[X] Close

காலமெல்லாம் கண்ணதாசன் - 20 அம்மம்மா தம்பி என்று நம்பி...


kalamellam-kannadasan-20

’ராஜபார்ட்’ சிவாஜிதுரை (ராஜபார்ட் ரங்கதுரை)

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 13 Jul, 2018 10:57 am
  • அ+ அ-


படம்    : ராஜபார்ட் ரங்கதுரை
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்    : டி.எம்.சௌந்தரராஜன்


* * *
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
இதில் சொந்தமின்றி பந்தமின்றி வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும்வீடு

ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமா இது நாடகமா

இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே

தங்கை என்னும் இளைய கன்று தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து கோலம் கொண்டு நிற்பதனை
கண்டதற்கு இன்னொருவன் சாட்சி

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்குப் பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ
* * *


எல்லா கெட்ட குணங்களும் சுயநலத்திலிருந்துதான் தோன்றுகின்றன. மனதிற்குள் சுயநலம் தோன்றிவிட்டால், நாம் மட்டும் நன்றாக இருந்துவிட்டால் போதும் என்று தோன்றும். அப்படி நாம் நன்றாக இருப்பதற்கு யாரை வேண்டுமானாலும் கீழே தள்ளலாம், அதற்காக எதனையும் செய்யலாம், எவ்வளவு பொய்களையும் சொல்லலாம் என்று நினைத்து, அப்படியே நடந்துகொள்ள ஆரம்பித்து விடும். நன்றியறிதல் என்ற உணர்வை மறந்து, ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் கேடு கெட்ட செயலையும் செய்யத் துணியும்.

நாம் சம்பாதிக்கிறோம், நாம் செலவு செய்கிறோம், நம் வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் என்று நினைப்பது ஒரு பொதுபுத்தியின் விளைவே. ஆழ்ந்து சிந்தித்தால் நம் அன்றாடத் தேவையையே நம் ஒருவரால்  பூர்த்தி செய்ய முடியாது. பணம் கொடுத்து வாங்கினால்கூட, நாம் உண்ணும் உணவு வேறொருவரின் உழைப்பு. நாம் அணியும் உடைகளும், செருப்பும்கூட இன்னொருவரின் உழைப்பே. ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் ஒரு `டீம் ஒர்க்'தான். இதில் நாம்தான் என்று எண்ணுவதில் ஒரு பெருமையும் இல்லை.

இப்படி நம் தேவையில் பெரும்பங்கை வகிக்கும் `டீமை' புறந்தள்ளி, யார் எக்கேடு கெட்டால் என்ன, நமக்கு மூன்று வேளையும் உண்ண உணவும், படுக்க பஞ்சு மெத்தையும் கிடைத்தால் போதும் என்று நினைப்பது என்ன வாழ்க்கை?

அதிலும் நம் உயர்வுக்காக யார் பாடுபட்டார்களோ, வாழ்க்கையில் நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று பார்த்துப் பார்த்து யார் நல்லது செய்தார்களோ, நாம் செய்த வஞ்சகம் தெரிந்தும், `எங்கிருந்தாலும் வாழ்க' என்று யார் சொல்கிறார்களோ, அவர்களையும் துச்சமாகத் தூக்கியெறியும் துரோகத்தையும் செய்யத் துணிகிறோமே, எதனால்? மனதில் குடிகொண்ட சுயநலத்தால்.

அம்மையப்பனை இழந்த ஓர் அண்ணன், தன் தம்பி தங்கையை, ரயிலில் பாட்டுப்பாடி கிடைக்கும் காசைக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிறான். நாடகத்தின் அனைத்து வேடங்களையும் போடும் `ராஜபார்ட்'டாக உயர்கிறான். தம்பி, தங்கைக்கு - தாயாகவும் தந்தையாகவும் இருந்து, காப்பாற்றுகிறான். தாய் தந்தையையே உதறித்தள்ளும் உறவுகளுக்கு மத்தியில், அண்ணனைத் தூக்கியெறிவதா கடினம்? வளர்ந்த தம்பி அதைத்தான் செய்கிறான்.

