[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 12 - கபில்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 21 Jun, 2018 15:59 pm
  • அ+ அ-

காலையிலிருந்தே ஸ்ரீதரின் அலுவலகம் பரபரப்பாய் இருந்தது. உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தவர்கள். போட்டோ கொடுத்துவிட்டு போக வரும் துணை நடிகர்கள் எனக் கூட்டம்.

வருகின்ற பெரும்பாலான உதவி இயக்குனர்கள் இன்ஜினியரிங் முடித்திருந்தனர். நான்கைந்து நண்பர்கள் உட்கார்ந்து சர்க்கடித்துவிட்டு சலம்பும் குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்கள். எல்லாரும் சுஜாதா, பொன்னியின் செல்வன் படித்திருப்பதாய் குறிப்பிட்டிருந்தார்கள். பிடித்த டைரக்டர் என்ற காலத்தில் சமீபத்தில் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குனர்களின் பெயர் இருந்தது.

“சுஜாதாவோட எந்த நாவல் உனக்கு ரொம்ப பிடிக்கும்?”

“ இந்தியன் சார்..”

“அது அவரு வசனம் எழுதின படம் ப்ரோ.. அவரோட ரைட்டிங்ல எது?”

“ம்ம்ம்.. திரைக்கதை எழுதுவது எப்படி?”

“ம்.. ஓகே.. ப்ளாட் பாயிண்ட்னா என்ன?”

“அத படிக்கலை சார்”

“நெக்ஸ்ட்”

“பொன்னியின் செல்வன் படிச்சிருக்கீங்க? க்ரேட்.. முக்கியமான கேரக்டர் நேம்ஸ் சொல்லுங்க?”

“வந்தியத்தேவன்”

”தென்?”

“அவர் தான் சார்.. ஹீரோ”

“ரைட்.. ஓப்பனிங் எபிசோட்ல கல்கி  ஒரு ஆற்றைப் பற்றி எழுதியிருப்பாரு.  அதோட பேர் என்ன?”

“எந்த பார்ட்ல ஜி?”

“நெக்ஸ்ட்”

“சார்.. எனக்கு பெருசா படிக்கிற வாய்ப்பு கிடைக்கலை. சுஜாதா, வண்ண நிலவன், ஜெயமோகன்னு கொஞ்சம் படிச்சிருக்கேன். இங்கிலீஷுல சேத்தன் பகத் தாண்டி கொஞ்சூண்டு இர்விங் வாலஸ், ஜெப்ரி ஆர்சர்.. ஆனா நிறைய படம் பார்த்திருக்கேன். ஹாலிவுட்லேர்ந்து,  இண்டிபெண்டண்ட் பிலிம் வரைக்கும்.

ஆனா இதெல்லாம் சினிமா பண்ண தேவையில்லைன்னுங்கிறது என் எண்ணம். என் சினிமா என்னுடய பார்வையில விரியுற விஷுவலா வரணும்ங்கிறதுதான் என்னோட ஸ்டாராங்கான எண்ணம். அதுக்கு தேவை, எனக்கான விஷன். அது என் கதை தேடிக்கும்னு நம்பிக்கை.

எனக்கு கொஞ்சம் டிசைனிங், எப்.சி.பி. எடிட்டிங், எக்ஸெல், தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷன் எல்லாம் தெரியும். ஒரு உதவி இயக்குனரா கதையைத் தாண்டி உங்களுக்கு உதவ முடியுங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. உங்களுக்கு இருந்தா என்னை சேர்த்துக்கங்க..” என்ற கார்க்கியை, ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்னும் நான்கைந்து ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்தான். ரொம்பவே சூட்டிகையாய் இருந்த ஒரு பெண்ணை தேர்தெடுத்து வரச் சொன்ன போது காசி காதை கடித்தான். “பாவம் அந்த பொண்ணு. நம்மாளு டார்சர் பண்ணுவாரு. அடுத்த படத்துல வச்சிக்கலாம்” என்று சுரேந்தரைப் பற்றி சொன்னதும் புரிந்தது. திரும்பக் கூப்பிடுவதாய் சொல்லி அனுப்பினான்.

”சார்.. உங்க ஸ்கிரிப்டை ஒரு வாட்டி படிக்க கொடுத்தீங்கன்னா.. எனக்கு உங்களுக்கு உதவ தயாராக இருக்க முடியும்னு தோணுது” என்ற கார்க்கியை ஏறிட்டு பார்த்து, “சரி உன் மெயில் ஐடி கொடு” என்று மொபைலில்லிருந்தே அனுப்பினான். அவன் கேட்கும் தொனி ஆர்டராய் தெரிந்தாலும் ஏனோ ஸ்ரீதருக்கு உறுத்தவில்லை.

நான்கைந்து நாயகிகளின் மேனேஜர்களை அழைத்தாயிற்று. ஏற்கனவே ரெண்டொரு படங்களில் நடித்தவர்களாய் இருந்தாலும், ஆடிஷன் நிச்சயம் வேண்டும் என்றதும், ஒரு சில நடிகைகள் வர முடியாது என்றார்கள்.

