[X] Close

ஆண் நன்று பெண் இனிது 23: மனசை அழுத்தும் மார்பகப் புற்றுநோய்!


aan-nandru-pen-inidhu-23-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 04 Aug, 2018 11:12 am
  • அ+ அ-

என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணன் மனைவி உடல்நலமின்றி மருத்துவமனையில் இருப்பதாக அறிந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.

நான் பத்தாவது படிக்கும்போது அந்த அண்ணாவுக்குத் திருமணம் ஆனது. அண்ணன், அண்ணி இருவரும் ஆசிரியர்கள். கிருஷ்ணவேணி அண்ணி பார்க்க அவ்வளவு களையாக இருப்பார்கள். அந்த வயதில் எனக்கு அந்த அண்ணி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கப் பிடிக்கும். ‘எதப்பத்தி பேசினாலும் அதுவாவே மாறிடுவா வேணி, நம்மளையும் அப்படியே ஆக்கிருவா, எதுக்காவது மனசு சோந்து போச்சுன்னா ஒரு பத்து நிமிஷம் வேணிகூட பேசினாப் போதும், இல்லேன்னா அது முகத்தைப் பாத்தாக்கூட போதும், கவலையெல்லாம் அப்படியே வடிஞ்சி போயிரும்’ என்று என் அம்மா அடிக்கடி சொல்வார்.

காலம் எல்லோருடைய வாழ்விலும் கவலைக்கும், பதற்றத்திற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. எந்தச் சூழலிலும் தன்மையான குரலும், எதற்குமே பதறாத முகமுமாக இருக்கும் வேணியண்ணி இப்போதுவரை எனக்கு ஆதர்சமாக இருக்கிறார். 

