[X] Close

ஆண் நன்று பெண் இனிது 24 : இயல்பை மீட்பது இம்சை!


aan-nandru-pen-inidhu-24-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 11 Aug, 2018 12:09 pm
  • அ+ அ-

திண்டுக்கல் செல்லும்போது எப்போதாவது வெள்ளைசாமி அய்யாவைப் போய் பார்த்துப் பேசிவிட்டு வருவேன். என் அப்பாவும் அவரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில், நீர் மின் நிலைய நிர்மாணத் திட்டங்களில் கட்டிடப் பொறியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். வெள்ளைசாமி அய்யா பேசும்போது, அவர்கள் இருவரும் ஒன்றாகப் பணியாற்றிய காலத்திற்கும், அந்த இடங்களுக்கும் மானசீகமாக அழைத்துச் சென்றுவிடுவார். என் அப்பாவைவிட பத்துப்பனிரெண்டு ஆண்டுகள் இளையவரான அவர், வேலையின் நுணுக்கங்களை அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்வார். அவரோடு பேசிவிட்டுத் திரும்புகிற ஒவ்வொருமுறையும் அப்பாவைப்பற்றிய புதிய தகவல் ஒன்று என்னிடம் சேர்ந்திருக்கும். அப்பாவைப்பற்றிய நான் அறியாத தகவல்களை, எனக்குள் பதிந்திருக்கும் அப்பாவின் சித்திரத்தோடு பொருத்திப் பார்த்து பத்திரப்படுத்திக் கொள்வேன். எப்போதும் அழிந்துவிடாத அப்பாவின் நினைவுகளுக்கு கூடுதல் மெருகூட்டுவதாகவே அவை இருக்கும்.

சென்றமுறை அவரைப் பார்க்கப் போயிருந்தபோது வழக்கத்திற்கு மாறான ஒரு அமைதி அந்த வீட்டை நிறைத்திருந்ததாகத் தோன்றியது. எப்பொழுதும் உற்சாகமாகப் பேசும் அவரும்கூட சற்று வாட்டமாகக் காணப்பட்டார். சிறிதுநேரம் கழித்த பிறகுதான் அதற்கான காரணத்தை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. ஒவ்வொருமுறை வரும்போதும் அந்த வீட்டிற்குள் ஓடியாடிக்கொண்டிருக்கும் அவருடைய பேரப்பிள்ளைகளை அந்தமுறை காணமுடியவில்லை. குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒழுங்கிலிருந்து அவர்கள் அங்கே இல்லையென்பதைப் புரிந்துகொண்டேன்.

‘வீடு ஒரே அமைதியா இருக்கு.. உங்க பேரனும் பேத்தியும் வீட்ல இல்லயா?’ என்று கேட்டேன். ‘இந்த வருஷம் அவங்கள வேற பள்ளிகூடத்துல சேத்துட்டதால போகவர தோதா இருக்கும்ன்னு அங்க பக்கத்துலயே ஒரு வாடகை வீட்டுக்கு  மகன்  குடிபோயிட்டான்’ என்று சொன்னார். அப்போது உள்ளிருந்து காப்பியோடு வெளியே வந்த அவருடைய மனைவி, ’ஏன் பூசி மொழுகிப்  பேசுறீங்க? ஜோதி நம்ம புள்ள தான.., அதுகிட்டயாவது மனசுவிட்டுப் பேசுங்க’ என்று சற்று அழுத்தமான குரலில் சொன்னார். ‘என்னாச்சு. ஏதும் பிரச்சினையா?’என்று கேட்டேன். அப்போது பரிதாபமாக என்னைப் பார்த்த அவரது முகம், எதையோ விழுங்கிக்கொள்ள முயலுவதுபோலத் தோன்றியது.

‘அவரு வாயத் தொறக்க மாட்டாரு, நானே சொல்றேன், பேரனும் பேத்தியும் இங்க இருந்தா எப்பவும் வெளையாடிட்டே இருக்காங்களாம், ஹோம்வொர்க் செய்யுறதில்லையாம், அதனால படிப்புக் கெட்டுப்போயிரும்ன்னு சொல்லிட்டு மகன்தான் இவ்வளோ பெரிய வீட்ட விட்டுட்டு, வாடக வீட்டுக்குப் போயிட்டான், அதுக போனதுலயிருந்து இப்படித்தான் பித்துப்பிடிச்சதுபோல உக்காந்திருக்கார்’ என்று சொன்னார். மகனும் மருமகளும் போனதைவிட பேரக்குழந்தைகள் பக்கத்தில் இல்லாத ஆதங்கம் அந்த அம்மாவின் குரலிலும் வெளிப்பட்டது. 

