[X] Close

கதைகள்... விதைகள்! 16: கிருஷ்ண குசேல நட்பு!


kadhalkal-vidhaikal16

  • இந்திரா செளந்தர்ராஜன்
  • Posted: 20 Jun, 2018 08:54 am
  • அ+ அ-

வரிசைகட்டி நின்ற குசேலனின் பிள்ளைகள் தங்களின் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தனர். ஒருபிள்ளை வாயில் விரல் சூப்பியபடி, பார்த்தால், இன்னொரு பிள்ளை தலை சொரிந்தபடி பார்த்தது. ஒருபிள்ளையின் கண்களில் பசிமயக்கம் நன்றாகத் தெரிந்தது. சில பிள்ளைகள் நிற்கக் கூட சக்தியற்றவர்களாய் அமர்ந்திருந்தனர்.

மூத்தவள் பத்மினிக்கு பதினாறு வயதாகிறது. பருவத்துக்கும் வந்துவிட்டாள். கிழிசல் ஆடையில் வெட்கத்தோடு முகத்தில் பொலிவே இல்லாமல், காட்சி தந்தாள். அவளைப் பார்க்கவுமே குசேலரிடம் ஒரு வேகம்...

 முள் குத்தியது போல் ஒரு விழிப்பு!

அதுவரை ‘நானொரு பிராமணன். பிட்சை எடுத்து வாழும் கட்டுப்பாடுடையவன். வேதம் சொல்லி உலகம் நன்கு வாழப் பிரார்த்தனை புரிபவன். மற்றபடி, லோகாயத ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது’ என்ற கொள்கையில், கட்டுண்டு கிடந்த குசேலனின் கட்டுகளை பத்மினிதான் அவிழ்ப்பவளாக ஆனாள்.

‘’சுசிலை... உன் விருப்பப்படியே நான் கிருஷ்ணனைச் சென்று பார்க்கிறேன். மற்றபடி நம் விதிப்படி நடப்பது நடக்கட்டும்’’ என்று அவல்மூட்டையை தோளில் போட்டுக்கொண்டு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடக்கத் தொடங்கினான் குசேலன்.

சில பிள்ளைகள் அவனைப் பின் தொடர்ந்தனர். பாசம் பசி என்று இரண்டுமே காரணம். சுசிலை அவர்களை தன் வசம் இழுத்துக்கொண்டு ‘’நீங்கள் புறப்படுங்கள்’’ என்று கையால் சைகை காட்டினாள்.

குசேலன் துவாரகை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

துவாரகை.

நகரங்களில் நான் ராஜா என்பது போல் மிகுந்த எழிலோடு காட்சி தந்தது. பூவுலகில் மோட்ச கதி தரத்தக்க ஏழு க்ஷேத்திரங்களில் என்னையும் சேர்த்துக்கொள் என்பது போல், நகர வீதிகளில் சாது சந்நியாசிகளும் பிராம்மணர்களும் வேத முழக்கங்களுடன் ‘ஜண்டா’ எனும் கொடி பறக்க கண்ணில்பட்டனர்.

மற்ற நகரங்களான அயோத்தி, மதுரை, ஹரித்துவார், உஜ்ஜயினி, காசி, காஞ்சி கூட இத்தனை குதூகலமாக கண்ணில்படுமா என்றொரு கேள்வி, அந்த நகருக்குள் நுழைபவர்களுக்கெல்லாம் நிச்சயம் எழும்!

ர்யாதி என்றொரு மன்னன்!

இவனை இன்னொரு கம்சன், இன்னொரு ஹிரண்யன், இன்னொரு சிசுபாலன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இவன் வரையில் பரத்வம், பரம்பொருள் என்பதெல்லாம் பெரும் பம்மாத்து. இந்த உலகமும் சரி, உயிர்களும் சரி, சுயமாக உருவாயின. இதில் எவரும் பெரிதில்லை; எதுவும் பெரிதில்லை. அதேபோல், எதுவும் சிறிதில்லை; எவரும் சிறிதில்லை. இது ஸர்யாதியின் சித்தாந்தம்.