மருத்துவமனைக்கு நான் போயிருந்தபோது அவருடைய தங்கை மட்டும்தான்  உடனிருந்தார். உடல்நலம் பற்றி விசாரித்த பிறகு, ‘அண்ணன் எங்கே’ என்று கேட்டேன். ‘உங்கண்ணனுக்கு லீவு   இல்ல, அதுவுமில்லாம பொம்பளைங்க கூட இருந்து கவனிச்சுக்க வேண்டிய வியாதிக்கு அவரு இருந்து என்ன செய்யப்போறார்’ என்று கூறினார். மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் இடப்பக்க மார்பை நீக்கியிருந்தார்கள். அதனைப்பற்றிய எந்தச்சலனமும் இல்லாமல் இயல்பாக வேணியண்ணி கூறிய பதில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘இல்ல.. அவருக்கு சின்னதா ஏதாவது முடியலன்னாக்கூட அப்படி கவனிச்சுக்குவீங்க, இவ்வளோ பெரிய ஆபரேசன் பண்ணியிருக்காங்க, அவரு இருந்தா உங்களுக்கு ஆறுதலா இருக்குமே, பொறுங்க.. போன்போட்டு அவருகூட சண்டை போடுறேன்’ என்று சொன்னேன். முகம் சுருக்கி வலி மறைத்து புன்னகைத்தவர் மென்மையான  குரலில், ‘வேணாம்பா, நீ ஒண்ணும் சொல்லாத அவர்கிட்ட, அவரு பாவம். ஏற்கெனவே எம்முன்னாடி வந்து உக்காந்தா என் முகத்தைப் பாக்க முடியாம,  சுவத்தையும், விட்டத்தையும் பாக்குறார். இல்லேன்னா சொட்டுச்சொட்டா ட்ரிப் எறங்குறதையே பாக்குறார்’ என்று சொன்னார். ‘ஏன் அண்ணி...?’ என்று சற்று இழுவையாகக் கேட்டேன். ‘உனக்குத்தான் அவரைப் பத்தித் தெரியுமே, நான் கல்யாணம் முடிச்ச புதுசிலேயே ஏகப்பட்ட கண்டிஷன், கண்ணுக்கு மை போடக்கூடாது, நீளமா தொங்கவிட்டு தலைநெறைய பூ வைக்கக் கூடாது, மெல்லிசான சேலை கட்டக்கூடாது, தலைக்குக் குளிச்சிட்டு பளிச்சின்னு பள்ளிக்கூடம் போனாப் புடிக்காது. இடுப்புக்குக்கீழ கெடக்கிற தலைமுடிய நல்லா பின்னி மடிச்சு ரப்பர்பேண்டு போடணும், குனிஞ்சி வளைஞ்சு கூட்டும்போது லேசா சேலை வெலகி அங்க இங்க எதுனா தெரிஞ்சா அவருக்கு உசிரே போயிரும். அங்க பக்கத்துல வேற யாருமே இருக்கக்கூட மாட்டாங்க, அதெல்லாம் விடு, குளிச்சிட்டு வந்து சேலை கட்டுற நேரத்துல எப்பவாச்சும் உள்ள வந்துட்டார்னா பட்டுன்னு வெளியே போயிருவார். வெளிச்சம் கூட என்னை முழுசாப் பாக்கக்கூடாதுன்னு நெனைப்பார், அவருக்குப் பயந்தே மார்புல சின்னச்சின்னதா முடிச்சிப்போல கட்டி இருந்தத ரொம்ப நாளா சொல்லவே இல்ல. பள்ளிகூடத்துல பாடமெல்லாம் நல்லாதான் சொல்லித் தரேன், ‘இளையதாக முள் மரம் களைக’ன்னு, நம்ம வீட்டுக்குள்ள நா எழும்பணும்ல, இது மாதிரி நோயிக்கெல்லாம் பெரும்பாலும் ஆம்பளைங்கதான் டாக்டரா இருப்பாங்க, ஆம்பள டாக்டர்கிட்ட எப்படி இதப்பத்தி பேசுறதுன்னு நெனைச்சுக்கிட்டு  வந்தது வரட்டும்னு விட்டுட்டேன். என்னை இந்த நிலையில பாக்குறதே உங்க அண்ணனுக்கு தண்டனைதான்’ என்று சொன்னார். நான் அமைதியான குரலில் ’சீக்கிரமே உங்களுக்கு குணமாகிடும்’ என்று மட்டும் சொன்னேன்.

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் கவிஞர் அகிலாவைச் சந்தித்தேன். அவர், அதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் ’நின்று துடித்த இதயம்’ என்கிற நூலை வெளியிட்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்பிருந்தே நாங்கள் இருவரும் நட்பில் இருப்பவர்கள். அந்தப்புத்தகத்தை அவர் தனது இருதய அறுவை சிகிச்சை பற்றிய  அனுபவத்திலிருந்து எழுதியிருந்தார். எங்கள் இருவருக்குமான தனிப்பட்ட உரையாடலில் அகிலா என்னிடம், ’மார்பகப் புற்றுநோயால் செத்துப் போறவங்களை விடவும் ஹார்ட் அட்டாக்கில் செத்துப்போற பெண்களோட எண்ணிக்கை ஜாஸ்தி, ஏன்னா பொதுவாவே ஆண்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சின்ன விஷயத்துக்கும் அழுது தீத்துடுறது பெண்களோட இயல்புங்குறதால பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வராதுன்னு நெறையப் பேர் நெனைச்சுகிறாங்க, அதையும்விட வீட்ல இருக்கிற ஆம்பளையோட ஆரோக்கியத்துக்கு கவனம் கொடுக்கிறவ தன்னோட உடலைப்பத்தின  சிந்தனையே வச்சிக்கிறது இல்ல, அதையெல்லாம்விட பெண்களுக்கு நோய் வந்து நாலுநாள் படுத்துட்டா அந்த வீட்டு ஆம்பள சுடுதண்ணி வச்சுக்குடுத்தாகூட அந்தப்பொண்ணு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிடுவா. மெல்ல மெல்ல எழுந்து மறுபடியும் இழுத்துப்போட்டு எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சிடுவா, நான் கூட ஒண்ணரை  மாசத்துல சமையல் செய்யத் தொடங்கிட்டேன். அதுக்குக் காரணம், காலமெல்லாம் நாமளே சமைச்சு சாப்பிட்டு பழக்கப்பட்டு வேற கைப்பக்குவம் பிடிக்கல, ஒப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏகப்பட்ட வேறுபாடு இருக்கு, போஸ்ட் சர்ஜரியில்தான் எல்லா சிரமமும், ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா ட்ரெஸ். எதுவுமே போடாம ஒரு ஆண் இருப்பார். பெண்ணுக்கு அப்படி இருக்க முடியாதில்ல. அதப்போல பெண்களின் சிக்கல்களை, அதை எப்படி எதிர்கொள்வது, அவளுக்கு தன்னுடல் எவ்ளோ  முக்கியம்ன்னு  ஒவ்வொரு பொண்ணும் உணரணும்ங்குறதுக்காக இந்தப்புத்தகம் எழுதத்தோணுச்சு’ என்று சொன்னார்.