‘அதானா, என்னவோ ஏதோன்னு கொழம்பிப்போயிட்டேன்.. அப்பப்ப இங்க வருவாங்க தானே?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் வராங்க, ஞாயித்துக்கிழமையில மத்தியானமா கூட்டிட்டு வந்து விட்டுட்டு, சாயங்காலமா வந்து கூட்டிட்டுப் போயிருவாங்க, இங்கயே கண்ணுக்கு முன்னாலயே ஓடியாடிட்டு இருந்ததுக இப்ப ரேஷன்ல அளந்ததுமாதிரி ஒருரெண்டுமணி நேரம் வந்துபோறது ரெண்டுபேருக்கும் கஷ்டமா இருக்கு, எனக்கு ஏதேதோ கைவேலையில கவனம் போயிரும், ஆனா இவராலதான் தாங்கமுடியல’ என்று சொன்னார். ‘குழந்தைங்க என்ன படிக்கிறாங்க?’ என்று கேட்டேன். ‘பேரன் மூணாவது, பேத்தி ஆறாவது.., அதுக வாழ்க்கையையும் பாக்கணும்ல, நமக்கென்ன காலம் முடிஞ்சி போச்சு, நம்ம வருத்தம் நம்மளோட, எங்க காலம் வேற, இந்தக்கால படிப்பு வேற.. நாம என்ன அதுகளோட காலம் முழுசும்  கூடவேவா இருக்கப்போறோம்னு சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்குறாரும்மா.. நீ கொஞ்ச நேரம் இருந்து இவர்கூட பேசிட்டுப் போ’ என்று அந்தம்மா சொன்னார். கணவர் மட்டுமே வருத்ததோடு இருப்பதுபோலவும் தான் கலங்காமல் இருப்பதுபோலவும் அந்தம்மாவின் பேச்சு இருந்தது. அந்த அய்யா எப்போதுமே வாய்விட்டுச் சிரித்து சத்தமாகப் பேசுபவர். அந்தம்மா புன்னகை மாறாத முகத்துடன் மென்மையாகப் பேசுவார். அன்றைக்கு அது மாறியிருந்தது. அந்தம்மா சத்தமாக பேச, அவர் வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார்.

‘உங்க வருத்தம் புரியுது அய்யா, ஆனா உங்க இயல்புக்கு நீங்க இப்படி இருக்கிறது பொருந்தவே இல்ல, சும்மா கலகலன்னு எப்பவும்போல பேசிட்டு இருக்கிறத விட்டுட்டு, உம்முன்னு இருக்கிறது நல்லாவே இல்ல.. நீங்க பேசும்போது சிலசமயம் எங்கப்பாவை எங்கண்ணு முன்னால நிறுத்திருவீங்க. அதுக்காகத்தான் அப்பப்ப நான் இங்க வந்துபோறேன்.. இன்னைக்கு வேற யார் வீட்டுக்கோ வந்தமாதிரி இருக்கு’ என்று அவரிடம் சொன்னேன். அதன்பிறகே அவர் நிமிர்ந்து என் முகத்தை ஆழமாகப் பார்த்தார்.

‘அம்மா சொல்றதுமாதிரி இன்னைக்கு காலம் வேற இல்லையா, டெக்னாலஜியும் படிப்பும் சேர்ந்து குழந்தைகளுக்கு ரொம்ப சுமையாவும் இருக்குதானே. எல்லாத்தையும் போட்டிபோட்டு ஜெயிக்க வேகவேகமா ஓடவேண்டியிருக்கு, அதனால பிள்ளைங்க படிப்புக்காகத் தானே வெளியே போயிருக்காங்க.. பொறுத்துக்கோங்க...’ என்று சொன்னேன்.

