[X] Close

குரு மகான் தரிசனம் 9 : மீனாட்சியால் கண்ணொளி... நீலகண்டய்ய தீட்சிதர் மகிமை


guru-mahan-dharisanam-9

  • kamadenu
  • Posted: 04 Aug, 2018 12:45 pm
  • அ+ அ-

திருவை குமார்

எழுபத்தி இரண்டு வயதான ஒரு மாபெரும் தபஸ்வியும் மகானுமாகிய ஒருவர் தன்னுடைய எட்டு வயது பேரனிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்.

 “ஆபதி கிம்கரணீயம்” இதன் பொருள்  சொல்லுடா கொழந்தே!... என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டு வைத்தார். உடனிருக்கும் உற்றார் உறவினர்கள் முகத்தில் ஆச்சர்யத்துடன் கூடிய அதிர்வும் தெரிந்தது.

‘என்ன விளையாட்டு இது? கேட்பவரோ மாபெரும் தபஸ்வி… கேள்விக்கு ஆளாகி நிற்பதோ சின்னஞ்சிறு சிசு…

அந்த இடமே ஒரு விதமான அமைதியில் ஆழ்ந்து போயிருந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் பாலகன் பதில் சொல்லி முடித்தான்.

ஸ்மராணாயாம் சரண யுகளம் அம்பாயா” இதான் தாத்தா உனக்குப் பதில்!... என்று சொல்லி அந்தக் குழந்தை கைதட்டி மகிழ்ந்தது. பெரியவர் அகமகிழ்ந்து அந்தக் குழந்தையை ஆரத்தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

பெரியவரின் கேள்விக்குண்டான பொருள்:

‘ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?’

குழந்தையின் பதிலில் வந்த சாராம்சம்:

‘பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைத்து தொழ வேண்டும்’

கேள்வியின் பாரமும் – பதிலும் சாரமும் பார்த்தீர்களா? கேள்வி விடுத்தவர் ஏதோ சாதாரண மனிதரல்ல! அப்பைய்ய தீட்சிதர் எனும் மகான்.

நாயக்கர்கள் மதுரையம்பதியை ஆண்டுகொண்டு இருந்தபோது மந்திரியாக கோலோச்சியவர். அவரது சகோதரனின் பேரனே அந்த சின்னஞ்சிறு பாலகன். பெயர் நீலகண்டன்.

அந்தக் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் என்னவென்றால் நான்கு வயது முதலே சமஸ்க்ருத அப்யாசம் தொடங்கி விடும். அப்படிப்பட்ட அப்யாசத்தில் இருந்த சிறுவன்தான் நீலகண்டன். குழந்தையின் மேதாவிலாசத்தைக் கண்டு பூரித்துப் போன அப்பய்ய தீட்சிதர், அடுத்த கேள்வியை முன்வைத்தார்.

தத் ஸ்மரணம் கிம் குருதே”

‘சரி! நீ அம்பிகையை சரணடையச் சொல்கிறாய். அதனால் என்ன பலன் கொழந்தே?’

இதழ் ஓரம் புன்னகை ததும்ப தாத்தாவின் மடி மீது அமர்ந்து கொண்ட நீலகண்டம் ‘அய்யோ தாத்தா இது கூடவா ஒனக்கு புரியாது. ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே. அதாவது, பராம்பிகையின் பாத கமலங்களை சரணடைந்தவர்களுக்கு ப்ரும்மாதி தேவர்களே வந்து சேவகம் செய்வார்களாம் தாத்தா…’

‘விளை பயிர் முளையிலே தெரியும்’ என்ற வாக்கிற்கு வியாக்யானமாக ஒளிர்ந்து நின்று பின்னாட்களில் நீலகண்டய்ய தீட்சிதர் என்று விஸ்வரூபம் பெற்றதுதான் அந்தச் சிறு பாலகன். இவர்களது காலம் சரிவர கணக்கிடப்படவில்லை. கிட்டத்தட்ட பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் பதினாறு தொடக்கத்தில் இருந்திருக்கலாம் என்று சுவடிக் குறிப்புகள் கூறுகின்றன. .

மதுரை மாநகரில் வாழ்ந்திட்டவருக்கு மீனாட்சியின் மேல் அபாரபக்தி. அவர் எழுதிக்குவித்த பல நூல்களில் மிகவும் முக்கியமானது ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்.”  அதில் இப்படி விவரித்திருக்கிறார். (நமது மஹாபெரியவர் தெய்வத்தின் குரலில் இதை மேற்கோள் காட்டியுள்ளார்).

“மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ! ஆனாலும் உன்னிடம் கஷ்டங்களை வாய் விட்டுச் சொல்லாவிட்டால் மனம் புண்ணாகிறது.

