[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 23 : ஹாக்கிங் மனநிலை


chinnamanasukkul-seena-perunchuvar-23

  • நாகூர் ரூமி
  • Posted: 09 Aug, 2018 10:23 am
  • அ+ அ-

மாற்றுத்திறனாளி என்றெல்லாம் பூசி மெழுகாமல் நேரடியாகச் சொல்வதானால் அவரது உடல் ஊனமுற்றிருந்தது. பிறப்பதற்கு முன்பே அந்த ஊனம் நிகழ்ந்துவிட்டது. அதுவும் அவரது தந்தை கொடுத்த ஒரு சாபத்தால்! என்ன கதைவிடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஆமாம். கதைதான். மஹாபாரதம், ராமாயணம், புராணங்கள் ஆகியவற்றிலெல்லாம் சொல்லப் பட்டிருக்கும் ஒரு கதை. ஆனால் அர்த்தம் பொதிந்த அழகான கதை.

தாயின் வயிற்றில் இருக்கும்போதே அன்றாடம் வேதங்கள் படிக்கப் படுவதையெல்லாம் கேட்டுக்கேட்டு வளர்ந்து வந்தது அந்தக் காப்பியக் குழந்தை. ஒரு வேதவிற்பன்னராகவே கருவில் வளர்ந்தது அந்த சிசு. பிறப்பதற்கு சிறிது காலத்துக்கு முன் வேதபாடம் கேட்டுக்கொண்டிருந்த அல்லது படித்துக்கொண்டிருந்த தன் தந்தையின் உச்சரிப்பு தவறாக இருப்பதை குழந்தை உணர்ந்துகொண்டது! உடனே தாயின் வயிற்றுக்குள்ளிருந்து அந்த அற்புதக் குழந்தை பேசியது. ‘தந்தையே, தவறாக உச்சரிக்கிறீர்கள். சரியாக உச்சரிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை அல்லது வேண்டுகோள் விடுத்தது.

உச்சரிப்பு! ஆமாம். ஒவ்வொரு மொழிக்கும் தனித்த சிறப்பு உச்சரிப்பு இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் மாற்றினால் தமிழ்க் ‘கல்வி’ ’கலவி’யாகிவிடும் வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது! கலவிக்கல்வியை பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்ற கருத்து நல்லவேளை இன்னும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. பிறந்தது பெண் குழந்தையாக இருந்தாலே தாய்மார்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிற காலமாகிவிட்டது!  போகட்டும், உச்சரிப்புக்கு வருவோம்.

பல ஆண்டுகளுக்கு முன் நான் அழகிய வெள்ளை நிறத்தில் ஒரு Sunny ஸ்கூட்டர் வாங்கி வைத்திருந்தேன். அதைப்பார்த்த மூத்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் கிண்டலாக, ’என்ன இப்படி ஒரு வண்டியா? சரி சரி, நீங்கள் ஆண்பிள்ளைதானே, இருக்கலாம்’ என்றாரே பார்க்கலாம்! முறையான உச்சரிப்பு ரொம்ப முக்கியம். இல்லையெனில் எல்லாம் ஏடாகூடமாகிவிடும்! அது அந்த காப்பியக் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் ’கந்தையானாலும் கசக்கிக் கட்டு, தந்தையானாலும் தலையில் குட்டு’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, தன் தந்தையின் தவறான உச்சரிப்பைத் திருத்திக்கொள்ளும்படி கருவில் இருந்த அந்த தெய்வீகக் குழந்தை கேட்டுக்கொண்டது.

தந்தை கேட்டுக்கொண்டாரா? அதுதான் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ’ஈகோ’ என்று ஒன்று இருக்கிறதல்லவா? தன்னைவிட வயதில் சற்று குறைந்தவர்கள் ’அட்வைஸ்’ செய்தாலே கொதித்து எழும். இன்னும் பிறக்காத தன்னுடைய குழந்தையே தன் உச்சரிப்பு தவறென்று சொன்னால் தந்தைக்கு எப்படி இருக்கும்! படைத்தவனை படைப்பே தவறு சொன்னால்! கொதித்துப் போனார். இந்தக் காலமாக இருந்தால் போராட்டம், கோஷம், துப்பாக்கிச்சூடு இப்படிப் போகும். ஆனால் அந்தக் காலத்தில் அப்படியெல்லாம் செய்ய முடியாது. கால அவகாசமே கிடையாது. உணர்ச்சி வந்தவுடனேயே ’இந்தா பிடி சாபம்’தான். சாபமும் வரமும் உடனே பலித்துவிடும்! காவிய சோகம் என்பது அதுதான்!

