[X] Close

எதிரே நம் ஏணி! 23 : நல்ல பழக்கம்; கெட்ட பழக்கம்!


edhire-nam-yeni-tirupur-krishnan

  • திருப்பூர் கிருஷ்ணன்
  • Posted: 06 Aug, 2018 10:37 am
  • அ+ அ-

நல்ல பழக்கங்கள் முன்னேற்றத்தைத் தருவது போலவே கெட்ட பழக்கங்கள் முன்னேற்றத்தைக் குலைத்து விடவும் செய்யும். எனவே நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கெட்ட பழக்கங்கள் உருவாகி விடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

 பழக்கத்தை நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் எனப் பிரிப்பது சரிதானா? சரியில்லை என்பதே இந்தக் கேள்விக்கான பதில்.

 பழக்கம் என்பது ஒன்றுதான். அதை அப்படித்தான் நம் மனம் எடுத்துக் கொள்கிறது. பழக்கத்தை நல்ல பழக்கம் என்றும் கெட்ட பழக்கம் என்றும் நாம்தான் அறிவு சார்ந்து பிரித்துப் பார்க்கிறோம். மற்றபடி மனத்தைப் பொறுத்தவரை அதற்கு நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் என்ற பேதம் ஒன்றுமில்லை. அதற்கு எல்லாமே `பழக்கம்`, அவ்வளவு தான்.

 மது அருந்தும் பழக்கத்திற்கும் சிகரெட் புகைக்கும் பழக்கத்திற்கும் சிலர் அடிமையாகிறார்கள். அவர்கள் மது அருந்தாத பழக்கத்திற்கும் சிகரெட் புகைக்காத பழக்கத்திற்கும் எளிதாக அடிமையாக முடியும். இரண்டுமே பழக்கம்தான். மனம் இரண்டையும் பழக்கப்படுத்திக் கொள்கிறது, அவ்வளவுதான்.

 மனம் மது அருந்துவது அருந்தாமலிருப்பது இரண்டையும் ஒன்றுபோல் தான் பார்க்கிறது. நாமாக கெட்ட பழக்கத்திற்கு மனம் சுலபமாக அடிமையாவதாகத் தவறாக நினைக்கிறோம். மனம் நல்ல பழக்கத்திற்கும் அதேபோல் சுலபமாக அடிமையாகக் கூடியதுதான்.

 தண்ணீரின் குணம் மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாய்வது. அதுபோல மனத்தின் குணம் எதற்காவது அடிமையாவது. எனவே நல்ல பழக்கத்திற்கு அது அடிமையாகிற மாதிரி நாம்தான் அதைக் கண்காணித்தும் கண்டித்தும் பழக்க வேண்டும்.

 நாயைப் பழக்குவது மாதிரி மனத்தைப் பழக்க வேண்டும். உங்கள் மனம் உங்களின் நன்றியுள்ள நாய். நீங்கள் சொன்னதையெல்லாம் அது கேட்கும். நல்லவற்றைச் சொல்லி நல்ல விதமாக அதைப் பழக்குங்கள். பிறகு நல்லதிலிருந்து உங்கள் மனம் விடுபடாது. பிறகென்ன? வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேராது.

 மனத்தில் நல்ல நினைவுகளை நினைத்துப் பழகுங்கள். மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்கிறார் வள்ளுவர். மனத்தை பொறாமை, சூது போன்ற எண்ணங்களால் நிரப்பாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மனத்தை பலவீனப்படுத்தும். உழைக்க வேண்டும், சுறுசுறுப்பாக இருக்கவேண்டும் என்பதுபோன்ற நேர்மறை எண்ணங்களையே நினையுங்கள்.

 நேர்மறை எண்ணங்கள், அதேவகையில் நேர்மறை எண்ணங்கள் உடையவர்களை உங்களை நோக்கி இழுக்கும். அவர்கள் தாமாக முன்வந்து உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் விறுவிறுவென்று வெற்றிப் படிகளில் ஏறத் தொடங்குவீர்கள்.

நம்மிடம் மிக நுணுக்கமான, நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் சாதித்துத் தருகிற ஓர் உன்னதமான கருவி இருக்கிறது. அதுதான் நம் மனம். அந்த மனமென்ற கருவியை எப்படிக் கையாள்வது என்று பலருக்குத் தெரிவதில்லை. மனத்தைக் கையாளத் தெரியாதவர்கள் வாழ்வில் தோல்வி அடைகிறார்கள். ஆனால் அதைச் சரிவரக் கையாளத் தெரிந்தவர்கள் வாழ்வில் மேலான நிலையை அடைகிறார்கள்.

