[X] Close

பயணங்களும் பாதைகளும் 18: மிளகுக்குழம்பும் சைரன் சத்தமும்!


payanangalum-paadhaikalum-18

  • kamadenu
  • Posted: 01 Aug, 2018 10:16 am
  • அ+ அ-

சில வேடிக்கையான வெளிநாட்டு அனுபவங்கள். அதைப் பகிர்ந்துகொள்ளட்டுமா?  

அன்று என்னவோ ஒரு போதாத நாள். ஏதோ சென்னை நினைவில் அன்றைய சமையல் மெனு பருப்புத் துவையல், மிளகுக் குழம்பு, வெண்டைக்கா கறி. இதையும் சொன்னது நான் தான். அபூர்வமாக முருங்கைக்காய் ஒருநாள் கிடைக்க, தெரிந்துகொள்ளுங்கள்,  இது போன்ற லக்சுரி எப்போதாவது எங்கோ இருக்கும் இண்டியன் ஷாப் சென்றால், அங்கே ஏக விலைக்கு சொத்தலும் சொள்ளையும் நடுவே நல்லது கிடைத்தால், அதை வாங்கி வர கைகளில் இடம் இருந்தால்.....இந்த எல்லா நிச்சயமற்றவைக்கும் உம்உம் போட்டும் அந்த ஒருநாள் என்றோ ஒரு அபூர்வ குறிஞ்சிதான் போங்கள்!

எப்போதும் போல், வாணலியை வைத்து, குழம்பிற்கு அரைத்து விட கருவேப்பிலை மற்றும் இதர வஸ்துக்களை நான் வதக்க... 

ஊங்......எங்கோ சைரன்...

வாஷிங் மெஷின்....இல்லை...ஓ பக்கத்தில் புல் வெட்டுவதா....இல்லை, பிறகென்ன சத்தம்? 

இந்தக் கூத்தில் சூடு அதிகமான அடுப்பு இன்னும் புகைந்தது.

என்ன அங்கே சத்தம்? உள்ளே இருந்து குரல்.

தெரியவில்லை, சொல்லிக்கொண்டே சத்தத்தின் சோர்ஸ் தேடிக் கண்டுபிடித்தபோது, பாரதிராஜா சினிமா இன்ட்ரோ போல் புகை மூட்டத்தில் என் கணவர் உள்ளே வர ...

என்ன பண்ணி தொலச்சே, ஒரே புகை, ஒரே சத்தம். 

வேறு ஒன்றுமில்லை. ஸ்மோக் டிடெக்டர், கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ சீலிங்கில் ஒளிந்து கொண்டு, அழகாக சிவப்புக் கண்ணோடு,பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது.

கருகிப்போன மிளகுக் குழம்பை வேதனையுடன் பார்த்து பின் இண்டக்‌ஷன் அடுப்பை நிறுத்தி விட்டு, கதவுகளைத் திறந்து விட்டு, ம்ஹூம் அப்போதும் சத்தம் நிற்கவில்லை.

பையனுக்குப் போன் செய்தால்,மீட்டிங்.

இந்தப் பட்டன், பிரஸ் செய்தால், வராண்டா திறக்கிறது. அந்தப் பட்டன் , பிரஸ் செய்தால், திறந்தது மூடுகிறது. 

ஒருவழியாகப் புகை குறைய, சிவப்பழகி கண்களை மூடிமூடி லேசாக சிமிட்டிச் சிமிட்டி வெறுப்பேற்ற... நாங்கள் இருப்பது இரண்டாவது மாடியில். கீழே இருந்து யாரோ உரக்கப் பேசுவது கேட்க...

போச்சு, இங்கேயெல்லாம் செக்யூரிட்டி சிஸ்டம். ஆல்வேஸ் இன் ப்ளேஸ், ஃபயர் சர்வீஸ், போலீஸ்,  அப்படித்தான் இருக்கும், போ, நீதானே பண்ணின, நீயே வண்டிலே ஏறி ஸ்டேஷன் போ. நான் வரமாட்டேன்.

இந்தப் புத்தி இருக்கிறதே... அது எப்போது நம்ப வேண்டுமோ அப்போது ரிவர்ஸில் வேலை செய்யும். எப்போது நம்பக்கூடாதோ அப்பவும் தான்.

அடக் கண்றாவியே. என்ன பேசுகிறார்கள், புரியாது. இதில் நான் பதில் சொல்லி அது அவர்களுக்குப் புரிந்து... தீட்டிடுவான். முந்நூறு யூரோ, போ போய் கட்டிடுட்டு வா.....

மிளகுக் குழம்பிற்கு தேவையான புளி வயிற்றில் கரைந்தது.

காலிங்பெல்லிற்கு நான் காத்து நிற்க, கடைசியில், கீழே பேசிக்கொண்டிருந்தது வேறு யாரோ இருவர். பேச்சு வேறு என்னவோ!

இனி மிளகுக்குழம்பிற்கு ஆசைப்படுவேன்?

No... Never...

டுத்தது ஃபேஷன் பற்றிய ஒரு தியரி.  

இந்தியாவில் ஒரு நாள் ...

வீட்டிலிருந்து ரொம்ப அவசரமாகக் கிளம்பினேன். என்ன, நமக்குத்தான் எல்லாம் தலை போகும் அவசரம் ஆயிற்றே.  

வேற ஒண்ணுமில்லீங்க, பக்கத்திலிருக்கும் பேங்கிற்கு ஏதோ ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது.

இது, அது, எது. எல்லாம் எடுத்துக்கொண்டேனா என்று நிறையத் தடவை செக் செய்துவிட்டு,  செருப்பு மாட்டிக்கொண்டு கிளம் பினேன். காரிலிருந்து இறங்கிப் படியேற  ஆரம்பித்தேன். எசகேடாக கால் இரண்டும் ஏதோ பறப்பது போல் தோன்ற....கீழே குனிந்து பார்த்தேன்.

