[X] Close

குரு  மகான் தரிசனம்! 2 :  பேசாத சிறுவனைப் பேச வைத்த கோடி சுவாமிகள்!


guru-mahan-dharisanam-2

புரவிபாளையம் கோடி சுவாமிகள்

  • kamadenu
  • Posted: 14 Jun, 2018 10:18 am
  • அ+ அ-

திருவை குமார்

பசி என்றோ… சோறு வேண்டும் என்றோ கேட்காத மகான் புரவிபாளையம் சுவாமிகள். ஆனால் அதிசயம்... இந்த மகானுக்கு சோறு ஊட்ட வேண்டும் என்றே பலரும் சமைத்து எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் மனம் கோணாமல் ஓரிரு கவளம் சாப்பிட்டுவிட்டு பிறகு அவர்களிடமே திருப்பித் தந்து விடுவார்.

தீராத பிரச்சினைகள், நோய்கள், வேதனைகள் என வருவோருக்கு அவர் வழங்கும்  அருட்பிரசாதம் என்ன தெரியுமா? தனது வாயில் ஊட்டிக் கொண்ட உணவினை “த்தூ’… என்று வந்திருப்பவரின் உள்ளங்கையில் துப்பிவிடுவாராம். முகமும் மனமும் கோணாமல் அதை உண்டு விடுபவர்களுக்கு… அடுத்து உற்சாக, உத்வேக  வாழ்க்கை நிச்சயம்!

ஜமீனின் முதல் மாடியிலேயே 32 வருடம் அமர்ந்திருந்த தாத்தா சுவாமிகளிடம் பலரும் கேட்ட கேள்வி, “ஏன் தாத்தா… கீழே வருவதில்லை?.” இதற்கு அவர் பகிர்ந்தது… “நான் கீழே வந்துவிட்டால் உங்களால் என்னைப் பார்க்கவே முடியாது?”

இதன் பொருள் யாருக்குமே விளங்கியதில்லை. அவருக்கு சாதி-மதம்-இனப் பிரிவினையே  கிடையாது. சகலரும் சமமாக உள்ளே வந்து நுழைந்து செல்ல எந்தத் தடையும் இருந்ததில்லை!

வழக்கமான பாணியில் தாடியைத் தடவிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் தாத்தா சுவாமிகள், தன் அருகே என்ன பொருள் உள்ளதோ… அதை பக்தர்களை நோக்கி வீசி எறிவார். அது உணவா, பழமா வேறு ஏதாவது பொருளா? எதுவாகவும் இருக்கலாம். எதுவாகினும் வீசுவார். அதற்காகவே பக்தர்களும் காத்திருப்பார்கள்.

உணவில் பாகுபாடு எல்லாம் மனிதர்களுக்கு மட்டுமே! என்னைப்போன்ற மகான்களுக்கு அல்ல… என்று சொல்லும் தாத்தா சுவாமிக்கு சைவம்-அசைவம் எல்லாமே ஒன்றுதான்!

அவருக்கு மிகவும் பிடித்தது சாக்லெட்டும், ஆரஞ்சு மிட்டாய்களும்! பக்தர்கள் கொடுத்தவுடன் ஆசை ஆசையாக வாயில் போட்டு மென்றுவிட்டு பக்தர்களுக்கு திருப்பித் துப்பித் தந்து விடுவார். அதுவே தங்களின் பாபம் தீர்க்கும்… என்ற நம்பிக்கை மக்களுக்கு!

எப்போதாவது தனக்குப் பிடித்தமானவரின் வீட்டிற்குச் சென்றால் அந்த இல்லத்தின் குழந்தைகளுக்கு உணவு ஊட்டவைத்து மகிழ்வார். ஒருமுறை, அன்பர் ஒருவரின் வீட்டில் சுடச்சுட கஞ்சி அடுப்பில் தயாராகிக் கொண்டிருந்தது. புயலென உள்ளே நுழைந்த தாத்தா சுவாமிகள் அதை அப்படியே எடுத்து சுடச்சுட வாயில் ஊற்றி குடித்துவிட்டு ஏப்பமும் விட்டுப்போனதைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்மணிக்கு போன பிராணன் திரும்ப பத்து நொடிகளாயிற்று!

இது மட்டுமா,  பன்னீர் பாட்டில்களைப் பார்த்தால் போதும்… மடமடவென்று குடித்து தீர்த்து விடுவாராம்.