வாய்விட்டுச் சொல்லிவிட்டாலோ தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்” என்றார்.

நமது நீலகண்டம், அப்பய்ய தீட்சிதர் தம்பி பேரன் என்று பார்த்தோமல்லவா? சின்னஞ்சிறுவயதிலேயே தகப்பனையும் பாட்டனாரையும் இழந்தார். அதனாலேயே அப்பய்ய தீட்சிதர் தனது கண்காணிப்பில் இவரை வளர்க்க ஆரம்பித்து வித்யாப்யாசமும் செய்தார்.

அப்பய்ய தீட்சிதர் சாதாரண மகானல்ல!.. சாட்சாத் சிவஸ்வரூபம்.

நீலகண்டத்திற்கு வயது பன்னிரெண்டை தாண்டியது. பிரச்சினை யும் நுழைந்தது. எப்படி?

உறவினர்கள்தான் உரலை இடிக்கத் தொடங்கினர். வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தாற் போலாயிற்று!

அப்பய்ய தீட்சிதருக்கு வயது முதிர் நிலையில் தனது இறுதி நாட்கள் தில்லையம்பலத்தானுடன் சிதம்பரத்தில் கழிய வேண்டும் என்று விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். குடும்ப சொத்துகள் பாகம் பிரிக்கும் பணி தொடங்கியபோது உறவினர்கள் நீலகண்டத்திற்கு சொத்து தர மறுத்து நின்றனர். தீட்சிதர் கண் கலங்கவே, அந்த பாலகன் பதவிசாக பதில் தந்தான் தாத்தாவிற்கு.

“தாத்தா! தங்கள் சந்ததிகளை நீங்கள் இறைவனிடம் அடைக்கலம் செய்து விட்டபடியால் அந்த பரமேஸ்வரன் எங்களைக் கைவிடமாட்டான். எனக்கு தந்தையாகவும் – குருவாகவும் – போஷகராகவும் விளங்கும் உங்களது கருணையும், ஆசிகளும் ஒன்றே தந்தருள வேண்டும். என்பாடு… அவன் பாடு…!’’ என்றார்.

 ‘பன்னிரெண்டு வயதிலா இந்த பக்குவம்?...’ என்று வியந்துபோன அப்பய்ய தீட்சிதர் உடனடியாக தனது பேரனுக்கு ஏதோ ஒன்று செய்தாக வேண்டும் என்று பரபரப்பானார். தன்னிடமிருக்கும் மிகச் சிறந்த கிரந்தங்களாகிய ரகுவம்சம் மற்றும் தேவிமகாத்மியத்தை பேரனுக்கு கொடுத்து வாழ்த்தியதுடன், தனது வாழ்நாள் பொக்கிஷமாக போற்றி பூஜித்து வந்த பஞ்சலிங்கங்களை அவருக்கு கொடுத்து ஆசீர்வதித்தார்.

நாளடைவில் அப்பய்ய தீட்சிதர்… சிவபதமடைய அதன்பிறகு நீலகண்டம் தஞ்சாவூர் வந்தார்.  திக்கும் தெரியாமல் திசையும் தெரியாமல் போன நிலையில் ஶ்ரீவேங்கடேசுவர மகீ எனும் மகானை… எதிர்பாராமல் சந்தித்து அவரிடம் தன்னை சிஷ்யனாக்கிக் கொண்டார். பின்பு மற்றொரு குருவின் அருள்முகம் இவருக்கு கைவரப்பெற்றது. ஶ்ரீசீர்வாணேந்திரர் என்ற மகானிடம் ஶ்ரீவித்யா உபதேசம் பெற்றார்.

வாழ்க்கையின் பொருளை உணரத் தொடங்கிவிட்ட காலம். தனது குருநாதரைப் புகழ்ந்து “குருராஜஸ்தவம்” என்று அற்புதமான ஒரு நூலை இயற்றினார். பிறகு காலச்சக்கரத்தின் வேக ஓட்டத்தில் விவேகம் பெருகி மதுரையை ஆண்டுவந்த திருமலை நாயக்கரிடம் மந்திரிப் பிரதானியானார். ராஜசபையில் இவரது மேதாவிலாசம் போற்றிப் பாராட்டப்பட்டது. திருமலை மன்னனுக்கு சகலமும் நீலகண்டமே… என்றாயிற்று.

பொதுவாகவே, ராஜாக்கள் என்றால் சந்தேக புத்தியும் உடன் பிறந்துதானே இருந்திருக்கும்.

