குரு மகான் தரிசனம் – 10 பாபா படேசாகிப்

பாபா படேசாஹிப்
திருவை குமார்
இஸ்லாம் மதத்திலிருந்து வந்து இந்து மதத்திற்கு புனிதம் சேர்த்த அந்த மகானின் திருநாமம் பாபா படேசாகிப்.
புதுவை என்றழைக்கப்படும் பாண்டிச்சேரி மண்ணில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெரும் ஞானிகள் தோன்றி புதுவை நிலத்தைப் புனிதப்படுத்தினர். அந்த உத்தமபூமியில் சுமாராக 32 ஆத்ம ஞானிகள் தோன்றி மக்களிடையே அறிவைப் புகுத்தி அறியாமை அகற்றி ஆன்மிகத்தை ஸ்தாபிதம் செய்தார்கள். உடலை நீக்கிக் கொண்டார்களே தவிர அரூபமாக இன்றும் அந்த மண்ணினை ஆண்டு கொண்டுதான் உள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பாக விழுப்புரத்திலிருந்து புதுவையை நோக்கிச் செல்லும் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள கண்டமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகே அமைந்த சின்னபாபு சமுத்திரத்துக்கு வாராத மாமணியாக வந்து சேர்ந்தவர்தான் இந்த படேசாகிப் மகான்!
மத்திய கிழக்காசிய நாட்டிலிருந்து இவர் வந்திருக்கலாம் என்று இவரைப்பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த தேசத்தில் இவரை தன்வந்திரியாகத்தான் மக்கள் போற்றியுள்ளனர்.
வைத்திய சாஸ்திரத்தில் கரை கண்ட சமர்த்தராக விளங்கிய இந்த ஞானி, எந்த மார்க்கத்தில் வந்து இந்த மண்ணை தன்னுடைய இருப்பிடமாக்கிக் கொண்டார் என்பது தெரியவில்லை.
நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடம் இருக்கின்றன! என்று கீதையில் ஓரிடத்தில் பகவான் கிருஷ்ணன் கூறியிருக்கிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி). எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் இவர்தான் அவற்றிற்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகிறது.
தெய்வத்தின் குரலில் ஆச்சார்ய சுவாமிகள் இதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். அந்த வகையில் பார்த்தால் இந்த மகானின் வரவுகூட அப்படிப்பட்டதுதானே?
ஆத்ம ஞான ஸ்வரூபியாக – வலம் வந்த பாபா படேசாகிப்பிடம் அமைதியும் ஆனந்தமும் ஒருசேரத் தவழ்ந்து சச்சிதானந்தமாய் அவரை கண் முன்னே நிறுத்தியது என்றால் அது மாறாத மெய்யே ஆகும்.
‘படே’ என்றால் ‘பெரிய’ என்று பொருள். உயர்ந்து உத்தம நிலையில் வாழ்ந்து வந்த இவருக்கு இப்பெயர் வரும் காரணம் இதுவே! ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்!’ என்பதன்படி அன்றே மெய்ப்பித்துக் காட்டி நின்றவர் இந்த மகான்.
இந்து மதத்தின் சமயச்சின்னங்களில் முக்கியமாக சாட்சாத் பரமேஸ்வரனின் பிரசாதமாகவே வர்ணிக்கப்படும் திருநீற்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு – அஞ்சவைக்கும் வியாதிகளையெல்லாம் பஞ்சாகப் பறக்கவிட்டவர் படாசாகிப் அவர்கள்.
படேசாகிப்- ஒருமுறை இமயமலை அடிவாரத்தில் முகாமிட்டிருந்த வேளையில், சற்றேறக்குறைய 2000 அடி தரைமட்டத்திற்கு கீழே புதைந்து கிடந்திருந்த ‘நிஷ்ட்தார்யம்’ என்ற உளிபடா கல்லினை தன் தெய்வீக சக்தியால் தொட்டுத் தழுவி அழகிய அருணாசல லிங்கமாக உருவம் பெறச் செய்தார். விழுப்புரம் கண்டமங்கலத்துக்கு வாருங்கள். அந்த லிங்க வடிவத்தை அங்கே பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அந்த சமாதியின் முன்பிருந்தே உங்கள் கோரிக்கைகளை சமர்ப்பியுங்கள். சகலமும் வெற்றி ஆகும் உங்களுக்கு…!
இனி படே சாகிப் மகானின் மகாத்மியங்களைக் காணலாம்.
பாம்பு என்றால் படை நடுங்கும்தானே! ஆனால், அந்த வகையில் அரவத்தின் உயிருக்கு மோட்சம் அளித்த மகானின் மகிமைதெரியுமா?
புதுவைக்கு அருகே உள்ள வனத்தாம்பளையம் என்ற ஒரு குக்கிராமத்திற்குச் சென்று அந்திசாயும் நிலையும் பண்ணைக்குப்பத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார் படேசாகிப் பாபா. வயற்காட்டின் நடுவே ஒற்றை வரப்படியில் பாதை வளைந்து சென்று கொண்டிருக்க – பாபாவும் நடந்து கொண்டிருந்தார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த பலரும் மகானின் திவ்யதரிசனத்தைப் பார்த்ததும் அவரது பின்னாலே நடக்கத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் சற்றும் எதிர்பாராதவகையில் ஒரு சம்பவம் நடந்தேறியது.
