[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 18 - அரிதாரம்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 03 Aug, 2018 11:38 am
  • அ+ அ-

”ப்ரேமி தான் நம்ம படத்து ஹீரோயின்” என்று சுரேந்தர் சொன்ன மாத்திரத்தில் சட்டென ஸ்ரீதருக்கு கோபம் வந்தது. என்ன ம*$#க்கு தான் இங்கு டைரக்டர்? என்ற கேள்வி அவனுள் எழுந்தது.

காசி கண்களால் அவனை கண்ட்ரோல் செய்தான். கார்க்கி கேமராவை செட் செய்துவிட்டு,ஸ்ரீதரின் முகத்தைப் பார்த்தான். சுரேந்தர் அவரைச் சுற்றி ஆட்கள் இருப்பதையே மறந்து ப்ரேமியின் மார்பையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ப்ரேமிக்கு அது கூச்சமாய் இருக்கிறது என்பதை அவளின் முகம் காட்டிக் கொடுத்தது. ஸ்ரீதர் கண்ணால் காசியை பார்க்க, ப்ரேமியிடம் போய் காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தான் காசி.

சுரேந்தரின் பார்வையை மறைக்கும் படி காசி நின்றான். சுரேந்தர் நகர்ந்து எட்டிப் பார்க்க முயன்று, தன்னை வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்று உணர்ந்து கெத்தாய் கால் மேல் கால் போட்டு நடப்பதை பார்க்க ஆரம்பித்தார்.

காதலனுடன் போனில் பேசும் காட்சி. அவளுக்கு அவனைப் பிடிக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலை காதலை வெளிப்படுத்த முடியாத நிலை. அதனால் அவனின் வெளிப்படுத்துதலை மறுக்கிற காட்சி. வெறும் வசனங்களாய் இருந்தாலும் ஒவ்வொரு வசனத்துக்கு ஏகப்பட்ட மாடுலேஷன்கள் உணர்வெழுச்சியாய் வர வேண்டும்.

டயலாக்கை ஒரு முறைக்கு இரு முறை படித்துக் கொண்டாள். “போலாமா?” என்று கேட்ட ஸ்ரீதரிடம் கெஞ்சலாய் பார்வையில் டைம் கேட்டாள். அவளுக்கே நம்பிக்கை வந்த பின் “ஓகே ரெடி சார்” என்ற குரலில் அதீத நம்பிக்கை இருந்தது.

கேமரா ரோல் ஆகி ஆக்‌ஷன் என்றதும் சுவிட்ச் போட்டார்ப் போல மாறினாள். அவளின் ப்ரச்சனை அனைத்தையும் தன் முகத்தில் கொண்டு வந்தாள். எதிர் முனையில் வரும் காதல் வசனத்தின் உணர்வு புரிந்து “என்னடா வாழ்க்கை” என்பது போல சந்தோஷமும், துக்கமுமாய் முகத்தில் பிரதிபலித்து, அவனை குத்தி குதறி போட்டு போனை கட் செய்துவிட்டு நிற்கும் போது, அவள் கண்களில் நிஜமான கண்ணீர். “கட்’ என்றான் ஸ்ரீதர்.

மிக இயல்பாய் உணர்வுகளை முகத்திற்கு ஷிப்ட் செய்யத் தெரிந்தவளாய் இருக்கிறாள். வசனம் மட்டும் பேசும் போது தெலுங்கு வாடையில் பேசுகிறாள். டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம்.

பட்.. பெரிய ஹீரோக்கள் இவளை மாதிரியான புது முகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? என்று யோசித்தான்.

“ஓகே தேங்க்ஸ்” என்று அவளுக்கு கை கொடுத்துவிட்டு “நான் சொல்லியனுப்புறேன்” என்றான்.

“ஷூட்டிங் என்னைக்குன்னு டேட் பிக்ஸ் பண்ணதும் சொல்லி அனுப்புவாரு.. சந்தோஷம் தானே?” என்றபடி “சேது.. ப்ரேமிக்கிட்ட டீடெயில் வாங்கிட்டு அக்ரிமெண்ட் போட்டுரு” என்றார்.

ஸ்ரீதருக்கு எரிச்சலாய் வந்தது. இது மகா மோசமான அட்ராசிட்டி.

“சார்..  கொஞ்சம் உங்க கூட பேசணும்” என்றான் ஸ்ரீதர்.

