும் பலரும் தங்கள் குறைகளை சமாதி முன்பாக நின்று மனம்விட்டுச் சொல்லி அழுகின்றனர்.

அதனால் அவர்களின் மனக்குறைகள் தீர்ந்து போகின்றன. இவர்களில் இன்னும்பலர் அங்கேயே தங்கியிருந்தும் வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

பிரெட், பிஸ்கெட், சாக்லெட்டுகளைக் காணிக்கையாக்கி விட்டு அதை விநியோகம் செய்தும் விடுவார்கள்.

பாபாசாகேப் சமாதி ஆன சில நாட்களில் மும்பையிலிருந்து வந்திருந்த மகானுடைய சீடர் ஒருவர் அச்சமாதி மேல் கட்டிடம் எழுப்பி மக்கள் தனது குருவை எவ்வித சிரமுமின்றி வந்து வழிபட ஏற்பாடு செய்து கொடுத்துச் சென்றாரம்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சமாதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  இவரது சமாதி முன்பாக அணையாவிளக்கு ஒன்று எப்போதுமே எரிந்து கொண்டேயிருக்கிறது. காற்றோ - கடும் மழையோ – பனியோ – எதற்கும் மசியாமல் – கசியாமல் அந்தத் தீப ஒளி எப்போதும் சுடர்விட்டு பிரகாசித்தபடியே இருக்குமாம்.

இந்த தீப விஷயத்தில் கூட மகான் தனது அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். திடீரென ஒரு நாள் அந்த விளக்கானது அணையும் நிலைக்கு வரத் தொடங்கவே உடனடியாக  ஊர்ப் பெரியவர் ஒருவரின் கனவில் சென்று “விரைந்து எழுந்து செல்! தீபம் அணையக் கூடாது!” என்று ஆக்ஞை பிறப்பித்தாராம். அந்த நடுநிசியில் எழுந்த அந்த பக்தரும் ஓடோடிச் சென்று தீபம் அணையாமல் காத்திருக்கிறார்.

- இன்னும் தரிசிப்போம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close