[X] Close

தொங்கட்டான் 22 : கருணாநிதியின் கரகர குரலும் விறுவிறு தமிழும்..!


thongattan-22-mana-baskaran

  • மானா பாஸ்கரன்
  • Posted: 31 Jul, 2018 10:18 am
  • அ+ அ-

திருவாரூர் போய்விட்டு முடிகொண்டான் திரும்பியிருந்த பக்கிரியின் கையில் இருந்த மு.ரா.சன்ஸ் மஞ்சள் பை வருத்தப்பட்டு பாரம் சுமப்பவனின் முகம் மாதிரி தொங்கிப் போயிருந்தது.

வீட்டுக்குள் வந்தவன்… மஞ்சள் பையை  கூடத்தில் இருந்த மரபெஞ்சில் வைத்துவிட்டு,  கொல்லைபக்கத்துக்கு கால், கை கழுவச் சென்றான் பக்கிரி.

பாப்பாத்தி அந்த மஞ்சப் பையை எடுத்து அதனுள்ளே பார்த்தாள். அதற்குள் பக்கிரியின் கண்ணாடிக் கூடும், அம்மாவுக்கு வாங்கி வந்திருந்த வெத்தலைப் பாக்குப் பொட்டலமும் மட்டும்தான் இருந்தது. எப்போதும் பக்கிரி, திருவாரூர் போய் திரும்பும்போது வழக்கமாக வாங்கி வரும் காராபூந்திப் பொட்டலத்தை காணவில்லை.

வீடே ஏமாற்றத்தில் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டது. சேப்பரசனும் பாலுச்சாமியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர். பாப்பாத்தி யாதொன்றும் சொல்லாமல் சமையல்கட்டுக்குள் புகுந்துகொண்டாள்.

கொல்லைப்புறம் சென்று  முகத்தைத் துடைத்துக்கொண்டே திரும்பிய பக்கிரி... வீட்டின் அமைதிக்கான காரணத்தை புரிந்துகொண்டு... எதுவும் சொல்லாமல் சமையல்கட்டுக்குள் சென்றான். அங்கே பாப்பாத்தி  அம்மியில் இரவு சுடுசாதத்துக்கு போட்டுச் சாப்பிட வடகத்  துவையல் அரைத்துக்கொண்டிருந்ததை அப்படியே விட்டுவிட்டு, அடுப்பில்  மண் சட்டியைப் போட்டு அரிசியைப் போட்டு பொரிஅரிசி வறுத்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் வறுபடுவதற்கு பச்சப்பயறுவையும் எடுத்து  வைத்திருந்தாள். 

இப்படித்தான் வீட்டில்  பிள்ளைகள் தின்ன தீனி எதுவும் இல்லையென்றால்... பாப்பாத்தி படபடவென்று இதுபோன்ற மாற்று ஏற்பாடுகளில் இறங்கிவிடுவாள். புழுங்கரிசி கொஞ்சம் பச்சப் பயறு கொஞ்சம் எடுத்துக்கொள்வாள். அவற்றை தனித் தனியாக வறுத்து எடுத்துக்கொண்டு, அவற்றை ஒன்றாக்கி தேவையான அளவு தண்ணீரில் போட்டு வேக வைப்பாள். கொஞ்சநேரத்தில் கதம்ப சுண்டல் ரெடி. அதில் உப்பும் தேங்காய் துருவலையும் கலந்து சின்ன சின்ன ஏனத்தில் போட்டு எல்லோருக்கும் கொடுப்பாள். அருமையாக அமைந்துவிடும் தீனி. அன்றைக்கு காராபூந்தி பொட்டல ஏமாற்றத்தைப் போக்க அவள் தயாராகிவிட்டாள்.

காரியத்தில் கண்ணாக இருந்த பாப்பாத்தியிடம்   ‘’என்னா  எல்லாரும் ஒரு மாதிரியா  இருக்கீங்க...?’’ என்றான் பக்கிரி.

‘’ஆமாம்.. போயிட்டு கைய வீசிட்டுத் திரும்புனா... என்னாவாம்? பாவம் புள்ளங்க ஏமாந்து நிக்குதுங்க... ’’ என்றாள்.

‘’விஷயம் என்னான்னு தெரியாமப் பேசாத பாப்பா. திருவாளூர்ல காசு கடை முழுக்க ஓச்சலா கெடக்கு. தங்கக்கட்டுப்பாடு சட்டத்துனால அதிகாரிங்க சுத்திச் சுத்தி வராங்களாம். யாவாரமே பண்ண முடியலேன்னு பிலாக்கணம் வெக்கிறானுங்க. எல்லா கடையிலும் ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. விக்கிலாம்னு எரநூறு மில்லி பவுன விக்கவே முடியாம திரும்பி வந்துட்டேன். என்னை என்னாப் பண்ணச் சொல்றே...’’ என்ற பக்கிரியை பரிதாபமாகப் பார்த்தாள் பாப்பாத்தி.