இதுவாவது பரவாயில்லை. பசியே வராத  மகானுக்கு பசி எடுத்திருக்கிறது. பக்கத்து சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த மிளகாய் குழம்பு (வத்தல் குழம்பு) அனைத்தையும் அதே வேகத்தில் வாயில் ஊற்றிக் குடித்துவிட்டு… ‘பரிபூரணம்’… என்று சிரித்துச் சென்றார்.

இந்த ப்ரம்மத்தை – பரத்தை-மரத்தை உணரத் தெரியாத பலரும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். தாத்தா சுவாமிகளுக்கு அது நன்றாகவேதெரியும். ஆனால், பொக்கை வாய் சிரிப்புடன் அந்த பக்தரை ரக்ஷிப்பாராம்.

ஒரு பிராமணப் பெண்ணின் தீராத வயிற்றுவலி. அவர் சுவாமியிடம் வந்தார்.

தரிசனமும் கிடைத்து தாத்தாவின் எதிரே அமர்ந்தும்விட்டாள். இதனிடையே அவளுக்கு நமது தாத்தாசுவாமிகள் வைத்தார் ஒரு சோதனை.  என்ன தெரியுமா?  திடுமென ஒரு நபர் டிபன் பாக்சுடன் பக்தையின் நடுவே புகுந்து, அதன் மூடி திறந்து உள்ளிருந்த அசைவ உணவை தாத்தா சுவாமிக்கு ஊட்டிவிட்டார். திறந்திருந்த டப்பாவையும் அதனுள் இருந்த அசைவ உணவையும் பார்த்ததும் அருவருப்பில் அந்த பிராமணப் பெண்ணின் கண்கள் இறுக்க மூடிக்கொண்டு… அத்துடன் முகம் கோணினாள்.

ஆனால், நடந்தது என்ன தெரியுமோ? அவள் கண்கள்தான் மூடியிருந்தன! அவளது கைகள் திறந்தே இருந்தன. அதில்… வந்து விழுந்தன… அவரது வாயிலிருந்த மாமிசத்துண்டுகள்… அய்யோ… என்று அலறி மூர்ச்சையாகாத  குறையில்… அழத் தொடங்கும்போது… அவை சாக்லெட் மிட்டாய்களாக மாறியிருந்தன. இனிப்புகளை வாயில் போட்டு சுவைக்க ஆரம்பித்த வேளையில் ‘பரம்’ சிரிக்கத் துவங்கியது. வயிற்று வலி வெளியேறி விட்டிருந்தது.!

தாத்தா சுவாமிக்கு – தங்களது வீட்டிலிருந்து சமைத்து வைத்த உணவுகள் மட்டுமன்றி  ஜிலேபி, லட்டு, ஆரஞ்சு மிட்டாய், பர்பி, பழவகைகள், கடலை உருண்டை, முறுக்கு… என்று எல்லாவற்றையும் அவரின் எதிரே பக்தர்கள் அடுக்கி வைப்பார்கள். பெரும்பாலும் அவை அங்கே பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும். ஒன்றிரண்டு பதார்த்தங்களை சுவைத்துப் பார்க்கும் பழக்கம் உண்டு. எதன் மீதும் ஆசை வைக்காதவருக்கு, அவர் ஆசைப்பட்ட ஒன்று கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பணக்கார பக்தர் ஒருவர் தாத்தா சுவாமிகளுக்கு முன்பாக தட்டு நிறைய பழங்களை, இனிப்புகளை வைத்துவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அந்த சமயம் அவரது மணிக்கட்டருகே “பீப் பீப்” என்று வினோத ஸப்தம் வரவே தாத்தாவின் திருஷ்டி திரும்பி ஒரு நொடியில் நகர்ந்தும் விட்டது.

பிரமுகருக்கு பயம் பற்றியது. “மிகவிலை உயர்ந்த கைக்கடிகாரமாயிற்றே! அதுவும் ‘கிஃப்ட்’ ஆக வந்ததாயிற்றே! இதை சுவாமிகள் கேட்டுவிடுவாரோ…” என்று தனக்குள் பயந்து கொண்டு தனது முழுக்கைச்சட்டையின் பட்டனைப் போட்டு கைக்கடிகாரம் தெரியாமல் மறைத்துக் கொண்டாராம்.

மரத்திற்குள் மறைந்தது மாமதயானை

மரத்தை மறைத்தது மாமதயானை…’ என்று உணராதவரா அந்த பிரும்மம்! பிரமுகரை அழைத்து உத்தரவிட்டது. “உன் கைக்கடிகாரத்தைக் கொடுத்துவிட்டுப் போ!” அவ்வளவுதான்!

