[X] Close

சின்னமனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்! 24 : மலை... இமயமலை நம்பிக்கை!


chinnamanasukkul-seena-perunchuvar-24

மாவீரன் நெப்போலியன்

  • நாகூர் ரூமி
  • Posted: 16 Aug, 2018 09:39 am
  • அ+ அ-

இமாலய மன உறுதி பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். அதேபோல அசைக்க முடியாத இமாலய உறுதிபடைத்த நம்பிக்கையும் உள்ளது. இது சாதாரண நம்பிக்கையிலிருந்து வேறுபட்டது. எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும்போது சாதாரண நம்பிக்கை இருக்கும். ஆனால் நாம் நினைத்ததற்கு மாறாக எல்லாம் தாறுமாறாக, தலைகீழாக நடக்கும்போது நம்பிக்கை குறையும். அல்லது போய்விடும்!

நம்மில் பெரும்பாலானவர்களிடம் இருப்பது இப்படிப்பட்ட சாதா தோசைகள்தான். ஸ்பெஷல் சாதாகூட இல்லை! எல்லாருக்கும் என்ன கிடைக்குமோ அதுதான் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டோருக்கும் கிடைக்கும். மாபெரும் வெற்றி, சாதனை போன்றவற்றை நோக்கியெல்லாம் இவர்களால் நகர முடியாது. அவைகளெல்லாம் அசைக்க முடியாத, அசாதாரண, சந்தேகமற்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கானது.

அப்படியானால் எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கொண்டு ஒன்றுமே செய்யாமலிருந்தால் நடந்துவிடுமா என்றால் அப்படியல்ல. நம்பிக்கை என்பது நாம் சோம்பேறியாக இருப்பதற்கான உபகரணம் அல்ல. கடவுள் விரும்பினால்தான் குழந்தை உண்டாகும் என்றாலும் அதற்கான ’முயற்சியில்’ ஈடுபடாமலே இருந்தால் நடக்குமா?! முயற்சி செய்வது நம் கையில். பலனைக்கொடுப்பது கடவுள் கையில். ’எல்லாமே கடவுளைச் சார்ந்திருப்பதைப்போல எண்ணி பிரார்த்தனை செய். எல்லாமே உன்னைச் சார்ந்திருப்பதைப்போல காரியமாற்று’ என்று கூறினார் தூய அகஸ்டின். அருமையான உபதேசம்.

சாதாரண நம்பிக்கை, அசாதாரண நம்பிக்கை இரண்டையும் எப்படிப் புரிந்துகொள்வது? ரொம்ப எளிது. சூழ்நிலைக்கு ஏற்ப முன்னது கூடும் அல்லது குறையும். ஆனால் பின்னது கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. ஏனெனில் அது ஏற்கெனவே பரிபூரணம் எய்தியுள்ளது. ‘சொர்க்கத்தின் ஏழு வாசல்களும், நரகத்தின் ஏழு வாசல்களும் திறந்து காட்டப்பட்டாலும் என் நம்பிக்கை கூடவும் செய்யாது குறையவும் செய்யாது’ என்று அலீ இப்னு அபீதாலிப் கூறினார்கள். ஏன்? ஏனெனில் அது ஏற்கெனவே ’பெர்ஃபக்ட்’ நிலையை எய்திவிட்டது. அதாவது பிறக்கும்போதே!

இன்னும் எளிமையாகச் சொன்னால் அசைக்க முடியாத நம்பிக்கை என்பது நூறு சதவீத நம்பிக்கை என்று சொல்லலாம். மலைகளைக்கூட நம்பிக்கை தூள்தூளாக்கும், நகர்ந்துவரச் செய்யும் என்றெல்லாம் சொல்வார்களே அந்த நம்பிக்கை. பின்னால் ஃபரோவாவும் அவனது படையினரும் கொல்லத் துரத்திக்கொண்டு வந்தபோது செங்கடலின்மீது தனது கழியை மோசஸ் நீட்டியபோது செங்கடல் இரண்டாகப் பிளந்து வழிவிட்டதே, அந்த நம்பிக்கை. ராமநாமத்தை உச்சரித்துக்கொண்டே அனுமன் கடலைத்தாண்டி இலங்கைக்குச் சென்றதாகச் சொல்கிறோம் அல்லவா அதுவும் பரிபூரண நம்பிக்கையின் விளைவுக்கு உதாரணம்தான். ஏனெனில் ராமரே பாலம் கட்டித்தான் சென்றார்! ராமர் பாலம் தொடர்பான பிரச்சினை இன்றுவரை அவ்வப்போது அரசியல்வாதிகளுக்குத் தீனிபோட்டுக்கொண்டுதானே இருக்கிறது!