‘முன்னமே வலி இருந்ததா, ஒப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யணும்ங்குறத  எப்படி கண்டுபிடிச்சீங்க?’ என்று கேட்டேன். ‘சர்ஜரிக்கு முன்னாடி வலி எதுவும் இல்ல, ஜெனிட்டிக்கலா வரக்கூடிய நோய்களுக்காக ரெகுலர் செக்அப் செய்துக்குவேன். ஏன்னா, நான் பஃர்ஸ்ட் இயர் காலேஜில் சேருறேன், 47 வயசுலயிருந்த எங்கம்மா ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாங்க. அப்புறம் எங்கப்பாதான் எல்லாம். நாங்க மூணுபேர். எங்களை படிக்கவச்சு, திருமணம் செய்து வச்சார். 60 வயசுல அப்பாவும் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாங்க. எந்தம்பி அவனோட 35  வயசுல... சமீபமா எனக்கு திடீர்னு உடம்பு ரொம்ப வெயிட் போட்டுச்சு, சின்ன சந்தேகத்தோட கொலஸ்ட்ரால் லெவல், பிபி, ஈசிஜி பாத்தேன். அப்புறம் ஆஞ்சியோவில ஏழு ப்ளாக் இருக்குன்னு தெரிஞ்சிச்சு, 90 சதவீதம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொன்னதால உடனே பண்ணிக்கிட்டேன். இப்பவும் மூணுதான் நீக்க முடிஞ்சுது, இதுக்கே ஆறுமணி நேரத்துக்கும்மேல ஆபரேஷன் பண்ணியிருக்காங்க, மீதியெல்லாம் சின்னதுதான்,  மாத்திரையில கரைச்சிகிறலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க,’என்று சொன்னார். 