ஆனால், காதில் வாங்காதவரைப் போலவே கிளம்பிச் சென்று விட்டார். பொக்கை வாய் மகான் புன்னகைத்துக் கொண்டு அடுத்த பக்தனை குசலம் விசாரிக்கச் சென்றார்.

நமது பிரமுகர் பேருந்து நிலையம் சென்று நிம்மதியாக நிதானமாக முழுக்கை சட்டையின் பட்டன்களை தளர்த்தி விட்டுக் கொண்டு புதுக் கடிகாரத்தில் மணி பார்த்தபோது… அது நின்றுபோய் நெடு நாழியாகியிருந்தது. அது எந்த நேரம் தெரியுமா? “தாத்தா சுவாமிகள்… அதைக் கொடுத்துவிட்டுப் போ!”… என்று சொன்ன நேரம்.

பிரமுகருக்கோ மனசு இறங்குவதாக இல்லை! குற்ற உணர்ச்சியும் இல்லை. கடிகாரக் கடையில் கொடுத்து சர்வீஸ் செய்து அதை சரி செய்து மாட்டிக் கொண்டார்.

அடுத்த நாளே மக்கர் தொடர்ந்தது.

மீண்டும் சர்வீஸ்… மீண்டும் மக்கர்… கதை தொடரவே திடுக்கிட்டுப்போய் தாத்தாவின் திருவடியில் அதைக் கழற்றி நிம்மதியாக ஒப்படைத்த நாழிகையில் அது ஓடத்துவங்கியிருந்தது.

அந்த நேரம் வேறு ஒரு பக்தர் தாத்தா சுவாமிகள் பாதம் பணிய, இதை வைத்துப் பிழைப்பாய் என்று அருளாசி வழங்கி அதை கொடுத்தார். பிரமுகரும் இல்லம் திரும்பினார். பலமாத இடைவெளியில் இவரது கடிகாரத்தை சுவாமிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டவரை அடையாளம் காண நேர்ந்து குசலம் விசாரித்தபோது…  WATCH CENTRE ஒன்று வைத்து பிரபலமாகியிருப்பதாக சொன்னபோது வாழ்வின் பொருள் புரிந்தது.!

பிரமுகரின் எண்ண ஓட்டத்தை மாற்றிய அதே பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வேறொரு பெண்ணின் வாழ்விலும் வசந்தம் காட்டிய வள்ளல் பெருமான், தாத்தா சுவாமிகள்.

அது என்னவாகயிருக்கும் என்றறிய ஆவலாக உள்ளவர்கள், ஒன்று புரிந்து கொள்ளுங்கள்… நமது காலத்திலேயே நம்முடன் வாழ்ந்து நமக்கு அருளாசி புரிந்திட்ட யோகி ராம்சுரத்குமார் ஒன்றை அழுத்தமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

என்ன அது? “ தெய்வத்தை விட பெரியது நம்பிக்கை!... அதை கடைபிடித்தால் தெய்வம் காக்கும்”… என்று. அந்த நம்பிக்கையை இந்தப் பெண்மணி பின்பற்றியதாலோ என்னவோ பெரும்பேறு பெற்றார். என்ன பேறு அது?!

ஆண் குழந்தை வேண்டும் என்ற அந்தப் பெண்ணிற்கு தெய்வம் தந்த வரம் பேசாக்குழந்தை!...

‘ஊமை’ என்று சொல்ல விருப்பமில்லை. ஏனெனில் பரம் தீர்மானித்தே அந்த பாலகனைப் பொள்ளாச்சி மண்ணில் பிறக்க வைத்திருக்க வேண்டும். பெற்றவளுக்கு விடியாத வேதனை… அகலாத வலி!

“பெற்ற தாயை ‘அம்மா’ என்று மகன் அழைக்க முடியவில்லை…” என்று ஆற்றாமல் அழுதழுது முகம் வீங்கியதே மிச்சம்.  அந்த நிலையில்தான் கோடி சுவாமிகளைப் பற்றி குறிப்பு சொல்லி ஒரு பக்தர் அந்தப் பெண்மணியை புரவிப்பாளையம் திருப்பி விட்டார்.

வந்தாள்! பார்த்தாள்! சொன்னாள்!

