[X] Close

தொங்கட்டான் - 23 : டூரிங் டாக்கீஸ்!


thongattan-23-mana-baskaran

  • மானா பாஸ்கரன்
  • Posted: 06 Aug, 2018 09:43 am
  • அ+ அ-

அப்பன்காரனிடமே நகைத் தொழில் கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு உசிதமானது அல்ல. என்னதான் கிளிப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல தொழில் பழக்கிவிட்டாலும், வேற்று மனுஷாளை குருவாக ஏற்றுக்கொண்டு தொழில் பழகுவதுபோல் ஆகாது. ஆகவே, பாலுச்சாமியை திருவாரூரில் எல்லையம்மன் கோயில் தெருவில் பத்தர் கடை வைத்திருந்த முருகவேல் பத்தரிடம் கொண்டு வேலைக்குச் சேர்ப்பது என்று உறுதியானது.

முருகவேல் பத்தர் நாணயஸ்தர்.  சொல்லும் செயலும் சுத்தமாக இருக்கும். நகைத்தொழில் செய்வதுடன், தகட்டாலையும் வைத்திருந்தார்.

திருவாரூரைச் சுற்றியிருக்கும் அடியக்க மங்கலம், மாவூர், முடிகொண்டான், சன்னாநல்லூர், நன்னிலம், ஆலத்தம்பாடி, எண்கண், அம்மையப்பன் போன்ற சிற்றூர்களில் இருந்தெல்ல்லாம் பவுன் தகடு போட, பவுன் கம்பி போட திருவாரூருக்குத்தான் வரவேண்டும். அப்படி

வருகிறவர்களுக்கு  ரெண்டு இடங்கள் அத்துப்படி. ஒண்ணு முட்டாய்கடை சந்தில் இருந்த வெங்கடேசப் பத்தர் தகட்டாலை. மற்றொன்று முருகவேல் பத்தர் தகட்டாலை.

இந்த முருகவேல் பத்தர்… பக்கிரி பத்தருக்கு ரொம்ப நெருக்கமான சொந்தம். பக்கிரியின் பங்காளி வீட்டுப் பெண் –  கஸ்தூரியின் புருசன்.  நிச்சயம் சொந்தப் புள்ள மாதிரி பாலுச்சாமியை கஸ்தூரி பார்த்துக்கொள்ளும் என்று பக்கிரி நம்பினான். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

ஒரு நல்ல நாள் பார்க்கப்பட்டது. அன்றைய நாளில் பாலுச்சாமியை  முருகவேல் பத்தரிடம் கொண்டு போய்  பட்டறக்கொடத்தானாக சேர்த்துவிட்டான் பக்கிரி. ஏற்கெனவே முருகவேல் பத்தரிடம் சிவராமன் என்கிற பையன் பட்டற கொடத்தானாக இருந்தான்.

சேப்பா, நெகு நெகுவென ஒசரமாக சிவராமன் இருப்பான். நல்லா சிரிச்சு சிரிச்சுப் பேசுவான். பாலுச்சாமியும் சிவராமனும் கூட்டாளியானார்கள்.

முருகவேல் பத்தர் வீடு  அரசங்குளத் தெருவில் இருந்தது. வீட்டுக்கும் பஜாரில் இருந்த பட்டறைக்கும் மூணு மைல் இருக்கும். சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்  முருகவேல்.  அதில் சிவராமனும் பாலு சாமியும்   டபுள்ஸ்  போவார்கள்.  பாலுச்சாமிக்கு சாப்பாடு,

படுக்கை  எல்லாமே  குருநாதர்  வீட்டிலேயேதான்.  சும்மா சொல்லக்கூடாது  பெத்த  புள்ள மாதிரியே  சிவராமனையும்  பாலுச்சாமியையும்  பார்த்துக் கொண்டார்கள்  முருகவேலும் கஸ்தூரியும்.  ஜாம்ஜாம் என்று  நகை  வேலை  கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்… பாலுச்சாமி.

*************** 

சிவராமனையும்  பாலுச்சாமியையும்  சாயந்தரத்தில் டெய்லி ஒரு மணிநேரம் அவிழ்த்துவிட்டுவிடுவார்கள். எந்த வேலையும் அப்போ கொடுக்க மாட்டார்கள். ரெண்டு பேரும் அப்படியே எல்லையம்மன் கோயில் தெருவில் இருந்து பேசிக்கிட்டே நடந்து வண்டிக்காரத் தெரு போவார்கள். அங்கே  சுரைக்காவூர் ராமசாமி பத்தர்  மகன் கண்ணனை அழைத்துக்கொண்டு நேராக, குணா மாவு மில்லு சந்து வழியாகச் சென்று ஓடம்போக்கி ஆற்றங்கரையில் பேளுவார்கள்.  பேண்டு முடித்ததும்  அப்படியே போயி… ரெங்கவிலாஸ் புகையிலை கம்பெனிக்குப் பின்னால் இருந்த படித்துறையில் இறங்கி காலை கழுவிக்கொண்டு கரையேறி திரும்புவார்கள்.