அந்த புத்தி திருமலை மன்னனிடமும் ஒட்டிக் கொண்டது. தனது பட்டத்து ராணியாரின் உருவச்சிலை ஒன்றை தத்ரூபமாக செய்து தரும்படி அரசவை சிற்பிக்கு கட்டளை இட்டிருந்தான். மன்னரின் ஆணைக்கேற்ப சிலையும் தயாராயிற்று. ஆனால், இந்த இடைப்பட்ட நிலையில் சிற்பிக்கு வந்தது மாபெரும் சோதனை. சிலையை சரிபார்த்து முடிக்கையில் ‘இடதுகால் தொடைப்பகுதியில் பின்னம் ஏற்பட்டது போலிருந்தது’.

அதிர்ந்து போனான் சிற்பி.

‘மன்னன் சங்கதி தெரியும்தானே! குறிப்பிட்ட நாளில் சிலை கைக்கு வராமற்போனால் நமது தலை அவர் கைக்கல்லவா போய்விடும்…’ என்று பயத்தில் நடுங்கினான். அந்த நடுக்கத்திலும் அவன் மனதிற்குள் ஆபத் பாந்தவனாகத் தோன்றியவர்: நமது மந்திரியே! ஓடோடிச் சென்று அவர் பாதம் பணிந்து விஷயத்தை தெரிவித்தான்… விக்கித்து நின்றான்.

ஆதரவாக அவனது புஜம்பற்றிய நீலகண்ட தீட்சிதர் மிகவும் சாவகாசமாக, “இறைவன் சித்தம் அதுதானென்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். நீ கலங்காதே! நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சமாதானப்படுத்தினார்.

சிற்பி, பயத்துடனே அரசவைக்குச் சென்றான். திருமலை மன்னனின் முன்பாக மஹாராணியின் சிலையை நிறுத்திவிட்டு திருதிருவென விழித்து நின்றான்.

மன்னன் சிற்பியை  ஏறிட்டுப்பார்த்தவாறே, “என்ன தயக்கம்? சிலையைச் சுற்றிய துணிகளை நீக்குக” என்றார். சிற்பியின் கரங்கள் நடுங்கியபடியே இருந்தன. சிலைமீதான துணிகள் முழுவதும் விலக்கப்பட்டதும் திருமலை மன்னன் கண்கள் வியப்பால் விரிந்தன.

“ஆஹா! என்ன அழகு… என்ன தத்ரூபம்! அப்படியே ராணியை என் கண் முன்னல்லவா நிறுத்திவிட்டாய்…?” என்று பாராட்டினான். பிறகு, சிலை முழுவதையும் அணு அணுவாக ரசித்தபடி கால் புறம் வந்தபோது, இடது தொடைப்பகுதியைப் பார்த்து விட்டு… ‘வெடுக்’ என்று சினத்துடன் திரும்பினான்.

‘அங்கு ஏற்பட்டிருந்த பின்னத்தை மன்னன் பார்த்துவிட்டுதான் கோபமுற்றிருக்கிறான்… என்று கலங்கிய சிற்பி… மன்னன் கேட்கும் முன்பாகவே, ‘இதை நான் மந்திரிக்கு முன்பே தெரிவித்துவிட்டேன்..! என்று வாக்குமூலம் கொடுத்தான்.

அவ்வளவுதான்! அடுத்து உடனடியாக ஆணை பறந்தது வீரர்களுக்கு…!

‘மந்திரியை வரச்சொல்லுங்கள்!’

வீரர்கள் ஆளுக்கொரு திக்கில் பறந்தனர். இதற்குள் தனது ஞானதிருஷ்டியில் விஷயம் உணர்ந்து கொண்டார் மந்திரி. மன்னனுக்கோ “தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகஸ்யம், அதுவும் அந்தரங்கப் பகுதியில் உள்ள சிராய்ப்பு தோற்றத்தினை மந்திரி எப்படி அறிந்திருக்க முடியும்? அப்படியெனில்…சந்தேக சர்ப்பம் தலை தூக்கி ஆடியது.

மன்னனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவமானம் வந்துவிட்டதாகவே அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு அரண்மனையின் குறுக்கும்  நெடுக்குமாக அலைந்தான். அந்த சமயத்தில் வந்து சேர்ந்தது அந்த செய்தி!  மந்திரி தனது கண்களை கற்பூரத்தீயால் பொசுக்கிக் கொண்டார்… என்று!

அடுத்த நொடியே, மந்திரியின் இல்லத்தில் பரிவாரம் சூழ சென்று நின்றான். பார்வை பறிபோய் நின்றிருந்த நீலகண்டய்ய தீட்சிதர் மன்னனின் வருகையை உணர்ந்து, “தவறே செய்யாமல் தண்டனை பெற நான் ஒப்பவில்லை. அன்னை மீனாட்சியின் அருளுடன் கண்களை அவளுக்கே ஒப்படைத்தேன்.

