[X] Close

பயணங்களும் பாதைகளும் 19 : உண்மையான நுகர்வோர் பாதுகாப்பு


payanangalum-paadhaikalum-19

  • kamadenu
  • Posted: 16 Aug, 2018 09:20 am
  • அ+ அ-

நுகர்வோர் பாதுகாப்பு, இதைப்பற்றி பாடத்தில் படித்ததுண்டு. திட்டங்களும் படு அமர்க்களமாகத்தான் எழுதப்படுகின்றன. ஆனால் இந்தச் சட்டங்கள் எழுதப்பட்டு அவை நடைமுறைப்படுதலை இங்கே நான் பார்த்ததில்லை. அமெரிக்காவில் தான் இதன் முழு அர்த்தத்தையும் உணர்ந்தேன்.

சாதாரணமாக நம்மூர்க் கடைகளில் ஏதாவது வாங்கிவிட்டு அதை நீங்கள் மாற்ற முயன்றிருக்கீறீர்களா? செய்திருந்தால் அந்தப் பிரம்ம பிரயத்தினம் பற்றி நீங்கள் உணர்ந்து ,நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்க அதிகமாகவே வாய்ப்புண்டு. சரி...அம்மாதிரியான தருணங்களில் எப்போதோ படித்த நுகர்வோர் பாதுகாப்பு, கன்ஸ்யூமர் இஸ் தி கிங் போன்றவை அபத்தமாகத் தோன்றுவதும்... கடைக்காரரின் அதிகாரப் பேச்சுக்களில் நாம் பம்மி, ஏதோ தவறு செய்தவரைப்போல் நாம் திருப்பித்தர எடுத்து வந்த பொருளை கைகளில் இடுக்கி, திருட்டு முழி முழிப்பதும் தவிர்க்கமுடியாத தொடர் நிகழ்ச்சிகள்.

ஆனால், நான் உண்மையாகவே ஒரு மகாராணி போல் மகிழ்ந்து உணர்ந்த ஒரு தருணம் அன்று.

அமெரிக்காவின் எந்த மாநிலத்தின் வடிவமைப்பும் நாம் பார்க்காமலேயே சொல்லிவிடலாம். இங்கே எங்கும் நாம் தெரு ஓர கடைகளைப் பார்க்க முடியாது. கடைகளுக்கு என ஏக்கர் கணக்கில் பரந்து ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் அமெரிக்காவின் மிக முக்கிய சங்கிலித் தொடர் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். டவுன் டவுன் என்று அழைக்கப்படும் ஏரியாவில் இவை அமைக்கப்பட்டிருக்கும்.

அன்று இந்தக் கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்வதற்கு விஸ்கான்சினில் உள்ள டவுன்டவுனிற்கு சென்றோம். எப்போதும் போல் பார்க்கச்சென்று பை நிறைய, கை நிறைய எல்லாவற்றையும் வாங்கினேன். வால்மார்ட்டில் சில உடைகள் வாங்கினேன். வால்மார்ட் நம் ஊர் சரவணா ஸ்டோர்ஸ் போல. இதிலும் உடைகள் வாங்கும்போது பார்த்து வாங்கவேண்டும். உங்கள் ஜாதகம் அன்றைய தேதியில் மங்கலம் உண்டாகட்டும் என அட்சதை தூவப்பட்டு இருந்தால், மிகக் குறைந்த விலையில் அற்புதமான ஆடைகள் டீலிங்கில் கிடைக்க வாய்ப்புண்டு. நான் அங்குச் செல்லப்போகிறேன் என்ற உடன், வேண்டாம், ஒரே வாஷில் துணி பல்லிளிக்கும் என்று தடுக்கப்பட்டும், துணிந்து அங்குச் சென்றேன்.. எதுவும் வாங்கப்போவதில்லை என்ற முடிவோடு.

நாம் ஒன்று நினைக்க...இறைவன் வேறு நினைக்க....இது விதி.

கை...பை...நிறைய வாங்கி வந்துவிட்டேன்.

இரண்டு நாட்களுக்குப்பிறகு சான் ஹோசே வந்துவிட்டோம். அங்கேயும் இதேபோல் ஷாப்பிங் சென்றபோது, மற்றொரு வால்மார்ட்டில் அசந்தர்ப்பமான முறையில் போகவேண்டி வந்தது. ஒரு ஆர்வக்கோளாறினால் இங்கு விலை எப்படி உள்ளது என்று பார்க்கப்போய்... அதிர்ச்சி!