 நீங்கள் மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்லாதீர்கள். உங்கள் மனத்தைக் கண்காணியுங்கள். நல்ல நினைவுகளைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சக்தியையும் நேரத்தையும் முழுவதும் உங்கள் மனத்தைச் செம்மையாக்குவதிலும் சீர் செய்வதிலும் செலவிடுங்கள். அதனால் நிறைய நன்மையுண்டு.

 மற்றவர்களைப் பற்றிக் குறைசொல்லிக் கொண்டே இருப்பது உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் மோசமான குணம். அதிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் சுலபத்தில் முன்னேற முடியாது. அடுத்தவர்களிடம் குறை காணும் இழிகுணம் உங்கள் மனத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து அழித்து விடுங்கள்.

எதுபற்றியும் யாரையும் குறை கூறாதீர்கள். இந்த உலகில் யாரையும் திருத்த நாம் பிறக்கவில்லை. நம்மைத் திருத்திக் கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம்.

 குறை கூறுவதன் மூலம் பலரால் விரும்பத்தகாத நிலையை நீங்கள் அடைவீர்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எல்லோரும் நம் வெற்றிக்கு உதவும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். வீண் விரோதங்கள், மோசமான வார்த்தைக் கீறல்கள் போன்றவற்றை விட்டொழியுங்கள்.

 முதலில் அடுத்தவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ அப்படி நாம் இருக்கிறோமா என்று கண்காணிப்போம். நாம் முன்னேறுவதற்கு ஏற்ற வகையில் நம்மைச் செதுக்கிக் கொள்வோம். அடுத்தவர்களின் முன்னேற்றத்தை அவரவர்கள் அவரவர்களின் சொந்தப் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். எல்லோரைப் பற்றியும் கவலைப்பட்டு எல்லோருக்கும் அறிவுரைகள் கொடுத்து எல்லோரையும் கடைத்தேற்றுவது அல்ல நம் வேலை. நம் முன்னேற்றம் ஒன்று மட்டுமே நம் குறிக்கோள்.

குறுக்கு வழியில் முன்னேற முடியாது. அப்படி முன்னேறினாலும் அது நிலைக்காது. நேர்வழியே சுலபமான வழி. சற்றுத் தாமதமானாலும் வெற்றியை உறுதியாய்ப் பெற்றுத் தரக்கூடிய வழி. எனவே கடுமையாக உழைத்து கம்பீரமாக நேர்வழியில் நடந்து சென்று முன்னேறுவோம்.

கடந்த காலச் செயல்களை நினைத்து ஓயாமல் வருந்திக் கொண்டிருப்பது சிலரின் பழக்கம். அத்தகையவர்கள் ஒருபோதும் வாழ்வில் முன்னேறுவதில்லை, மன நிம்மதி அடைவதுமில்லை. நாம் கடந்த காலத்தில் வாழ்கிறோம். அல்லது எதிர்காலத்தில் வாழ்கிறோம். நிகழ்காலத்தில் வாழ மறுக்கிறோம்.

 கண்ணெதிரே உள்ளது இதோ இந்தக் கணம்தான். இதை எப்படி வாழ்வது, இதை எப்படிப் பயனுள்ளதாக்குவது, இந்தக் கணத்தில் எப்படி சந்தோஷமாக இருப்பது என்ற சிந்தனை எப்போதும் நமக்குத் தேவை.

`கடந்த காலம் என்பது உடைந்த பானை. எதிர்காலம் என்பது மதில்மேல் பூனை. நிகழ்காலம் தான் கையிலுள்ள வீணை.` அதை மீட்டி அதன் இசையை அனுபவியுங்கள் என்றார் கவிஞர் தாராபாரதி. வாழும் இந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எத்தனை பேர்? இந்தக் கணம் ஆரோக்கியமாக இருக்கிறது, ஆனந்தமாக இருக்கிறது என்று உணர்ந்து அதை அனுபவிப்பவர்கள் எத்தனை பேர்?

 நண்பரொருவர் இருபது ஆண்டுகள் முன்னால் நகரத்தின் ஒரு பகுதியில் நிலம் வாங்க முடிவுசெய்தார். அப்போது அந்த நிலத்தின் விலை சில ஆயிரங்கள்தான். கிட்டி முட்டி வந்தபோது ஏதோ அற்பக் காரணங்களுக்காக நிலத்தை வாங்காமல் விட்டுவிட்டார். மனைவி வாங்க வேண்டாம் என்று சொன்னதும் அவர் வாங்காமல் இருந்ததற்கான பல காரணங்களில் ஒன்று.

