[X] Close

தொங்கட்டான் 16: காங்கிரஸில் இருந்து தி.மு.க! காமராஜரில் இருந்து அண்ணாதுரை! 


thongattan-16-mana-baskaran

பேரரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி

  • மானா பாஸ்கரன்
  • Posted: 18 Jun, 2018 10:49 am
  • அ+ அ-

பொறக்குடி  பஸ்  சரியாக  எட்டரை  மணிக்கு   திருவாரூர்  பஸ் ஸ்டாண்டுக்கு  வந்து  நின்றது.  இறங்கி  நடந்த பக்கிரியின் கண்களில் ஆங்காங்கே தென்பட்டன சில சுவரொட்டிகள்.

 அந்த சுவரொட்டிகளில்  இன்று மாலை, கமலாலயக் குளக்கரை, தெற்கு வீதியில் ‘அஞ்சா நெஞ்சன்’ பட்டுக்கோட்டை அழகிரி பேசுகிறார்  என்கிற  வாசகம்  அழைத்தது.  அந்தச்  சுவரொட்டியை   வாசிக்கிற   ஒவ்வொருவரையும்  ‘வருக வருக’ என்று,  கருணாநிதி, கு.தென்னன் என்கிற பெயர்கள் அழைத்தன.

’இன்னிக்கு  ராத்திரி   இந்த மீட்டிங்கு  கேட்டுட்டு… வடக்கு வீதி போயி மகாலிங்க மாமா வூட்டுல படுத்துத் தூங்கிட்டு… விடியல்ல எழுந்திரிச்சி ஊருக்குப் போவ வேண்டியதுதான்…’ என்று மனசுக்குள் முடிந்துகொண்டான் பக்கிரி.

*******  ****

திருவாரூர் எல்லையம்மன் கோயில் தெரு முழுவதும் தட்டார்களாக நிரம்பியிருந்தனர். எங்கும் பத்தர் பட்டறைகள். டொக் டொக் என்று  பத்தர்கள் தட்டும் சத்தம். அங்குமிங்கும் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும் மனிதர்களின் முகங்களில் எல்லாம் பரபரப்பு தொற்றியிருந்தது.

தட் தட் என்று தங்கத்தை தட்டுவதினால் அவர்களுக்கு தட்டார் என்று பெயர் வந்தது. தச் தச் என்று மரத்தை தைப்பதினால் அவர்களுக்கு தச்சர் என்று பெயர் வந்தது என்று ஒரு தடவை  வல்லாங்கை தியாகராஜ பத்தர் சொன்னது பக்கிரியின் மனசில் அப்போது ஏனோ ஓடியது.

பத்தர்களின்   நகைத்  தொழிலுக்கு   நுணுக்கமாக  பல  பொருட்கள் தேவைப்படும்.  அவற்றை விற்பனை செய்வதற்கு என்று பிரத்தியேகமான கடைகள் இருந்தன. அவை – பட்டறை சாமான் விற்கும் கடை என்றழைக்கப்பட்டன.

எல்லையம்மன் கோயிலில் அன்றைய நாட்களில் புகழ்பெற்றிருந்த அருணாச்சல செட்டியார் அண்ட் கோ கடைக்குச் சென்றான் பக்கிரி. மயில் மார்க் வாள் கம்பி ஒரு டஜன்,  சிங்க மார்க் வாள் கம்பி ஒரு டஜன்,  சேப்பு அரக்கு நூறு கிராம்,  மெழுகு உருண்டை ஒன்று, வெங்காரம் எட்டணாவுக்கு, துருசு என்கிற துத்தநாகம் கால் ரூபாய்க்கு, கரவடிக் கட்டை ஒன்று, நயவடிக் கட்டை ஒன்று, நாய்த் தோல் சின்னது ஒன்று, பித்தள புருசு என்கிற பித்தளை பிரஷ், பட்டை அரம் ஒன்று எல்லாம் வாங்கினான் பக்கிரி.

‘உலகத்துலேயே நகை வேலை செய்யுறவங்களுக்குத்தான்  எத்தனை தினுசான பொருட்கள் தேவைப்படுகின்றன. வேற எந்த வேலைக்கும்  இவ்வளவு பொருட்கள்  தேவைப்படவே  படாது  என்கிற  எண்ணம் பக்கிரிக்கு வந்தபோது கூடவே சின்ன சிரிப்பும் வந்தது. 

‘’என்ன பத்தரே சிரிக்கிறே…’ என்றார் செட்டியார்.

‘’ஒண்ணுமில்ல செட்டியாரே…. நகை வேலை செய்றவங்களுக்கு  அத்தனை உலோகங்க, ரசாயனங்க, திரவங்க, மரம், நெருப்பு, காத்து, தண்ணீ,  உமி எல்லாம் தேவைப்படுது. என்ன மாதிரி வேலை  பாத்தீங்களா இது’’ என்றபோது, பக்கிரியை ஆச்சரியமாகப் பார்த்தார் செட்டியார்.

