[X] Close

எதிரே நம் ஏணி! 22: பழகும் பழக்கம் இருக்கா...?


edhire-nam-yeni-tirupur-krishnan

  • திருப்பூர் கிருஷ்ணன்
  • Posted: 30 Jul, 2018 10:23 am
  • அ+ அ-

பழக்கங்களை மாற்றுவதன் மூலம் வெற்றி எளிதாகுமா? அப்படியானால் எந்தப் பழக்கங்களை மாற்ற வேண்டும்? எத்தகைய பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கான பதில், வாழ்வில் வெற்றிபெற விரும்பும் ஒவ்வொருவரும் இந்தக் கேள்விகளை அடிக்கடி அவரவரே கேட்டுக் கொள்ளவேண்டும் என்பதுதான். தம்மிடம் இருக்கும் எந்தப் பழக்கங்களை மாற்ற வேண்டும், எந்தப் பழக்கங்களைப் புதிதாய் மேற்கொள்ள வேண்டும் என அவரவரேதான் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

 ஏனென்றால் ஒரு மனிதனின் ஆளுமையில் பழக்கங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருவனை அவனறியாமல் அவன் பழக்கங்களே உருவாக்குகின்றன. தான் கொண்டிருக்கும் பழக்கங்களால்தான் தானே உருவாகி வருகிறோம் என்ற ரகசியத்தை யாரும் அறிவதில்லை. ஆனால் அவன் விரும்பியோ விரும்பாமலோ மேற்கொண்டிருக்கும் பழக்கங்கள் மிக ரகசியமாக அவனை உருவாக்கி விடுகின்றன.

பேச்சாளராக விரும்பும் ஒருவர் மேடையேறிப் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் பேச்சாளர் ஆக முடியுமா? நிச்சயம் முடியாது. அதனால் மேடையேறிப் பேசும் வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் ஒருவர் மேடையேறிப் பேசிப் பழக வேண்டும். தயங்கக் கூடாது.

பழக்கங்களை உருவாக்கிக் கொள்வதில் கடும் சுயநலம் தேவை. நாம் எந்தத் திசையில் பயணம் செய்யப் போகிறோமோ அதற்கேற்ற பழக்கங்களை நாம்தான் விரும்பி உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் நமக்கு அவர்களே வந்து வாய்ப்புத் தந்து நம்மை உருவாக்குவார்கள் என நினைப்பதோ எதிர்பார்ப்பதோ முட்டாள்த்தனம். உங்களை உருவாக்க யாருக்கும் நேரம் கிடையாது. ஏனென்றால் அவரவர்களும் தங்களை உருவாக்கிக் கொள்வதில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

மீனாட்சி என்று ஒரு சகோதரி. அவளுக்குச் சுமாராகப் பாட்டுப்பாட வரும். ஆனால் தான் பாடகியாகப் பிரகாசிக்க வேண்டும் என அவள் ஆசைப்பட்டாள். அது அவளின் வற்றாத ஆசை.

அவளுக்கு மேடையேறிக் கச்சேரி செய்ய யார் வாய்ப்புத் தருவார்கள்? அப்படி என்றேனும் ஒருநாள் அதிர்ஷ்டவசமாக ஒரு திடீர் வாய்ப்பு அவளுக்குக் கிட்டுமானால் அப்போது தன் திறமையை நிரூபிக்கும் வகையில்  மெல்ல மெல்லத் தன் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவள் முடிவு செய்தாள். அந்த முடிவில் அளவற்ற சுயநலத்தோடு அவள் செயல்பட்டாள்.

உறவினர் வீட்டுக் கல்யாணம் எதுவானாலும் தயங்காமல் போவதைப் பழக்கப்படுத்திக் கொண்டாள். எந்தக் கல்யாணத்தையும் அவள் விடுவதாக இல்லை. வரவேற்புக்குப் போகமாட்டாள். முகூர்த்தத்திற்குத்தான் போவாள்.

அதற்கு முந்திய நாளே நாலைந்து ஊஞ்சல் பாடல்களைப் பாடிப் பழக்கப்படுத்திக் கொள்வாள். ஊஞ்சல் நடக்குமிடத்தில் முன்கூட்டியே தயாராய்ப் போய் நின்று கொள்வாள். `யாராவது பாடலாமே?` என்று எங்கிருந்தாவது ஒரு முதல் குரல் கேட்கத்தானே கேட்கும்? அந்த அசரீரிக்குத்தான் அவள் செவிகளைத் திறந்து காத்துக் கொண்டிருப்பாள். அது கேட்டுவிட்டால் போதும். உடனே அப்போதே கணீரென்ற குரலில் உரத்து இவள் பாடத் தொடங்கி விடுவாள்.