“பேசுங்க”

“இல்ல.. கொஞ்சம் பர்சனலா பேசணும்” என்றான் தயங்கியபடியே.

சீட்டிலிருந்து திரும்பிப் பார்த்து “இப்பவேவா?”

“ம்..”

எழுந்து அவரது அறைக்குள் நுழைந்தார். பின்னாலேயே ஸ்ரீதரும் போனான். “சொல்லுங்க”

“சார்.. ப்ரேமி நடிச்சது எல்லாம் ஓகே தான். பட்.. நாம படத்துக்கு பார்க்குற ஹீரோக்கள் அவ்வளவு ஈசியா புதுமுகத்தை ஒத்துக்க மாட்டாங்க. வேற யாரையாச்சும் பெரிய நடிகையோட சிங் ஆகணும்னுதான் ட்ரை பண்ணுவாங்க. முதல்ல ஹீரோ பிக்ஸ் பண்ணிட்டு பின்னாடி நாம ஹீரோயினை பிக்ஸ் பண்ணலாமே? பாவம் தேவையில்லாம நம்பிக்கை கொடுக்கக்கூடாது இல்லை?”

சுரேந்தர் சிறிது நேரம் யோசித்தார். “நான் பணம் போட்டு படமெடுப்பேன் இவனுங்க எவள நொட்டணும்னு நினைக்கிறாங்களோ அவளுங்களை போடச் சொல்லுவானுங்களா?.. ம்ம்ம்..

ஸ்ரீதர் அவர் முகத்தையே பார்த்து கொண்டிருக்க, “இவளை எவன் ஹீரோயினா ஒத்துக்குறானே அவன் இந்த ப்ராஜெக்டுல இருக்கட்டும்” என்று ஸ்ரீதரைப் பார்த்து அழுத்தமாய் சொல்லிவிட்டு, “வெளிய இருக்குற ப்ரேமிய உள்ள அனுப்பு” என்றார். வெளியே வரும் போது தன்னை மிகவும் கீழாய் உணர்ந்தான் ஸ்ரீதர்.

வெளியே காத்திருந்த ப்ரேமியை கண்களால் உள்ளே போகச் சொன்னான். ப்ரேமி அவனை கிராஸ் செய்யும் முன் அவனருகில் நின்று “உங்களுக்கு என் பர்பாமென்ஸ் பிடிக்கலைன்னா சொல்லுங்க. அவருக்காக எல்லாம் செலக்ட் பண்ண வேணாம். நான் கோவாப்ரேட் பண்ணலைன்னா என்னை கழட்டி விட்டுடுவாரு உங்க ப்ரோடியூசர்.  யார் என்ன சொன்னாலும் இது உங்க படம். நீங்க நினைச்சத அடையறதுக்கு எதுவுமே தடையா இருக்க கூடாது” என்று சொல்லிவிட்டு சுரேந்தரின் அறைக்குள் சென்றவளை பார்த்துக் கொண்டேயிருந்தான் ஸ்ரீதர்.

@@@@@@@@@@@@@@@@@@

நித்யா நடிக்குமா? என்று ராமராஜ் கேட்டதில் ராமுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

“சார்..நிஜமாத்தான் கேட்குறீங்களா?” என்றான் சந்தேகத்துடன்.

“அட ஆமா ராமு.. அந்த பொண்ணு ரொம்ப கேஷுவலான அழகா இருக்கு. சரியா கேமரா கான்ஷியஸ் இல்லாம நடிச்சதுன்னா ஷோபா மாதிரி வரும்.” என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு தம் அடிக்க போய்விட்டார். ராம் யோசித்துக் கொண்டிருந்தான். வாய்ப்பு என்பது எப்படியெல்லாம் ஒரு மனிதனுக்கு கிடைக்கிறது என்பதை யோசிக்கும் போது ஆச்சர்யமாய் இருந்தது

சினிமாவில் ஹீரோ ஆக வேண்டுமென்று அதற்காக தயார்படுத்திக் கொண்டு அலைபவனை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும் அதே சினிமா தான். சினிமாவில் நடிக்கும் எண்ணமே இல்லாதவளை வா.. வா என அழைக்கிறது.

ராம் சினிமாவுக்கு வந்த புதிதில் நட்பாய் இருந்தவன் சுரேஷ். வழக்கம் போல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சினிமா ஆசையில் ஐடி வேலையை விட்டுவிட்டு சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தான். அவன் மூலம் நல்ல நிறுவனங்களில் காண்டேக்டுகள் கிடைத்து.