‘நீ சொல்றது புத்திக்குப் புரியுது, மனசு ஏத்துக்க கொஞ்ச நாளாகுமில்லையா ..?’ என்று கேட்டு மெதுவாக சிரித்தார். தன் கணவர் சிரிப்பதைப் பார்த்த அந்தம்மா, ‘வேலசெய்யுற காலத்துலயெல்லாம் இவரு அவ்வளவா பேசமாட்டார், இவரு ரிட்டயர்டான புதுசுல பேத்தி பிறந்தா. அவகிட்டதான் சத்தமா பேசத் தொடங்கினார். இங்கேயிருந்து போறேன்னு மகன் சொன்ன அன்னிக்கு, ‘ஏன் இங்கேயிருந்தா.. படிக்க மாட்டாங்களா? ஒன்ன நான்தான படிக்க வச்சேன்?ன்னு கேட்டார். அதுக்கு அவன், ‘அப்பா, உங்க காலம் வேற, இவுங்க காலம் வேற. இன்னைக்கு இருக்கிற  காம்பெட்டிஷன்ஸ் உங்களுக்குப் புரியாதுப்பா.. நீங்க பேசாம இருங்க’ன்னு சொல்லிட்டான்’ அன்னைக்கு அமைதியானவர்தான். ஞாயித்துக்கிழமையிலகூட பேரனும்பேத்தியும் வந்தா அதுக பேசுதுக, இவரு அமைதியா கேட்டுட்டே உக்காந்திருக்கிறார். இந்தவாரம் அதுக வந்தப்ப, ‘மலைக்குள்ள சொரங்கப் பாதை கட்டுன கதை சொல்லுங்க.. டேம் கட்டுன கதைய சொல்லுங்க தாத்தான்னு... பேரன் கேட்டுட்டே இருந்தான்..பேத்திகூட முன்னெல்லாம் எதுனா வம்புபண்ணி பேசுறவர் கண்ணுகொட்டாம அவளைப் பாத்துட்டே இருந்தார்..அதப்பாக்க எனக்குத்தான் தாங்கல’ என்று சொன்னவர் சிறிய இடைவெளிக்குப்பிறகு, ‘எம்மகனும் ரெண்டு மகளும் கைக்குழந்தைகளா இருக்கும்போது ஒரு அவசரத்துக்குக்கூட குழந்தைகள கைமாத்திக்க மாட்டார், வேலைக்குக் கிளம்புற நேரத்துல சட்டை கசங்கிப்போயிரும்னு சொல்வார். வீட்ல இருக்கப்ப டயர்டா இருக்குன்னு சொல்லிடுவார். ஆனா பேரன்பேத்திக மடியில ஒண்ணுக்குப்போனாக்கூட இவரு சந்தோசப்படுவார். வேலை செய்யுற காலத்துல நடந்த பல விஷயங்களை அதுகள்ட்ட கதையா சொல்லிட்டு இருப்பார்..’ என்று சொன்ன அந்தம்மாவின் குரல் சட்டென கம்மியது.

நான் அந்த அய்யாவிடம் திரும்பி, ‘பாருங்க.. அம்மா எவ்வளோ வருத்தப்படுறாங்க.. அவங்களுக்காகவாவது நீங்க உங்க இயல்போட இருங்க..’என்று சொன்னேன்.

‘அய்யாவைப் போலதான் எங்கப்பாவும்.. அவர் ரிடையர்டான மாசத்துல எம்பையன் பிறந்தான். என் மகனைத் தூக்கிக் கொஞ்சுறதும், அவனை கவனிச்சிகிறதுமா எங்கப்பா புதுசா ஆகிட்டார்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. மகனை மூணு வயசில் ஸ்கூல்ல சேத்தப்ப,’ அதுக்குள்ள என்ன அவசரம்’னு கேட்டார். அப்புறம் அவர்தான் அவனை  தினமும் ஸ்கூல்ல  கொண்டுபோய் விடுவார், சாயங்காலம் கூட்டிட்டு வருவார். ஒருநாள், தலையில பெரிய கட்டோட வீட்டுக்கு வந்தான். ‘என்னாச்சுப்பா?ன்னு பதறிப்போய் கேட்டேன். அவர் அமைதியான குரலில், ‘ஒண்ணுல்ல.. கேம்ஸ் பீரியட்ல விழுந்துட்டான். நெத்தியில அடிபட்டுருக்கு.. காயம் சின்னதுதான்.. கட்டுதான் பெரிசா இருக்கு’ன்னு சொன்னார். அதுக்கப்புறம்  ஒருவாரம் கழிச்சு ஸ்கூலுக்கு நான் போயிருந்தப்ப மகனோட கிளாஸ்டீச்சர், ‘திலீப்க்கு காயம்பட்ட அன்னைக்கு, உங்கப்பா தள்ளிவிட்ட பையனைப் பாக்கணும்னு கேட்டார். அவன ஏதாவது சத்தம் போடப்போறாரோன்னு எனக்கு கொஞ்சம் பதட்டமாகிடுச்சு. ‘இனிமே இப்படி நடக்காம நான் கண்டிச்சி வைக்கிறேன் நீங்க போங்க சார்’ ன்னு சொன்னேன். அவர் கேக்கல, அந்தப் பையனக்கூட்டிட்டு வரச்சொல்லி அவன் தோளைப்புடிச்சு அணைச்சு, ’இனிமே வெளையாடுறப்ப கொஞ்சம் கவனமா இருக்கணும்.. சரியா..ன்னு சொல்லிட்டு, திலீப்கிட்ட திரும்பி,’விளையாட்டுல இதெல்லாம் நடக்கும், திரும்பவும் ரெண்டுபேரும் ஒண்ணா சேந்து வெளையாடணும்.. சரியா ..‘ன்னு சொல்லிட்டு, எங்ககே... ரெண்டு பெரும் கை குடுத்துக்கோங்க.. பாக்கலாம்ன்னு’ ரெண்டுபசங்களையும் கைகொடுக்க வச்சார். அது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சுன்னு சொன்னார். வீட்டுக்கு வந்தபின் எங்கப்பாகிட்ட அதப்பத்தி நான் கேட்டப்ப,’ இந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிற வரைக்கும் அவங்க ரெண்டுபேரும் ஒருத்தர் மொகத்த ஒருத்தர் பாத்துக்கணும் இல்லையா.. நம்மளாலதானே காயம் பட்டுச்சுன்னு அவனுக்கு குற்ற உணர்ச்சி இருக்கும், இவனாலதான் காயம்னு திலீப்க்கு அவன்மேல கோவம் இருக்கலாம். ஒரு விஷயம் கொழந்தைங்க மனசுல எப்படி பதியும்னு நமக்குத் தெரியாது. எதுவா இருந்தாலும் நல்லதா பதியணும். கோபமும் வெறுப்பும் குற்றஉணர்ச்சியும் மனசுக்குள்ள ஆழமா பதியுறது நல்லதில்ல. அதனாலதான் வெளையாட்டுல இதெல்லாம் நடக்கும்னு ரெண்டுபேரையும் சமாதானப்படுத்தினேன்’ன்னு எங்கப்பா சொன்னார்’ என்று அவர்களிடம் சொன்னேன். வேறு எதையாவது பேசி அந்த அய்யாவை இயல்புக்குக் கொண்டுவருவதைவிட அப்பாவைப் பற்றிய செய்திகள் அவரை சந்தோஷப்படுத்தும் என்று நினைத்தேன். 

