[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 24 : அச்சம் என்பது மடமையடா...


kalamellam-kannadasan-24

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 10 Aug, 2018 09:29 am
  • அ+ அ-


படம்    : மன்னாதி மன்னன்
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்    : டி.எம்.சௌந்தரராஜன்

* * *

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா


கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே


கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
* * *


திராவிட இயக்கத்தின் முதுபெரும் தூணாய் விளங்கிய தமிழகத்தின் மூத்த தலைவர் கலைஞர் அவர்கள் 7.8.2018 அன்று காலமானார். இந்த பத்தியை எழுதுகையில் கவிஞருக்கும் கலைஞருக்குமான நட்பு என் முன் நிழலாடுகிறது.

1950 முதல் 70 வரை தமிழ்த் திரையுலகில் உச்சம் தொட்ட சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். இருவரது திரைப்படங்களிலும் புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். போலவே, இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கலைஞர். சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரிகுமாரி, மலைக்கள்ளன். 1947இல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011இல் வெளிவந்த பொன்னர் சங்கர் வரை, 64 ஆண்டுகள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பைத் தந்தவர்.

திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தபோது திரைத்துறையின் ஆளுமைமிக்க சக்திகளாக நான்கு நண்பர்கள் இருந்தார்கள்.  கலைஞர், எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், கண்ணதாசன் ஆகியோரே அவர்கள். அரசியல் அவர்களை வெவ்வேறாகப் பிரித்தபோதிலும், விரும்புவதும் விமர்சிப்பதுமாக இருந்தபோதிலும், தாங்கள் கொண்ட நட்பில் கடைசிவரை உறுதியாய் இருந்தவர்கள்.

மு.கருணாநிதியாக இருந்தவரை `கலைஞர்' என்று அடையாளப்படுத்தியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். அதேபோன்று கண்ணதாசனை `கவிஞர்' என்று அடையாளப்படுத்தியவர் கலைஞர். கலைஞருக்கும் கவிஞருக்குமான நட்பு 1949 முதல் ஆரம்பமானது. தி.மு.க.வில் கவிஞர் சேர்ந்ததே கலைஞரால்தான். முதன்முதல் கவிஞர் என்ற பட்டப் பெயருடன் பொது மேடையில் ஏற்றிப் பேச வைத்தவரும் கலைஞர்தான். அந்த நிகழ்ச்சியை இருவருமே பதிவு செய்து இருக்கிறார்கள்.

கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளும், வனவாசத்தில் கலைஞர்மீது கவிஞர் வைத்த விமரிசனங்களுமே பெரிதாகப் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் கலைஞரின் மீதும், அவரது தமிழின் மீதும் அளவற்ற காதல் கொண்டவர் கவியரசர். எந்த அளவுக்கு என்றால், கலைஞரைத் தன் காதலியாக நினைத்துக் கவிதை எழுதும் அளவு.

ஒரு கவியரங்க மேடையில் கவியரசரால் வாசிக்கப்பட்ட அந்தக் கவிதை...

எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும்
வனக்கிளி அவளை  இன்னும்  மறக்கவே முடிய வில்லை
நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி இன்று
எனக்கொரு கவிதையானாள் இதுதான் நான் கண்ட இன்பம்

கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள்
பன்னி நான்  கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள்
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்


தந்திரம் அறிவாள் மெல்ல சாகசம் புரிவாள் மின்னும்
அந்திவான்  மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் நானும்
பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன் என்ன
மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்


இப்படிக் கவியரசரால் புகழப்பெற்ற அந்தப் பெருமகன் தமிழினத்தை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு தன் அண்ணனின் அருகே நிரந்தர ஓய்வெடுக்க வங்கக் கரையோரம் நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.

நம்முடைய இடத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடாமல் தக்கவைத்துக்கொள்ள ஒரேஒரு வழிதான் உண்டு. அது ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பது. கலைஞரிடம் அவரது எதிரிகள்கூட வியப்பது, அவரது தமிழையும் உழைப்பையும் கண்டுதான். தன் இறுதி மூச்சு உள்ளவரை உழைத்துக்கொண்டும் போராடிக்கொண்டும் இருந்தவர் அவர். லட்சக்கணக்கான தமிழர்களின் கண்ணீரில் மிதந்தபடி அவரது இறுதிஊர்வலம் அமைந்ததே அதற்குச் சான்று.

தமிழர் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு உழைத்தவர் கலைஞர். தன்னுடைய எழுத்து, பேச்சு, இலக்கியம் என்று எல்லாவற்றையும், பகுத்தறிவு, சமூக நீதி, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தியவர்.

கலைஞரின் நண்பரான கவியரசரும் திராவிடத்தின் கொள்கையை, திராவிடரின் வீரத்தை ஒரு திரைப்பாடல் மூலம் அற்புதமாகச் சொல்லியிருப்பார். எம்.ஜி.ஆர். நடித்த `மன்னாதி மன்னன்' திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் புகழ் பெற்ற பாடலான `அச்சம் என்பது மடமையடா' ஒலிக்காமல் திராவிட இயக்கக் கூட்டங்கள் நடைபெறுவதில்லை என்னும் அளவுக்கு தமிழரிடம் இன உணர்வையும், வீரத்தையும் ஊட்டிய பாடல்.

ஆறில் இறந்தாலும், நூறில் இறந்தாலும் தாயகம் காப்பதே நமது கடமை என்று கேட்போர் உள்ளங்களில் தாய்நாட்டின் மீதான பற்றை விதைத்ததோடு, தமிழ் மன்னர்கள் எவ்வளவு வீரம் மிக்கவர்களாக விளங்கினார்கள் என்பதை எடுத்துச்சொல்லி, அத்தகைய மரபில் வந்த நாம் அஞ்சாமையோடு இருக்கவேண்டும் என்பதை ஆழமாக வேரூன்றச் செய்தவர்.

தன் பிள்ளை கருவறையில் இருக்கும்போதே தைரியத்தை ஊட்டி வளர்ப்பவள்தான் தமிழன்னை. அப்படி வளர்த்தவளுக்கு களங்கம் ஏற்படுமெனில் அந்தக் களங்கத்தைத் துடைக்க உடனடியாய் எழுபவனே அவள் பிள்ளை என்று தன் திரைப்பாடலில் தமிழன்னைக்கும் அவர்தம் பிள்ளையர்க்கும் பெருமை சேர்த்தவர் கவியரசர்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்


இதே வழியில்தான் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறார் கலைஞரும்.

- பயணிப்போம்


Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close