கன்னங்கரேலென்று கரிய நிறத்தில் வரப்பில் சுருட்டிப் படுத்திருந்த நல்லபாம்பு ஒன்றை பாபாவின் பாதம் தாண்டிச் செல்கையில் அது தன் தலை விரித்து அவர் பாதம் தீண்டியது. பிறகு படம் எடுத்து நின்றது. உடன் சென்றவர்கள் ‘அலறிக்கொண்டே பாபாவைச் சுற்றினர். ‘பாபா அது பொல்லாப் பாம்பு! விஷம் உங்கள் தலை ஏறுமுன் வைத்தியம் செய்து கொள்ளுங்கள்’ என்று கதறினர்.
படேசாகிப், பாம்பையும் பதறி நின்ற மக்களையும் ஒரு தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு குறுநகை தவழ மீண்டும் பயணம் தொடர்ந்தார். மக்களும் விடவில்லை. ‘என்னாகுமோ மகானுக்கு?’ என்ற பதட்டத்துடன் பின் தொடர்ந்தனர். பண்ணக்குப்பம் வந்தது. மகான் தன்னுடைய வழக்கமான பணிகளைச் செய்தபடி இருந்தார்.
மக்களோ அவரைக் கவனித்தபடியே உட்கார்ந்து கண்கலங்கியபடி இருந்தனர்.
ஆதவன் உதிக்கும் முன்பாக… பரபரவென எழுந்து நடக்க ஆரம்பித்த பாபாவின் பாதங்கள் பிள்ளையார் கோயிலை அடைந்தது. உடன் மக்களும் வந்தனர். பளபளவென விடியும் நேரத்தில் அவரின் உடலைப்பார்த்திட்ட ஜனங்களுக்கு பதற்றம் இன்னும் அதிகரித்தது.
உடலெங்கும் நீலம் பாரித்து மொத்தமாக நீலகண்டமாக நின்றிருந்தார். இதே சாதாரண மனிதனாக இருந்திருந்தால் கதை முடிந்து போயிருக்கும் என்றும் வியந்தனர்.
மகானோ, கணபதியை வணங்கித் துதித்து யோக நிஷ்டைக்குச் சென்றார். அந்த இடமே அமானுஷ்யத்தில் அடங்கிப் போனது.
ஆதவனின் கிரணங்கள் ஆலயத்துள் பிரவேசிக்கும் அதே வேளையில்… செடி, கொடி சருகுகளிடையே சரசரவென சப்தம் கேட்கவே, மக்கள் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தால் அங்கு, மகானை நேற்று தீண்டிச் சென்ற அதே நாகம் தலைவிரித்து நின்றிருந்தது.
ஆனால் நின்றிருந்த எவரையும் ஏதும் செய்யாமல் விநாயகரையும், மகானையும் சுற்றிசுற்றி வந்தது. பிறகு நிஷ்டையில் ஆழ்ந்திருந்த பாபாவின் மேல் ஊர்ந்து அவரது கழுத்தினைச் சுற்றியபடி பல நிமிடங்கள் அப்படியே இருந்தன.
இதனிடையே பாபாவின் நிஷ்டை கலைந்து தன் மீதமர்ந்துள்ள கருநாகத்தைக் கனிவுடன் பார்க்கவும் அது சரசரவென கீழிறங்கி அவரது பாதத்தில் தான் தீண்டிய இடத்தில் தலைவைத்து விஷம் நீக்கியது.
பாபாவின் உடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. கூடியிருந்த மக்களோ பாபா… பாபா… என்று பரவச நிலையில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
இத்தனை அமளிதுமளிகளுக்கிடையே, அந்த கருநாகமானது மகானைச் சுற்றி மும்முறை வலம் வந்துவிட்டு அவரது காலடியில் படுத்துக் கொண்டது. தலை உயர்த்திப் பார்த்தது. அந்த ஐந்தறிவுப் பிராணியின் உள்ளுணர்வை பாபா புரிந்து கொண்டாரோ என்னவோ?
தன் கரங்களால் அதைத் தடவி விட்டார். அடுத்த சில நொடிகளில் அது உயிரை விட்டிருந்தது. படேசாகிப் பாபா எழுந்து நின்றார். அந்த அரவத்தின் உடலினை கைகளில் எடுத்துக் கொண்டார். அதற்கான இறுதி சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோட்ச சாம்ராஜ்யத்திற்கு அனுப்பிவைத்தார்.
ஆக, மரணத்தையும் வெல்லும் மகாசக்தி படைத்தவர் நம் மகான் என்பதை பரிபூரணமாக தெரிந்து கொண்டு அவரது பாதத்தில் விழுந்து வணங்கினர்.
அப்போது அவர்களுக்கு ஒரு வரமளித்து வாழ்த்தினார் மகான்.
- தரிசனம் தொடரும்