அந்த ஞானம் புன்னகைத்தது. வழக்கம்போல் தன் அமுத வாயில் போட்டுக் குதப்பிய பிரசாதத்தை அந்தப் பாலகனின் வாய்க்குள் செலுத்திவிட்டு… ‘சென்று வா’ என்று தாயைப் பார்த்து சிரித்த்து!

“தாத்தாவைப் பார்த்தவுடனே உன் மகன் பேசிவிடுவான் என்று சொன்னார்களே… என்ற ஏக்கப் பார்வையுடன் தாத்தா சுவாமிகளைப் பார்த்தபடியே… மகனுடன் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். மனசு முழுக்க முழுக்க மகானைச் சுற்றிக் கொண்டிருந்தது. அவளின் பிழைப்பே ஒரு பெட்டிக்கடைதான்!

அப்போது கூடவே பேசிக் கொண்டிருந்து வந்த ஒருவரும் இந்தப் பெண்மணியும் தாத்தா சுவாமிகள் பற்றிய பேச்சு சுவாரஸ்யத்தில் பேருந்து ஒன்று வேகமாக வருவதைக் கவனிக்காமல் போக…

“அம்மா!... போகாதீங்க… பஸ்சு வருது!” ஒரு பயங்கரமான அலறல்!

பெட்டிக்கடை பெண்மணி அதிர்ந்து பின்வாங்கி, பின் குரல் வந்த திசை நோக்கி நன்றி சொல்ல கை கூப்பியபோது… அங்கே குரலிட்டது வேறு யாருமல்ல! சாட்சாத் அவரது பேசா மகனேதான்!

தாய் சிலிர்த்தாள். கண்ணீர் சிந்தினாள். புரவிப்பாளையம் திசை நோக்கி விழுந்து வணங்கினாள். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? நம்பிக்கை குறையாமல் நம்பிக்கையுடன் சென்ற அவளுக்கு மகனின் குறையை தீர்த்துக் கொள்ள முடிந்தது. இதே பாதையை நாமும் சிரமேற்கொண்டால், அப்படியே சென்றோமானால் எல்லாமே சிறப்புதான்!

புரவிப்பாளையம் ஶ்ரீ கோடி சுவாமிகள் அதிஷ்டானம் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

இவரை ஒரு சிலர் ஶ்ரீலஶ்ரீ பொன்முடி கோடி மகா சுவாமிகள் என்றும் அழைத்து மனமுருகியிருக்கிறார்கள். இன்றளவும் இவரது மகாசமாதியை புரவிபாளையத்தின் ஜமீன் பரம்பரையே நிர்வாகம் செய்து வருகின்றனர். ஜமீனை ஒட்டிய நிலத்திலேதான் இவரது சமாதியும் அமைந்திருக்கிறது.

நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சமாதி நிலைக்குச் சென்ற மகானை அப்படியே குழிக்குள் இறக்கி வைத்து வில்வம் – துளசி – விபூதி ஆகியவற்றினால் இட்டு நிரப்பி அவரது சிரசுப்பகுதிக்கு மேலே ஒரு துவாரம் அமைத்து அதன் மேல் ஒரு லிங்கப் பிரதிஷ்டையும் செய்து முடித்தனர்.

இங்கு பூசாரி என்று எவரும் இல்லை. பக்தர்கள் விருப்பம்போல் வருவார்கள். தங்களின் விருப்பமான காணிக்கைகளை வைப்பார்கள். அமாவாசை, பெளர்ணமி திதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக ஆடி அமாவாசை மற்றும் சுவாமிகளின் குருபூஜை தினமான அக்டோபர்-10 , பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாது. அன்னதானம் நடத்தியபடியே இருப்பார்கள். வந்தவர்கள் அனைவரும் கண்ணீர்மல்க பிரார்த்தனை செய்து மன அமைதி பெற்றுச் செல்கின்றனர்.

சுவாமிகள் மகாசமாதிக்கு நீங்கள் பேருந்து மார்க்கமாக செல்ல வேண்டுமெனில் – பொள்ளாச்சியில் இருந்து நடுப்புணி எனும் ஊருக்குச் செல்லும்  பேருந்தில் ஏறினால் புரவிப்பாளையம் அடையலாம்.

உங்கள் பிறவிப்பிணிகள் தீர்ந்து போவது உறுதி! கோடி சுவாமிகள் திருப்பாதம் பணிவோம். அருள் பெறுவோம்.

- குரு தரிசனம் தொடரும்

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close