தங்கக்  கட்டுப்பட்டுச்  சட்டம்  கிராமப்புறத்தில்  இருக்கிற  பொற்கொல்லர்களை அவ்வளவாக பாதிக்கவில்லை. கிராமப்புறத்தில் இருக்கிற பத்தர்கள் பெரும்பாலும் அந்தந்த கிராமத்தில் இருக்கும் மனிதர்கள் தருகிற சின்னச் சின்ன நகை வேலைகளைத்தான் செய்வார்கள். 

அவர்களிடம் நகை செய்வதற்காக வருகிற தங்கத்தின் அளவு ரொம்ப ரொம்ப குறைவாகத்தான் இருக்கும். பெரும்படியான வேலைகள் வரவே வராது. எனவே தங்கக் கட்டுப்பாடுச் சட்டம் அவர்களை பெரும்பாலும் பாதிக்கவே பாதிக்கவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் இவ்வளவு அளவுதான் தங்கம் கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற  அரசு சட்ட விதிகள் இருப்பதால், நகர்ப்புறத்தில் நகை வேலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. மேலும் இதுவரையில் 22 காரட் தங்கத்திலும், 21 காரட் தங்கத்திலும் நகை செய்துகொண்டிருந்த பத்தர்களுக்கு, திடீரென்று 14 காரட்டில் நகை செய்ய வேண்டிய கட்டாயம் நெருக்கியதில் அவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். தொழில் படுத்தது. அதன் விளைவாக நகைத்தொழிலாளர்களின் வீட்டு அடுப்பில் பூனைக்குட்டிகள்  தூங்கின.

*** *** ***

முதல் நாளே திருவாரூரில் இருந்து பக்கிரிக்கு செய்தி வந்திருந்தது. 

மறுநாள் காலை திங்கக்கிழமை காலை 10 மணிக்கெல்லாம், திருவாரூர் - விஜயபுரத்தில் இருந்த எத்திராஜ் கல்யாண மண்டபத்தின் வாசலில்  நகைத் தொழிலாளர்கள் அத்தனை பேரும் திரள வேண்டும் என்று செய்தி வந்திருந்தது. கிராமம், நகரம் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லா பத்தர்களும் ஒன்று கூட வேண்டும் என்பது வேண்டுகோள். 

பக்கிரி காலையிலேயே எஸ்ஸார் வீயெஸ் பஸ்ஸைப் பிடித்து டாண் என்று பத்து மணிக்கெல்லாம் திருவாரூர் எத்திராஜ் கல்யாண மண்டபத்து வாசலுக்கு வந்துவிட்டான். அங்கே நகைத் தொழிலாளர் சங்கத்தின் நகரத் தலைவர்  கே.வி.டி பத்தர்,  நகரச் செயலாளர் ஜிமிக்கி கோவிந்தராஜ் பத்தர்,  தகட்டாலை வெங்கடேசப் பத்தர், திருமருகல் முத்து பத்தர், செட்டு மணி, பூந்தோட்டம் தெட்சணாமூர்த்தி,  சுரைக்காவூர் பத்தர், மிட்டாய் கடை சந்து அமிர்தலிங்க பத்தர், செதுக்குமானம் வேணுபத்தர், அருளகம் நடராசன், பாஸ்கர பத்தர் , வண்டிக்காரத் தெரு கண்ணன், தாலி வேலை கோவிந்தராஜ் பத்தர் என்று ஏகப்பட்ட பத்தர்கள் கூட்டமாக இருந்தனர். 

ஒரு நூத்தம்பதுக்கும் மேலாக  திரண்டிருந்த  நகைத்  தொழிலாளர்களுக்கு அமீர்ஜான் கில்ட் ஷாப்பின் உபயமாக டீ வழங்கப்பட்டது. டீ உறிஞ்சிய கையோடு தலைவர் கே.வீ.டி பத்தர் எல்லோருக்கு முன்பாகவும் உரக்க பேசத் தொடங்கினார். 

