[X] Close

கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்! 16: மகாலக்ஷ்மிக்கு அருளிய திருக்காமேஸ்வரர்! பிரிந்த தம்பதியை சேர்த்துவைக்கும் வெள்ளூர்! 


kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum-16-vellur

முசிறி - வெள்ளூர் திருக்காமேஸ்வரர்

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Jun, 2018 11:49 am
  • அ+ அ-

பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ என்றொரு அற்புதமான வாசகம் உண்டு. பேசாமல், பார்த்துக்கொள்ளாமல், பாசத்தைப் பகிர்ந்துகொள்ளாமல், நல்லதுகெட்டது அறிந்துகொள்ளாமல், பிரிந்திருந்தவர்கள், ஒருகட்டத்தில் சேரும்போது, அவர்களால் எதுவும் பேசிக்கொள்ளத் தோன்றாது. பேச வார்த்தைகளே இருக்காது. வார்த்தைகளே இருந்தாலும், குரல் வராது என்பதை உணர்த்தும் அருமையான இந்த வாசகம்தான், உறவுகளுக்குள் இருக்கும் அடர்த்தியை, தோழமைக்குள் இருக்கிற நேசத்தை, வெகு அழகாகவும் ஆழமாகவும் உணர்த்தக்கூடியது.

ஆமாம். பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ? ஆனால் இதில் ஓர் சுவாரஸ்யம்... பிரிந்தவர்கள், பிரிந்துபோனதற்குக் காரணமாக, பல இடங்களில் பேச்சுத்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. பேச்சு, பேச்சுக்குப் பேச்சு, ஏச்சுத்தனமான பேச்சு, காயப்படுத்துகிற பேச்சு, கவலை மூட்டுகிற பேச்சு, கண்ணியமற்ற பேச்சு, உண்மையைக் கொண்டு வரும் பேச்சு, அவதூறு கிளப்புகிற பேச்சு என்று, பிரிவதற்கான காரணங்களும் காரியங்களும் இங்கே பத்துபைசாவுக்குப் பிரயோசனம் இல்லாதவை.

ஊடல் எல்லோருக்கும் பொதுவானது. யாரும் யாரோடும் என்று ஊடல் செய்யமுடியாது. யார், யாருடன் இணைந்திருக்கிறார்களோ அவர்களுக்குள்தான் பிணக்கு வரும். அந்தப் பிணக்குதான் பெரிதாகும். இன்னும் பிணக்கையும் பிரளயத்தையும் ஏற்படுத்தும்.

’ஏம்பா. அவதான் தொட்டதுக்கெல்லாம் டாண்டாண்னு பேசுவானு தெரியும்தானே. கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கவேண்டியதுதானே’ என்று சொல்வார்கள், கேட்டிருக்கிறோம்தானே!

’அட... என்னய்யா நீ. இதுக்குப் போயி ஊரையேக் கூட்டுற மாதிரி சவுண்டு விடுறியே. வீடுன்னா வாசல் இருக்கும். அதேபோல வீடுன்னா சண்டையும் சச்சரவும் இருக்கத்தான் செய்யும். இதுக்கெல்லாம் போயி, கத்திக்கிட்டு, மூஞ்சி தூக்கிக்கிட்டு, இத்தினி வருஷம் புருஷனும் பொண்டாட்டியும் சேந்து வாழ்ந்துமா, ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கலை...’ என்று அலுத்துக்கொள்ளும் அக்கம்பக்கத்தாரைப் பார்த்திருக்கிறீர்களா.

முன்பெல்லாம், கணவனுக்கும் மனைவிக்கும் கடும் சண்டை நடக்கும். ‘நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்’ என்பாள் மனைவி. ‘நீ உன் பொறந்த வீட்டுக்குப் போ. அப்பதான் என் அருமை தெரியும் உனக்கு’ என்பார் கணவர்.

ஆனால், விளையாட்டுச் சண்டை என்றும் உண்டு, அனுபவித்திருக்கிறீர்களா?

ஊடல் என்பதற்குள்ளேயே ஏதோவொரு பிணைப்பும் பந்தமும் தொக்கி நிற்பதாகவே நினைப்பு வரும். சண்டை என்பதும் யுத்தம் என்பதும் ஒரே விஷயத்தின் வெவ்வேறு வீரியமானவை என்பது போல, இங்கே கணவன் மனைவிக்குள் ஊடல் என்பதற்குள் நிகழ்கிற சண்டைகளும் பேச்சுகளும் இன்னும் நெருங்கிய இணைப்பை நோக்கியே பயணப்படும்.

மகாவிஷ்ணுவே இந்த விளையாட்டில் கைதேர்ந்தவர்; கரை கண்டவர் என்றால், அவரால் படைக்கப்பட்ட நாமெல்லாம் எம்மாத்திரம் சொல்லுங்கள்?

