[X] Close

கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்! 22 : சமயபுர மகிமை : மாவிளக்கு, கண்மலர், உப்பு பிரார்த்தனை!


kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum-22

சமயபுரம் மாரியம்மன்

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Jul, 2018 14:21 pm
  • அ+ அ-

உடலில் நோயோ மனதில் வாட்டமோ வந்துவிடாமல் இருப்பதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை. தொடர்ந்து மாத்திரை, மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் படுத்தியெடுக்கலாம். பிரச்சினை மேல் பிரச்சினை, சிக்கல் மேல் சிக்கல் என்று புலம்பி வெதும்பலாம். இப்படியான தருணங்களிலெல்லாம், ‘ஆத்தா... சமயபுரத்தா... நீதாம்மா காப்பாத்தணும்’ என்று ஒரேயொரு முறை சொல்லி அவளை நினைத்துக்கொள்ளுங்கள். இருந்து தொந்தரவு செய்த நோய் காணாமல் போய்விடும். இருந்து குழப்பிக்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும்.

அம்மனுக்கு உகந்தது செவ்வாய்க்கிழமை. இந்தநாளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் சமயபுரத்தாளை தரிசனம் செய்யவேண்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். ஏனெனில், கிழமைகளுக்கு அப்பாற்பட்டவள் இந்த மகாசக்தி. கேட்கும் வரங்களையெல்லாம் வள்ளலென வாரி வழங்கக் கூடியவள் இவள். ஆகவே, எல்லாநாளும் சமயபுரம் மாரியம்மனுக்கு உகந்த நாளே!

திருச்சியில் இருந்து சென்னை வரும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சமயபுரம். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடர்ந்து டவுன் பஸ்கள், சமயபுரத்துக்கு கிளம்பியபடி இருக்கின்றன. சமயபுரத்திலேயே தங்குவதற்கு சத்திரங்களும் லாட்ஜ்களும் இருக்கின்றன. ஹோட்டல் வசதிகளும் உண்டு. மிகப்பிரமாண்டமானதொரு இடத்தில், தான் ஒருத்தி மட்டுமாக இருந்து, உலக மக்கள் அனைவரையும் காத்தருள்கிறாள் மகா மாரியம்மன்.

விஜய நகர மன்னன், தெற்கு நோக்கி படையெடுத்து வந்தான். அப்போது வரும் வழியில், கண்ணனூர் எனும் இப்போது அம்மன் குடிகொண்டிருக்கிற ஊரில் தங்கினான். அவனுடன் அவனுடைய படையினரும் தங்கினார்கள். அப்போது, அம்மனின் சக்தியை கேட்டறிந்த மன்னன், ‘இப்போது கிளம்பியிருக்கும் நோக்கமே, வெற்றியை நோக்கித்தான். எனவே இந்தப் படையெடுப்பு வெற்றியைத் தரவேண்டும் தாயே! அப்படித் தந்துவிட்டால், நாங்கள் போரில் ஜெயித்துவிட்டால், உனக்குக் கோயில் கட்டுகிறேன்’ என்று வேண்டிக்கொண்டானாம்!

அதன்படியே போரில் வெற்றி கண்டான் மன்னன். அதனால் மீண்டும் ஊருக்குத் திரும்பும் வழியில், அம்மனைத் தரிசித்தவன், உடனடியாக கோயில் எழுப்பக் கட்டளையிட்டான். கோயிலும் எழுப்பப்பட்டது என்கிறது ஸ்தல வரலாறு.

வாழ்க்கையே இங்கே யுத்தகளம்தானே! தினம் தினம் செத்து செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிற சாமான்ய வாழ்க்கைதானே, நம்முடையது. எனவே, சமயபுரம் மாரியம்மனிடம், உங்கள் வாழ்க்கையைச் சொல்லி முறையிடுங்கள். உங்களுக்கு வரவேண்டிய உத்தியோகம், தர வேண்டிய பதவி உயர்வு, கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்து, பெற வேண்டிய செல்வங்கள் என எல்லாமே தடையாக இருப்பதைச் சொல்லுங்கள். யாரோ, எதுவோ, முன்வினையோ, இப்போதைய சூழலோ... முட்டுக்கட்டை போடுகிறது எனப் புலம்பிச் சொல்லுங்கள். சொல்லிவிட்டீர்களா... அவள் பார்த்துக்கொள்வாள்... கவலையைவிடுங்கள்!

பல ஆலயங்களில் உண்டு என்றாலும் இங்கே உறுப்பு பிரார்த்தனை ரொம்பவே விசேஷம் என்பது தெரியும்தானே உங்களுக்கு?

ஆமாம், கண்ணில் அடிக்கடி கோளாறு என்றால், கண்மலர் சார்த்துவதாக வேண்டிக்கொள்வார்கள். மாவிளக்கேற்றுவதாக பிரார்த்தனை செய்வார்கள். கை, கால், வயிறு என உடல் உறுப்புகளில் ஏற்படுகிற வியாதிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்தருள்வாள், சமயபுரம் ஆத்தா! உப்புக் காணிக்கை பிரார்த்தனையும் இங்கே பிரசித்தம். உங்கள் கவலைகளும் ஏக்கங்களும் துக்கங்களும் வேதனைகளும் உப்பைப் போலவே கரைந்து காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்!

பிரார்த்தனையால் பலன் பெற்றவர்கள், அம்மனுக்கு மாவிளக்கு நேர்த்திக்கடன் செய்வார்கள். அதாவது, கண் நோயால் பாதிக்கப்பட்டு, பலன் பெற்றவர்களை அம்மன் சந்நிதிக்கு எதிரே படுக்கச் சொல்லி, அவர்களின் கண்களில் இலையை வைத்து, அதன் மேலே மாவிளக்கேற்றுவார்கள். கண்ணுக்கு ஒளி கொடுத்த கண்ணனூர் நாயகிக்கு, கண்ணில் விளக்கேற்றி வழிபடுவார்கள் பக்தர்கள்!

ரொம்பவே சக்தி வாய்ந்தவள் சமயபுரத்தாள். அவளிடம் சரணடைந்துவிட்டால், ஒரு குழந்தையைப் போல உங்களைக் காபந்து செய்து, எல்லா நல்லதுகளையும் வழங்கி அருள்வாள்.

ஒருமுறை சமயபுரத்தாள் சந்நிதியில், மனமுருகி நின்றுதான் பாருங்களேன். அவள்... பேசும்தெய்வம் என்பதை உணருவீர்கள். உணர்ந்து சிலிர்ப்பீர்கள்!

- இன்னும் தரிசிப்போம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close