திரும்பும்போது பேச்செல்லாம் நகை வேலையைத் தவிர என்னென்னமோ திசையில் போகும். பெரும்பாலும் சினிமாதான் டாபிக். அப்போ திருவாரூரில் மூணே மூணு சினிமா கொட்டாய்தான் இருந்தன. கீழவீதி தேருமுட்டியைத் தாண்டிப் போனால் விருப்பாச்சிக் குளக்கரையில் இருந்த செங்கம் டாக்கீஸ்.   ஆண்டாத் தெருவில் இருந்த அம்மையப்பா தியேட்டர், ஓடம்போக்கி ஆத்தாங்கரையில் இருந்த பேபி டாக்கீஸ்.  இவைதான் நகரத்துக்குள் இருந்தன.  இது தவிர கொஞ்சம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கருணாநிதி டூரிங் டாக்கீஸ்.

பேச்சை சிவராமன்தான் ஆரம்பிப்பான்.

’’மாப்பிள… ஒரு தடவ புலிவலம் போயி கருணாநிதியில படம் பாக்கணும்டோய்…’’ என்பான்.

‘’ஆமாம் அம்மையப்பாவுலயும் செங்கத்துலயும் வர்ற படங்கள பாத்து களச்சிட்டாரு மைனரு… போடா போ…’’ என்றான் கண்ணன்.

‘’அதுக்கில்லடா கண்ணா… அங்க எல்லாமே தர டிக்கெட்டுதானாமே… மணல கொட்டி வெச்சிருப்பாங்களாம்… டிக்கெட்டு நாலணாதான். மணல்ல ஒக்காந்து நான் படம் பாத்ததே இல்லடா…’’ என்றான் சிவராமன்.

‘’நான் எங்கப்பாவோட தர டிக்கெட்டுல போயி மணல்ல ஒக்காந்து படம் பார்த்திருக்கேன். எங்கவூருக்கு பக்கத்துல நன்னிலம் மணவாளம்பேட்டையில் லட்சுமி டாக்கீஸ்னு

இருக்கும். அதுல துலாபாரம் பார்த்திருக்கேன். படம் ஒரே அழுவையா இருக்கும்…’’ என்றான் பாலுச்சாமி.

கண்ணனுக்கு பெஞ்சு டிக்கெட் மட்டும்தான் தெரியும். சிவராமனும் பாலுச்சாமியும் சொல்வதை ஆச்சரியமாக கண்கள் விரிய கேட்டான் கண்ணன்.

‘’ஆனா ஒண்ணே ஒண்ணுடா கண்ணா… இந்த கம்மனாட்டிப் பயலுங்க தர டிக்கெட்டு மணல்ல எச்சியத் துப்பி வெச்சிருப்பானுங்க….   மண்ணுல கைய வெச்சா கையெல்லாம் கொழகொழங்கும்டா…  மீந்துபோன பீடி, சுருட்டுங்க கெடக்கும்….’’ என்று தரை டிக்கெட் பற்றி கூடுதல் தகவல் பகிர்ந்தான் பாலுச்சாமி.

பேசிக்கொண்டே பட்டறைக்கு வந்திருப்பார்கள். சினிமா செய்தி பாதியில் தொங்கும்…

நகை வேலை கற்றல் தொடரும்.

*************  

முருகவேல்  பத்தர் இல்லாத நேரங்களில் தகட்டாலைக்கு வரும் பத்தர்களிடம் சிவராமனும் பாலுச்சாமியும் தொண தொணவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். இப்படியான பேச்சு இதுவரையில் தெரியாதொரு புது உலகத்தை பாலுச்சாமிக்கு காட்டியது. தொழில்ரீதியான பேச்சு, தேவையில்லாத வெட்டி அரட்டை எல்லாம் சேர்ந்து அவனுக்குள் புதிய மனுசத்தனத்தை உருவாக்கின.

கடாரங்கொண்டானில் இருந்து பவுன் தகடு பிடிக்க வந்திருந்தார் ஜெயராமன். அவர் வந்தால் இந்தப் பசங்க வாயைக் கிண்டாமப் போவ மாட்டார்.

’’என்னங்கடா உங்க பத்தரு வெளியில போயிட்டா உங்க ராஜ்யம்தான். ஜமா சேந்துடுவீங்க. மத்தியானம் என்னடா… பத்தரு வூட்டுல நசுவையா நடையானா?”’என்றார்.

’’நசுவையும் இல்ல… நடையானும் இல்ல… காந்தம்…’’ என்றான் சிவராமன்.