ஆர்டிஸ்டை அவமானப்படுத்துகிறீர்கள் என்று அவர்களின் மேனேஜர்கள் குமுறினார்கள்.  இன்னும் சில பேர் தங்களது தாய்மார்களோடு வந்தார்கள்.  நடிகைகளை விட அம்மாக்கள் அழகாய் உடுத்தி வந்திருந்தார்கள்.

இன்னமும் ட்ரெடிஷனலாய் டைக்டரை கும்பிட்டுக்க, என்றவள்.

“பாப்பா க்ளாமரா சூப்பரா நடிக்கும்” என்பவள்.

ஸ்கிரிப்ட் படிக்கிற சாக்கில் காசியின் மேல் விழாத குறையாய் நெருக்கமாய் நின்று டயலாக் படித்தவள் என பலவிதமான கம்பெல்ஷன்களை உருவாக்கியவர்கள் ஒருபுறமென்றால், இமெயிலில் போட்டோக்களை அனுப்பி, அவர்களில் ஒருத்தியை தேர்ந்தெடுத்து ஆடிஷனுக்கு வரச் சொன்னால் அவள் பாம்பேயில், கொல்கத்தாவில் இருப்பதாய் பொய் சொல்லி, புரசைவாக்கத்தில் இருக்கும் மார்வாடிப் பெண்ணுக்கு,  ப்ளைட் டிக்கெட், ஹோட்டல் ரூம் போடச் சொல்லி, ட்ராவல் அரேஞ்சு செய்து, தங்கிலீஷில் எழுதிப் பழகி, ஷூட் செய்து டயலாக் வந்தால் எமோஷன் இல்லாமலும், எமோஷன் வந்தால் டயலகாக் வராதவளாய் இருக்க, தண்டச் செலவாய் முப்பது நாப்பதாயிரம் போனதுதான் மிச்சம்.. 

ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பெண் ஆடிஷனுக்கு வருகிறாள் என்றால் யாருடய டைம் முக்கியமோ இல்லையோ, சுரேந்தரின் டைம் முக்கியம்.

அவர் இருக்கும் போதுதான் ஆடிசன் நடத்தப்பட வேண்டும் என்பது எழுதப்படாத கட்டளை.  வந்தவுடன் அவரை பார்த்து,  ஒரு அரை மணி நேரம் அவருடய பிரதாபங்களை சொல்லி பிரஸ்தாபித்துவிட்டு ஆடிஷன் நடக்கும் போது மேனேஜருடன் பேசுவார்.

சமயங்களில் ஆடிஷனில் வந்து நின்று அவளையே பார்ப்பார். எல்லாம் முடிந்து போகும் போது “என்ன செலக்ட் ஆயிட்டாளா?” என்று ஸ்ரீதரின் அருகில் வந்து கேட்பார். “இல்லை” என்று சொன்னால் .. “என்னா டைரக்டர்.. லட்டு மாரி இருக்கா.. வேணாங்குற? ஏதாச்சும் செகண்ட் ஹீரோயின். ஐயிட்டம் டான்ஸுக்காகவாது யூஸ் பண்ணிக்கலாமில்ல?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்.

“சார்.. நம்ம படம் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர்”

“ஆமாமில்ல” என்று தலையை தொங்கப்போட்டு கிளம்பிவிடுவார்.

தினம் புதுப் புதுப் பெண்களை பார்த்துக் கொண்டிருப்பதால் பிரேமியைப் பற்றி கேள்வியே இல்லை.

கபில் அழைத்திருந்தான். கதையை படித்துவிட்டதாகவும் நன்றாக இருப்பதாகவும் சொன்னான். எப்போது ஷூட்டிங் என்று கேட்டான். இன்னும் ஒரு மாதத்தில் ப்ளான் என்றதும் “ஓகே.. வீட்டுக்கு வாங்க” என்றான். ப்

ரொடக்‌ஷன் மேனேஜர், சேது, கையில் செக்கோடு ஸ்ரீதர் அவன் வீட்டின் வாசலில் காத்திருந்தார்கள். எட்டிப்பார்த்தவன் ஸ்ரீதரை மட்டும் அழைத்து “ என்ன ப்ரோ.. எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கீங்க? நான் உங்கள மட்டும்தானே வரச் சொன்னேன்” என்றான்.

“இல்லை ப்ரோ. கத பிடிச்சிருக்குனு சொல்லிட்டீங்க.. அடுத்த பார்மலிட்டிதானே..? அதான்” என்று இழுத்தான்.

அதற்குள் சேது கையில் போனுடன் உள் நுழைந்து “சார் லைன்ல இருக்காரு.. “  என்று கபில் முன் நீட்டினான். அவன் கண்களாலேயே “யார்?” என்று கேட்க.. “ப்ரோடியூசர்” என்றான் ஸ்ரீதர்.

