[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 21 : மலர்ந்தும் மலராத ...


kalamellam-kannadasan-21

பாசமலர்...

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 21 Jul, 2018 12:24 pm
  • அ+ அ-

படம்    : பாசமலர்
இசை    : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
குரல்    : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா

* * *
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா - புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா - வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் - பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் - உலகை விலை பேசுவார்

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவாபிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணிபோல மணியின் நிழல்போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப் பிரிக்க முடியாதடா

அன்பே ஆரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராராரிரோ....
அன்பே... ஆரிராராரிரோ....
* * *


இன்று (ஜூலை 21) சிவாஜிகணேசன் அவர்களின் நினைவுநாள். தமிழ்த்திரையுலகின் மாபெரும் புதையல் நடிகர் திலகம். ஒரு பொறுப்பான தந்தையாக, பாசமிகு அண்ணனாக, உறவுகள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் மூலம் நமக்குக் காட்சிப்படுத்தியவர். வ.உ.சி.யாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜ சோழனாக நமக்கு முந்தைய வரலாற்று நாயகர்களின் முகங்களை நமக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே. இந்த நிலம் உள்ளவரை அவரது புகழும் அழியாது.

1961-ல் இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில்,  நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் அண்ணன் தங்கையாக வாழ்ந்த, காலத்தை வென்ற திரைக்காவியம் பாசமலர்.

ஒரு குடும்பத்தில் பிறக்கும் மூத்த குழந்தை பெண்ணாக இருந்தால் அடுத்துப் பிறக்கும் தம்பிக்கு, அந்த அக்காள் இரண்டாம் தாயாகிறாள். ஆணாக இருந்தால் அடுத்துப் பிறக்கும் தங்கைக்கு, அந்த அண்ணன் இரண்டாம் தந்தையாகிறான்.

மனிதன் தனக்கு நெருக்கமானவர்கள் என்று, தன்னைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டே சென்றால், முதல் வட்டத்தில் தாய் தந்தை, மனைவி குழந்தைகள், இரண்டாம் வட்டத்தில் உடன்பிறந்தோர், மூன்றாம் வட்டத்தில் நண்பர்கள், நான்காம் வட்டத்தில் தூரத்து சொந்தங்கள் என்று அமையக்கூடும். வறுமை வந்தாலும், வசதி வந்தாலும் எப்போதும் உடனிருப்பவை உறவுகள்தான். சுயநலத்தால் விலகிப்போகும் உறவுகள் விதிவிலக்குகள்.

1960-களின் காலத்தில்தான் உறவுகளைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின. அதற்கும் முன்பு அரசர் காலத்துக் கதைகளே அதிகம் எடுக்கப்பட்டன. வெளியான காலத்தில், நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடி, மக்கள் மனத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்த படம் பாசமலர். அண்ணன் தங்கை உறவும், தங்கையின் காதலும், அவர்களுக்கு இடையேயான பிரிவும், வசதியும், வறுமையும் என்று ஒவ்வொரு காட்சியிலும் வாழ்க்கை இருக்கும். அந்தக் காட்சிகளில் சிவாஜியும், சாவித்திரியும், ஜெமினியும் வாழ்ந்திருப்பார்கள்.

படத்தில் எட்டு பாடல்கள். ஒவ்வொன்றும் காட்சிக்கு ஏற்றவாறு தனித்துவம் மிக்கவை. `வாராய் என் தோழி வாராயோ...' என்ற திரைப்பாடல் ஒலிக்காத திருமணவிழாக்களை இப்போதும் காண்பது அரிது. தமிழரின் மரபோடும், கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்தவை கவியரசரின் பாடல்கள். இந்தப் படத்தில் வரும் `மலர்ந்தும் மலராத' பாடலில் அண்ணன் தங்கை உறவை, குழந்தைக்குப் பாடும் தாலாட்டுப் பாடல் மூலம் அத்தனை அற்புதமாகப் படைத்திருப்பார். எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் கண்களில் நீர் கசிய நிற்பவர்களை நான் அறிவேன்.