தந்தையின் சாபத்தால் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல் எட்டு கோணலாகச் சுருங்கி, மடங்கிப் போனது. எட்டு விதமான உடல் ஊனத்துடன் அக்குழந்தை பிறந்தது! அதனால் ’எட்டு கோணல்கள்’ என்று பொருள்படும் விதத்தில் அக்குழந்தைக்கு ‘அஷ்டா வக்கிரன்’ என்று பெயர் சூட்டப்பட்டது!

மஹாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒருசில மிகமிக கவர்ச்சிகரமான பாத்திரங்களில் ஒன்றுதான் அஷ்டாவக்கிரன். ’அஷ்டம்’ என்றால்  சமஸ்கிருதத்தில் ’எட்டு’ என்று பொருள்.  சித்தர்கள் செய்வதாகச் சொல்லப்படும் சித்திகள்கூட ’அஷ்டமா சித்திகள்’ என்றுதானே சொல்லப்படுகின்றன! ’வக்கிரம்’ என்பது கோணல்களை, வளைவுகளைக் குறித்தது. இக்காலத்தில் காணப்படும் மனோவக்கிரங்களை அது குறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்டாவக்கிரனை எனக்கு ஏன் பிடிக்கும் என்றால் அவன் ஒரு ஞானி! அவனது உடல் ஊனமுற்றிருந்தாலும் ஞானத்தில் எந்த ஊனமும் இல்லாதவன். அவனது சீடர்களில் ஒருவர் ஜனக மஹாராஜா! அவருக்கும் அஷ்டாவக்கிரனுக்கும் தன்னையறிதலைப்பற்றி நடந்ததாகச் சொல்லப்படும் உரையாடல் ’அஷ்டாவக்கிர கீதை’ என்று அறியப்படுகிறது. ஞானிகள் என்று அறியப்படுகிறவர்களுக்கெல்லாம் ‘லைக்ஸ்’ போட்டுவைத்து அவர்களை சந்தோஷப் படுத்துவதன் மூலம் இரக்கப்பட்டு ஒரு காலத்தில் எனக்கும் ஞானம் வழங்கப்படலாம் அல்லவா?! அதற்காகத்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

’உடல் ஊனமுற்ற என் சொந்தங்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், உங்கள் இயலாமை எதைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காதோ அதைச் செய்வதில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். உடல் ஊனமுற்றிருந்தால் பரவாயில்லை. மனம் ஊனமுற்றுவிடக்கூடாது’.

இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? சமீபத்தில் மறைந்த பிரபல பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங். உடலில் பிரச்சினை ஏற்பட்ட பலர் அதையெல்லாம் மீறி எத்தனையோ சாதனைகள் செய்திருக்கிறார்கள். இசைமேதை பீத்தோவனுக்கு காது கேட்காது. இசையமைப்பாளர் ரவீந்த்ரஜெய்ன் குருடராகவே பிறந்தவர். இடையில் பார்வை போன ஜான் மில்டன் அதன்பிறகுதான் ‘இழந்த சொர்க்கம்’ என்ற காப்பியத்தை எழுதினார்.  ஐ.எஃப்.எஸ். தேர்வில் வென்றார் பீனோ ஜெஃபன் என்ற பார்வையற்ற முதல் பெண். ஒரு விபத்தில் ஒரு காலை இழந்த நாட்டிய மயூரி சுதாசந்திரன் செயற்கைக்காலுடனேயே உலகெங்கும் சென்று நடனமாடினார்.

