[X] Close

குரு மகான் தரிசனம்! 3 மடப்புரம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள்


guru-mahan-dharisanam-3

  • kamadenu
  • Posted: 21 Jun, 2018 10:43 am
  • அ+ அ-

திருவை குமார்

முக்தி தலமாக கருதப்படும் ‘ஆரூர்’ எனப்படும் திருவாரூரில் மூன்று விஷயங்கள் பெருமையானவை! ஒன்று: ஆரூரானின் கோயிலும் – கமலாலயத் திருக்குளமும். இரண்டு : ஆழித்தேரும் காராம்பசுவும்! இவை இரண்டுமே கல்லாலானவை. மூன்று : இசை மும்மூர்த்திகளின் வாசஸ்தலம். நான்காவதான பெருமையாக, இத்தலத்தைப் புனிதமாக்கியவரே நமது மகான் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

இவர் ஜீவன் முக்தர். ஜீவசமாதி நிலைக்குச் சென்று இன்றளவும் பக்தர்களின் பாரம் களைந்து பரமசுகம் தந்து கொண்டிருக்கும் வள்ளல்பெருமான் . சின்னஞ்சிறு பிராயத்திலேயே சிவபெருமானின் அருளால் ஞானம் கைவரப்பெற்றவர்.

விரக்தியும் வியாதியுமாக தன்னை நாடி வருபவர்களுக்கு தான் பார்க்கும் அச்சிறு நொடியிலேயே பரவசநிலை தந்து, சகஜ நிலைக்கு திருப்பிவிட்டிருக்கிறார்.

‘ஓடம்போக்கி ஆறு’ என்று ஒரு சிற்றாறு அக்காலத்தில் மடப்புரத்தின் பகுதியில் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையில்தான் இவரது பல சித்து வேலைகளும் மக்களைப் பரவசப்படுத்தியது.

முன்னதாக... இந்த மகானைப் பற்றி!

திருச்சிக்கு அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமமே கீழாலத்தூர். அங்கே பக்தியிலும், கல்வியிலும் திளைத்து விளங்கிய சிவசிதம்பரம் பிள்ளைக்கு ஒரேயொரு குறை... பிள்ளைச் செல்வம் இல்லையே என்பது!

செய்யாத பரிகாரமில்லை. போகாத திருத்தலமில்லை. அணுகாத மருத்துவரில்லை. ஆனாலும், பலன் என்னவோ பூஜ்யம்தான். இறுதியாக பிள்ளைவாளுக்கு அண்ணாமலையாரின் நினைவு வரவே, உடனடியாக மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார். அண்ணாமலை-உண்ணாமுலை முன்பு கண்ணீர் உகுந்து அழுது தொழுது நின்றிருந்தனர்.

அன்றிரவே பிள்ளைவாளின் கனவில் வந்திட்ட உமையொருபாகன் உற்சாக வரம் அளித்து மறைந்தார். என்னவென்று கேட்டால் வியப்பில் ஆழ்வீர்கள் வாசகர்களே!

“நானே உங்களது மகனாக வரப்போகிறேன்… வாழ்க வளம் பெற…”  என்ற அசரீரியுடன் அய்யன் பிள்ளைவாளின் மனம் குளிர்வித்தான்.

தம்பதிகள் தவித்து மருகினர். மருகித் தவித்தனர். திளைத்து நெகிழ்ந்தனர். ’’ஈசன் எங்களது குமாரனா?”

பக்திப் பரவசத்துடன் ஊர் திரும்பினார்கள். சில மாதத்திலேயே அவர் மனைவி கருவுற்றார். ஆண்குழந்தையும் பிறந்தது. அண்ணாமலையாரின்  அவதார ஒளி என்பதால் தங்களது பாலகனுக்கு ‘அருணாசலம்’ என்றே பெயரிட்டனர்.

அருணாசலம் வந்திட்ட முகூர்த்தமோ என்னவோ அடுத்த இரண்டாண்டுகளில் இன்னொரு கரு; இன்னொரு குழந்தை. இளைய மகனுக்கு  ‘நமசிவாயம்’ என்று நாமகரணம் செய்தார். பிள்ளைகள் இருவரையும் சமமாகப் பாவித்து சீரும் சிறப்புமாக வளர்த்தனர்.