ஒரு குழந்தை துயில்வதைக் காண்பதே பேரின்பம். அந்தக் குழந்தை தூக்கம் கலைந்தோ அல்லது தூங்குவதற்கு முன்போ, விழிகளை மெல்ல மெல்லத் திறப்பதையோ, மூடுவதையோ ரசித்திருக்கிறீர்களா?  ஒரு பூ இதழ் மலர்வதுபோல் இருக்கும். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல என்று பாடலைத் துவங்குகிறார் கவியரசர். `பாதி மலர்' என்ற அவரது சொல்லாடல் தனித்துவம் வாய்ந்தது.

`பாதி மலர்' என்பது பூவும் அல்லாது மொட்டும் அல்லாது என்ற பொருளில் மிகச்சிறப்பாக மலர்ந்திருக்கிறது. அடுத்த வரியாக `விடிந்தும் விடியாத' என்று எழுதுகிறார். ஒரு பூ மலர்வது தெரியும். விடியல் விடிவது தெரியும். ஆனால் அவை ஒரு நொடியில் நிகழ்வதில்லை அல்லவா? துளித்துளியாய் எப்போதென்று தெரியாமல் கடந்து செல்லும் அந்த அபூர்வ நொடிகளை, அதன் மாயத்தை இரண்டு வரிகளில் எழுத்தாக்கியவர் கவியரசர். `யானைப் படைகொண்டு சேனை பல வென்று' என குழந்தைக்கான தாலாட்டில் வீரத்தைப் புகுத்தியிருப்பது மிகச் சிறப்பு.

உறவுச் சங்கிலியின் அடுத்தடுத்த இரண்டு வளையங்கள் உடன்பிறந்தோர் உறவு. வளர வளர... பெண் பிள்ளைகள் மட்டும் திருமணமாகி புகுந்தவீடு சென்றுவிட, இத்தனை நாள் இணைந்திருந்த உறவு தூரமாகிப்போன சோகத்தில், உடன்பிறந்த மனம் படும் துயரம் சொல்லில் அடங்காது. நட்ட இடத்திலிருந்து வேரோடு பயிரைப் பிடுங்கி வேறோர் இடத்தில் நட்டுவிடுவதைப் போன்ற சோகம், காலம் காலமாக பெண்களுக்கு நிகழ்ந்துவருகிறது.

ஓர் உறவு பாசத்தோடும், அக்கறையோடும், பாதுகாப்பாகவும் அமைவது வரம். `சிறகில் எனை மூடி அருமை மகள் போல' என்ற வரிகளை மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்க்கிறேன். பிறந்த குஞ்சை தன் சிறகுகளால் மூடி பொத்தி பொத்திப் பார்த்துக்கொள்ளும் தாய்ப்பறவையின் அழகோடு, தன்னுடைய அருமை மகளாக பார்த்துக்கொண்ட அண்ணனை எப்படி மறக்க இயலும்? அந்த உறவைப் பிரிவோம் என்று கனவிலும் நினைத்திராத பொழுதில் காலம் இடையே வந்து பிரித்த கதையைச் சொல்லவா என்று அழும்போது அந்தத் தங்கையோடு சேர்ந்து நம் கண்களிலும் கண்ணீர் திரையிடுகிறது.

இசையும், குரலும், பாடலும், நடிப்பும் ஒன்று சேர்ந்து வாழ்ந்த பாடல். பாடலின் நிறைவில் டி.எம்.எஸ். அவர்களின் `ம்ம்...ம்ம்...' என்ற முரளிசையும், உடன் வரும் `அன்பே...ஆரிராராரோ...' என்ற சுசீலா அவர்களின் குரலும்... நம் வாழ்நாளுக்குமான தாலாட்டு என்று சொன்னால் மிகையில்லை.

சில படங்களை மீண்டும் எடுக்க முடியாது. சில பாடல்களை மீண்டும் எழுத முடியாது. சில காட்சிகளை மீண்டும் நடிக்க முடியாது.

சில உறவுகளும் அப்படித்தான் மறக்க முடியாது.

- பயணிப்போம்

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close