[X] Close

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்  22: சிங்கமனசு; தங்கமனசு!  


chinna-manasukkul-cheenaperunjuvar-22

  • நாகூர் ரூமி
  • Posted: 02 Aug, 2018 07:33 am
  • அ+ அ-

நம் நாட்டின் புராணங்களிலும் இலக்கியங்களிலும் நிறைய உதாரண புருஷர்கள் உண்டு. ஆனால் வரலாற்றில் உதாரண புருஷர்களைப் பார்ப்பது அரிது. கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடு அதுதானே! ராமாயணத்தில் ராவணன் நிராயுதபாணியாக நின்றபோது ‘இன்று போய் நாளை வா’ என்று ராமன் சொன்னதை நாம் மேடைதோறும் எடுத்துச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறோம். ஆனால் நம் அன்றாட வாழ்வில் நாம் எப்படி வாழ்கிறோம்? 

நான் ஆங்கில இலக்கிய மாணவனாக இருந்தபோது வட இந்தியாவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பண்ணையார் ஒருவரின் நிலத்தில் ஒரு தலித் விவசாயியின் மாடு மேய்ந்துவிட்டதற்காக அந்த விவசாயியை துப்பாக்கி முனையில் மனிதக்கழிவை சாப்பிட வைத்தார் பண்ணையார். அதன் விளைவாக விவசாயி மயங்கி விழுந்தார் என்று ஆங்கில ஹிந்து பத்திரிக்கையில் செய்தி வந்தது.  அதுபற்றி ஒரு கவிதைகூட எழுதினேன். தமிழில்தான்! காலம் வேகமாகக் காலமாகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்றுவரை இந்திய சிந்தனைப்போக்கில் பெரிதாக ஒன்றும் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் சோகம். 
அப்படியானால் நாம் யாரைப் பின்பற்றுகிறோம்?

நிச்சயமாக நல்லவர்களை அல்ல என்பதுதான் பெரும்பான்மை நிஜம். நமக்கு லாபம் கிடைக்குமென்றால் நண்பனைக்கூட நஷ்டப்பட வைத்துவிடுவதில்  நமக்கு உடன்பாடுதான். சுமையாக இருக்கிறாள் என்று நினைத்து பெற்ற தாயையே மொட்டை மாடியிலிருந்து தள்ளிக் கொன்றுபோடும் மகன்கள் நிறைந்த சமுதாயமாகத்தானே மாறிவிட்டது உலகம்! 
அப்படியானால் யாரை நாம் பின்பற்ற வேண்டும்? இதுதான் நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. இதற்கு பதிலைக் காண வரலாற்றுக்குள் கொஞ்சம் போகவேண்டியுள்ளது. போகலாமா?

சிலுவைப்போர்கள் என்ற பெயரில் வரலாற்றில் லட்சக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்.  கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான போர்கள் அவை. புனித நிலத்தை மீட்கவேண்டுமென்ற உந்துதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று எந்த வித்தியாசமும் பாராமல் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட வரலாறு அது. 
அதில் மூன்றாம் சிலுவைப்போர் என்று ஒன்று. சிங்கநெஞ்சன் முதலாம் ரிச்சர்ட் என்ற இங்கிலாந்து மன்னருக்கும் எகிப்தின் சுல்தானான சலாஹுதீன் என்பவருக்கும் நடந்த யுத்தம் அது. அதில் ஜெருசலத்தை சலாஹுதீன் வென்றார். வெற்றிபெற்றவர்கள் தோல்வியடைந்தவர்களைக் கொன்று நிலமெல்லாம் ரத்தக்காடாக ஆக்குவதுதான் யுத்த மரபாக இருந்தது. இப்போதெல்லாம் அதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. விமானத்தில் சென்று எந்த நாடு பிடிக்கவில்லையோ அந்த நாட்டின் மீது குண்டுகளைப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும்! ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால் ’இனத்தைச் சுத்தம் செய்கிறோம்’ (Ethnic Cleansing) என்று கொலைக்கு புதிய புதிய பெயர்களையெல்லாம் சொல்கிறார்கள்!
ஆனால் சலாஹுதீன் அன்று யுத்தகளத்தில் செய்த காரியங்களைப் பார்த்து இன்றளவும் உலகம் தன் மூக்கின் மீது விரலை வைத்துக்கொண்டிருக்கிறது! கிறிஸ்தவர்களும் காதல் கொள்ளும் அளவுக்கு அவர் கதாநாயகனாகிவிட்டார். எதிரியான ரிச்சர்டும் சலாஹுதீனை வியந்தார். அவருக்கு மரியாதை செய்தார்.  1187-ல் நடந்த அந்த யுத்தகாண்டத்தை 1990-ல் ’டைம்’ பத்திரிக்கை கொண்டாடியது. அதுவும் சலாஹுதீனின் முழு உருவப்படத்துடன். அவர் அப்படி என்னதான் செய்தார்?