அதேசமயம், தானொரு அரசனானதால், தன் அதிகாரம் பலம் மிக்கது. அதற்கு இந்த உலகம் பணிந்து நடக்கவேண்டும் என்று விரும்பினான்.

வேதம், பாராயணம், வழிபாடு, நன்னெறி எல்லாமே முட்டாள்களால் உருவாக்கப்பட்டதாகக் கூறினான். சுருக்கமாகச் சொல்வதென்றால், அறிவே கடவுள்; அதிகாரமே அதன் பலம் என்பதே ஸர்யாதியின் கொள்கை.

இவனுக்கு ஆனர்தன் என்றொரு பிள்ளை. இவன், அப்படியே அப்பனுக்கு நேரெதிர். பசுமையான மரத்தின் நிழல் கருமையாக நேரெதிராக இருப்பது போல், ஸர்யாதிக்கு அமைந்த இந்தப் பிள்ளை ’வேதம் என்பது பகவானின் மூச்சுக்காற்று. அதை நாம் பாராயணம் செய்வதன் மூலம் அவனுக்குள் சென்று சென்று வருகிறோம். அவனாலேயே இந்த உலகம் படைக்கப்பட்டது. அவனே எல்லாம்!’ என்றான்.

புராணத்தில் இதுபோன்ற ஆச்சரியமான முரண்கள் நிறைய உள்ளன. உறவும் நானே முரணும் நானே என்பதும் பரதத்துவங்களில் ஒன்று. அப்படிப் பார்த்தால், இது இயல்பான ஒன்றே!

சரி... ஆனர்தனிடம் வருவோம்.

இந்தப் பிள்ளை அப்பன் போக்கை எதிர்த்தான். இதனால் அப்பன் இவனை தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பு எங்கிலும் நீ இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டான். ஆனர்தன் கவலையேபடவில்லை. கடலோரமாக வந்து, அலைகள் கால் தழுவ நின்று பரந்தாமனை துதி செய்தான். அந்தப் பரந்தாமனும் அவன் முன்னே தோன்றி, ‘கவலைப்படாதே. நீ வசிக்க கடல் மேலேயே ஒரு நகரத்தை கட்டித் தருகிறேன் என்று தன் இச்சையால், ஒரு நகரை உருவாக்கினான். ‘இது என் வைகுண்டத்தின் ஒரு பாகம். இங்கே வாழ்பவர்கள் அவ்வளவு பேருமே வைகுண்டவாசிகள் என்று கருதப்படுவார்கள்’ என்று அந்த வைகுண்டபதியும் அருளி மறைந்தான். அப்போது அவன் சொன்ன இன்னொரு விஷயமும் ஒன்று உண்டு.

‘இங்கே நானே சிலகாலம் மானுடப்பிறப்பெடுத்து வந்தும் ஆட்சி புரிவேன்’ என்பதே அது.

குசேலன் துவாரகையின் நுழைவாயில் முன் வந்து, நின்றபோது, ஆனர்தனும் அவனுக்கு பரந்தாமன் சொன்னதும்தான் முதலில் நினைவுக்கு வந்தது.

‘ஸ்ரீகிருஷ்ணனே அந்த மானிடப்பிறப்பு! கிருஷ்ணன் வேறு ஸ்ரீவிஷ்ணு வேறில்லை’ என்று தனக்குள் மகிழ்வோடு சொல்லிக்கொண்ட குசேலனுக்கு துவாரகையின் எழிலும் பொலிவும் பிரமிப்பைத் தொடர்ச்சியாக தரத்தொடங்கியது.

‘யானைகள் மேலேறிச் செல்லும் தளகர்த்தர்கள்!

பல்லக்குகளில் செல்லும் கணிகையர்கள்!

புரவிகளின் மேல் செல்லும் இளம்புருஷர்கள்!

பூஜித்தபடியே கூட்டமாக நடந்து செல்லும் சாது சந்நியாசிகள்!