ரஜினியின் தீவிர ரசிகனான அவனுக்கு சினிமாவில் நடிப்பது குறித்து பெரிய ஆர்வமோ, ஆர்காஸமோ இல்லை என்று அவன் அதற்கு தயார் ஆவதை பார்க்கும் போதே தெரிந்தது. ஆனால் எல்லா படத்தின் கதைகளைப் பற்றி தீவிரமாய் பேசுவான். ஒரு நாள் நல்ல போதையாய் இருக்கும் போது “ப்ரோ.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு நடிப்ப விட, சினிமவுல டைரக்‌ஷன் டிபார்ட்மெண்டுல வேலை பார்த்தீங்கன்னா நல்ல எதிர்காலம் இருக்கு “ என்றான் ராம்.

சுரேஷுக்கு என்ன தோன்றியதோ என்னவோ சட்டென “அட ஆமாம் ப்ரோ.. நீங்க சொல்றது சரிதான்” என்றான் போதையில். 

அடுத்த நாள் காலையிலிருந்து தான் சினிமா கம்பெனிகளுக்கு கொடுக்க வைத்திருந்த போட்டோக்களை எல்லாம் தூக்கிப் போட்டான். உதவி இயக்குனர் வேலைக்கு தேட ஆரம்பித்தான். சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் வாய்ப்புப் போல இல்லை உதவி இயக்குனர் வேலை.

ஐடி பையன். சோஷியல் மீடியாவில் இருக்கும் பரிச்சயம். எல்லாம் சேர்ந்து ஆன்லைன் ப்ரோமோஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தான். இன்றைக்கு நல்ல வருமானம். அதில் யாரையும் எதிர்பார்க்கமால் சொந்தமாய் ஒரு குறும்படம் எடுத்து, இன்றைக்கு சின்ன பட்ஜெட்டில் ஒருபடமெடுக்கும் வேலையில் இருக்கிறான்.

சினிமா தான் அவனுக்கு சோறு போடுகிறது. என்னவோ ஆக வேண்டுமென்று எல்லாவற்றையும் விட்டு வந்தவர்களை என்னன்னவாகவோ மாற்றி அனுப்பும் மாய உலகம். இந்த சினிமா.

“ராமராஜ் சார் நீ நடிக்கிறியான்னு கேட்குறாரு? என்ன நடிக்கிறியா?” என்று நித்யாவின் கண்களையே பார்த்தான் ராம்.

அவள் முகத்தில் பெரிய மாற்றமில்லை. கிண்டல் செய்கிறானோ என்கிற கேள்வி கண்களில் தொக்கி நின்றது.

“அட நிஜமாத்தான் சொல்றேன். ஷோபா மாதிரி வருவேன்னு சொன்னாரு”

சட்டென மொபைலை எடுத்து செல்ஃபி மோடில் வைத்து தன் முகத்தை பார்த்துக் கொண்டாள். “நானெல்லாம் ஹீரோயினா?”

“அப்ப நடிக்க இஷ்டம்ங்கிறே?”

“சே.. அப்படியெல்லாம் இல்லை. ஒரு ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே? என்ன சொல்றே? நீ ஓகேன்னா எனக்கு ஓகே. அஸிஸ்டெண்டா அதுவும் பொம்பள அஸிஸ்டெண்டுன்னா.. ஹீரோயினுக்கு கண்டின்யூட்டி, காஸ்ட்யூம் தவிர ஏதுமே தரமாட்டானுங்க. நசுங்கிப் போன மூஞ்சிய வச்சிட்டு அவளுங்க பண்ணுற அலப்பறக்கு பறக்குறத விட.. அதை நாமே பண்ணி பாக்கலாம் இல்லை ”என்று ராமின் கண்களையே பார்த்தபடி “ வேற யார் கூடயாவது நடிச்சா செட் ஆகுமோ ஆகாதோன்னு இருக்கும். உன் கூடத்தானே.. எனக்கு ஓக்கே” என்றாள்.

ராமின் போன் அடித்தது. காசி. “ராமு.. நாளைக்கு காலையில ஆபீஸுக்கு வா. ஸ்ரீதர் உன் கிட்ட பேசணுமாம்” என்றான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 17 - https://bit.ly/2OIQjVo

பகுதி 16 - https://bit.ly/2mIJWof

பகுதி 15 - https://bit.ly/2OjUJBF

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close