1.    சிலுவைப்போரின் வழக்கப்படி அவர் யாரையும் கொல்லவில்லை. ஒரு லட்சம் கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திலேயே அமைதியுடன் வாழ அனுமதியளித்தார். 
2.    ஊரைவிட்டுப் போக விரும்பியவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொத்துக்களுடன்  செல்ல நாற்பது நாட்கள் அவகாசம் கொடுத்தார். அவ்விதமாக 84,000 கிறிஸ்தவர்கள் சிரியாவில் இருந்த தங்கள் உறவினர்களிடம் சென்றனர். முஸ்லிம் பெற்றோர்களுக்குப் பிறந்த பாவத்துக்காக ஒரு குழந்தையைக்கூட யந்திரத்துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக்கொல்லும் இன்றையை சிரியாவை கொஞ்சம் ஒப்பிட்டு நினைத்துப் பார்ப்பது சலாஹுதீனின் மகத்துவத்தைப் புரியவைக்கும்.  
3.    பிணயத்தொகை கொடுத்துவிட்டுத்தான் அவர்கள் செல்லவேண்டும். ஆனால் ஆயிரக்கணக்கானவர்களிடம், குறிப்பாக பெண்களிடம், பணம் எதுவும் இல்லாமல் இருந்தது. ஏற்கெனவே வசதிபடைத்த கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் அல்லவா? அவர்களிடமிருந்த அந்தப் பணத்தை வசூலித்திருக்கலாம். ஆனால் சலாஹுதீன் தன்னுடைய பணத்திலிருந்து அவர்களுக்கான தொகையைக் கொடுத்தார்!
4.    பல பெண்கள் சலாஹுதீனிடம் வந்து தங்கள் பாதுகாவலர்களாக இருந்த கணவர்கள், அப்பாக்கள், சகோதரர்கள் யாரையும் காணவில்லை என்று முறையிட்டனர். அவர்களைத் தேடிக்கண்டு பிடிக்குமாறும், அவர்கள் இறந்திருந்தால் அப்பெண்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவும் சலாஹுதீன் உத்தரவிட்டார்!
5.    திரைப்படங்களில் வருவது போன்ற ஒரு காட்சியும் நடந்தது. ரிச்சர்டின் குதிரை போரில் கொல்லப்பட்டது. ரிச்சர்ட்  கீழே விழுந்தார். அதைப்பார்த்த சலாஹுதீன் இரண்டு குதிரைகளை அனுப்பி எதை வேண்டுமோ பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார். அதுமட்டுமல்ல. ரிச்சர்டுக்கு ஜுரம் வந்து படுத்திருந்தபோது அவருக்குத் தேவையான உணவையும் பழங்களையும் அனுப்பி வைத்தார் சலாஹுதீன்!
6.    தன் குழந்தையைக் காணவில்லை என்று ஒரு கிறிஸ்தவத்தாய் முறையிட்டபோது அக்குழந்தையைத் தேடிக்கொடுக்க உத்தரவிட்டார். குழந்தை கிடைத்தவுடன் பாதுகாப்பாகப் போவதற்கு அவர்களுக்கு ஒரு குதிரையையும் கொடுத்தார்!
7.    பிடிபட்ட போர்க்கைதிகளில் பல்லில்லாத ஒரு கிழவனும் இருந்தான். நீ எப்படி இங்கே என்று கேட்கவும், தான் ஜெருசலத்தில் உள்ள தேவாலயத்துக்கு புனிதப்பயணம் செல்ல ஆசைப்பட்டு வந்தேன் என்று அந்தக் கிழவன் சொன்னான். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை உடனே செய்தார் சலாஹுதீன்!