ரயிலில் போனபோது திருடர்களால் தூக்கி வெளியே எறியப்பட்டதால் ஒரு காலை இழந்த அருணிமா சின்ஹா என்ற இளம்பெண் இரண்டே ஆண்டுகள் கழித்து செயற்கைக்காலோடு எவரெஸ்டின்மீது ஏறி சாதனை படைத்தார். அருணிமா சின்ஹாவுக்கு உதாரண புருஷராக, தூண்டுதலாக இருந்தவர் யார்தெரியுமா? கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ்சிங். ஏன் தெரியுமா? யுவ்ராஜுக்கு 2011-ல் நுரையீரலில் கான்ஸர் கட்டி இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் உரிய சிகிச்சைகள் செய்துகொண்டு இன்றுவரை விளையாடிக்கொண்டிருக்கிறார்!

கான்ஸரோடு கிரிக்கெட் விளையாட முடியுமென்றால் இல்லாத காலோடு இமயமலை ஏற முடியும் என்று நிரூபித்தார் அருணா சின்ஹா! ஆமாம். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படுத்திருந்தபோது உதவிக்கு ஆள் இல்லாமல் அவரால் தனியாக எதையுமே செய்ய முடியவில்லை. ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறவேண்டும் என்று அவர் அப்போது முடிவு செய்தார். மே 21, 2013ம் ஆண்டு அவரது குளிர்ந்த கனவு நிறைவேறியது. கிட்டத்தட்ட 29,028 அடி உயரத்தில் ஏறி சாதனை படைத்தார்!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் கிரீடம் வைத்தமாதிரியானது ஸ்டீஃபன் ஹாக்கிங் செய்த சாதனை. ஏற்கெனவே அவரைப்பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன்.

மற்றவர்களைப் பொருத்தவரை உடலில் ஏதாவதொரு பாகம் செயலற்றிருக்கலாம். பார்வை இன்மை, காது கேளாமை, ஊமையாதல், கை கால்கள் இழப்பு இப்படி. ஆனால் ஹாக்கிங் உடல் முழுவதுமே செத்துப்போயிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது மூளையும் கண்களும் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தன. அந்த நிலையில் இருந்த ஒரு மனிதன் தான் உயிர் வாழ்ந்த காலமெல்லாம் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே இந்த பூமியைத்தாண்டி பிரபஞ்சத்தின் துவக்கத்தைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடிந்தது என்றால் அது எப்படிப்பட்ட மனம்!

அவர் செய்த ஆராய்ச்சிகளெல்லாம் சரியா, தவறா என்றெல்லாம் சொல்லும் தகுதி எனக்கில்லை. ஆனால் அது இங்கே முக்கியமும் அல்ல. சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சிக்க வைத்த அந்த மகாமூளை இருக்கிறதே அது மனிதகுலத்துக்குக் கிடைத்த ஒரு மகாசொத்து. அவருடையதைப் போன்ற மனம் நம் அனைவருக்கும் வேண்டும். நம் காலத்தில் வாழ்ந்த ஒரு அஷ்டாவக்கிரன் என்று அவரைச் சொல்லலாம். 2018ல் மறைந்த அவர் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை வாழ்ந்துகொண்டிருப்பார் என்றுதான் சொல்லவேண்டும்!

ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட்  தெரியுமா? அமெரிக்காவின் முப்பத்திரெண்டாவது ஜனாதிபதி. அவருக்கென்ன என்கிறீர்களா? ஒன்றுமில்லை, அவருக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் போல  போலியோ தாக்குதலால் இடுப்புக்குக் கீழே உடல் செத்துப்போனது. ஹாக்கிங் அளவுக்கான பாதிப்பு இல்லை என்றாலும் ஒரு நாட்டின் ஜனாதிபதியாவதற்கு நிச்சயம் அது தடையாக  அமைந்திருக்கும். மூளையே இல்லாதவர்கள்கூட நம் நாட்டில் முதலமைச்சர்களாகி இருக்கிறார்களே என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கத்தான் செய்கிறது! அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையல்ல. நம் சமுதாய மூளை சரியாக வேலை செய்யாததால் வந்த பிரச்சினை.

