[X] Close

நெற்றிக்கண் திறக்கட்டும் 22 : தேவ ரகசியம்


netrikkan-thirakkattum-22

  • எஸ்.கே.முருகன்
  • Posted: 01 Aug, 2018 11:38 am
  • அ+ அ-

ஞானகுரு -  இவர் எந்தவொரு வட்டத்திலும் சிக்காத மதயானை. சந்தனமும், சகதியும் இவருக்கு ஒன்றுதான். இவரது அனுபவ உண்டியலில் இருந்து சிதறிய சில மனிதர்களை இங்கு தரிசிக்கலாம்.

ரோட்டோரத்தில் பூ கட்டும் பெண் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தாள். அறுபதைக் கடந்த கிழவி, காலில் செருப்பு இல்லாமல் காய்களை சுமந்து விற்றபடி கடந்தாள். கைக் குழந்தையுடன் ஒருத்தி ரோட்டோரம் பாசிகளை பரப்பியிருந்தாள். தார் ஊற்றுவதும் அதன் மீது  சரளைக்கற்களை நிரவி ரோடு போடும் பணியிலுமாக இருபதுக்கும் மேற்பட்டவர்கள் உழைத்துக்கொண்டு இருந்தனர். பலூன்காரர், மீன் வியாபாரி, சாணை பிடிப்பவர், ஆட்டோக்காரர் என்று என்னைக் கடந்த பலரும், அவரவர் வயிற்றுப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு உழைக்க, நான் மட்டும் காவியுடன் திரிவது மகா அயோக்கியத்தனமாகத் தெரிந்தது.

ஆனால், நான் இந்தக் கூட்டத்தில் கலந்துநிற்க முடியாமல் விலகி வந்தவன்தான்.  மனிதகுலத்திற்கு மட்டும் ஏன் இந்தத் தேடல், ஓட்டம், பரபரப்பு?  இந்தக் கேள்வி எனக்கு மட்டும்தானா என்ற சிந்தனையே முதல் தேடல். விவேகானந்தருக்கு கிடைத்த பதில், அவருக்குத் திருப்தியாக இருந்தது. ஆனால், அது எனக்குப் போதுமானதாக இல்லை என்பதால் மூலத்தைத் தேடுகிறேன்.

கண்டுபிடிக்கக் கூடியதா? நானறியேன். ஆனால் கண்டுபிடித்தால் மனித இனத்துக்கு நல்லது, இல்லையென்றால் எனக்கு மட்டும் தோல்வி. அதனால்தான் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த நான், சுயநலத்தில் இருந்து பொதுநலத்திற்குத் தாவினேன்.

பொதுவாகவே மனிதன் கூட்டுறவு விரும்பும் சுயநலவாதி. சுயநலமும் கூட்டுறவும் எதிரெதிர்த் துருவம் என்ற வியாக்கியானம் மனிதனிடம் எடுபடாது. தன் நன்மைக்கும் .பாதுகாப்புக்கும் கேடயம் என்பதாலே சமுதாயத்துடன் இணைந்து வாழ்கிறான். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் உண்டு. அந்த சுயநல மிருகம்தான் சமூக எல்லைகளைத் தாண்டி சக மனிதனை கொல்லவும், கொள்ளை அடிக்கவும் தூண்டுகிறது. இதனால் அடையப்போகும் ஆதாயம் எதுவுமில்லை என்பதும், பிரம்மாண்ட பிரபஞ்சத்தில், தான் ஒரு துகள் என்றும் அறிந்தவன் பிறருக்கு தொந்தரவு தர மாட்டான்.

என் தேடல் இன்னமும் ஆரம்பித்த இடத்தில் நிற்கிறது. இத்தனை பெரிய பிரபஞ்சம், உயிர்கள் படைக்கப்பட்டதற்கு ஏதேனும் ஒரு நோக்கம் இருக்கலாம். ஒருவேளை, இந்த பிரபஞ்சம். தற்செயலாக தோன்றியது என்றால், அத்தனை இயக்கமும் ஓர் ஒழுங்குமுறையில் நிகழ்வதற்குக் காரணம் எது? எண்ணங்களின் சக்தி எந்த எல்லை வரை செல்லுபடியாகும்? உயிர் என்பது என்ன? அதனை பிடித்துவைப்பது எப்படி?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள் என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றன. எந்தப் பதிலும் திருப்தியாக இல்லை. இறைவன் பாதம் சேருமாறு ஆன்மிகவாதிகள் சொல்வது ஏற்புடையதாக இல்லை. இறைவன் பாதம் பணிவதால் மனிதனுக்கு என்ன நன்மை, அல்லது இறைவனுக்கு என்ன நன்மை?.