 தொடக்கத்தில் யார் இவள் முந்திரிக்கொட்டை எனச் சிலர் கேலி செய்ததுண்டு. அந்தக் கேலிகளை மீனாட்சி ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. சபைக் கூச்சத்தை விட்டுப் பாட்டுப் பாடும் பழக்கத்தைத்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் அவள் தீர்மானமாக முடிவு செய்துவிட்டாளே? அந்த முடிவில் அவள் என்றும் பின்வாங்கியதில்லை.

எல்லா உறவினர் வீடுகளிலும் இவளைச் சிலர் கூர்ந்து கவனித்தார்கள். மெல்லமெல்ல அவள் பாட்டை ரசிக்கத் தொடங்கினார்கள். பாடிப்பாடி அவளுக்கு சபைக் கூச்சம் அறவே போய்விட்டது. எப்போது யார் பாடச் சொன்னாலும் தயக்கமில்லாமல் பாடும் பழக்கம் அவளிடம் தோன்றிவிட்டது.

ஊஞ்சல் நேரத்தில் அவள் தலையைப் பார்த்தவுடனேயே இப்போது சிலர், ` அதுதான் மீனாட்சி இருக்கிறாளே? மீனாட்சியை ஒரு ஊஞ்சல் பாட்டுப் பாடச் சொல்லுங்கள்!` என்று சொல்லத் தொடங்கினார்கள். மீனாட்சியும் அளவற்ற மகிழ்ச்சியோடு பாடலானாள்.

இன்று அவளுடைய அந்தஸ்து என்ன தெரியுமா? தூரத்து உறவினர்களிடம் கூட, `நம்ம மீனாட்சியைப் போய் நேரில் நம் வீட்டுக் கல்யாணத்திற்கு அழைத்துவிட்டு வரவேண்டும், அவள் வராவிட்டால் பின் ஊஞ்சல் நிகழ்ச்சி எப்படி சோபிக்கும்?` என்ற கருத்து ஏற்பட்டு விட்டது.

தன் பழக்கத்தால் அறவே சபைக் கூச்சத்தைப் போக்கிக் கொண்ட அவள், இப்போது உறவினர் வீடுகளில் மிகப் பிரபலம். மீனாட்சி இப்போது கச்சேரி வாய்ப்புக்காகக் காத்திருக்கிறாள். நிச்சயம் என்றாவது ஒருநாள் அவள் மேடையேறுவாள். பலமுறை பாடிப் பாடிப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டதால் அவள் கச்சேரி பிரமாதமாக அமையப் போவதென்னவோ நிச்சயம். அவள் மிகச் சீக்கிரம் புகழ்பெறப் போவதும் நிச்சயமே.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? அவள் தானே விரும்பி உருவாக்கிக் கொண்ட பழக்கம். எல்லா இடங்களிலும் போய்ப் போய்ப் பாடும் அந்தக் கூச்சமில்லாத தீவிரமான பழக்கம்.

’சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் - நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்!`

 

 என்கிற அவ்வையார் பாட்டுக்கு அவளை விடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறில்லை. எல்லா வெற்றிகளும் பழக்கத்தினால்தான் வருகின்றன. இந்தப் பேருண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதல் செம்புத் தண்ணீர் விட்டுக் கொள்ளும்போது குளிர்கிறது. குளிக்காமலே இருந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் இரண்டாம் மூன்றாம் செம்புத் தண்ணீரில் குளிர் போய் விடுகிறது. அதன் பின் தொடர்ந்து குளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. குளியலறையை விட்டு வெளியே வரவே மனம் வருவதில்லை.

குளிர்கிறதே என்று முதல் செம்பு தண்ணீரை விட்டுக் கொள்ளவே தயங்கிக் கொண்டிருந்தால் குளிர் எப்படிப் போகும்? வெற்றி பெறாத பலர் முதல் செம்புத் தண்ணீர் விட்டுக் கொள்ளவே தயங்குபவர்கள்தான். வெற்றி பெற்ற எல்லோரும் முதல் செம்புத் தண்ணீரைத் தைரியமாக விட்டுக் கொண்டவர்கள். அதனால் வாழ்க்கையில் எதுபற்றியும் அவர்களுக்குக் குளிர் விட்டுவிட்டது. அவர்கள் மேலே மேலே தொடர்ந்து செயல்களைச் செய்து அடுத்தடுத்து முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள்.