ஆனால், அருணாசலமோ எல்லா குழந்தைகளையும் போல் அல்லாமல் ‘உட்காரும் போதெல்லாம் பத்மாசனம் போட்டு அமரும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டதோடு நிஷ்டைக்குச் சென்று விடுவான். மவுனத்தினை தனது அஸ்திரமாக்கிக் கொண்டு சதா மோன நிலையில் விட்டம் வெறித்தபடி அமர்ந்து இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

வயது ஐந்து நிரம்பியும் ஒரு பேச்சுக் குரலும் காணோம் என்றால் பெற்றவர்கள் படும்பாடு என்னவாகயிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிள்ளைவாளும் மனைவியும் பிள்ளைக்கு எதிரே நின்று கொண்டு வருந்தாமல்… உள்ளுக்குள் அழுது தீர்த்தபடி இருந்தனர்.

ஈசன் தனது திருவிளையாடலைத் துவக்கினார் ஒரு துறவி ரூபத்தில்!

உடலெங்கும் நிரம்பிய திருநீற்றுப் பூச்சுகள்… காவி உடை, கழுத்து நிறை உருத்திராட்ச மாலைகள், சடாமுடி… நெடிதுயர்ந்த சரீரமாக அந்தத் துறவி புயலென பிள்ளைவாளின் இல்லம் புகுந்தபோது… வெலவெலத்துப்போனது  பிள்ளைவாளின் உடம்பும் மனமும்!

அந்த வெலவெலப்பை விளக்கும் முகமாக துறவி சொன்னார், ‘பேசாத அந்த பாலகனைக் கூட்டி வா!’

“சுவாமி, நீங்களே உள்ளே வாருங்கள். நிஷ்டை கலையாமல் உள்ள எனது மகனின் நிலை மீட்டுத் தாருங்கள்.”  என்று கண்கள் பணிக்க நிலம் வீழ்ந்து கும்பிட்டார்.

நிஷ்டையில் யோக நிலைக்குச் சென்றிருந்த அருணாசலத்தை உற்று நோக்கிய துறவியார் சிரித்துக் கொண்டே, “பிள்ளைவாள், இப்போது பேசிப்பாருங்களேன்” என்றார்.

மகனிடம் பேசினார். ‘ஏனப்பா… ஐந்து வருடமாக பேச மறுக்கிறாய்?’ சொல்லிவிட்டு அழுதார்.

பாலகன் பேசினான். “சும்மா இருக்கின்றேன்”

பிள்ளைவாள் அதிர்ந்து போனார். எவ்வளவு தீர்க்கமான பதில்…

அடுத்து, துறவி கேட்டார். “சரி மகனே, சும்மா இருக்கின்ற நீ யார்?”

அருணாசலம் கண்கள் மூடிய நிலையிலே இருக்க இதழ் விரித்து மெல்லிய குறுநகையுடன் அந்த துறவிக்குத் தந்த பதில்...  “நீயேதான் நான். நானேதான் நீ…”

துறவி சிரித்தார்… கிளம்பினார். போகும் முன்பாக அருணாசலத்திடம், “சந்தோஷம். உன் பதில் பரம சத்தியம்” என்று கூறி மறைந்தார்.

வந்தவரும் – வார்த்தை தந்த இருவருமே அண்ணாமலையானே…! என்பதைப் புரிந்துகொண்ட பிள்ளைவாள் தனது பிறப்பு எப்பேர்ப்பட்ட  பாக்கியம் என்று நினைத்து வியப்பிலாழ்ந்து போனார்.

சும்மா இருக்கின்றதாக ஒப்பித்த அந்த சிவம் தனது கீர்த்தியைக் காட்டத் துவங்கியது.

ஒரு நாள் அதிகாலை நேரம். பரபரவென பிள்ளைவாள் திருச்சிக்கு பயணத்தைத் துவங்கிக் கொண்டிருந்தார்.

பிள்ளையாண்டான் எதிர் வர, தந்தை மகனிடம் “ நான் தாயுமானவனை தரிசனம் செய்துவிட்டு வரப்போகிறேன்.”… என்று சொன்னவுடன் “வேண்டாமே, பிரயாணம் தவிர்த்து இல்லம் வரவுள்ள விருந்தாளிகளைக்  கெளரவியுங்கள்” என்று சொல்லிச் சென்றுவிட்டாராம்.

மகன் குணம் அறிந்த பிள்ளைவாள் பயணம் தவிர்த்து காத்திருக்கும்போது அருணாசலம் சொன்னபடியே உறவுக்காரர்கள் வீடு நிறைய வந்து தங்கினர்.