எல்லா வினைகளும் விளையாட்டாகிவிடுவதில்லை. ஆனால் சிலதருணங்களில், விளையாட்டு வினையாகிவிடும். அப்படியொரு விளையாட்டில்தான், மகாவிஷ்ணுவுக்கும் மகாலக்ஷ்மிக்கும் ஊடலானது ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டது.

அப்படியான பிரிவுத்துயரில் துடித்துப்போனாள் மகாலக்ஷ்மி. எல்லாப் பெண்களைப் போலவும் துவண்டுதான் போனாள். கண்ணீர் விட்டாள். கதறித் துடித்துக் கலங்கினாள். ‘என் புருஷனைக் கண்டிக்க ஆளே இல்லையா?’ என்று நொந்துகொண்டாள். ‘கணவனை விட்டு நிற்கிறேன். கணவனே திக்கு; புருஷனே திசை. திக்குத்திசை இல்லாமல் நிற்கிறேன். எனக்கொரு நற்கதி கிடையாதா?’ என்று அழுதாள்.

‘நான் அவரைப் புரிஞ்சுக்கணும். அவர் என்னைப் புரிஞ்சுக்கணும். இதுக்கெல்லாம் ஒரு வழி கிடையாதா?’ என்று வலி பொறுக்கமுடியாமல், அழுதுகொண்டே இருந்தாள்.

அப்படியே இருந்த இடத்திலேயே இருந்தாள். அசைவற்றுக் கிடந்தாள். சிலையென நின்றாள். ஒருகட்டத்தில், மரமாகிப் போனாள். வில்வ மரமென நின்றாள்.

வில்வ மரமாகி தவமிருந்தாள். ‘என் சிவனே... என் சிவனே... என் சிவனே...’ என்று உள்ளே சொல்லிக் கொண்டு, தவமிருந்தாள். அங்கே, மரத்தடியில் சிவலிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்தை நோக்கி இன்னும் தீவிரமாகத் தவமிருந்தாள். வில்வ மரமாகத் திகழ்ந்தவள், வில்வ இலைகளைக் கொண்டு, மழையெனப் பொழிந்தாள். சிவலிங்கத் திருமேனி மீது, வில்வம் சொரிந்துகொண்டே இருந்தது. மழையென பொழிந்துகொண்டே இருந்தது வில்வம்!

‘ஏம்பா. ஒழுங்கா இருக்கமுடியாதா. ஒரு வீட்டில் பெண், கண்ணீர் விட்டால், அந்த வீடு சுபிட்சம் பெறாது. இதோ... உன்னவளின் கண்ணீரால், உலகமே சுபிட்சமின்றித் தவிக்கிறது. தேவையா இது. உன் விளையாட்டை நிறுத்திக் கொள். அவளால் இந்த உலகம் சுபிட்சம் பெறவேண்டும். ஊடல் போதும். அவள்... மகாலக்ஷ்மி. இன்றுமுதல் ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி’ என அவளுக்கு அருளினார் ஈசன். அந்த வில்வமரம், அப்படியே மகாலக்ஷ்மியானது. அங்கே சிவலிங்கத் திருமேனியை நமஸ்கரித்தாள்.

அந்த நிமிடமே... மகாவிஷ்ணு தோன்றினார். தன் மணாளனைக் கண்ட சந்தோஷத்தில் நமஸ்கரித்து வணங்கினாள் மகாலக்ஷ்மி. வழக்கத்தை விட அவள் இன்னும் தேஜஸூடன் இருந்தாள். முன்பு மகாலக்ஷ்மி; இப்போது சிவனருளால் ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி. இன்னும் பொலிவுடன் இருந்தாள்.

போதாக்குறைக்கு, கணவருடன் சேர்ந்தது, இன்னும் குதூகலமும் நிறைவுமாய்த் திகழ்ந்தாள் தேவி.

அதுமட்டுமா?

தன் உடலின் ஒருபாகத்தையே அம்பிகைக்குக் கொடுத்த சிவபெருமான், மகாவிஷ்ணுவை அழைத்து, மகாலக்ஷ்மியின் திருமுகத்தை, அவருடைய திருமார்பில் சூட்டியருளினார். ‘என்னம்மா, சந்தோஷம்தானே. உன் புருஷனோட இதயத்தில் நீதான் எப்பவும் இருக்கிறாய். போதுமா?’ என்று சிவனார் கேட்க, அந்திவானச் சிவப்பில், மகாலக்ஷ்மியின் திருமுகம் வெட்கத்தால் சிவந்து போனது.