முதல் செம்புத் தண்ணீர் விட்டுக் கொள்ளத் தயங்கிவர்கள் அவர்களைப் பார்த்து பிரமிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறக் காரணம் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம்தானே தவிர வேறில்லை என்பதை இவர்கள் உணர்வதில்லை. அவர்களைப் போலவே தாங்களும் நல்ல பழக்கங்களைத் தொடர்ந்து மேற்கொண்டால் பெரிய பெரிய வெற்றிகளை அடைய முடியும் என்பதை இவர்கள் புரிந்து கொள்வதுமில்லை.

பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பேச்சுப் போட்டியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டபோது தயங்கிக் கொண்டே இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்னமும் வாழ்க்கையில் பேசத் தெரியாத தயக்கத்தோடுதான் இருக்கிறார்கள். பெரிய பெரிய நிறுவனங்களில் மேலதிகாரிகளாக ஆன  பின்னரும் ஒரு சின்ன அலுவலகக் கூட்டத்தில் கூட அவர்களால் பேச இயலவில்லை.

அவர்களின் முன்னேற்றம் பேச்சாற்றல் என்கிற அந்தச் சின்னத் திறமை இல்லாததால் பல இடங்களில் முடங்கி விடுகிறது. அடுத்தடுத்த பதவி முன்னேற்றங்களை அவர்களால் அடைய முடியாமல் போகிறது.

 

 ஆனால் பள்ளிகளில் துறுதுறுப்போடு `என்னதான் நடக்கும், பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டுதான் பார்ப்போமே?` எனச் சில மாணவர்கள் பெயர் கொடுத்தார்கள் இல்லையா? அவர்கள் தொடக்கத்தில் பேசிய போது பேச்சு சரியாக வரத்தான் இல்லை. மனப்பாடம் செய்தது மறந்துபோய்த் தடுமாற்றம் நேரத்தான் செய்தது. மேடையில் காகிதத்தை வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்துத்தான் அவர்களால் பேச முடிந்தது. ஆரம்பத்தில் கைகால்கள் தந்தி அடிக்கத்தான் செய்தன.

ஆனால் இதெல்லாம் மிகக் குறுகிய காலத்திற்குத்தான். அவர்கள் அந்தக் காலத்தில் தங்களைப் பார்த்துக் கேலி செய்தவர்களைப் பொருட்படுத்தவே இல்லை. தொடர்ந்து பேசினார்கள். விடாமல் பேசினார்கள். கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பேசினார்கள். எப்படியெல்லாம் வசீகரமாகப் பேசுவது என்பதை மேடையே அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.

அப்படிப்பட்டவர்களில் சிலர் தான் இன்றைய சாலமன் பாப்பையாக்களும் பாரதி பாஸ்கர்களும் பட்டிமன்ற ராஜாக்களும் சுதா சேஷய்யன்களும் சுகி சிவம்களும். இவர்களெல்லாம் தங்களின் பள்ளிப் பருவத்தில் ஆரம்பக் காலத்திலேயே இப்போது பேசுவதுபோல் இத்தனை நன்றாகப் பேசியிருக்க முடியாது. பழக்கமே அவர்களை உருவாக்கியது. மிகச் சிறந்த ஆற்றல் உள்ளவர்களை அவர்களின் பழக்கமே வடிவமைக்கிறது.

ஆனால் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முதலில் மனத்தில் தோன்ற வேண்டுமே? அதைச் செயல் படுத்த வேண்டும் என்ற சுயநல உறுதி ஏற்பட வேண்டுமே? அது இல்லாதவரை வெற்றி பெற முடியாது.

இது பேச்சுத் துறைக்கு மட்டுமல்ல, எல்லாத் துறைக்கும் பொருந்தும். எந்தத் துறையானாலும் வெற்றியாளர்களை அவர்களின் தொடர்ந்த பழக்கமே உருவாக்குகிறது. பிறக்கும்போதே பேராற்றலோடு யாரும் பிறப்பதில்லை.

இப்படிச் சொல்கிறபோது அதிலேயே இன்னொரு விதி புதைந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் ஆர்வமிருந்து ஒன்றைப் பழக்கப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு விருப்பமான துறையில் கட்டாயம் வெற்றி பெறலாம் என்பதே அந்த விதி. நல்ல பழக்கங்களை விடாமல் பின்பற்றித் தொடர்ந்து முன்னேறுவோம்.

நல்ல பழக்கங்கள் முன்னேற்றத்தைத் தருவது போலவே கெட்ட பழக்கங்கள் முன்னேற்றத்தைக் குலைத்து விடவும் செய்யும். நல்ல பழக்கங்களை விடாமல் பின்பற்றுவது இருக்கட்டும். கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவது எப்படி? பழக்கத்தை நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் எனப் பிரிப்பது சரிதானா, சரியில்லையா?

- இன்னும் ஏறுவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close