நான் என் ஆல்ஃபா தியான வகுப்புகளில் அடிக்கடி இந்த உதாரணம் சொல்வேன். நீங்கள் ஒரு பயந்தாங்கொள்ளி. என்னைப்போல (என்று வைத்துக்கொள்வோம்). நள்ளிரவு பன்னிரண்டு மணி. பேய்கள் வரும் நேரம் என்று சொல்லப்பட்டு நம் மூளையில் நன்கு பதிய வைக்கப்பட்ட கருத்து அது.  வீட்டில் யாருமில்லை. நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். டிவியில் ஓடிக் கொண்டிருப்தும் பேய்ப்படம்! டிவியில் பேய் ’க்ளோசப்’பில் வந்து பயமுறுத்தும் அந்த நேரம் சட்டென்று மின்தடை ஏற்பட்டு விடுகிறது! அதே சமயம், பின்னாலிருந்து உங்கள் தோளில் ஒரு கை விழுகிறது!

இந்தக் காட்சியை இதே வரிசையில் கற்பனை செய்து பாருங்கள்! உங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்பேன். சிரிப்பார்கள். கொஞ்சம் பயத்துடனேயே! அந்தக் கணம் உயிர்கூடப்போய்விடலாம் என்பதுதான் நிஜம். ஆனால் உங்கள் உயிர் போவதற்குள், அதே கணம் மீண்டும் ’கரண்ட்’ வந்துவிடுகிறது! பின்னால் இருந்து உங்கள் நண்பன் சிரிக்கிறான்!

‘அப்பா, நீதானா, நா என்னவோன்னு நெனச்சேன்’ என்று சொல்லி நீங்கள் ஆசுவாசம் அடைவீர்கள். அதுசரி. ஆனால் உங்கள் உடலில் அப்போது இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஒன்று, உங்களுக்கு வியர்த்துவிட்டிருக்கும். இரண்டு, உங்கள் இதயத்துடிப்பு அதிகமாகி இருக்கும்! ஏன்? ஒரு பொய்யை உண்மை என்று நீங்கள் நம்பியதால் ஏற்பட்ட பாதிப்பு அது! இப்போதுதான் பேய், பிசாசு எதுவும் இல்லை என்று தெரிந்துவிட்டதே, அந்தக்கணமே வியர்வையெல்லாம் காய்ந்து உடல் சகஜநிலை அடைந்துவிடுமா? அந்தக் கணமே இதயத்துடிப்பு ‘நார்மல்’ ஆகிவிடுமா?

ம்ஹும். உடல் உலரவும், இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு வரவும் கொஞ்ச நேரம் எடுக்கும். ஒரு நிமிடம் என்று வைத்துக்கொண்டால்கூட சரி. ஆனால் இதனால் நமக்கு மிகவும் தெளிவாக, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டுத் தெரியவரும் உண்மை என்ன? நீங்கள் ஒரு பொய்யை உண்மை என்று நம்பினாலும் அது உங்களை பாதிக்கும். அதாவது உங்கள் நம்பிக்கை எதையும் உண்மையாக்கும் தன்மை கொண்டது!

இங்கேதான் ரகசியம் உள்ளது. நீங்கள் எதையாவது உண்மை என்று நம்பிவிட்டீர்கள் என்றால் அது உங்களைப் பொறுத்தவரை உண்மைதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் உங்கள் உடலும் மனமும் இயங்கும். பாதிக்கபடும். நல்லவிதமாகவோ மோசமாகவோ.

உங்களுக்கு வந்திருக்கும் சாதாரண காய்ச்சலை பன்றிக்காய்ச்சல் என்று டாக்டர் சொல்லிவிட்டால் அது உங்களைப் பொறுத்தவரை உங்கள் உடலுக்குள் பன்றிக்காய்ச்சல் செய்யும் வேலையைச் செய்துவிடும். அந்த பொய்யைச் சொன்ன டாக்டர்தான் பணக்காய்ச்சல் பிடித்த மிருகம் என்பது உங்களுக்குக் கடைசிவரை  தெரியாமலே போய்விடும்!

உங்களைச் சுற்றி இருக்கும் ஒருவருக்குக்கூட நம்பிக்கை இல்லாமல்போனாலும் பரவாயில்லை. உங்களுக்கு மட்டும் உறுதியான பரிபூரண நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு மட்டும் உங்கள் நம்பிக்கை பலனளிக்கும்.