அதிருக்கட்டும். கால் கிடைக்காவிட்டால் கார் டயரிலாவது விழுந்து விசுவாசத்தைக் காட்டிக்கொண்டவர்களையெல்லாம் அதிகாரத்தில் வைக்கும்போது போலியோ வந்தவர் இருந்தால் என்ன என்கிறீர்களா?! அதுவும் சரிதான். இருந்தாலும் அதிகாரத்துக்கு வந்த பிறகுதான் பலருடைய விசுவாசம் பசுவாசமெல்லாம் நமக்குத் தெரியவருகிறது. ஆனால் ரூஸ்வெல்டின் விஷயம் அப்படிப்பட்டதல்ல. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னேயே அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் மனம் தளரவே இல்லை. மக்களும் அவரது உடல் பிரச்சினையைப் பொருட்படுத்தவில்லை. அவரது திறமைகளை மட்டுமே பார்த்தார்கள். அதனால் ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக முடிந்தது. நாட்டில் நிறைய பொருளாதாரச் சீர்திருத்தங்களை அவர் கொண்டு வந்தார். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவை வழிநடத்தினார். வாதம் அடித்த பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டை ஏற்படுத்தினார்.

இவ்வளவு ஏன், ஒரு முஸ்லிம் தந்தைக்கும் கிறிஸ்துவத் தாய்க்கும் பிறந்த கருப்பரான ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகவில்லையா?! ஆனால் இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு தலித் பிரதம மந்திரி ஆகியிருக்கிறாரா? போனால் போகுதென்று ‘ஜனாதிபதி பதவிதானே கொடுப்பார்கள்!

நிகோலஸ் ஜேம்ஸ் உஜிசிக். இது என்ன என்கிறீர்களா? ஒரு ஆஸ்திரேலியரின் பெயர்தான் இது. அவருக்கு என்ன  என்கிறீர்களா? இவர் உலகப்புகழ் பெற்ற ஒரு அரை மனிதன்! ஆமாம். இடுப்புவரைதான் இவர் இருப்பார். ஃபோகோமீலியா (Phocomelia) என்ற ஒரு நோயோடு பிறந்தவர் இவர். அது என்ன நோய் என்கிறீர்களா? ஒன்றுமில்லை, கை, கால் என்று இடுப்புக்குக் கீழ் அவயவங்கள் எதுவுமே இருக்காது! ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேஜையின்மீது சுழன்று சுழன்று பேசி மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தொடக்கத்தில் இருந்த கிண்டல் கேலியையெல்லாம் மீறி வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார்! உலகப்புகழ் பெற்ற தன்முனைப்புப் பேச்சாளராக வலம் வருகிறார். யூ டியூபில் இவரது காணொளிகள் பல உண்டு.

ஆனால் உடலில் குறைபாடுகள் உள்ள எல்லாருமே இவ்வளவு மன உறுதி படைத்தவர்களாக இருக்கிறார்களா என்றால் அப்படிச் சொல்லிவிட முடியாது. ஒரு புள்ளிவிபரக் கணக்குப்படி அமெரிக்காவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பத்து லட்சம் மாற்றுத்திறனாளிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களாம்! என்ன காரணம்? வறுமை, அக்கறையின்மை, வேலையின்மை, கிண்டல், கேலி எல்லாம்தான். மனம் உடைந்துவிட்டால் உயிர் முக்கியமில்லாமல்தான் போய்விடுகிறது. உண்மைதான். ஆனால் அதைவிட ஆச்சரியமான உண்மை என்னவெனில் மனமானது மெல்லிய கண்ணாடியினால் செய்யப்பட்டதைப்போல ரொம்ப சீக்கிரமே உடைந்தும் விடுகிறது. உடைவதற்கான வாய்ப்பை அது எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறது போலும்! நீட் தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் தற்கொலை, காலா  படத்துக்கு முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தற்கொலை! கான்ஸரைக்கூட குணப்படுத்திவிடலாம் ஆனால் அறிவுகெட்டத்தனத்தையும் அச்சத்தையும் குணப்படுத்தவே முடிவதில்லை. இப்படிப்பட்ட மனதை வைத்துக்கொண்டு என்ன செய்வது!

அதனால்தான் சொல்கிறேன், மன உறுதியோடு வாழ்வதென்பது லேசான சாதனை அல்ல. லேசுப்பட்ட சாதனை அல்ல. அது இமாலய சாதனைதான். சந்தேகமே இல்லை. இமாலய மன உறுதியை ஹாக்கிங் மனநிலை என்றே சொல்லலாம். 

இன்னும் தாண்டுவோம்…

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close