அண்ணனாக சிவாஜிகணேசனும், தம்பியாக ஸ்ரீகாந்தும் நடித்து 1973-இல் வெளிவந்த படம் ராஜபார்ட் ரங்கதுரை. அண்ணனால் படித்து பெரிய நிலைக்கு உயர்ந்த தம்பி, வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பெரிய இடத்துப் பெண்ணை காதலித்து மணம் முடிக்க நினைக்கிறான். அதற்காக தான் பெரிய செல்வந்தரின் தம்பி என்ற பொய்யைச் சொல்கிறான். பெண்ணின் தந்தைக்கு, ஸ்ரீகாந்த் பெரிய பணக்காரனில்லை, நாடகத்தில் நடிக்கும் ராஜபார்ட் ரங்கதுரையின் தம்பி என்ற உண்மை தெரியவருகிறது. ஸ்ரீகாந்திடம் இதனைக் கேட்க, இதெல்லாம் பொய். நான் பெரிய கப்பல் அதிபரின் தம்பிதான். உங்களுக்கு அதை நிரூபிப்பேன் என்று வீட்டை விட்டு வெளியேறி, அண்ணனிடமே சென்று உதவி கேட்கிறான். அதாவது பெரிய ஜமீன்தார் போல் வேடமிட்டு தனக்கு அண்ணனாக நடிக்கவேண்டும் என்று.

சுயநலம் குடிகொண்டவர்கள் கையிலெடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் அன்புதானே? இங்கேயும் அதையே செய்கிறான் தம்பி. ``உங்கள் தம்பி நன்றாக இருக்கவேண்டும் என்று உங்களுக்கு அக்கறை இல்லையா? எனக்காக இந்த சின்ன உதவியைக்கூட செய்யக்கூடாதா'' என்று அண்ணனிடம் வாதிடுகிறான். எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும், நிஜமான தம்பிக்கு அண்ணனாக நடிக்கும் வேஷத்தை மட்டும்தான் நான் போட்டதில்லை. அதையும் உனக்காக போடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார் அண்ணன்.

இப்படி ஒரு சூழலுக்கு பாடல் எழுதவேண்டும் என்றால்.... கவியரசருக்குக் கசக்குமா என்ன? கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றியுள்ள நாய்கள் உள்ள நாடு  என்று எழுதுகிறார். கையில் நாம் எதை வைத்திருக்கிறோம் என்பது கூடத் தெரியத்தேவையில்லை. ஏதேனும் வைத்திருக்கிறோம் என்று தெரிந்தால் போதும். நம்மையே சுற்றிச் சுற்றி வரும் நாய்கள் போலத்தான் சில மனிதர்களும். ஆனால், ஒன்றுமில்லை என்று தெரிந்த அடுத்த கணம், அவர்களே உதறித்தள்ளியும் சென்றுவிடுவார்கள். 

ராமாயணத்தில் ராமனுக்கு மூன்று தம்பிகள். மகாபாரதத்தில் தருமனுக்கு நான்கு தம்பிகள். அண்ணன் சொல் தட்டாத தங்கக் கம்பிகள். தான் கேள்விப்பட்ட இதிகாசத்தில் வரும் தம்பிகள் அத்துணை அன்போடு இருந்தார்களே, நிஜத்தில் அப்படி இல்லையே.... அது நாடகமா? இது நாடகமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

அர்த்தம் பொதிந்த கவியரசரின் பாடல் வரிகளும், `இந்த ராஜபார்ட்டு ரங்கதுரை ஏழையல்லவோ' என்று தழுதழுக்கும் டி.எம்.எஸ்.ஸின் குரலும், பாடல் முடியும் தருணத்தில் தாளம் போடப் பயன்படுத்திய டேபிள் டென்னி° மட்டைகளை அருகிலிருந்த இருக்கையில் வைத்த கையோடு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாய் பொத்திய படி வெளியேறும் சிவாஜிகணேசனின் நடிப்பும், இந்தப்பாடலை வேறு ஒரு உயரத்துக்குக் கொண்டு சென்றது. இப்போதும் எங்கேயாவது எப்போதாவது நன்றி மறத்தல் என்ற உணர்வை சந்திக்கும்போது கண்களில் தானாக கண்ணீர் துளிர்க்கும். உள்ளுக்குள் இந்தப்பாடல் ஆற்றுப்படுத்துவதாய் ஒலிக்கும்.

மனிதனுக்கு இந்த சுயநலம் என்ற எண்ணம் மட்டும் தோன்றாமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

உண்மையில் சுயநலத்தைத் துறப்பது பெரிய காரியமே அல்ல. நமது சுயநலத்தின் வட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தினால் போதும். நாம், நம் குடும்பம், நம் நண்பர்கள், நம் உறவுகள், நம் ஊர், நம் இனம், நம் நாடு, நம்முடைய உலகம்...

சுயநலத்தைத் தொலைத்துவிட்டால் வெளிஉலகம் மட்டுமல்ல... நம் அக உலகமும் மகிழ்ச்சியால் பூத்துத் திளைக்கும்தானே?

- பயணிப்போம்

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close