சிவனார் குடிகொண்டிருக்கும் அந்தத் திருத்தலத்தில், இன்றைக்கும் ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி எனும் திருநாமத்துடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சுபிட்சத்தையும் அவர்களின் இல்லங்களுக்கு ஐஸ்வர்யத்தையும் தந்தருள்கிறாள் தேவி.

மகாவிஷ்ணுவையும் மகாலக்ஷ்மியையும் சேர்த்துவைத்து அருளினார் அல்லவா சிவன். அது எந்தத் தலம் என்று தெரியுமா உங்களுக்கு?

மன்மதனைச் சுட்டெரித்தார் சிவன். தெரியும். ரதி கதறினாள். அதுவும் தெரியும். இங்கே வந்து, ரதி சிவபூஜை செய்து, அந்த பூஜையின் பலனால், எரிந்து சாம்பலான மன்மதனுக்கு மீண்டும் உடல் கொடுத்து, உயிரும் கொடுத்தார் சிவனார்! அது எந்தத் தலம் என்பதை அறிவீர்களா?

ஆக, மகாவிஷ்ணு - மகாலக்ஷ்மி. மன்மதன் - ரதி. இப்படி இந்தத் தம்பதியை இணைத்து வைத்த, பிரிந்த தம்பதியைச் சேர்த்து வைத்த சிவனார் குடிகொண்டிருக்கும் புண்ணிய க்ஷேத்திரம் எது தெரியுமா?

வெள்ளூர். திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில், குணசீலத்தை அடுத்து முசிறிக்கு முன்பாக உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர் கிராமம்.

இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில், வெள்ளூரில் அழகிய கோயிலில், அற்புதமாகக் குடிகொண்டு, பிரிந்த தம்பதியை சேர்த்து அருளி, வாழ்வாங்கு வாழச் செய்கிறார் சிவபெருமான். இங்கே அவரின் திருநாமம் - திருக்காமேஸ்வரர்.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் திருக்கோயிலுக்கு,  ஸ்ரீஐஸ்வர்ய மகாலக்ஷ்மி தனிச்சந்நிதியில் அருளாட்சி செய்யும் அற்புதமான ஆலயத்துக்கு, பிரிந்தவர்கள் ஒரேயொரு முறை வாருங்கள். பிறகு, அந்தத் தம்பதி சேர்ந்து, இன்னும் வளமையுடனும் செழுமையுடனும் சிறப்புடனும் சீருடனும் இனிதே இணைந்து வாழ்வார்கள் என்பது உறுதி!

சாலையை ஒட்டியே இருக்கிறது ஊர். ஊரின் தொடக்கத்திலேயே அமைந்திருக்கிறது திருக்காமேஸ்வரர் கோயில்.

அடிக்கடி காச்மூச்சென்று கத்திக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டும் இருக்கிற கணவன் மனைவியாகட்டும், அவர்களாலோ அவர்களைச் சுற்றியுள்ளவர்களாலோ பிரிந்து, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, தனித்தனியே வாழ்ந்துகொண்டிருக்கிற தம்பதியாகட்டும்... ஒரேயொரு முறை இங்கு வந்து தரிசியுங்கள். விரைவில்... பிரிந்தவர்கள் சேருவார்கள் என்பது சத்தியவாக்கு!

இன்னொரு விஷயம்...

ஒருகாலத்தில் சிதிலம் அடைந்து, வழிபாடுகளின்றி இருந்த ஆலயம் இது. அன்பர்களின் முயற்சியாலும் அறநிலையத்துறையின் ஒத்துழைப்பாலும் ஆச்சார்யர்களின் பூஜாபலன்களாலும் கோயில் சீரமைக்கப்பட்டிருக்கிறது. கோபுரம் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஒருகாலத்தில் தகரக்கொட்டகையில் இருந்தபடி ஐஸ்வர்ய கடாக்ஷம் அருளிக்கொண்டிருந்த ஐஸ்வர்ய மகாலக்ஷ்மிக்கு, இப்போது அழகிய சந்நிதியே அமைக்கப்பட்டுவிட்டது. வருகிற 22.6.18 வெள்ளிக்கிழமை அன்று விமரிசையாக நடக்கிறது மகா கும்பாபிஷேகம்.

 வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, காலை 9 முதல் 10.15க்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளுங்கள். இன்னும் விசேஷம்.

இந்தத் தலத்துப் பெருமைகள் இன்னும் இன்னும் இருக்கின்றன. அவற்றை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

கும்பாபிஷேகத்தைக் கண்ணாரத் தரிசித்துவிடுவோம். ஐஸ்வர்ய மகாலக்ஷ்மியின் பேரருளைப் பெறுவோம்!

- இன்னும் தரிசிப்போம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close