‘உங்களுக்கு ஒரு மகன் தானே, கூட யார் இருந்து கவனிச்சிகிட்டாங்க அகிலா?’ என்று கேட்டேன். ‘ஹாஸ்பிட்டல்ல தங்கச்சி இருந்தா. அப்புறம் வீட்டுல ஒரு அம்மா வேலைக்கு இருக்காங்க. அவங்கதான் பாத்துக்கிட்டாங்க. என்னோட அம்மா இல்லையேன்னு என்னோட கல்யாணம், டெலிவரின்னு எத்தனையோ  சந்தர்ப்பங்களில் ஏங்கியிருக்கிறேன். இப்பகூட அவரும், மகனும் அவங்களால முடிஞ்ச அளவு நல்லா பாத்துகிறாங்க, ஆனாலும் ஒடம்பு முடியாத ஆணுக்கு ஒரு பெண் கொடுக்கிற கவனத்துக்கும், சர்ஜரி செஞ்சிக்கிற பெண்ணுக்கு ஆண் கொடுக்கிற கவனமும் வேறவேறதான். இயல்பிலேயே உக்காந்து வேலை வாங்கி பழகிட்ட ஆண்கள், ஜூஸ் கொடுக்கிறது, நேரத்துக்கு மாத்திரை எடுத்துக் கொடுக்கிறதுன்னு சோம்பல் படுவாங்க, இல்லேன்னா மறந்துருவாங்க. அவங்களைச் சொல்லியும் குத்தமில்ல. அப்படியே பழகிட்டாங்க. சர்ஜரிக்குப் பிறகு என்னன்ன சாப்பிடணும், இல்ல என்ன செய்யணும்னு அவங்ககிட்டதான் டாக்டர் சொல்லிவிட்டாங்க. ஆனா பல விஷயங்களை நான் அந்த ரிப்போர்ட்ஸ் படிச்சுத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். எப்பவுமே உடம்புக்கோ மனசுக்கோ எது  வந்தாலும் அம்மான்னுதான் மனசு தேடுது, பல சமயத்துல பாத்ரூம்குள்ள போய் உக்காந்து, வெளியே சத்தம் கேக்கக்கூடாதுன்னு பக்கெட்ல தண்ணியத் திறந்து விட்டுட்டு ‘அம்மா..அம்மா’ன்னு கத்தி அழுதுடுறேன். ஆம்பளைங்களுக்கு மனைவின்னு ஆல்ட்டர்நேட்டிவ் இருக்கு, பொண்ணுங்களுக்குத்தான் அம்மாவை வேற யாருமே ரீப்பிளேஸ் செய்யுறதில்ல’ என்று சொன்னார்.

கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுவதோடு அகிலா ஒரு மனநல ஆலோசகராக செயல்படுபவர். ‘மறுபடியும் உங்க ‘மனமகிழ் மன்றத்தோட’ வேலையைச் செய்யத்தொடங்கிட்டீங்களா?’ என்று கேட்டேன். ‘ஆபரேஷன் முடிஞ்சு ஆறுமாசம் ஆயிடுச்சு,  இன்னமும்கூட நல்லா நிமிந்து நிக்கக் கஷ்டப்படுறேன். ரெண்டு கால்ல இருந்தும் நரம்பு எடுத்து ஆஞ்சியோ பண்ணியிருகிறதால மொத்த ஒடம்புமே எப்பவும் வலியைச் சொல்லிட்டே இருக்கும். ஆனாலும் மூணாவது மாசத்துல இருந்து என்னோட வேலையத் தொடங்கிட்டேன். அது எனக்கு பெரிய ரிலீஃப், இன்னும் சொல்லப்போனா இந்தப்புத்தகம் எழுதுனதுக்குக் காரணமே ஒரு பெண்களுக்கான விழிப்பு உணர்வு கூட்டத்துல நான் பேசினதுதான்’ என்று சொன்னார்.