 இன்று அதே இடம் பல கோடி ரூபாய்க்கு விலை போகிறது. அன்றே அந்த நிலத்தை வாங்காமல் விட்டு விட்டோமே என்று இப்போது ஓயாமல் சொல்லிச் சொல்லி வருந்திக் கொண்டிருக்கிறார் நண்பர். அவர் வாங்காமல் போனதற்கு மனைவியும் ஒரு காரணம் என்பதால் வீட்டில் இந்த விஷயம் தொடர்பாக ஓயாமல் சச்சரவு.

கடந்த காலச் சம்பவத்தின் விமரிசனம் காரணமாக அவருக்கு நிகழ்கால நிம்மதி போய்விட்டது. கோடி ரூபாய் கொடுத்தாலும் நிகழ்கால நிம்மதி கிடைக்குமா? கடந்த கால நினைவுகளாலும் ஏக்கங்களாலும் நிகழ்கால நிம்மதியை அல்லவா தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை அவருக்குப் புரியவே இல்லை. ஆச்சரியம். அவர் மனைவிக்கும் அது புரியவில்லை. குடும்பத்தின் இனிமை காணாமல் போய்விட்டது.

 தத்துவப் பார்வை உள்ளவர்கள் கிட்டாதாயின் வெட்டென மற என்று அந்த நிலத்தை வாங்காது போனதை அப்போதே மறந்து அடுத்த வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இவரோ தன் இழப்பை சகியாதவராய் ஒவ்வொரு நாளும் கழிவிரக்கத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இத்தகைய மனப்போக்கு உடையவர்கள் வாழ்வில் ஒருபோதும் முன்னேற இயலாது. நாம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முடிவெடுக்கிறோம் என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். எனவே அன்று அந்த முடிவை எடுத்தோம் என்ற அளவில் நிறைவடைந்து அதை அதோடு விட்டுவிட வேண்டும். அதனால் ஏற்பட்ட இழப்புக்களைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தால் தொடர்ந்து நம் வாழ்க்கைப் பாதையில் நாம் வெற்றிகரமாகப் பயணம் செய்ய இயலாது. மகாகவி பாரதியார் இதைத் தெளிவாக உணர்ந்திருந்தார்.

சென்றதினி மீளாது மூடரே நீர்

 சென்றதையே தினம் தினமும் சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

  குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

 எண்ணமதைத் திண்ணமுற எண்ணிக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

 தீமையெல்லாம் ஒழிந்துபோம் திரும்பி வாரா!

 இந்த வரிகள் நாம் நினைவில் கொள்ள வேண்டிய அற்புத வரிகள். பாரதியார் நடத்தும் நமக்கான இந்தப் பாடத்தை நாம் வேதமாய் நினைத்துப் போற்ற வேண்டும். கடந்த காலத்தை மறக்க வேண்டும்.

 சிலர் எதிர்காலம் பற்றி எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். என்னென்ன சங்கடங்களெல்லாம் எதிர்காலத்தில் நேரலாம் என்ற கவலை அவர்களை வாட்டி வதைக்கும். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எந்தச் சங்கடமும் அவர்களுக்கு நேராமலே கூடப் போய்விடும்.

 நேர்ந்தால் நேரும்போது எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி அந்தச் சூழ்நிலையை அப்போது எதிர்கொள்ள வேண்டுமே தவிர இப்போதிலிருந்தே கவலைப்படுவது முட்டாள்தனம். நிகழ்காலத்தில் எதிர்காலம் பற்றிப் படும் அர்த்தமற்ற கவலைகள் நம் நிகழ்கால வாழ்வைச் சீரழித்து விடுகின்றன.

 நாம் வாழும் இந்தக் கணத்தில் ஆனந்தமாக வாழக் கற்க வேண்டும். இதோ இன்று இந்தக் கணத்தில் கடினமாக உழைக்க வேண்டும். இந்தக் கணமே நிலையானது என்பதை அறிந்து இந்தக் கணத்தை அதிகபட்சம் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டால். நம் முன்னேற்றங்கள் மிக எளிதாகும்.

 எளிதாக முன்னேறுவதற்கு உரிய முக்கியமான ஒரு வழி - நீங்கள் விரும்பியதையே நீங்கள் செய்ய வேண்டும் என்பது. வாழ்வில் அது சாத்தியமா என்றொரு கேள்வி எழுகிறது. அதற்கான பதில்....

 - இன்னும் ஏறுவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close