போனை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவன் அரை மணி நேரம் வெளியே வர வில்லை. அவ்வப்போது அறைக்கதவை திறந்து ஸ்ரீதரை எட்டிப் பார்த்த பார்வையில் “வச்சி செய்யுறான்யா” என்கிற பாவம் இருந்தது.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன். போனை சேதுவிடம் கொடுத்துவிட்டு, “நாளைக்கு சொல்லுறேன். டேட்ஸ் பார்த்துட்டு” என்று வேறு யாரிடமும் பேசாமல் அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

சிறிது நேரம் அவன் கூப்பிடுவானோ என்ற தயக்கத்தோடு ஸ்ரீதர் அங்கே அறையின் முன் நின்று கொண்டிருந்துவிட்டு, அனைவருடன் கிளம்பினான். அவனுக்கு என்னவோ கபில் டேட்ஸ் கொடுக்கப் போவதில்லை என்றே தோன்றியது. ப்ரசாந்த் மேனேஜருக்கு போன் செய்யச் சொன்னான்.

“ஏன் சார் அவசரப்படுறீங்க? ப்ரசாந்த விட இவருக்கு நல்ல மார்கெட் இருக்குல்ல.. என்ன கொஞ்சம் அதிகமா எதிர்பார்த்தாலும் கொடுக்கலாம்னுதான் தலைவரு சொல்றாரு..” என்றார் சேது.

“இருக்கட்டும்ணே.. ப்ரசாந்த் கிட்டேயும் பேசிருவோம்” என்றவுடன் அவருக்கு ஏதோ புரிந்தார் போல, தலையாட்டி, ப்ராசாந்த் மேனேஜருக்கு போன் போட்டு பேசினார்.

”சார்.. ப்ரசாந்த் மேனேஜர் அருண் உங்களப் பேச சொல்றாரு” என்றார்.

அருணின் நம்பருக்கு போன் அடித்தான். “யாரு..? ஓ..கே.. ஸ்ரீதர்.. இப்பத்தான் மேனேஜர் பேசினாரு. யாரு அஸிஸ்டெண்ட் நீங்க?”  சொன்னான். “சரி..சரி.. சார்..இப்ப ஒரு ஷூட்ல பிஸியா இருக்காரு.. 50எல் சம்பளம். அட்வான்ஸா பாதி கொடுத்துரணும். மீதிய டப்பிங் முன்னாடி கொடுத்திரணும்.” என்றான்.

“சார்.. முதல்ல அவருக்கு கதை பிடிக்கணும். அதுக்கு அப்புறம்தானேங்க சம்பளம் எல்லாம்?” என்றான் ஸ்ரீதர்.

“ப்ரதர். கதையெல்லாம் என்ன பெருசு. ஹீரோ, ப்ரொடக்‌ஷன் காம்பினேஷந்தான் பேசும். என்ன புதுசா காவியத்தையா ரெடி பண்ணியிருக்க போறீங்க?” என்றான் அருண்.

ஸ்ரீதருக்கு கோபம் வந்தது. கொஞ்சம் பெரிதாய் மூச்சு விட்டு “காவியமா இல்லையாங்கிறத எதிர்காலம் தான்ணே சொல்லும். எப்ப கதை கேக்குறார்னு சொல்லுங்க வந்து சொல்றேன்” என்றான் அமைதியாய்.

“டேட் கேட்டு சொல்லுறேன். சீக்கிரம் பிக்ஸ் பண்ணுங்க.. சாருக்கு ரெண்டு மூணு பெரிய கம்பெனியில ஆபர் வந்துட்டிருக்கு” என்றான்.

“ஓகே.. நீங்க கதை கேட்க டேட் கொடுக்குறத பொருத்துதான்” 

“பாக்குறேன் இல்லாட்டி நான் கேட்குறேன் முதல்ல” என்று பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்தான் அருண்.

ஸ்ரீதரின் கோபம் முட்டிக் கொண்டிருந்தது. காரின் ஜன்னல் வழியே வெளியே வெறுமையாய் பார்த்தபடி வந்தான்.

கேமராமேன் வின்செண்ட்டை அழைத்து ஸ்ரீதர் பேசினான். அவன் முன்பு ஒர்க் செய்திருந்த படங்களில் ஒளிப்பதிவு பற்றியும், அவனது சினிமா ரசனை குறித்தான கட்டுரைகள் பற்றியும் பேசினான். தன் கதையைப் பற்றி சொன்னான். ‘பண்ணலாம் தலைவரே’ என்று ஆர்வமாய் வந்தான்.

தினம் நடக்கும் ஆடிஷன்களில் ஹீரோயின் போர்ஷன்கள் எடுத்ததைப் பார்த்துவிட்டு கருத்துச் சொல்வான். அவன் சொல்லும் கலர் காம்பினேஷன்கள், லைட் ஷேட் கொண்ட விஷுவல் சென்ஸ் ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்திருந்தது.

சுரேந்தரிடம் சொல்லி இவர் தான் நம்ம கேமராமேன் என்று அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டு, சோஷியல் மீடியாவில் செய்தியை பகிர்ந்த மாத்திரத்தில் வாழ்த்துக்களை விட, ”அவரையா போட்டிருக்கீங்க? “ என்கிற கேள்வியோடு வந்த போன்கால்கள்தான் அதிகம்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 11 - https://bit.ly/2K6UAzh

பகுதி 10 - https://bit.ly/2MsfoTl

பகுதி 09 - https://bit.ly/2JEANKr

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close