[X] Close

பயணங்களும் பாதைகளும் -  12 தண்ணீராட்டம் 


payanangalum-paadhaikalum-11

  • kamadenu
  • Posted: 20 Jun, 2018 14:29 pm
  • அ+ அ-

தண்ணீருக்கு அப்படி என்னவோவொரு ஆளை மயக்கும் சக்தி உண்டு. அட....நான் அந்தப் பாட்டில் தண்ணீரைச் சொல்லலீங்க. அலையாக ஆர்ப்பரிக்கும் கடலை அல்லது பொதேர் என்று பயத்தைக்காட்டாமல் உச்சியில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியை, பயந்து பாந்தமாக தூரிக்கொண்டிருக்கும் மழையை என தண்ணீருக்கு தனி வசீகரம் உண்டு.

இதை மனதில் கொண்டு, நிறைய பூங்காக்களில் சாதாரணமாகவே அழகாக இருக்கும் நீரூற்றுகளை, ஆடச்செய்து, பாடச்செய்து அல்லது கலர் பல்புகள் வழியே மல்டி கலர் கொள்ளச்செய்து மேலும் மெருகூட்டி, இவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கான ஸ்தலமாக மாற்றி விடுகிறார்கள்.

எனக்குத்தெரிந்த இப்படிப்பட்ட ஓர் இடம், மைசூரில் இருக்கும் பிருந்தாவன் கார்டன்ஸ். வருடம் தப்பாமல் அங்கே சென்று இந்த டான்ஸிங் ஃபெளண்டனைச் சென்று பார்த்துவிட்டு வருவோம். ஆனால் வருடம் தப்பாமல் அங்கே எனக்குக் கிடைக்கும் அனுபவம் ஒன்றேதான்.

மாதிரிக்குக் கீழே ஒன்று.

ஃபவுண்டனைச் சுற்றி வட்டமாக காலரி போல் சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அங்கு சென்றாலே, ஒரே உற்சாகம்தான். நேரம் போகப் போகத்தான் லேசாக நடுக்கம். இருட்ட ஆரம்பித்ததும்...  டப்...டப்...டப்... இங்கே ...அங்கே என்று விதம்விதமாக பாட்டில்கள் திறக்கப்படும் ஓசை. சிலர் கைகளில் கொண்டு வந்திருந்த தலகாணியைப் போட்டு படுக்கை. புரியாத பாடல்கள். பாதி உளறல்கள். நடுக்கத்துடன் அமர்ந்திருந்தோம். தவறு செய்து விட்டோமோ... இந்த இரவு நேரத்தில்... தெரியாத ஊர், புரியாத மக்கள்.

காட்சி முடிந்த உடன், ஒரு போட்டில் (படகு) ஏறி காவேரிக்கு அடுத்த பக்கம் சென்று அதன் பின் ஒத்தையடி பாதை போன்ற பெரிய பாலத்தைக் கடந்து, எடுத்து வந்திருந்த டிராவல் கார் டிரைவரைக் கண்டுபிடித்து... சரி, நேரம் மிக அதிகமாகிவிட்டது போகலாம் என்றால் படகு இருக்காது. காத்திருக்க வேண்டும்.

இந்தக் கூத்தில், ஏதோ ஹிந்திப் பாடலுக்கு ஆடிய பிங்க் கலர் ஃபவுண்டனை விடவும் முடியாமல்... நான்தான் சொன்னேனே... தண்ணீருக்கு தனி வசியம் இருக்கிறதென்று!  

இப்படித்தான்... அமெரிக்கா சென்றபோது, நண்பர் ஒருவர் சமீபமாக நாங்கள் மறந்து போயிருந்த இந்த வசீகரத்தை நினைவுபடுத்தும்படியான விஷயம் ஒன்றைச்சொன்னார்.

Longwood Forestல் டான்ஸிங் ஃபவுண்டன். பல வருடங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த ஃபவுண்டன் இப்போது மறுபடி திறக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்குப் பின் அன்று பிரின்ச்டன் ஜங்ஷனிலிருந்து ஒன்றரை மணி நேர கார் டிரைவிங்கில் இருக்கும் Longwood Forestல் அன்று இரவு ஒன்பது மணி அளவில் இந்தக் கலர் நீரூற்று புதுப்பிக்கப்பட்டு பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட இருந்தது. இவ்வளவு தொலைவு வந்துவிட்டு அந்த நாட்டின் ஆடும் நீரூற்றைப் பார்க்காமல் எப்படி வருவது?

சென்றோம். இரண்டு நாட்கள் முன்னதாகவே எண்டரி டிக்கெட் வாங்கவேண்டும். எண்டரி டைமும் கொடுக்கப்படும்.இந்த ஷோ இரவு 9.15 மணிக்குத்தான். நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து இந்த பார்க் இரண்டு மணி நேரப்பயணம். காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடித்து பத்து மணிக்கே கிளம்பிவிட்டோம். அந்த நாட்டு வழக்கப்படி, கிளம்பும் முன் அலெக்சாவிடம் அன்றைய வெப்ப நிலை, எந்த வழி கூட்டமின்றி உள்ளது, மழைபெய்ய வாய்ப்பிருக்கிறதா, எப்போது பெய்யும், இப்படி சில பல கேள்விகளைக் கேட்டு எங்களைத் தயார் செய்து கொண்டே புறப்பட்டோம்.