நான் வாங்கிய சில உடைகள்...விலை இரண்டு முதல் ஐந்து டாலர் வரை குறைவான விலையில். ச்சே... இப்படிப் போய் ஏமாந்துவிட்டேனே எனும் சோகத்தில் ஒருவாய் சாப்பாடு அன்று குறைத்துச் சாப்பிட..., காரணம் கேட்கப்பட்டது. எப்போது, யார் கேட்பார்கள் என்று தவித்து முழுங்கிய வார்த்தைகள் கோர்வை இன்றி வழுக்கி விழுந்தன.  

ச்சே, இதற்குப்போய் இவ்வளவு சோகமா. உடையை போட்டுக்கொள்ளவில்லைதானே. பில் இருக்கிறதுதானே என்று மகன் கேட்டான். ஆமாம் என்றால் அதை நீ எந்த மாநிலத்தில் உள்ள வால்மார்டிலும் மாற்றிக்கொள்ளலாம் என்றான். ஆடிட் புத்தி ஆயிற்றே. அடுத்த கேள்வியைக்கேட்டேன். வால்மார்ட் ஒரு ஷாப்பிங் செயின். அதனால் அமெரிக்கா முழுவதும் ஒரே விலைதானே இருக்கவேண்டும். எதனால் இந்த மாறுதல்? காரணம், அமெரிக்காவில் ஒவ்வோர் மாநிலமும் தங்களுக்கான விற்பனை வரி விகிதம் மற்றும் எந்தப்பொருள்கள் வரிக்கு உட்படாது என்பதைத் தீர்மானிக்க முடியும். அதனால் சான் ஹோசேயில் ரெடிமேட் ஆடைகளுக்கான வரி விகிதம் குறைவு. அதனால் இந்த விலைக் குறைவு.

எனக்கு பாண்டிச்சேரி நினைவில் வந்தது.ஆனால் ஒரே வித்தியாசம், அது யூனியன் டெரிடரி. தவிர, இங்கே தமிழ்நாட்டில் வாங்கியவற்றை அங்கே மாற்ற முடியாது.

ஆனால். இங்கே அமெரிக்காவில் எந்த மாநிலத்தில், எந்தக் கடையிலும் வாங்கியதன் விலை ஒரு வாரம் விட்டு குறைக்கப்பட்டிருந்தாலும், பொருளைக்கொண்டு அடுத்த மாநிலத்தில் உள்ள அதே கடையில் காட்டினால் தொகையை கொடுத்து விடுவார்கள். அல்லது அதைக்கொடுத்துவிட்டுக் குறைந்த விலையில் உள்ளதை எடுத்துக்கொள்ளலாம். பில் மட்டும் தேவை.

ஆக, உடைகளை எடுத்துக்கொண்டு வால்மார்ட் சென்றேன். விலை குறைவிற்கு விற்பனை வரி ஒரு காரணம் என்றாலும் மேலும் விலை குறைக்கப்பட்டிருந்தது Memorial day weekend sale  காரணமாக. அதனால்... நான் தட்டுத்தடுமாறி நம்மூர்க் கடைகளை நினைவில் கொண்டு திக்கித்திணற, பில்லை கைகளில் வாங்கி, உடையின் பார் கோடை மெஷினில் காட்டி,முழு பணத்தையும் கைகளில் கொடுத்து....சொன்ன ஒரே வார்த்தை....நோ பிராப்ளம். அதற்குள் நான் சுதாரித்து, இல்லை பணம் வேண்டாம், வேறு மாற்றி எடுக்கிறேன் என்று சொல்ல,

”அது உங்கள் விருப்பம். உடையைத் தேர்வு செய்து எடுத்துவாருங்கள். அப்போது அதற்கு பில் போடுகிறோம். இப்போது ரீபண்ட் தொகையை வாங்கிச்செல்லுங்கள்’’

வாங்கிய கடை ஒன்று, வாங்கிய விலை ஒன்று, ஆனால்....சில நொடி நிமிடங்களில் பணமே திரும்பவும் தரப்பட்டது.

கன்ஸ்யூமர் புரொடக்‌ஷனின் உண்மையான அர்த்தம் அன்றுதான் புரிந்துகொண்டேன்.  

அட,இப்படி மைல் கணக்கில், பெட்ரோல் செலவு செய்து உடைகள் மாற்றியது, அந்தச் செலவு...இப்படி எல்லாம் கேட்கப்படாது.

ஆராய்ச்சி கூடாது, அனுபவிக்கணும்.

 - லதா ரகுநாதன்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close