[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 23 அழகே அழகு தேவதை...


kalamellam-kannadasan-23

ஜேசுதாஸ், இளையராஜா, கண்ணதாசன்

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 03 Aug, 2018 10:56 am
  • அ+ அ-

படம்    : ராஜபார்வை
இசை    : இளையராஜா
குரல்    : கே.ஜே.யேசுதாஸ்
* * *
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியைப் போல
இடையைக் காண்கிறேன்
போகப் போக வாழை போல
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே
* * *

அறம் பாடாத கவிஞர்கள் வேண்டுமானால் இருப்பார்கள். பெண்களின் அழகைப் பாடாத கவிஞர்கள் அரிதுதான். திரைப்பாடல்களில் பெண்களின் அழகை வர்ணித்து வெளியான பாடல்கள் கணக்கிலடங்காதவை. பெண் என்பவள் அழகு மட்டும்தானா என்றால் இல்லை. ஆனால், பெண்களில் அழகில்லாதவர்களே இல்லை.

பார்வையிழந்த ஒருவன், தன் காதலை எப்படிக் கொண்டாடுவான்? தன் காதலியின் அழகை எப்படிக் காண்பான்? அழகைக் காண கண்களும் பார்வையும் முக்கியம்தானே? பார்வையிழந்த ஒருவனின் விழிகள், அவன் விரல்களில் இருக்கின்றன. விரல்களின் வழி தொட்டுப்`பார்த்து' அவனால் அனைத்தையும் நுண்ணுணர முடியும். தொடுகைதான் உலகின் ஆதி மொழி. தொடுகையின் மூலம் உணர்த்தமுடியாத அன்பை எத்தனை வார்த்தைகளிலும் உணர்த்திவிட முடியாது. இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாய் அமைந்ததுதான் `அழகே அழகு தேவதை' பாடல்.

கமலின் நூறாவது படமாக வெளிவந்தது `ராஜபார்வை'. திரை இசைக்குழுவில் வயலின் வாசிப்பவராகவும், கண் பார்வை இழந்தவராகவும் கமல்ஹாசன் நடித்திருப்பார். அவரது காதலியாக மாதவி. படம் முழுக்க இளையராஜாவின் இசைக்கோர்ப்பு உலகத்தரத்தில் அமைந்திருக்கும். எதார்த்தமான கதாபாத்திரங்களும், உணர்வுக்குவியலுமாக படத்தை இயக்கியிருப்பார் சிங்கீதம் சீனிவாசராவ். `அழகே அழகு' பாடலின் காட்சியமைப்புகள் அவரது இயக்கத்துக்கு சிகரம் வைத்தாற்போல் இருக்கும். கவியரசரின் ஒவ்வொரு வரியையும் அதன் இயல்பு மாறாமல் `காட்சியால்' எழுதியிருப்பார். சிருங்கார ரசம் பொங்கிவழியும் ஒரு பாடலை, துளியும் ஆபாசமின்றி கவித்துவமாக காட்சிப்படுத்தியிருப்பது ஆகச்சிறப்பு.

கமலும் மாதவியும் படிக்கட்டுகளில் அருகருகே அமர்ந்திருப்பார்கள். பாடலைப் பாடிக்கொண்டே மாதவியை முழங்கையால் இடிப்பதற்கு முயற்சிப்பார் கமல். முதலில் தவறிவிட பின் மீண்டும் கொஞ்சம் சற்று தூரமாக கைகளை வீசி இடிப்பார். பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட அந்த அறையும் சன்னல்களும் அதன் வழியே விரியும் வானமும், அறையில் உலாவியபடி பாடும்போது ஒவ்வொரு பொருள்களையும் தொட்டு தடவியபடி பாடும் கமல், உண்மையில் பார்வையிழந்தாரோ என்று என்ணவைத்திருப்பார். படத்தின் கேமராமேன் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றிய `பருண் முகர்ஜி'. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்.

பார்வையற்றவர்களின் மனதில் ஆயிரமாயிரம் உருவ அமைப்புகள் ஒளிந்திருக்கும். அவர்கள் தொட்டுப்பார்க்கும் உருவத்தோடு அவற்றை ஒப்பிட்டு எது எப்படியிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வார்கள். ஓர் அழகான `ஹம்மிங்'கோடு பாடலைத் தொடங்கும் ஜேசுதாஸ் அவர்களின் குரல், மழை நேரத்துத் தேநீர்போல நமக்குள் அப்படி இறங்கும்.

கூந்தலை மேகம் என்று வர்ணிப்பது இயற்கையானது. ஆனால் பார்வையிழந்த ஒருவனின் பார்வையில் அதனைச் சொல்லும்போது, `கூந்தல் வண்ணம் மேகம்போல குளிர்ந்து நின்றது' என்கிறார் கண்ணதாசன். பார்வையிழந்தவனுக்கு கூந்தலின் வண்ணம் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மேகம்போன்ற அதன் குளிர்ச்சியை உணரமுடியும் அல்லவா? எவ்வளவு நுணுக்கமான வரிகள்? செவிகளை கேள்விக்குறிக்கு ஒப்பிட்டு `கொஞ்சுகின்றன செவிகள் இரண்டும் கேள்வியானது' என்னும் வரிகளும் பிரமிக்கத்தக்கவை.

கவியரசரின் அடுத்தடுத்த வரிகளுக்கேற்ப, நாயகியின் ஒவ்வொரு அங்கமாகத் தொட்டுப்பார்த்து, இதழ்கள், பற்கள், தோள், விரல்கள் என்று கதாநாயகன் பாடிக்கொண்டே வருவதுபோன்ற காட்சிகள் பார்ப்பவரை படத்தோடும் பாடலோடும் இயல்பாக ஒன்றவைக்கும்.

தோளோடு நிறுத்திக்கொண்டு, `ஒரு அங்கம் கைகள் அறியாதது' என்று முதல் சரணத்தை முடிக்கும்போது பாடல் வரிகளில் குறும்பு கொப்பளிக்கிறது.

பூ உலாவும் கொடியைப்போல இடையைக் காண்கிறேன்... என்று தொடங்கி அடுத்த வரியை, போகப்போக வாழைபோல `அழகை'க் காண்கிறேன் என்று தொடர்வார். ஓர் அங்கத்தை அதன் பெயர் சொல்லாமலேயே உணர்த்தியிருப்பார். `இந்த மண்ணில் இதுபோல் பெண்ணில்லையே' என்பதுதானே காதலின், வர்ணனையின் உச்சமாக இருக்கமுடியும்?

அழகு என்பது உருவத்திலோ, நிறத்திலோ இல்லை. பார்ப்பவரின் கண்களில் இருக்கிறது. காதல் கொண்ட நெஞ்சத்தினர்க்கு அவரவர் காதலியோ காதலனோ அழகுதான். அவர்கள் மட்டும்தான் அழகு. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்த நாயகியின் உருவத்தில் தன் காதலியைத்தான் பொருத்திப் பார்க்கும். காதல் குடிகொண்ட இதயத்துக்கும் கண்களுக்கும் எல்லாக் காதலிகளும் அழகுதான். அழகு என்பது காதல். காதல்தான் அழகு.

பெண்ணும் மண்ணும், பூவும் செடியும் என்று... அழகை தரிசிக்க, பார்வையிழந்திருந்தாலும் நமக்குக் காதல்கொண்ட கண்கள் வேண்டும். அவ்வளவுதான்.

- பயணிப்போம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close