‘’நீ சொல்றது வாஸ்தவம்தான் பத்தரே… அன்னிக்கு ஒருநாள் எங்க கடையில தீர்ந்துபோன ரெமி பவுடர் டப்பா கெடந்துச்சி. அதை கொண்டாங்கன்னு ஒரு பத்தரு கேட்டு வாங்கிட்டுப் போனாரு. இது எதுக்கு பத்தரேன்னு கேட்டேன். அந்த பவுடர் டப்பா தகரத்துல சின்னதா முறம் செஞ்சு வெச்சிக்கிட்டா… நகையை ராவுற போது கீழே விழுற சன்னத்தை (தங்கத் தூள்) அள்ள பயன்படுத்தலாம்னாரு… நீ சொல்றது எவ்வளவு பொருட்கள் தேவைப்படுது ஒரு நகை தயாரிக்க…’’ என்றார்  செட்டியார்.

‘’இது என்ன ஆச்சரியம் செட்டியாரே.. நான் இன்னோன்னு சொல்றேன் பாருங்க… வாயப் பொளந்துக்கிட்டு கேப்பீங்க…. ‘.’

‘சொல்லுங்க கேட்டுக்கிறேன்…’’

‘’இந்த சைக்கிளு இருக்குப் பாருங்க…. அதில் இருக்குற பால்ரஸ், ஸ்போக்ஸ் கம்பி, டைனமோவுல இருக்கிற காந்தம் இதெல்லாம் கூட ஒரு நகை தயாரிக்க தேவைப்படும்னா நம்புவீங்களா.  - பக்கிரி சொன்னபோது உண்மையிலேயே வாயடைத்துப் போய்தான் கேட்டார் செட்டியார்.

‘சரி செட்டியாரே… எல்லாத்துக்கும் காசு கொடுத்திட்டேன்… மணியாச்சு. தெற்கு வீதியில  திமுக மீட்டிங் கேக்கப் போவணும் வரட்டா…’’

‘’யோவ் நீ ஏன்யா அவனுங்க மீட்டிங்லாம் கேக்கப் போற? போயி உன்  பொழப்பப் போயி பாருய்யா. அதுவொரு உருப்படாத கட்சி… வாய் கிழியப் பேசுவானுங்க…நம்மக்குள்ள சண்டய  மூட்டிடுவானுங்க…  அதுவும் அத   மூனா கானா  செம வாய் பந்தா ஆளூ…. புத்திய  மயக்கிடுவான் ஜாக்கிரதை’’ என்று செட்டியார் சொன்னபோது…

‘இன்னொரு நாளைக்கு நம்ம கச்சேரிய வெச்சிக்கலாம் செட்டியாரே…’’ என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான் பக்கிரி.

*** ***

ரவு  -  ஏழு  மணிக்கு   ஆரம்பித்த மீட்டிங்கு நள்ளிரவு பன்னிரெண்டு மணி வரைக்கும் நீண்டது.

அஞ்சா நெஞ்சன் என்றால் உண்மையிலேயே அஞ்சா நெஞ்சன்தான் பட்டுக்கோட்டை அழகிரி. மைக்குக்கு முன்னால் பொரிந்து தள்ளிவிட்டார்.

 திராவிட நாடு, இனம், மொழி, ஆரியப் படையெடுப்பு, கைபர் போலன் கணவாய், இங்கர்சால், ஓரிரவு நாடகம்,  வள்ளுவ நெறி போன்ற வார்த்தைகள் அழகிரியின் பேச்சுக்கு இடையில் வந்து  தெறித்து விழுந்தன. 

அந்த  மேடையில் உருண்ட தமிழ் பக்கிரியைப் போன்ற அன்றைய இளைஞர்களை அரசியல்மயப்படுத்தின.  அதிலும் கருணாநிதி என்கிற, உச்சந்தலையில் நடுவில் பட்டையாக வகிடு எடுத்து தலைசீவி, இளஞ்சிவப்பு கலரில் இருந்த இளைஞருடைய பேச்சு மனசுக்குள் தயிர் கடைந்தது. அவருடைய வாயில் திரண்டெழுந்த     அந்தத் தமிழில் இருந்த அடுக்குமொழி புதிதாக இருந்தது. தமிழ் மீது ஆசை ஆசையாக வந்தது.

அந்த ஆசை தனது ஊரில் அவனுக்கு புதிய அடையாளத்தை எற்படுத்தப் போகிறது என்பது அப்போது  பக்கிரிக்கு தெரிந்திருக்கவில்லை.

காங்கிரஸ்  மீதும்,  காமராஜர்  மீதும்  பற்று,  பாசம்  வைத்திருந்த  பலரையும் அன்றைய  நாட்களில்  கருப்பு –  சிவப்பு   கட்சி  அசைத்தது. நிமிர்ந்து பார்க்க வைத்தது. யோசிக்க வைத்தது. அந்த யோசிப்பும் அவதானிப்பும் அந்தக் கட்சியின் மீது ஒரு சின்ன வசீகரத்தை தமிழகம்  முழுக்க ஏற்படுத்தியிருந்தது.

பக்கிரி… மெல்ல  மெல்ல காமராஜரிடம்  இருந்து தன் போக்கை சி.என்.அண்ணாதுரையின் பக்கம் திசை திருப்பியிருந்தான். தன்னைப் போன்ற பலரையும் அந்தக் கட்சி தனது வசீகரக் குரலால் கவர்வதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் பக்கிரி.

- தொங்கட்டான் அசையும்…

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close