‘அப்படியா, என்ன அது?’ என்று கேட்டேன். ‘ஒரு சமூகநல அமைப்புல என்னைப் பேசக் கூப்பிட்டிருந்தாங்க. அனேகமாக முப்பதுவயசைக் கடந்த இருநூறு பெண்களாவது  அங்கே இருந்திருப்பாங்க, அவங்ககிட்ட,’நீங்க யாராவது ஏதாவது சர்ஜரி பண்ணியிருக்கீங்களா?’ன்னு ஒரு கேள்வி கேட்டேன்.’நாலோஅஞ்சோ பேர்தான் கையைத் தூக்குனாங்க. அப்புறமா நான் பேசத்தொடங்கினேன். ’வாழ்க்கையில ஒரு முறையாச்சும் ஒருபெண் தன்னோட உடலை மருத்துவமனை மேசையில் கிடத்தவேண்டி வரலாம். டெலிவரி அல்லது கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளுக்காக.. சிசேரியன், கர்ப்பப்பை நீக்கம், மார்பகப் புற்றுநோய் போன்ற பெரிய சிக்கலுக்கு மட்டுமல்ல பல சின்ன அறுவை சிகிச்சைக்கும் ஆண் மருத்துவர்களையே பெண்கள் நாடவேண்டியிருக்கிறது. கதை, கவிதை, சினிமாவுலயெல்லாம் பெண்ணோட மார்பகமும் அதன் பிளவுகளும் வர்ணிக்கப்படுவதும், காட்சிப்படுத்தப்படுவதும் அர்த்தமே இல்லாதவைன்னு அந்த சமயத்துல தோணிரும். நாமளேகூட நம்ம உடலை ரசிச்சிருப்போம். ஆனா வலி பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். பெண்ணுக்கு வலி கூட ரகசியமானதுதான். அதனாலேயே வெளிய சொல்ல முடியாத நிலையிலே நம்ம உடலைப் பற்றிய ஆரோக்கியத்தையும் வச்சிக்கிறோம். நமக்கு முடியலன்னு சொன்னா நம்ம வீட்டு ஆண்களுக்கு நம்மகிட்ட பிரியம் கொறைந்துபோயிருமோன்னு எப்பவுமே சந்தேகத்தோட இருக்கோம். பெண் உடலால் தூண்டப்படுகிற ரகசிய வேட்கையோடுதான் பெரும்பாலும் ஆணும் இருக்கிறான். தன்னோட உடல் குழந்தைப்பேற்றுக்காக உருவானதுங்குற தியாக மனப்பான்மை அல்லது  ஆணின் விருப்பங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்காகங்குற மயக்கநிலையைக் கடந்து,நம்ப உடல் நமக்கானதுன்னு ஒவ்வொரு பெண்ணும் நம்பணும்.அப்பத்தான் தன்னுடலோட ஆரோக்கியம் மட்டுமில்லாம மனசோட ஆரோக்கியம்  குறித்தும் கவனமாக இருப்பாள்’ என்று பேசினேன். கூட்டத்தோட முடிவில் மேலும் பத்திருபது பெண்கள் மெதுவாக வந்து தாங்களும் கர்ப்பப்பை நீக்கம் செய்து கொண்டிருப்பதாக தயங்கியபடியேச் சொன்னார்கள். ‘மொதல்லயே ஏன் சொல்லல?’ன்னு கேட்டேன். ‘அய்யோ, எத்தனை ஆம்பளைங்க இருக்காங்க இங்கே, எப்படி நம்ம இப்படியொரு ஆபரேஷன் செய்திருக்கோம்னு சத்தமா சொல்றது?’ என்று ஒரு பெண்மணி கேட்டார். நான் கேட்டபோது அங்கே அந்தக் கூட்டத்தில் பத்து ஆண்கள்கூட இருந்திருக்கவில்லை’ என்று சொன்னார்.  