’உண்மை எப்போதுமே சிறுபான்மையினரிடமே இருக்கிறது. பெரும்பான்மையினரிடம் எந்தக் கருத்துமே இருக்காது. அவர்களின் பலம் மாயையானது’ என்றார் தத்துவவாதி கீர்க்ககார்ட். ’பெரும்பான்மையினர் சொல்வதை ஒத்துக்கொள்ளும்போதுதான் சிறுபான்மையினர் ஆற்றல் இழக்கிறார்கள்’ என்றார் ஹென்ரி டேவிட் தோரோ. இவர்கள் சொன்னதெல்லாம் எவ்வளவு உண்மை என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

கிபி ஏழாம் நூற்றாண்டில் பத்ர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக இருந்த குறைஷிகளுக்கும் அரேபியாவில் ஒரு போர் நடந்தது. அதில் முஸ்லிம்கள் 313 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் எதிரிகள் மூன்று மடங்குக்கும் அதிகமாக இருந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர் அது. அதில் மட்டும் முஸ்லிம்கள் தோற்றிருந்தால் இன்று உலகில் முஸ்லிம்களே இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் அதில் வென்றார்கள்.

பெரும்பான்மை எப்போதுமே எண்ணிக்கையில் மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கும். ’வெற்றி அல்லது வீர சொர்க்கம்’ என்ற முழக்கம் சிறுபான்மையினருக்கு மட்டுமே பரிபூரண நம்பிக்கையை ஊட்டும். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதன் காரணமாகவே பெரும்பான்மையினரிடம் அந்த தீவிரம் இருக்காது. மன உறுதியும் பரிபூரண நம்பிக்கையும் கொண்டவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவர்களே எப்போதும் வெல்வார்கள் என்பதே சரித்திரம் காட்டும் உண்மையாக உள்ளது. அளவில் பத்து மடங்கு அதிகமாக இருந்தாலும் கௌரவர்கள் எப்போதுமே ஜெயிப்பதில்லை. சிறுபான்மையினரான பாண்டவர்களுக்குத்தான் எப்போதுமே வெற்றி கிடைக்கும். ஏனெனில் அவர்களிடத்தில்தான் தர்மம் இருக்கும்!

இங்கிலாந்து, பிரஷ்யா, ரஷ்யா, ஸ்வீடன் என ஐரோப்பிய சக்திகள் இணைந்த  கூட்டணி அரசு ஃப்ரான்ஸின் சக்கரவர்த்தியாக இருந்த நெப்போலியனைத் தோற்கடித்து எல்பா என்ற தீவில் சிறைவைத்தது. கூட்டணி ஆட்சிக்காரர்களால் தோற்கடிக்கப்பட்ட மாவீரன் நெப்போலியன் எல்பா தீவிலேயே சிற்றரசனாக இருந்து தொலை என்று பரிவுடன் உத்தரவிடப்பட்டான்! மீதி வாழ்க்கையை அங்கேயே கழிக்க அவன் தள்ளப்பட்டிருந்தான்.

ஆனால் நெப்போலியனா கொக்கா? அங்கிருந்து தப்பிய அவன் மீண்டும் ஃப்ரான்ஸை நோக்கித்தான் சென்றான்! ஏழு சிறு கப்பல்கள், 1200 வீரர்கள், இரண்டு பீரங்கிகள். இவ்வளவுதான் அவனிடமிருந்தன. ஆனால் எதிரிகளிடமோ லட்சக்கணக்கான வீரர்கள், எண்ணிலடங்கா குதிரைகள், பீரங்கிகள் இத்யாதி! என்ன தைரியத்தில் அவன் சென்றான்?! தன்மீதும் தன் யுத்த அறிவின்மீதும் இருந்த அசைக்க  முடியாத நம்பிக்கையில். 

ஃப்ரான்ஸில் இறங்கிய அவன் உள்ளே சென்று மக்களையும் அவனைக் கொல்லவந்த வீரர்களையும் எதிர்நோக்கி, ‘வீரர்களே, உங்களில் யார் உங்கள் சக்கரவர்த்தியைக் கொல்ல ஆசைப்படுகிறீர்களோ அவர்கள் சுடுங்கள்’ என்று முழங்கினான்! அடடா, அந்த நேரத்தில் அப்படியொரு ’பஞ்ச் டயலாக்’ அடிக்க ஒரு யுத்த மேதையால்தான் முடியும். அவ்வளவுதான் வீரர்கள் அனைவரும் அவன் பக்கம் சேர்ந்துகொண்டனர்! ‘சக்கரவர்த்தி வாழ்க’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது! ஆட்சியில் இருந்த பதினெட்டம் லூயி மன்னன் துண்டைக்காணோம் துணியைக் காணோமென்று பாரிஸை விட்டே ஓடிப்போய் மறைந்துகொண்டான்! முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளெல்லாம் தலைமறைவானார்கள்! கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு யுத்தத்தை நடத்தி அதில் மீண்டும் நெப்போலியன் வெற்றி பெற்றான் என்கிறது சரித்திரம்! எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்று நூலில் இத்தகவல்களை விரிவாகக் காணலாம்.