‘’இங்க உங்க எல்லாரையும் வரச் சொன்னதுக்கு காரணம் இருக்கு. நாளுக்கு நாள் நம்ம சிம்லானுவோ வேலை கொறஞ்சிட்டே வருது. கவர்மெண்டு இன்னமே சிம்லானுவோள  நிம்மதியா  தொழில் செய்யவுடாதுன்னு  நெனக்கிறேன்.  சிம்லானுவோ கையில தருப்பு தீலியாயிட்டு. நெறயப் பேரு வீட்டுக்கு அரும்பி வாங்கக் கூட கஷ்டப்படுறாங்க.எல்லாத்துக்கும் காரணம் இந்த தங்கக் கட்டுப்பாடுச் சட்டம்தான். நிம்மதியா நகை வேல செஞ்சு நம்ம பொழப்ப பார்த்துக்கிட்டு இருந்தோம். இத இந்த சட்டம் கெடுத்துட்டு. 

கையில் இவ்வளவுதான் படியாசு வெச்சிருக்கணும்னு சொல்லிட்டானுங்க. அதிகாரிங்க, எவன் மாட்டுவான்னு கண்ணுல வெளக்கெண்ணெய ஊத்திக்கிட்டு திரியறானுங்க. கூடவே கழுகு பொடியன்க வேற சுத்தறானுங்க. நாம ஜாக்கிரதயா இருந்து தொழில் செய்யணும். 

காசுக் கடையில வேல வாங்கி செய்யறவங்களுக்கு ரொம்ப ஜாக்கிரத அவசியம். சிம்லானுவோள நம்பித்தான் அவங்க வேலை கொடுக்கிறாங்க. அவங்க பத்துக்கு ஒண்ணுல செஞ்சு கொடுன்னுதான் படியாசு நம்மக்கிட்டே கொடுப்பாங்க. அதாவது 22 காரட் பவுனுதான் கொடுப்பாங்க. ஆனா கவர்மெண்டு 14 காரட்டுலதான் நகை செய்யணும்னு சொல்லியிருக்கிறதால, நாம காசுக்கடைகாரங்கள காட்டிக்கொடுத்துடுறது மாதிரி வெளிப்படையா வெச்சி நகை செய்யக் கூடாது. ஒளிவு மறவாத்தான் செய்யணும். எல்லாம் கொஞ்ச நாளைக்குதான்.

சரி, இப்போ நாம எல்லாரும் அப்படியே ஊர்வலமா கிளம்பி மெட்ராஸுலேர்ந்து  கருணாநிதி வந்திருக்காரு... அவரப் பார்த்து ஒரு மனு கொடுக்கப் போறோம். திமுகவுக்கு செல்வாக்கு வந்திட்டு இருக்கறதுனால, கருணாநிதியைப் பார்த்து பேசிட்டு வருவோம். அவர் நிச்சயம் வாய்ப்பு கெடச்சா  அண்ணாதொர மூலம் தேசிய தலைவர்கள்ட்ட பேசுவாரு. நம்ம பிரச்சினைய கொண்டுட்டுப் போயி சேர்ப்பாரு... ’ என்றார்.

இதைக் கேட்ட பக்கிரிக்கு உற்சாகம்  உச்சம் தொட்டது. தன்னுடைய விருப்பத்துக்குரிய திமுக தளகர்த்தர்களில் ஒருவரான  கருணாநிதியை சந்திக்கப்போகிறோம் என்கிற நினைப்பு அவருக்குள் மகிழ்ச்சி தோரணம் கட்டியது.

தெற்குவீதியைத் தாண்டி சந்நிதித் தெருவில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டுக்கு வந்திருந்தார்  மு.கருணாநிதி. வாசலில் ஜேஜேவென்று சிலர் நின்றிருந்தனர். பெரிய பெரிய துண்டு போட்டிருந்தனர்.

 எல்லோரும் கே.வீ.டி பத்தரின் தலைமையில் அணிவகுத்துச் சென்றனர். பக்கிரி முண்டியடித்துக்கொண்டு கே.வீ.டி பத்தருக்கும் ஜிமிக்கி கோவிந்தராஜ் பத்தருக்கும் இடையில் போய் நின்றுகொண்டான். கருணாநிதியைப் பார்க்கவேண்டும். ‘பராசக்தி’ தந்த அந்த தமிழ் வசனகர்த்தாவை பார்க்க வேண்டும்.  உந்துதல் உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது பக்கிரியை.

இதைப் போல பத்தர்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு மனு கொடுக்க வரப்போகிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள் போலிருந்தது. நகைத் தொழிலாளர்கள்  அங்கே போனபோது... நன்னிலம்  எம்.எல்,.ஏ  தம்பி ஏ.தேவேந்திரனும் திருவாரூர் எம்.எல்.ஏ தாழை மு.கருணாநிதியும் வெளியே வந்து எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார்கள். கூடவே திருவாரூர்  திமுக நகரத் தலைவர்  தங்கராசுவும், திமுகவின் நகரப் பொருளாளர் டாக்டர் ஆர்.எஸ்.ராஜனும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் கைகளும் நகைத்தொழிலாளர்களைப் பார்த்து கும்பிட்டபடி இருந்தன.