உள்ளிருந்து வெளிவந்த அருணாசலம் அகம் மலர தந்தையைப் பார்த்து புன்னகை விடுத்து சென்றான். பிள்ளைவாளுக்கு பிள்ளையின் மீது பாசத்திற்குப் பதிலாக பக்தி பெருக ஆரம்பித்தது.

பள்ளிக்குச் செல்லாத தன் மகனுக்கு இல்லத்திலேயே தனிப்பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிள்ளைவாள்.
வழக்கம்போல் நிஷ்டநிலையில் அருணாசலம் அமர்ந்திருக்க  எதிரே வரிசையாக புத்தகங்கள் அணிவகுக்க… உள்ளே நுழைந்த ஆசிரியர் “அருணாசலம், பாடம் எல்லாம் படித்து முடித்தாயா?” என்று சற்று கூடுதல் குரலில் கேட்கவே “ஆயிற்று, சந்தேகமிருந்தால் கேட்கலாம்”… என்று சொல்லவே ஆசிரியருக்கு ஏற்பட்ட சினத்தில் சரசரவென்று கேள்விக்கணைகளைத் தொடுக்க  கடகடவென்று பதில்கள் வந்த விழுந்தன.

ஆசிரியர் அதிர்ந்து போன நிலையில் நமது அருணாசலம் ஒரு விஷயம் கூறி ஆசிரியரை திகைக்க வைத்தார்.

“பாடம் பிறகு பார்க்கலாம். இல்லத்தில் உமது பாலகன் நிலை தவறி விழுந்து கரம் முறிந்து விட்டது! உடன் இல்லம் திரும்புங்கள்…” என்று சொன்ன அடுத்த வினாடி ஆசிரியர் தலை தெறிக்கப் பாய்ந்தார்.

இதனிடையே, எதிரே, அவரது வீட்டிலிருந்து வேகவேகமாக வந்த பணியாளர், மகன் அடிபட்ட விஷயத்தை அவரிடம் ஒப்புவிக்கவே, நிலைகுலைந்து போனார்!

அடுத்த நாள் முதல், அருணாசலத்தின் முன் ஆசிரியராக தன்னைக் காட்டிக் கொள்வதை அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டார்  என்றுதான் சொல்ல வேண்டும்.

அதை ரசித்த பரம்பொருள் சிரித்தது…

தானே வருவதாகத்தானே பிள்ளைவாளிடம் பரம்பொருள் ஒப்புக் கொண்டது…

வந்தது முதல் தன் பணி தொடங்காமல் ஐந்து ஆண்டுகள் கழிந்ததும் அதிசயங்கள் அணிவகுத்தன.

“காரியமும் எண்ணமும் நெருங்கிய சம்பந்தமுள்ளவை. காரியமே இல்லாமல் உட்காருகிறேன், என ஆரம்பித்தால் அப்போது மனசில் இல்லாத கெட்ட எண்ணங்கள் எல்லாம் படை எடுத்து வரும். இங்கிலீஷில் கூட “வேலை இல்லாத சித்தம் சைத்தானின் பட்டறை” என்று ஒரு பழமொழி உண்டு. ஆகவேதான் – ‘சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்கு முன் அந்தச் சித்தம் சுத்தப்படவேண்டும்! ஆரம்பத்தில் கர்மங்களாலேயே இந்த சித்தச்சுத்திக்கு வழி செய்து கொள்ள முடியும்’.

இது தெய்வத்தின் குரலில் சொல்லப்பட்டவை.

‘சும்மா இருக்கின்றேன்’… என்ற ஒற்றைப்பதில் ஐந்து வயதில் தந்த அந்த பாலகுமாரன் அதுவரை தன் சித்தத்தை சுத்தப்படுத்திக் கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்.

அருணாசலமாக பெற்றோர்களால் அழைக்கப்பட்ட மகான் எப்படி தட்சிணாமூர்த்தியானார்…  என்பதே மிகப்பெரிய கேள்வி!

சித்தூர் ஜில்லாவில் சோமநாத முதலியார் என்ற ஒரு பெரும் தனவந்தர் இருந்தார். தனமும் குணமும் தந்திட்ட ஈசன் அவருக்கு கூடவே, வயிற்று ரோகத்தையும் அனுப்பிவைத்து இருந்தான். போகாத வைத்தியரோ, செய்யாத வைத்தியமோ – சாப்பிடாத மருந்தோ இல்லை. ஆனாலும், கடும் வயிற்று வலியால் முதலியார்வாள் பட்ட அவதி படும் அவஸ்தை.