என்னவோ திரைப்படத்தில் வரும் மிகையான காட்சிகளைப்போல உள்ளதா? ஆனால் வரலாற்றின் ஒளியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இவை. முதலாம் ரிச்சர்ட் சிங்க நெஞ்சன் என்றால் சலாஹுதீன் தங்க நெஞ்சனாக இருந்துள்ளா! நமக்கு சிங்கநெஞ்சம் வேண்டுமா தங்க நெஞ்சம் வேண்டுமா?

இன்னொரு வரலாற்று நிகழ்ச்சி. ஆனால் அதில் வரும் ஒருவர் சலாஹுதீனையும் மிஞ்சிவிட்டார். நம்ப முடியாத ஓர் அற்புதமான வரலாற்று நிகழ்ச்சி அது. ஆனாலும் அது உண்மை. நினைத்து நினைத்து பெருமைப்படக்கூடிய உண்மை. நம்மால் அப்படி நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்றும் நான் சொல்லமாட்டேன். அவ்வளவு உயரத்துக்கு கோடியில் ஒருத்தரால் மட்டுமே செல்ல முடியலாம். 

‘பில்டப்’அதிகமாக உள்ளதோ?! இருக்கட்டும். அந்த வரலாற்று நிகழ்ச்சியைச் சொல்லுமுன் இன்னொரு வரலாற்றை அல்லது கதையைச் சொல்லிவிடவேண்டும். அப்போதுதான் நான் சொல்ல வருவதன் முழு வீச்சும் புரியும். 

ஒரு வீட்டில் குழந்தை ஒன்று இறந்துபோனது. அது புத்தருடைய காலம். அந்த அம்மா ரொம்ப துயரப்பட்டாள். அவளுக்கென்றிருந்த ஒரே அன்புக் குழந்தை. புத்தரிடம் சென்று அவள் அழுதாள். ‘நீங்கள் பெரிய ஞானி என்று சொல்கிறார்களே, என் குழந்தையின் உயிரை மீட்டுத்தாருங்கள்’ என்று முறையிட்டாள். 

புத்தர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர், ‘சரி மீட்டுத்தருகிறேன். ஆனால் அந்தக் குழந்தைக்காக யாராவது உயிர் துறக்கத் தயாராக இருக்கிறீர்களா சொல்லுங்கள். இருந்தால் நான் நிச்சயம் அக்குழந்தையை மீண்டும் உயிரோடு கொண்டு வருகிறேன்’ என்றார்!

கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று நான் சொல்லவேண்டியதில்லை! ’வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ’ என்று எழுதிய கவிஞன்கூட அந்த நேரத்தில் ஒரு ஞானியாகத்தான் இருந்திருக்க முடியும். மேலே புத்தர் சொன்ன நிகழ்ச்சி வரலாறாகவும் இருக்கலாம். கதையாகவும் இருக்கலாம். ஆனால் கதையின் செய்திதான் நமக்கு இங்கே முக்கியம்.  சரி, இப்போது நான் ‘பில்டப்’ கொடுத்த வரலாற்று நிகழ்ச்சிக்கு வருகிறேன். இது கதையல்ல. நிஜம்!

இரண்டாம் உலகப்போர். ஹிட்லரின் அட்டூழியங்கள் கோலோச்சிய காலகட்டம். ஒரு போலந்து நாட்டுக் கைதி. ஹிட்லரால் பிடித்து வரப்பட்டு ’ஆஷ்விஷ் கான்செண்ட்ரேஷன்’ முகாமில் வைக்கப்பட்டார். கான்செண்ட்ரேஷன் காம்ப் என்றால் சித்திரவதை செய்து சாகடிக்கும் முகாம் என்று அர்த்தம். அங்கே சாகவந்திருந்தார் அவர். அவர் பெயரை எத்தனை முறை எழுத்துக்கூட்டி வாசித்தாலும் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஃப்ரான்ஸிஸ்செக் கஜோனிவ்செக் என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆங்கிலத்தில் Franciszek Gajowniczek என்று போட்டுள்ளது. எப்படி உச்சரிக்கலாம் என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக ஃப்ரான்சிஸ் என்று வைத்துக்கொள்வோம்.
 