மிருகங்களும் பறவைகளும் உயிர் இலக்கணத்துக்கு கட்டுப்பட்டு வாழ்வதாக நினைக்கிறோம். மற்ற உயிரினங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று நம்புகிறோம். ஒருவேளை பகுத்தறிவு இருப்பதால்தான் மனிதன் மட்டும் மற்ற உயிரினங்களைவிட அதிகம் இன்பமும் துன்பமும் அனுபவிக்கிறானா? தேவையில்லாத பகுத்தறிவை தூர எறிய முடியாதா? எனக்கு மரணம் நிகழ்வதற்குள் ஏதேனும் வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

ஏழெட்டு கிலோமீட்டர் நடைக்குப் பிறகு பாதையில் இருந்து விலகி ஒதுக்குப்புறமாக ஒரு கல் மண்டபம் நின்றது. அந்த மண்டபத்தைச் சுற்றி  குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் உள்ளே நுழைந்தேன். குப்பைக்குள் நுழைந்தேன். மனிதன் எத்தனை வகையான குப்பைகளைக் கொட்டுகிறான் என்பதே ஆச்சர்யம்தான். குப்பைகளைக் கிளறி இரண்டு பேர் தங்கள் வாழ்க்கையைத் தேடிக்கொண்டு  இருந்தனர்.

நெருங்கிவந்த பிறகுதான் கல் மண்டபம் கேவலமாக இருப்பது தெரிந்தது. நரகல்களும் குப்பையுமாக கிடந்த கல் மண்டபத்தில் இருந்து வெளியேற நினைத்தபோது, ஒரு புறக்கணிக்கப்பட்ட துடைப்பத்தைப் பார்த்தேன். மனம் மாறியது.  துடைப்பத்தை எடுத்துவந்து மண்டபத்தை சுத்தமாக்கினேன். என் செய்கையைப் பார்த்து, குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோணிப்பை பெண் ஒருத்தி அருகே வந்தாள்.

‘’என்னா சாமி, அந்தக் கிழத்தை இட்டாரப்போறியா?’’ ஆச்சர்யமாகக் கேட்டாள். அவள் எதைக் கேட்கிறாள் என்று புரியாமல், ‘’எந்தக் கிழம்?’’  என்றேன்.

‘’அதோ, அந்தக் குப்பைக்குள்ளே ஒரு கிழம் நேத்திலேயிருந்து கிடக்கார். போலீஸ் பார்த்துட்டுப் போயிடுச்சு. ஆம்புலன்ஸ் வரும்னு சொன்னாங்க வரலை…’’ என்று அவள் கை காட்டிய திசையில் வேகமாக நடந்தேன்.

குப்பையோடு குப்பையாக ஒரு வயதான கிழம் மயக்கத்தில் கிடந்தது. எப்படியும் 90 வயது தாண்டியிருக்கும்.  வாடி வதங்கிய கொத்தமல்லிச் செடி போன்று கிடந்தார். தாடி, மீசை ஏகமாய் வெளுத்துக்கிடந்தது. ஒரு துண்டு மட்டும் கோவணம் போன்று இடுப்பில் ஒட்டியிருந்தது. அவரை அப்படியே அலாக்காகத் தூக்கிவந்து கல் மண்டபத்தில் படுக்க வைத்தேன்.

அதுவரை மயங்கியதுபோல் கிடந்தவர் சட்டென கண் திறந்து சிரித்தார். முழு உணர்வுடன் இருப்பது புரிந்தது. என் கையில் எதுவும் இல்லை என்பதால், கோணிப்பை பெண்ணை திரும்பிப் பார்த்தேன்.