அந்தப் பூங்காவிற்குச் செல்லும் அருகில் உள்ள தெருவிலேயே டிராபிக் ஜாம் ஆரம்பமாகி விட்டது. மெதுவாக ஊர்ந்து சென்றோம். நிறைய பார்க்கிங் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அனைத்தும் நிரம்பி வழிந்தன. பார்க்கிங் ஏரியாவை பல முறை திருப்பதி கோயிலை வலம் வருவதுபோல் சுற்று சுற்றி, ஒரு வழியாக ஒரு காலி இடம் கண்ணில்பட்டது. காரை நிறுத்திவிட்டு அந்த இடத்தை கேமிராவில் படமெடுத்துக்கொண்டோம். காரணம் அந்தக்கூட்டத்தில் திருவிழாவில் காணாமல் போன குழந்தைபோல் நம் கார் கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருந்தது!  தவிர, இந்த கார்டனுக்கு நிறைய எண்ட்ரி கேட்டுக்கள் உண்டு. இதனாலும் வழி தெரியாமல் விழிபிதுங்கி, கைபிசைந்து நிற்க நேரிடும் என்பதால், இந்த உஷார் ஐடியா!  

ஃபெளண்டன் ஷோவிற்கு நிறைய நேரமிருந்தது. கார்டனை சுற்றிப்பார்க்கத்தொடங்கினோம். பார்க்கப் பார்க்க நீண்டு கொண்டே இருந்தது. அவ்வளவு பெரிய இடம் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எல்லோர் கைகளிலும் சாப்பிடுவதற்கான ஐட்டம்ஸ் இருந்தன. ஆனால் மருந்துக்குக்கூடக் கீழே ஒரு காகிதக்குப்பையோ, பிளாஸ்டிக்குப்பையோ பார்க்க முடியவில்லை. படு சுத்தமான கழிப்பிடம். ஆங்காங்கே பருகுவதற்கு தண்ணீர். இருபது அடி இடைவெளியில் விதம்விதமான நீரூற்றுகள். சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட மலர்த் தோட்டம். வகை வகையாகப் பூக்கள். அனைத்தின் முகப்பிலும் அவற்றின் பெயர் , நாடு , பூக்கும் சீசன் போன்ற விவரம்.

பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதப்படவில்லை. ஆனால் குழந்தைகள் கூடப் பூக்களைத்தொடவில்லை.

கார்டனுக்குள் பியர் கார்டனும் உண்டு. ஆண்கள் பெண்கள் என்று அனைவர் கைகளிலும் கோப்பைகள். ஆனால் ஒரு சத்தம்...ஒரு ஆர்ப்பாட்டம்....எதுவுமில்லை. கார்டனை ஒரு பாதி சுற்று முடித்து மதிய உணவிற்குச் சென்றோம். ஒரு மணி நேரம் க்யூவில் நின்று கிடைத்த ஒரே ஒரு வெஜிடேரியன் டிஷ்ஷான மார்கரெட்டோ பிட்சாவை கடித்து விழுங்கி, உள்ளே தள்ள பெப்சியை எடுத்து.... சாப்பிட்டு முடித்து மறுபடியும் கார்டனை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

எட்டரை மணி வாக்கில் டான்ஸிங் ஃபெளண்டனிடம் சென்றோம். அதற்குள்ளேயே போடப்பட்டிருந்த நாற்காலிகளும் பெஞ்சுகளும் நிரம்பி வழிந்தன. கீழே புல் தரையில் அமர்ந்தோம். அனைவரும் கேமிராக்களை சரி செய்தபடி இருக்க, சரியாக 9.15 மணி.  சுற்றிப் போடப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு, பீட்டில்ஸ் பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆடத்தொடங்கின நீரூற்றுகள். நடுவில் பிரதானமாக மூன்று நீரூற்றுகள். அவற்றைச் சுற்றி ஒவ்வொரு திசையிலும் மூன்று சிறிய நீரூற்றுக்கள், பிரதான நீரூற்று சிம்ரன் போல் இடை ஒடித்து ஆட, சுற்றி உள்ள நீரூற்றுகள் கோரஸ் நடிகைகள் கணக்காக சுற்றிச் சுற்றி ஆட... அபாரம். நாற்பது நிமிடம். வேறு வேறு பாடல்களுக்கு வேறு வேறு மாதிரியான நடனம். எந்த பிரபுதேவா செய்த கோரியோகிரபியோ தெரியவில்லை. ஆனால் மெல்லிய சங்கீதமும், நிலவின் ஒளியும், சுற்றி படர்ந்திருந்த கரும் இருட்டும், எங்கிருந்தோ வந்த ஒரு இரவுப்பறவையின் குக்கூவும்..... சொர்க்கத்துக்கு மிக அருகில் சென்ற நன்னாள் அது!  

அவ்வப்போது மேலே தெளித்த தண்ணீர்த் துளிகளுக்கும் கைத்தட்டல்கள். மிதந்து வந்த பாடலைத்தவிர அதிக பட்சமான சத்தம் இது ஒன்றுதான். அங்கே பலருக்கும் இது முடிந்தபிறகு காரில் வீடு சென்று சேர இரவு பனிரெண்டு  ஆகிவிடும். ஆனாலும் இடித்துத் தள்ளி, கார் ஹார்ன் அலறவிட்டு... இப்படியெல்லாம் நடக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் அமைதியாக ஒரு கட்டுப்பாட்டுடன் கலைந்து சென்ற கூட்டத்தைப்பார்க்கும்போது...

எப்போதோ நழுவிப்போன சந்தோஷம், ஓர் நிறைவு, ஒரு நிம்மதி... அங்கே, அப்போது, அந்தத் தருணத்தில் கிடைத்ததாகப் பூரித்துப் போனது மனசு!

லதா ரகுநாதன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close