அட கஷ்டகாலமே, எனக்குச் செருப்பு ஒரு வீக்னஸ். பார்ப்பதை வாங்கி விடுவேன். ஒரு காலில் மைல்ட் ஹீல்ஸ் மற்றொரு காலில் ஃப்ளாட், அவசரத்தில் மாற்றிப் போட்டுக் கொண்டு வந்துவிட்டேன்.

மிகவும் சிரமப்பட்டு, புடவையால் கால்களை மூடி, சப்பாணி நடை நடந்து... தெரியும், ஒரு காலில் சிவப்பு மறு காலில் பச்சைக் கலர், இதுவும் ஃபேஷன்தான். ஆனால் இரண்டும் ஒரே மாடல் ஆக இருத்தல் அவசியம்.  

இந்த ஃபேஷன் ரூல் அப்ளை செய்ததால், என் தேர்வு அடிபட்டுப் போக, ஆனால் அன்று ஜெர்மனியில் பார்த்த ஒரு பாவை....ஒரு காலில் சாண்டல் மறு காலில் பூட்ஸ்...என்னமா பெருமையுடன் கையில் புகையும் சிகரெட்டுடன் டக்டக்டக் நடை.

கேட்டுக்குங்க....கேட்டுக்குங்க...கேட்டுக்குங்க.

நானும் ஃபேஷன் டிரெண்ட் செட்டர் தான்.

ன்று. ஜெர்மனியில்...

எல்லோரும் ரெடியா, கிளம்பலாமா?

வாசலுக்கு வந்து கதவு அழுத்திச் சாற்றப்பட்டது.பின் மூன்று முறை ஹாண்டில் இழுத்துப் பார்க்கப்பட்டது. பின்ன, என்னதான் ஜெர்மன் தயாரிப்பு மிகவும் நம்பத்தகுந்தது என்று சொல்லப்பட்டாலும், இந்தியன் நான் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவேனா??

காரில் ஏறி அமர்ந்த உடன் பீப் சத்தம் அழுத்தமாக. இந்த ஜெர்மன் கார்கள் முன் சீட், பின் சீட், மகா பின் சீட், இப்படி மானாவாரியாக எவ்வளவு சீட் இருந்தாலும், சீட் பெல்ட் போடவில்லை என்றால் இப்படிக் கத்தி ரகளை செய்துவிடுகிறது. சீட் பெல்ட் மாட்டாமல், பேசிக் கொண்டே, பாடிக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே...இப்படிப் பல கொண்டேக்களுடன் போலீஸ் செக்கிங்கைப் பார்த்து சீட்பெல்ட் பக்கிளைத்தேடும் நம் பழக்கம் தெரியாது , பாவம்.

எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டோமா, லாஸ்ட் செக்கிங்.

பரக்பரக்..பல பைகள் தேடப்படும் சத்தம்.

அய்யய்யோ, எடுத்துவைத்துக்கொள்ள மறந்து விட்டேன்.

பாஸ்போர்ட், குழந்தை உணவு, ஹேண்ட்பேக், வீட்டுச்சாவி...என்னவாக இருக்கும்? யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்.

மறந்து வைக்கப்பட்டது எடுத்துவரப்பட்டு நாங்கள் கிளம்பி அந்த லாங்க் வீக்கெண்டிற்கு ஆஸ்ட்ரியா கிளம்பினோம். மறந்த பொருள் என்ன என்று பிறகு சொல்கிறேன்.

பார்ம் வீடு மிகப்பெரியதாக இருந்தது. அதன் உரிமையாளர் எங்களுக்கு நமஸ்கார் சொல்லி கை குவித்து வரவேற்று வீட்டைச் சுற்றிக் காட்டினார். நம் சொந்த வீட்டில் கூட இவ்வளவு வசதிகள் பார்க்க முடியாது. டிஷ் வாஷர், இண்டக்ஷன் ஸ்ட்வ், கார்பெட், குழந்தைக்கு வித விதமான விளையாட்டுப்பொருட்கள், காபி மேக்கர்,ப்ரிட்ஜ்,பாத்திரங்கள், டிவி சுமார் பத்து வருடம் குடித்தனம் செய்தால் சேரும் அவ்வளவு சாமான்களும் இருந்தன.

அந்தப்பெண் ஏதோ ஜெர்மன் மொழியில், கை கால்கள் ஆட்டி ஆட்டி, உச் கொட்டி, உம் சொல்லி ஏதோ சொல்லிவிட்டுச் சென்றாள்.

என்ன சொல்லி இருக்கப்போகிறாள்.. பொருட்களைக் கவனமாக வைத்துக் கொள்ளத்தான் என்று நினைத்தேன். பார்த்தால், சொன்னது.....

குப்பைகளை மிகக் கவனமாக பைகள், பாட்டில், மற்றவை என்று தனித்தனியாக கவரில் போடச் சொல்லி.. பொருட்கள், அவை உடையாமல், அல்லது உபயோகிப்பதில் கவனம், இவற்றைப் பற்றி, மூச்... வாயைத்திறக்கவேயில்லை.

மறந்து வைத்த பொருள் என்னவென்று இப்போது சொல்கிறேன். ரோல் அப் செய்து விற்கப்படும் குப்பை போடப் பை. நாங்கள் கிளம்பிய நாள் பப்ளிக் ஹாலிடே. அன்று கடைகள் திறந்திருக்காது. பையைப் போகும் வழியில் வாங்க முடியாது. அதனால்தான் அந்தப் பரபரப்பு.

- லதா ரகுநாதன்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close