கோணிப் பைக்குள் இருந்து ஒரு வாட்டர் பாட்டிலும், குப்பையில் கிடைத்த மாம்பழம் ஒன்றும் எடுத்துக்கொடுத்து கிளம்பினாள். தண்ணீரை அவர் முகத்தில் தெளித்து வாயில் கொஞ்சம் ஊற்றினேன். தண்ணீர் குடித்து சில நிமிடங்கள் அமைதியாக கிடந்தவரின் உதடு துடித்தது. சில நிமிடங்களில் பேசத் தொடங்கினார்.,

‘’புண்ணியம் வேணுமா?’’ முனகலாக குரல் கேட்டது.

‘’அது என்னத்துக்கு…’’ என்றபடி அவர் நெஞ்சை தடவிக்கொடுத்தேன்.

‘’என் மகன் செத்துட்டான், பேரன் செத்துட்டான். அவன் பையனால என்னை கவனிக்க முடியலை. குப்பைத் தொட்டியில எறிஞ்சிட்டான்…’’

‘’மிகவும் நல்லவன். கொலை செய்யப் பயந்திருக்கிறான்…’’ என்றதும் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார்.

‘’சாப்பிட்டு மூணு அமாவாசையாச்சு. காத்துல வண்டி ஓடுமா…?’’ இப்போது பேச்சு சற்று தெளிவாகப் புரிந்தது. இது எனக்கான பரீட்சை.

‘’மனதில் உறுதி இருந்தால்..’’

‘’மனம்…’’ அவர் இதழோரம் சிரிப்பு தெரிந்தது.

‘’அறிந்ததை சொல்லுங்கள்…’’ பாடம் படிப்பவன் போன்று நெருங்கி அமர்ந்தேன். கண் திறந்துபார்த்து மூடிக்கொண்டார்.

‘’பிச்சை கேட்காதே……’’

‘’எனக்கு வேண்டாம். நோயாளிக்கு, உழைப்பாளிக்கு, நிம்மதியாக சாப்பிட முடியாத அன்றாட மனிதனுக்கு?’’

‘’எவனுக்கும் வேண்டாம்…’’

‘’ஏன் பிடிவாதம்?’’

‘’பக்குவம் வரவில்லை…’’ அழுத்தமாக சொன்னது. உண்மையாக இருக்கலாம் என்று நினைத்து அமைதியானேன். பதில் வரவில்லை என்றதும் கிழம் லேசாக கண் திறந்து பார்த்தது. நான் பேச்சை நிறுத்தியதில் சந்தோஷமானது. எத்தனை மணி நேரம் கடந்தது என புரியவில்லை. யார் யாரோ வருவதும் போவதும் புகை போன்று தெரிந்ததே தவிர, எதுவும் கவனத்தில் இல்லை. இருட்டில் தூக்கம் வரவில்லை, உதயத்தில் சோம்பல் எழவில்லை.

தூக்கமா, விழிப்பா என்று தெரியாமலிருந்த என்னை, திடீரென ஒரு கை தொட்டு எழுப்பியது. கிழம் சிரித்தபடி பார்த்தது. கண்களால் அழைத்தது. என் காதை கிழத்தின் வாயருகே கொண்டு போனேன். தேவ ரகசியத்தை மிகத் தெளிவாக உச்சரித்தது. எனக்கு ஆச்சர்யம் வரவில்லை, ஆனந்தம் வரவில்லை, அமைதியாக கேட்டுக்கொண்டேன். கிழம் பேசி முடித்த சில நொடிகளில் யாரோ பலவந்தமாக எங்கள் இருவரையும் அசைத்ததும் சட்டென விழிப்பு வந்தது.

ரோட்டில் இரண்டு ஆம்புலன்ஸ் காது கிழிய கத்திக்கொண்டு நிற்பதும், ஊழியர்கள் கிழத்தை ஸ்ட்ரெக்‌ஷரில் தூக்கிப் போட்டு கொண்டுசெல்வதும் தெரிந்தது. என்னையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஊழியர்கள் முயற்சி செய்தனர். சுதாரிப்பாக இருப்பதைச் சொல்லி இயல்பாக எழுந்து நகர்ந்தேன்.

இதுதான் தேவ ரகசியமா? கிழம் சொன்னது உண்மையா? மீண்டும் குழப்பம். உண்மையை நான் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மீண்டும் என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

கிழம் சொன்ன தேவரகசியம் அறிய ஆசையா?

பக்குவம் வரட்டும்.

 - நிறைந்தது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close