கும்பிட்டபடியே தாழை மு.கருணாநிதி சொன்னார்: ‘’யாராவது ஆறேழு பேரு மட்டும் தலைவரைப் பார்க்க உள்ளே வாங்க... மத்தவங்கள்லாம் வெளியில இருங்க..’’ என்றார்.

கருணாநிதி இருந்த அந்த வீட்டுக்குள் கே.வீ.டியுடன் ஜிமிக்கி கோவிந்தராஜ பத்தர், தகட்டாலை வெங்கடேசப் பத்தர், திருமருகல் முத்து பத்தர் ஆகியோர் மட்டும் செல்வதாக  ஏற்பாடு. அவர்களுடன் அவர்களைக் கேட்காமல் முண்டியடித்துக்கொண்டு பக்கிரியும் ஒட்டிக்கொண்டான். அவர்களால் மறுக்கவும் முடியவில்லை.

உள்ளே சென்றபோது அங்கே கருணாநிதியைச் சுற்றிலும் அவருடைய  பால்ய சிநேகிதர்  திருவாரூர் கு.தென்னன், வரத கோபாலகிருஷ்ணன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி,  பட்டுக்கோட்டை அழகிரி, திருவாரூர் சிங்கராயர் ஆகியோர் இருந்தனர். கூடவே டிராயர் அணிந்திருந்த  கருணாநிதியின் அக்கா மகன் மாறனும் இருந்தார்.  

எல்லோரையும் எழுந்து நின்று கைகூப்பி வணங்கினார் கருணாநிதி. அப்போது கே.வீ.டி அவருக்கு ஒரு சால்வையைப் போர்த்தினார். ஜிமிக்கி கோவிந்தராஜ் பத்தர் கையில் இருந்த மனுவை அவரிடம் கொடுத்தார்.  அந்த நேரம் பார்த்து எவரும் எதிர்பாராத வகையில் பக்கிரி கருணாநிதியின் காலில் விழுந்தான். காலில் விழுந்த பக்கிரியை   குனிந்து தூக்கிய கருணாநிதி அப்படியே அணைத்துக்கொண்டார். அவனுக்கு ஒரே ஆனந்த திக்குமுக்காடல்.

எல்லோரையும் உட்காரச் சொன்னார் கருணாநிதி. அப்படியே கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டனர். ஆனால் பக்கிரி மட்டும் அப்படியே நெட்டுக்குத்தாக நின்றுகொண்டு, கருணாநிதியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். கருகருவேன திரண்டிருந்த கோரைமுடியும் சுருள் முடியும் கலந்த தலை. அதில் ஒற்றையடிப் பாதையைப் போல  நடுவாந்தரமாக எடுக்கப்பட்ட வாகு. அரும்பு மீசை.... ஆச்சரியமாக இருந்தது பக்கிரிக்கு.

மனுவைப் படித்த கருணாநிதி கே.வி.டியைப் பார்த்து கரகரத்த குரலில்...’’மத்திய அரசாங்கத்துக்கிட்டதான் உங்க பிரச்சினைப் பற்றிப் பேசணும்.  நீங்க மனுவில் சொல்லியிருக்கிற தகவலைகளை அண்ணாவோட பார்வைக்கு கொண்டுட்டுப் போயி மத்திய அரசாங்கத்துக்கிட்டே பேசச் சொல்றேன். உங்க நிலைமை கஷ்டமானதுங்கறது புரியுது... வேண்டியதை செய்வோம்..’’’ என்றார்  நம்பிக்கையுடன். 

 ‘’அப்போ நாங்க கெளம்புறோம்...’’  என்று கும்பிட்டு சொல்லிவிட்டு கே.வீ.டியுடன் எல்லோரும் புறப்பட்டனர். அப்போது கருணாநிதியைப் பார்த்து பக்கிரி...’’தலைவரே... உங்க பராசக்தி வசனம் எல்லாம் எனக்கு அத்துப்படி... அருமையா எழுதியிருக்கீங்க...’’ என்றான். பக்கிரியை அருகே அழைத்து அவன் கையில் மு.வரதராசனார் பொழிப்புரை எழுதிய ஒரு குட்டி திருக்குறளை பரிசாகக் கொடுத்தார் கருணாநிதி. உள்ளங்கையில் ஏந்திக்கொண்டான் பக்கிரி.

- தொங்கட்டான் அசையும்...

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close