ஏனென்றால், உங்களின் வாக்கிலிருந்து சந்தேக விசாரிப்புகள் வருவதை என் மனம் ஏற்கவில்லை. ஆனால், மகாராணிக்கு இயற்கையிலேயே அந்தக் குறை இருந்திருப்பதும் உண்மைதான்!...”

திருமலை மன்னன் திக்கற்று நின்றான். எப்பேர்ப்பட்ட மகானை அவமதித்துவிட்டோம் என்று வெட்கினான்.

மந்திரியோ, ‘மன்னா! என் மீது தவறில்லாத பட்சத்தில் அன்னை மீனாட்சி என்னை ரட்சிப்பாள்..! என்று கூறி ஸ்லோகங்களைச் சொல்லத் தொடங்கினார்.

நீங்கள் நம்புவதற்கே கடினமாக சம்பவம் அங்கு அரங்கேறியது. மின்னல் கீற்று ஒன்று தோன்றி மறைந்தது. மந்திரியின் விழிகள் பழையபடி ஜ்வலித்துக் கொண்டிருந்தன.

மன்னன் நிலம் பணிந்து வணங்கி நின்றான் நீலகண்டத்தை…! தனக்கு விழி தந்து வழி காட்டிய உமையவள் மீது தீட்சிதர் இயற்றிய நூல் பெயர் ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’ ஆகும். இதில் 61-வது ஸ்லோகத்தை அவர் சொல்லத் தொடங்கி முடிக்கும்போது பார்வை ஏற்பட்டது.

“அன்னையே! உன் கமல மலர் பாதங்கள் மிகவும் அழகானதுதான். அதை தரிசிக்க  நீ எனக்கு அனுமதித்தாலும் அதைக் கண்ணுறும் பாக்கியம் இல்லையல்லவோ…” என்று அந்தப் பாடலின் வரிகளை முடிப்பார்.

கண்களாலேயே பக்தர்களை ரட்சித்துக் காக்கும் மீனாட்சி உடனடியாக விழி வழங்கியிருந்தாள் மந்திரிக்கு!

விழி மட்டுமா வழங்கினாள்? கூடவே புலமை, சொல்லாட்சி, நகைச்சுவை, அறிவுப்பூர்வமான அனுபவம், இறைபக்தி, நற்பண்புகளையும் வழங்கி மகிழ்ந்தாள்.

மகானின் வாழ்வில் அதன்பிறகு பல அதிசயங்கள் நடந்தேறின.

“வைராக்ய சதகம், கையட வியாக்யானம், கங்காவதராணம், சண்டீரகஸ்யம், கலிவிடம்பனம், சாந்திவிலாசம், சிவோத்கர்ஷ மஞ்சரி, ஸபார் உன சதகம், குருராஜஸ்தவம், சிவதத்துவ ரகஸ்யம்,,,” போன்ற பல அற்புதமான நூல்களை வடமொழியில் எழுதிக் குவித்தார்.

திருமலை மன்னன் தன் தவறுக்கு பிராயச்சித்தமாக திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் வடக்கு கரையில் அருகே உள்ள கிராமத்தை, பல்வேறு நிலங்களையும் மான்யமாக அளித்தான்.

அரசின் ஆவணப்படிமங்களில் இது ‘நீலகண்ட சமுத்திரம்” என்று குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.

அக்கிராமத்திலேயே தன் சந்ததிகளுடன் வாழ்ந்து வந்த நீலகண்டம் நன்னொரு நாளில் சன்யாச தர்மத்தில் சென்று… மக்களுக்குப் பல நற்பணிகள் செய்து வந்து மார்கழி மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் ஜீவசமாதிக்கு சென்று விட்டார்.

பாலமடையில் அமைந்துள்ள அவரது ஜீவசமாதிக்குச் சென்று நீங்கள் தரிசிக்கும் பாக்கியம் ஏற்பட்டால் கண்டிப்பாக செல்லவும்.

அப்படி ஒரு நல்லதிர்வுகளை நீங்கள் உணர முடியும். உங்கள் கோரிக்கைகளுக்கு அந்த மகானிடம் தீர்வு கிடைக்கும்.

இவரது ஜீவசமாதி அமைந்த அதிர்ஷ்டானத்தில், தீட்சிதரே காசியில் இருந்து எடுத்து வந்த ‘காசிலிங்கம்’ பிரதிஷ்டை செய்யப்பட்டு அருகிலேயே விசாலாட்சி அன்னையையும் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.

இன்றும் இந்த கிராமம் சுபீட்சம் குறையாமல் செளபாக்யமாக திகழ்கிறது என்றால் அதற்கு அந்த மகானின் கருணையே…. ஆதாரமாயிருக்கிறது என்றால் அது சத்தியமான உண்மை.

-தரிசனம் தொடரும்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close