நான் நினைத்தபடியே அதன்பிறகு வெள்ளச்சாமி அய்யா முகத்திலிருந்த இறுக்கம் தளர்ந்ததாக உணர்ந்தேன். நீண்ட பேச்சுக்கான சிறிய செருமலுக்குப் பிறகு அவர், ‘காட்டுக்கு ஒரு கெழவனும், வீட்டுக்கு ஒரு கெழவியும்’னு பழமொழி சொல்வாங்க நம்மூர்ல. அதுக்கு அர்த்தம், வெளிய போய் வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பத்துறது ஆம்பளைக்கும், வீட்டுக்குள்ள இருந்து குடும்பத்தப் பாதுகாக்குறது பொம்பளைக்கும்ங்குறது மட்டும் அர்த்தமில்ல, தொழிலும் குடும்பமும் மூத்தவங்களோட அனுபவத்தோட சேர்ந்து இருந்தாத்தான் சொகப்படும்னு எடுத்துக்கணும், என்னஏதுன்னு தெரியறதுக்குள்ள அப்பனா ஆகியிருப்போம், ஆனா ஆடி ஓடி அடிபட்டு அனுபவத்தோட வரப்ப தாத்தாவா இருப்போம். அப்பனா இருக்கப்ப, ஆம்பளயா எதையோ சாதிச்சிட்ட வெறப்பும்.. அந்த வெறப்பு கொறையாம அந்த மிடுக்கோடவே பிள்ளைகள்ட்ட நடந்துகிருவோம். அதுக்கப்புறமா வாழ்க்கை பல விஷயத்தக் கத்துக்கொடுத்திருதா.. அந்த அனுபவத்தோட பேரன்பேத்திகள்ட்ட வரப்ப குழந்தைகள் முன்னாடி நாம ஒண்ணுமே இல்லன்னு தோணிப்போயிரும். நம்ம கதைய அதுகள்ட்ட சொல்றது கொஞ்சமும், சொல்லாம நெனைச்சுக்கிறது எவ்வளவோன்னு வாழ்றது ஒரு தவம் மாதிரிம்மா, அது சட்டுன்னு கலைஞ்ச மாதிரி இருந்துச்சு.. அதான் கொஞ்சம் ஒடஞ்சி போயிட்டேன்’ என்று சொன்னார். 

அதன்பிறகு நீண்டநேரம் அவர்களோடு பேசிகொண்டிருந்தபின்தான் அன்றைக்கு அங்கிருந்து கிளம்பினேன். ஒருவரின் இயல்பு கலைந்துவிட்டால்  அதனை மீட்டெடுப்பது எத்தனை சிரமமானது என்று அன்றைக்கு அறிந்துகொண்டேன். அவர்களோடு இருந்த அந்தப் பொழுதானது அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல எனக்குமே நிறைவாகத்தான் இருந்தது.

- இன்னும் வருவார்கள்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close