ரதங்களில் செல்லும் செல்வந்தர்கள், மதர்த்த மடி கொண்ட பசுக்களைப் பிடித்துச் செல்லும் யாதவர்கள், வீதியில் அந்தப் பசுக்களின் மடி மீறி வழிந்த பாலின் துளிகளால் தெருவெங்கும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பது போல், பால் தேங்கி நிற்கும் குட்டைகள்!

சாலையோரங்களில் பல வண்ணப் புஷ்ப மரங்கள், மரங்களை ஒட்டி மாட மாளிகைகள், மாடங்களில் ஊஞ்சல் கட்டி ஆடும் மாடவாசிகள். அவர்கள் அப்படி ஆடுகிற போது, எழும்பும் சங்கிலி ஓசைகள்’ என்று துவாரகை குசேலனுக்குள் பிரமிப்பைக் கூட்டிக்கொண்டே போனது.

ஒருவழியாக ஸ்ரீகிருஷ்ண கிரகம் எனும் அரண்மனை முகப்பை அடைந்த குசேலன், தோளில் கிடந்த இருகைக்குள் அடங்கிவிடும் சிறுபந்து போன்ற அவல் பொரி மூட்டையுடன் அரண்மனையை அண்ணாந்துபார்த்தான்.

கழுத்து வலித்தது!

இரு கண்கள் போதாதபடி விண்மேகத்தோடு உசாவிக்கொண்டிருந்தது. அரண்மனை முகப்பில் ஏற்றப்பட்டிருந்த ராஜ்ஜியக் கொடி.

முகப்பு வாசல் பதினாறு யானைகள் வரிசையில் நின்று, அப்படியே உட்புகலாம் எனும்படியாக பதினாறு யானை அகலத்தில் இருக்க, அந்த வாசலில் மட்டும் 32 காவலர்கள் மாறிமாறி பாரா சென்றபடி இருந்தனர்.

குசேலர் வந்து நிற்கவும் ஒரு காவலாளி வந்து உற்றுப்பார்த்தார். குசேலனுக்கு தன்னை வெளியே பிடித்து தள்ளப்போகிறார் என்றே தோன்றியது. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, ‘தாங்கள் ஆயர்பாடி பிராம்மணர்தானே?’ என்று கேட்டான். குசேலன் ஆமாம் என்றான்.

‘தங்கள் பெயர் கூட சுதாமன் என்கிற குசேலன்’’

- இந்த முறை வியந்துபோனான் குசேலன்.

தங்கள் வரவு நல்வரவாகுக...’ என்ற அந்தக் காவலாளி, ‘யாரங்கே?’ என்று குரல்கொடுத்த மாத்திரத்தில், ஒருப்பட்டுச் சிவிகை ஒன்று நான்கு பேரால் சுமக்கப்பட்ட நிலையில் குசேலன் முன்னே வந்து நின்றது.

‘’தாங்கள் இதில் எழுந்தருளவேண்டும்’’ என்றான் காவலாளி.

‘’நானா? இதிலா?’’ - குசேலன் மிரண்டான்.

‘’ஆமாம்... நீங்கள்தான். இது அரசகட்டளை’’

அவன் ஆச்சரியத்தில் விக்கித்து நின்றான்.

’’உங்கள் எல்லா ஆச்சரியங்களுக்கும் பதில் போகப்போகக் கிடைக்கும். வாருங்கள்’’ என்றான் காவலாளி.

அந்த சேவகனிடம் மிகுந்த கனிவானப் பேச்சு. குசேலனும் அந்தப் பட்டுச் சிவிகைக்குள் தட்டுத்தடுமாறி ஏறி, அமர்ந்தான். உட்பாகம் இதமான நிழல் மற்றும் சுகந்த வாசத்தோடு மெத்தென்றிருந்தது.

சிவிகையை சேவகர்கள் சுமந்தபடி செல்லவும் குசேலனிடம் ஒரே பரவசம். குசேலன் தன் வாழ்நாளில், ஒரு புரவி மேல் கூட அமர்ந்ததில்லை. பல்லக்கெல்லாம் கற்பனை கூட செய்ததில்லை. கால்களால் மட்டுமே நகர்ந்த அந்த பிராம்மணனுக்கு பிறர் கால்களால் நடந்திடும் அந்த முதல் அனுபவம், பரவசத்தோடு பயத்தையும் தந்தது.