‘’ஓஹோ காந்தமா…  டேய் காந்தம் சோத்த வெரட்டுமேடா… நல்லா மூக்க புடிக்க டின் கட்டியிருப்பீங்க…’’ என்றார்.

ஆமாம் என்று வார்த்தைகளால் பதில் சொல்லாமல்  பொதுவாக சிரித்து வைத்தார்கள் சிவராமனும் பாலுச்சாமியும்.

அவர் போனவுடன் சிவராமன் பாலுச்சாமியிடம் சொன்னான்:  ”’ பாலு இப்ப வந்துட்டுப் போனாருல்ல… அவரோட நெசம்பேரு ஜெயராமன். ஆனா  சலங்கை பத்தர்னு கூப்பிடுவாங்க. சலங்கை உருக்கறதுல இவரு கில்லாடி. சலங்கைன்னா என்னன்னு தெரியுமா?

சில நகையில கீழே உருண்ட உருண்டயா தொங்கும்ல… அதான் சலங்கை. அது செய்றதுதான் இவரு வேல. அதான் இவரு பேரு சலங்க பத்தருன்னு ஆயிட்டு.  இன்னொருத்தரு இருக்காரு… அவரு பேரு கசை மூர்த்தி. அவரு  கசை வேலை நகைங்க செய்றதுல எஸ்பர்ட்டு.

 கசைங்கிறது வேற ஒண்ணுமில்ல…  மெல்லிசான  ரெண்டு பவுனு கம்பிய முறுக்குனாப்ல இருக்கும். நாம தொவட்டிக்கிற துண்டை அலசிட்டு புளியுவோம்ல… அப்ப துண்டு எப்படியிருக்கும்… அப்படியிருக்கும் பவுனு கம்பி. அத நறுக்கி… நறுக்கி… ஒட்டி நகை செய்றதுதான் கசை வேலை…’’ என்றான் சிவராமன்.

’பட்டறைக்கொடத்தானாக வந்தன்னிக்கு இந்த சிவராமன் கெப்புரு புடிச்சவனா இருப்பான்னு நெனச்சோமே… சே, எவ்வளவு விஷயங்கள கத்துத் தர்றான்…’ முருகவேல் பத்தருக்கு அடுத்ததாக சிவராமனையும்  தனது  குருவாக மானசீகமாக ஏற்றுக்கொண்டான்

பாலுச்சாமி.

 இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பக்கத்து  குப்புசாமி வெத்தல சீவல் கடை கோவிந்தராஜ் நின்றுகொண்டிருந்தான். அவன் சிவராமன் கிட்டக்க வந்து… ’’செவராமா இப்ப வந்தவரு  மத்தியானம் நசுவையா? நடையானான்னு கேட்டாரு. அதுக்கு நீ காந்தம்னு சொன்னியே... நசுவை, நடையான்னா என்ன?” என்று கேட்டான்.

 சிவராமன் பதில் சொல்லாமல் வளையல் தரனையை எடுக்க உள்ளறைக்குச் சென்றுவிட்டான்.

 ஆனால் பாலுச்சாமி வாயை தொறந்துவிட்டான்: ‘’அது ஒண்ணுமில்லடா கோயிந்தா.  நசுவைன்னா  எங்க  சிம்லான் பாஷையில  மீனு.  நடையான்னா ஆட்டுக்கறி… காந்தம்னா கருவாடு… என்றான்.

உள்ளறையில் இருந்து  கையில் வளையல் தரணையுடன்  வந்த சிவராமன், ‘’டேய் ஓட்ட வாயா  அவன் கேக்குறான்னு எல்லாத்தையும் சொல்வியா…’’ என்று சொல்லியபடியே  பாலுச்சாமியின்  மண்டயில் நறுக்கென்று  ஒரு குட்டு வைத்தான்.

மண்டயைத் தடவிக்கொண்ட பாலுச்சாமியிடம்  கோவிந்தராஜ் தொடர்ந்து கேட்டான்:

’’ சிம்லான்னா… என்ன?”’

அதற்கு  பாலுச்சாமி பதில் சொல்லவில்லை…. சிவராமன்தான் சொன்னான்: ‘’உங்க கடையில போயி வெத்தலயில  அசோகா பாக்கும், ரிண்டானும் வெச்சி கொண்டா… அப்படியே சுண்ணாம்பும்  எடுத்தா…சிம்லான்னா என்னன்னு சொல்றேன்…’’ என்றான்.

‘’ம் உங்க வாயி  ஓசியில வெத்தல பாக்கு கேக்குதா?’’ என்றான் கோவிந்தராஜ் அவசர அவசரமாக.

‘’ஆமா ஓசியில பதிலு வேணும்னா… ஓசி வெத்தல கொடுக்கணும்..’’ என்று சொல்லி… அவனை  அந்த இடத்தில் இருந்து விரட்டிவிட்டான் சிவராமன்.

-தொங்கட்டான் அசையும்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close