மம்மி ரிடர்ன்ஸ் படத்தில் வரும் மம்மி மாதிரி, மாவீரன் நெப்போலியன் பூனையைக் கண்டால் சிறுவயதிலிருந்தே பயப்படுவான் என்கிறது அவனது வாழ்க்கை வரலாறு! பூனையைக் கண்டு அவன் பயந்திருக்கலாம். ஆனால் எவ்வளவு பெரிய சேனையைக்கண்டும் அவன் பயந்ததே இல்லை என்கிறது அவனது வெற்றியின் வரலாறு! பலம் என்பது எண்ணிக்கையில் இல்லை, எண்ணத்தில்தான் இருக்கிறது என்பதை நெப்போலியனது வாழ்க்கை நமக்கு அழகாகச் சொல்கிறது.

ரொம்ப நாளாக மழையே பெய்யாமல் இருந்த ஊரில் மழைக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்தால் மழை வரும் என்று ஒரு பெரியவர் சொன்னதன் பேரில் ஊர் மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். ஒரு சிறுவன் மட்டும் ஒரு குடையோடு வந்திருந்தான். ஏன் என்று கேட்டதற்கு, ‘மழை வருமல்லவா, நனையாமல் இருப்பதற்கு’ என்று பதில் சொன்னானாம்! நம்மில் பெரும்பாலானோருக்கு இந்தக் கதை தெரிந்திருக்கலாம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு இக்கதை சொல்லவரும் செய்தி புரியும்? அந்த சிறுவன் வெளிப்படுத்தியது பரிபூரண, அசைக்க முடியாத நம்பிக்கை. கதையின் செய்தி அதுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சார்லஸ் ப்ளாண்டின் என்று ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் இருந்தார். பின்னர் அவர் லண்டன், அமெரிக்காவெல்லாம் சென்றார். அவருக்கு என்ன என்கிறீர்களா? அவர் ஒரு புகழ்பெற்ற கழைக்கூத்தாடி. ஆனால் இப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஏனெனில் அவர் தெருக்களில் கயிற்றின் மீது நடந்து வயிறு வளர்க்கவில்லை. மாறாக நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே கயிறு கட்டி அதன் மீது நடந்து சாதனை படைத்தார்! தரையிலிருந்து 160 அடி உயரம். நீர்வீழ்ச்சியின் குறுக்காக 11,000 அடிகளுக்குக் கயிறு! அதில் அவர் அனாயாசமாக நடந்தார். அதுவும் பலமுறைகள். கண்ணைக் கட்டிக்கொண்டு, சக்கரக்கைவண்டியை உருட்டிக் கொண்டு, தாவுகோல்களின்மீது நின்றுகொண்டு – இப்படி பல விதங்களில். அந்த சாதனைகளுக்கெல்லாம் காரணம் அச்சத்திலிருந்து அவர் விடுபட்டிருந்தார். அதுமட்டுமல்ல, தன்னால் நிச்சயமாக நடக்க முடியும் என்ற பரிபூரண நம்பிக்கை அவரிடம் இருந்தது. நான் சொல்ல வந்த செய்தி இதுவல்ல.  ஆனால் இதோடு தொடர்புடைய இன்னொன்று.

அவர் அப்படி நடந்து நடந்து காட்டியதும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாக ஆஹா, ஓஹோ என்றனர். எல்லாம் செய்த பிறகு அவர் மக்களைப் பார்த்துக் கேட்டார். ‘என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?’. ஆமாம், இருக்கிறது என்று கூட்டம் உற்சாகமாக பதிலளித்தது.

‘அப்படியானால் என் முதுகில் ஏறிக்கொண்டு யாராவது வரத்தயாரா?’ என்றார்! அவ்வளவுதான், கூட்டம் ஸ்தம்பித்தது. ஒருவரும் வாயைத் திறக்கவில்லை! உயிரை பணயம் வைக்க யார் தயாராக இருப்பார்கள்! ஆனால் ப்ளாண்டினுடைய மேனேஜர் ஹாரி என்பவர் முன் வந்தார்! அவரை முதுகில் ஏற்றுக்கொண்டு கயிற்றில் நயாகராவைக் கடந்தார் ப்ளாண்டின்!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ப்ளாண்டின் செய்த சாதனையை மட்டுமல்ல.  அவர்மீது ஹாரி வைத்திருந்த பரிபூரண நம்பிக்கையை.  அப்படிப்பட்ட பரிபூரணமான, அசாதாரண நம்பிக்கை இருந்தால் மட்டுமே சாதனைகள் சாத்தியமாகும். நயாகராமீது நடப்பதுதான் சாதனையா என்ன? பரிபூரண நம்பிக்கை இருந்தால் வயாகரா இல்லாமலே வயோதிகனாக இருந்தாலும் வாரிசுகளை உருவாக்கி வாழ்ந்து காட்டலாம்!

இன்னும் தாண்டுவோம்…

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close