‘தானொரு தரித்திர நாராயணன். தன்னை தவறாக ஒரு அரச பிரமுகனாக கருதியிருப்பார்களோ?’ இருக்காது. தன் பேரை மிகச்சரியாக சொன்னானே அவன். அப்படியானால் தான் வரப்போவது கிருஷ்ணனுக்கு எப்படித்தெரியும்? ஒருவேளை, சுசீலை பட்சிகள் மூலம் கிருஷ்ணனுக்கு செய்தி அனுப்பியிருப்பாளோ?’

இருக்காது. இருக்கவே இருக்காது. இந்தப் பட்சிச் செய்திகள் எல்லாம் ராஜாங்க சமாச்சாரங்கள். சுசீலை பட்சிப்புறாக்களை கண்ணால் கூட பார்க்காதவள்!

- குசேலன் கேள்வியும் பதிலுமாய் அதனால் உண்டான லேசான பதட்டமுமாய் அமர்ந்திருக்க, பல்லக்கு ஒரு இடத்தில் நின்றது. பக்கவாட்டு திரைச்சீலையும் மெல்ல விலகிய நிலையில், ‘சுதாமா’ என்கிற கிருஷ்ணன் குரல் கேட்டது. வெளியே பார்க்கவும் திரைச்சீலையை விலக்கிப் பிடித்தபடி பார்த்ததும் அழைத்ததும் கிருஷ்ணனே. கிருஷ்ணன் தான்! ‘கி... கிருஷ்ணா... ‘ என்றான். தடுமாறினான்.

அதேவேளை, பல்லக்கும் தரைக்கு இரு அடி உயர மரத்தாகி மேல் அமர்ந்திட, குசேலனும் உள்ளிருந்து வெளியே காலெடுத்துவைத்து எழுந்து நின்றவனாய் கிருஷ்ணரைப் பார்த்தான்.

கிருஷ்ணன், மிக நெருங்கி வந்து, குசேலன் கைகளைப் பற்றினான். அப்படியே ‘’சுதாமா. நண்பனே. நலமாயிருக்கிறாயா?’ என்று கட்டிக்கொண்டான்.

குசேலனிடம் உறைந்த நிலை. பிரமை பிடித்து நின்றான். இது கிருஷ்ண பிரமை. ஆதிமூல பிரமை. அதற்கு மேல் ஏதுமற்ற பிரமை!

கிருஷ்ணனையொட்டி துவாரகையின் ராஜ்யப் பிரதானிகள் நின்றிருந்தனர். தளபதி அனாத்ருஷ்டன், விகத்ரு, பிரதான மந்திரி உத்தவர், உபமந்திரி கங்கர், அக்ரூரர், சாத்யகர், சித்ரகர், ப்ருது... அவர்களை எல்லாமும் கிருஷ்ணன் குசேலனுக்கு அறிமுகம் செய்தான்.

’’ப்ரதானிகளே. இவன் என் ப்ராண சினேகிதன். சுதாமன் இவன் பெயர். நாங்கள் குசேலன் என்று செல்லமாய் அழைப்போம். பரமப் பிராம்மணன். மூன்று வேளை சந்தியாவந்தனத்தை தவறாது செய்து பிராம்மண நெறியில் தவறாது ஒழுகுபவன். இல்லற தர்மமே இனிய தர்மம் இந்த மண்ணில் என்பதால், அந்தத் தர்மப்படி மனைவி மக்கள் என வாழ்பவன். பெரும் செல்வந்தனும் கூட!’

 - கிருஷ்ணன் இறுதியாகச் சொன்னதைக் கேட்டு, குசேலன் அதிர்ச்சியானான். கிருஷ்ணனும் சிரித்தபடியே, ‘பெரும் செல்வந்தன் என்று நான் மாடுமனை மற்றும் மாசற்ற பொன்னைச் சொல்லவில்லை. அவற்றுக்கெல்லாம் மேலான பிள்ளைச் செல்வங்களைச் சொன்னேன்’’ என்றான்.