பெண்களின் மார்பகப்புற்று நோய்க்கு விழிப்பு உணர்வை வலியுறுத்தும் விதமாக ஷாஜஹான் என்பவர் ‘மார்பகப்புற்று நோய்- அறிந்ததும் அறியாததும்’ன்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். படித்தீங்களா அகிலா?’ என்று கேட்டேன்.  ‘ஒருமாதம் முன்புதான் ‘நான் ராஜாமகள்’ என்கிற பெயரில் எழுதுகிற தேன்மொழி என்பவர் திருச்சியிலிருந்து அனுப்பி வச்சிருந்தார். இந்த ‘நின்று துடித்த இதயம்’ புத்தகத்தையும் இருநூறு பிரதிகள் கேட்டிருக்காங்க அவங்க’ என்று அகிலா சொன்னார். ‘எனக்கும் அவங்கதான் அனுப்பிவைச்சாங்க. அந்த நூலோட ஆசிரியர் ஷாஜஹான் எனக்கும் நண்பர்தான். நேஷனல் புக் ட்ரஸ்டுக்கு நூல் வடிவமைப்பு வேலை செய்கிறார். புதியவன் என்கிற பெயரில் கவிதைகள் சிறுகதைகள் எழுதிவருகிறார். டெல்லியில் நடைபெற்ற கவிதை வாசிப்பு அரங்கம் ஒன்றில்தான் அவர் எனக்கு அறிமுகம். மார்பகப்புற்று நோய் குறித்து முகநூலில் தொடராக அவர் எழுதும்போது வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தப்புத்தகம் அனுப்பவேண்டி என்னுடைய முகவரி கேட்டு ‘நான் ராஜாமகள்’ என்னோடு பேசியபோது, ’சமூக வலைத்தளங்களும், கம்யூனிகேஷன் டெக்னாலஜியும் ஆண்பெண் உறவு குறித்த எத்தனையோ தவறான விஷயங்களை திறந்து வைத்திருக்கையில் பெண் உடல் ஆரோக்கியம் குறித்த புரிதலையும் அங்கே பேசுவதுதானே சரியென’ ஷாஜகான் கூறியதாக அவர் சொன்னார்.

‘நீங்களும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிட்டு இருக்கீங்க, ஆனா உங்களுக்கு இந்த நூலை ப்ரமோட் செய்யணும்னு ஏன் தோணுச்சு’ என்று ‘நான் ராஜாமகளிடம்’ கேட்டேன். ‘நீங்களுமா சக்தி அப்படி நெனைக்கிறீங்க? இது புத்தகப்பிரமோஷன் இல்லை. எனக்கெல்லாம் கேன்சர்ங்குறது  வாழ்வேமாயம் கமலஹாசன் நடிப்புலயும், நண்டு திரைப்படத்துலயும்தான் தெரியும். இதுதான் இதுன்னு கண்டுபுடிக்கிறதுக்குள்ள வெறும் பதினெட்டே நாள்ல எங்கம்மா எங்கள விட்டுட்டுப் போயிட்டாங்க. ஷாஜி வீட்ல அவங்க அம்மா... பொண்ணுங்க பேச வேண்டியத ஒரு ஆண் எழுதியிருக்கிறார். நாம கொஞ்ச பேர்கிட்ட இந்த புத்தகத்துல உள்ள விஷயத்தக் கொண்டுபோய் சேப்போம்ன்னு தோணுச்சு. உங்ககிட்ட கேட்ட மாதிரி, முகநூலில், வாட்ஸ்அப்பில் நிறைய பேர்கிட்ட இப்படி ஒரு புக் வந்திருக்கு, அனுப்பட்டுமான்னு  நானாத் தான் போய் கேட்டிருப்பேன். அதுல கொஞ்ச ஆண்கள், ’இந்தப்புத்தகம் எனக்கு எதுக்குங்க? ன்னு திருப்பிக் கேப்பாங்க. ‘உங்க வீட்ல மனைவி, அம்மா தங்கச்சியெல்லாம் இருக்காங்கல்ல. அவங்களுக்குக் கொடுங்களேன்’ன்னு கேட்டுகிருவேன். ஆனா மனசுக்குள்ள ’உங்கள மாதிரி ஆளுங்கதான் மொதல்ல தெரிஞ்சிக்கணும்’ன்னு நெனைச்சுக்குவேன்’ என்று சொன்னார்.

கிருஷ்ணவேணி அண்ணியின் அருகில் அமர்ந்திருந்தபோது அகிலாவையும், ‘நான் ராஜமகளை’யும் நினைத்துக்கொண்டேன். இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் உடைந்துபோய் விடாமல் திடமாக மீண்டு வருகிற எல்லாப் பெண்களும் எனக்கு ஒன்றுபோலவே தோன்றுகிறார்கள்.

- இன்னும் வருவார்கள்

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close