மனம் நொந்து கடைசியாக அவர் புகலிடம் தேடிய இடம் ஆடவல்லான் ஆட்சி செய்யும் சிதம்பரத் தலம். அழுதார்.  தொழுதார். விழுந்தார். எழுந்தார். உடன் ஒரு முடிவும் எடுத்தார். இன்றைய இரவுக்குள் ஆடவல்லானின் அற்புதம் நிகழ்ந்து தன் வலி தீராவிடில் ஆலயத்தினுள்ளேயே ப்ராணஹத்தி செய்து கொள்ளுவதாக முடிவெடுத்து குறுவாள் ஒன்றை வேட்டியில் ஒளித்து அர்த்தசாம பூஜையில் ஆஜரானார். பின், எவரும் அறியாத வண்ணம் ஆலயத்தினுள்ளேயே பதுங்கி விட்டார்.

நடை சாத்தப்பட்டது. முதலியார் குறுவாளுடன் ஆடவல்லான் சந்நிதி எதிரே நின்று பேசத் தொடங்கினார். “வலியும் நீக்கில்லை. வழியும் காட்டில்லை. விதி விட்ட வழியில் இக்கட்டை உன் முன்பே மாய்ந்து போகட்டும்…” என்று சொல்லியபடி கழுத்தில் கத்தி செருகத் தொடங்கிய வேளையில், அசரீரி கிளம்பியது.

“அன்பரே ஏனிந்த அவசரம்? நீ சென்று ஆரூரில் தஞ்சமடை!  அங்கிருப்பவன் தட்சிணாமூர்த்தி. அவன் உன் வலி நீக்கி வழி காட்டுவான்…” என்று ஒலித்து அடங்கியது.

முதலியார்வாள் அடுத்த தினமே ஆரூரின் தெருக்களில் வயிற்றைப்பிடித்தபடியே வலம் வரத் தொடங்கினார்.  ஆரூரில் அமர்ந்தவனோ தியாகேசன். இங்கே எங்கே… எந்த வடிவில் தட்சிணாமூர்த்தியை தேடுவேன்? என்று கலங்கிப் பரிதவித்தவாறே கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் விசாரித்தார்.

 “நீங்கள் தேடும் அந்த திகம்பரசாமி அடுத்த தெருவில்தான் சுற்றிக் கொண்டிருக்கும்” என்று சொல்லிச் சென்றிடவே… ஓடினார் முதலியார் அடுத்த தெருவுக்கு!

அங்கே பரம் காத்திருந்தது -வரம் தந்து வலி நீக்கிட…!

இதற்கு முன்பாக ஒரு காட்சியும் நடந்ததென்பதை சொல்லியாக வேண்டும். ஆடவல்லான் ஆரூரில் உள்ள தட்சிணாமூர்த்தி என்றதும் நமது முதலியார் தியாகேசர் ஆலயத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து கொண்டாடியுள்ளார்.

ஆனால், வலி அதிகரிக்கவே செய்தது. அந்த வலியின் கொடுமையிலும் வற்றாத துயரிலும் ஆலயத்தினுள்ளேயே கண்ணயர்ந்து விட… கனவிலே வந்த மகேஸ்வரன் சொன்னார்… ‘நீ தேடும் மூர்த்தம் இதுவல்ல! அது நிர்வாணமாக தெருவில் அலைந்து கொண்டிருக்கும் மோன குரு!... போய் நிதானமாகத்தேடு’

இப்போது காட்சி மாறுகிறது. அன்பர் சொன்ன அடுத்த தெருவில் அந்த நிர்வாண சுவாமியை பார்த்து விட்டார். அடுத்த நொடியே… பூமி அதிர நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து தன் குறை சொல்லிக் கதறும் வேளையில்… பிரசாதம் தந்து கரம் நீட்டினார் நிர்வாண மகான்.

அந்த அருட்பிரசாதம் அவரின் தொண்டைக்குழி தாண்டும் வேளைக்குள்ளாகவே வலி ஓடத் துவங்கியிருந்தது. முதலியார் முற்றாக பரவச நிலைக்குப் போய்விட்டார். ‘அன்பே சிவம்’ என்று அடையாளம் காட்டிய அந்த மகானைப் போற்றித் துதித்து ஆடிப்பாடி திளைத்தார்.

ஆடவல்லானே பெயரிட்டதால் நம் அருணாசலம் சுவாமிகள் தட்சிணாமூர்த்தி சுவாமி ஆக மாறிப்போனார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close