யூதர்களையும் போலந்து நாட்டு அகதிகளையும் மறைத்து வைத்ததற்காக கோல்பே என்ற பெயர் கொண்ட ஒரு போலந்து நாட்டு கத்தோலிக்கப் பாதிரியாரையும் பிடித்து வைத்திருந்தனர். அந்த நேரத்தில் அந்த சித்திரவதை முகாமிலிருந்து மூன்று பேர் எப்படியோ தப்பித்துச் சென்றனர். எல்லாம் உயிர்பயம் கொடுத்த துணிச்சலாகத்தான் இருக்கவேண்டும்! அவ்வளவுதான். இனிமேல் அப்படி யாரும் செய்யத்துணியக்கூடாது என்று துணை அல்லது இணை கமாண்டர் முடிவு செய்தான். அதற்காக ஒரு ஏற்பாடு செய்தான்  அந்தக் கொடுங்கோலன். தப்பித்துப்போக எத்தனிக்காமல் முகாமிலிருந்த பத்து அப்பாவிகளை பட்டினி போட்டுக் கொன்றுவிடவேண்டும் என்பதுதான் அவனது முடிவு! தப்பித்துப்போக நினைப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்குமாம்! எவ்வளவு இரக்கமற்ற கொடூரமான மனித சிந்தனை பாருங்கள். ஒரு சின்னப்பெண்ணை பதினேழுபேர் மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் வன்கொடுமை செய்த மாதிரியான விஷயம் அது. ஹிட்லர்கூட இருந்தவர்கள் ஹிட்லரைவிட மோசமானவர்களாக இருந்துள்ளார்கள்!   

அந்த முடிவு ஃப்ரான்சிஸை கலவரப்படுத்தியது. இருக்காதா பின்னே? அவர் உரத்து அழ ஆரம்பித்தார். ’என் மனைவியையும் குழந்தைகளையும் நான் இனி எப்போது பார்ப்பேன்’ என்று சொல்லி அவர் அழுதார். அப்போது கோல்பே தாமாக முன்வந்து சிறை அதிகாரியிடம் சொன்னார்: ‘நான் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார். அவரை விட்டுவிடுங்கள். அவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். அவருக்கு பதிலாக நான் பட்டினி கிடந்து உயிர்விடுகிறேன்’ என்றார்!  படிக்கும்போதே என்னை மெய்சிலிர்க்க வைத்த சம்பவம் இது.  இப்படியும் உன்னத மனிதர்களா!

கோல்பேயின் வேண்டுகோளை ’அருள்கூர்ந்து’ முகாமின் கமாண்டர் ஏற்றுக்கொண்டான்! ஐயோ நம் உயிர் அநியாயமாகப் போகப்போகுதே என்று கவலையாக ஒரு மூலையில் கோல்பே அமர்ந்துவிடவில்லை. ஒவ்வொரு நாளும் முகாமில் இருந்தவர்களுக்காக ’மாஸ்’ எனப்படும் கூட்டுப்பிரார்த்தனை நடத்தினார். இறைவனுடைய திருப்பெயர்களை, புகழ்ப்பாடல்களைப் பாடினார்! அப்பா, என்ன மன உறுதி! அவன்தான் மனிதன்!

இரண்டு வாரங்கள் சோறு தண்ணி இன்றி பட்டினி கிடந்த பிறகு பாதிரியாரைத்தவிர மற்ற அனைவரும் இறந்து போயினர். கோல்பேயின் உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டிருந்தது. புதிதாக வந்துகொண்டிருந்த கைதிகளுக்கு இடம் தேவையாக இருந்ததால் வேறுவழியின்றி கோல்பேவுக்கு விஷ ஊசி போட்டு அவரைக் கொன்றார்கள்! அப்போதுகூட அவர் தன் இடது கையை உயர்த்தி ஊசிக்குக் காட்டினார் என்று கூட இருந்தவர்கள் சொன்னதாக வரலாறு அதனைப் பதிவு செய்துள்ளது. 
கோல்பேயை புனிதர் என்று வரலாறு குறிப்பிடுகிறது. உண்மைதான். அவர் புனிதரேதான். நம்மால் அடுத்தவருக்காக உயிரைக் கொடுக்க முடியாது. ஆனால் அடுத்தவரின் உயிரை எடுக்காமலாவது இருக்க முடியுமல்லவா? நாம் பார்க்கவேண்டிய, எடுத்துக் கொள்ளவேண்டிய, பின்பற்ற வேண்டிய விஷயம் குறைந்த பட்சம் அதுதான். அன்றாட வாழ்வில் கோல்பேயாக இருக்க முடியாவிட்டாலும் ஒரு சலாஹுதீனாகவாவது இருக்கலாம் அல்லவா?

இன்னும் தாண்டுவோம்…
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close