குசேலனுக்கு உயிர்மூச்சு சீரானது. உள்ளுக்குள்  நீ சர்வக்ஞன் என்பதை நிரூபித்துவிட்டாய் கிருஷ்ணா’ என்று சொல்லிக்கொண்டான். கிருஷ்ணன் அங்கிருந்து குசேலன் தோளில் கைபோட்டு, அப்படியே அரண்மனையின் உள்ளே அழைத்துச் சென்றான்.

குசேலன் கூச்சத்தில் நெளிந்தான்.

அன்று கண்ட அதே மாறாத அன்பு. அதே பாசம்... அதே வாஞ்சை.

‘’குசேலா. உன் மனைவி மக்கள் எல்லாம் நலமா? ஏன் வந்ததில் இருந்து எதுவும் பேசாமல் இப்படி வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறாய். பேசு குசேலா?’’ - கிருஷ்ணன் நடந்தபடியே சொன்னான்.

குசேலன் கண்களில் அந்தக் கேள்வியைத் தொடர்ந்து கரகரவெனக் கண்ணீர்.

‘’ஐயோ... எதற்கிந்தக் கண்ணீர். தவறாக ஏதேனும் கேட்டுவிட்டேனா?’’

‘’இல்லை கிருஷ்ணா! இது ஆனந்தக் கண்ணீர்.’’ குசேலன் தட்டுத்தடுமாறி வாயைத் திறந்தான்.

‘’அப்படியானால், சரி, ஆயர்பாடியில் நம் நண்பர்கள் எல்லோரும் நலம்தானே?’’

‘’ஆஹா. நாங்கள் மிக்க நலம்.’’ குசேலன் பொய் சொன்னான்.

’’நேற்று இரவெல்லாம் எனக்கு சரியான உறக்கமில்லை. அதிகாலை என் சப்ரமஞ்சம் அருகே காகம் ஒன்றும் கரைந்தது. அப்போதே யாரோ என்னைக் காண தொலைதூரத்தில் இருந்து வருவது தெரிந்துவிட்டது. அதேபோல், நீ நகருக்குள் பிரவேசிக்கவும் எனக்கு தகவல் வந்துவிட்டது. உன் தோற்றம் நெற்றியில் நீ தரிக்கும் கோபி சந்தனம், மற்றும் செந்தூரம் மெலிந்த தோற்றம் என உன்னை என் வீரர்கள் வர்ணிக்கவுமே குசேலன் வருகிறான் என்று தீர்மானித்தே பல்லக்கை அனுப்பினேன். என் அனுமானம் பொய்யாகவில்லை’’.

- கிருஷ்ணர் மிகுந்த மானுட பாவனையோடு பேசிய பேச்சு, குசேலனை சிலிர்க்கச் செய்தது. அப்படியே ஏறெடுத்துப் பார்த்தான்.

‘’என்ன குசேலா. அப்படிப் பார்க்கிறாய்?’’

‘’மாறாமல் இருக்கிறாய் கிருஷ்ணா’’

‘’நீ கூடத்தான் அப்படியே இருக்கிறாய். அப்போதும் இப்படித்தான் பார்ப்பாய். பெரிதாகப் பேசமாட்டாய். இப்போதும் அதே பார்வை. அதே மெளனம்’’

‘’நான் எதற்கு கிருஷ்ணா பேசவேண்டும். உன் முன் பேசவும் தேவை ஏற்படுவதில்லையே...! என் கூட எண்ணெயாக சில கால அளவை எடுத்துக்கொள்ளும். நீ அதைவிட வேகமாக எதையும் தெரிந்தும் புரிந்தும் செய்பவனாக இருக்கிறாய். நானும் சரி, நம் நண்பர்களும் சரி, ஆயிரமாயிரம் யக்ஞங்கள் செய்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் உன் நட்பும் வாஞ்சையும் எங்களுக்குக் கிடைத்திருக்குமா என்ன?’’

- குசேலனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

- தொடரும்

  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close