[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 58 - சினிமா வியாபாரம்


salangalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 24 May, 2019 21:57 pm
  • அ+ அ-

”உன் பணம் ம*** எல்லாம் எனக்கு தேவையில்லை ரவி. உன்னை நம்பி நானில்லை. இத்தினி போன் போடுறேன் எனக்கு மரியாதை கொடுக்காம ஆள் கிட்ட சொல்லிவுடுறே. பணம் போட்டு தயாரிச்சவன் நான். நீ எடுத்து நாலு காசு சம்பாரிக்கப் போறவன். விக்குறவன் பெருசா வாங்குறவன் பெருசா?” என்று கோபமாய் கத்தினார் சுரேந்தர்.

எதிர் முனையில் இருந்த ரவிக்கும் சூடு ஏறியது. புரியாத முட்டாளாய் இருக்கிறானே? என்று கவலைப்பட்டார். இன்றைய டிஜிட்டல் உலகில் படமெடுப்பது பெரிய விஷயமே இல்லை. அதை சரியாய் மக்களிடம் கொண்டு போய் சேர்பதில் தான் சூட்சுமமே.

அதற்கு நல்ல நெட்வொர்க் தேவை. அதுவும் சிறு முதலீட்டு படங்கள் நன்றாக இருந்தாலும் மக்களை தியேட்டருக்கு கொண்டு வருவது அப்படி ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. இயக்குனர் நல்லவன். போராட்டக்காரன். முட்டாள் தயாரிப்பாளரை வைத்துக் கொண்டு அவஸ்தைப்படுகிறானே என்ற எண்ணத்தில் தான் இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே போன் செய்து பேசினார்.

இந்த இறுமாந்த முட்டாளுக்கு புரியவில்லை. “நான் வாங்கலைங்க. நீங்க உங்க முடிவ எடுத்துக்கங்க” என்று போனை வைத்துவிட்டார்.

சுரேந்தர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முகத்தில் அடித்தார்ப் போல அடுத்த பேச்சுக்கு ஆரம்பமேயில்லாமல் முடித்துவிட்டான். ஸ்ரீதருக்கு துக்கம் மண்டியது. என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. சுரேந்தரின் முகத்தைப் பார்த்தான்.

“அவன் ஒருத்தன் தான் டிஸ்ட்ரிப்யூட்டரா? நானே ரிலீஸ் பண்ணுறேன். அதே டேட்” என்று கத்தலாய் சொன்னார். இனி மீண்டும் ரவியிடம் பேசி புண்ணியமில்லை. ஸ்ரீதர் தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு போன் செய்தான். தமிழகத்தில் நல்ல இன்ப்ளூயன்ஸ் உள்ள விநியோகஸ்தர்களை பற்றி டீடெயில் எடுத்து பழைய நண்பர் ஒருவரை அதில் தெரிந்தெடுத்தான்.

சுரேந்தரைப் பற்றிச் சொன்னான். படத்தை கமிஷன் அடிப்படையில் விநியோகம் செய்து தர வேண்டுமென்றான். நண்பர் விதூரன் பழுத்த அனுபவமுள்ளவர். தியேட்டர், டிஸ்ட்ரிப்யூஷன் என எல்லா வகையிலும் கான்டாக்ட் உள்ளவர். ஸ்ரீதர் சொன்னதையெல்லாம் கேட்டு ‘முதல்ல உங்க ப்ரோடியூசரை மீட் பண்ணுவோம்” என்றார்.

கொஞ்சம் பயத்துடனேயே அவர்களது சந்திப்பு நடந்தது. விதூரன் முழுக்க, முழுக்க சுரேந்தரின் பிரஸ்தாபங்களை இடை மறிக்காமல் கேட்டுக் கொண்டேயிருந்தார். அதனால் விதுரனை சுரேந்தருக்கு மிகவும் பிடித்துப் போனது.  எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “ஒரு நாள் டைம் கொடுங்க. எல்லா ஏரியாவுலேயும் விசாரிச்சுட்டு நான் கன்பார்ம் பண்ணுறேன். என்னுடய சஜஷன் என்னான்னா.. ரவி மாதிரி டிஸ்ட்ரிப்யூட்டரை நீங்க மிஸ் பண்ணினது அவ்வளவு சரியாப் படலை” என்று சொன்னார். 

சுரேந்தருக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், விதூரன் சொன்ன விதம் பிடித்திருந்தது. “அவன விடுங்க சார். நீங்க பண்ணுங்க. நாமளே பெரிய டிஸ்ட்ரிப்யூஷன் கம்பெனி பார்ம் பண்ணுவோம் நீங்க பாத்துக்கங்க” என்று ஆசைக் காட்டினார். விதூரன் சிரித்தபடி ‘ஓகே.’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவர்.

“உங்களைத்தான் பாராட்டணும். எப்படி இந்த ஆளோட படம் பண்ணி முடிச்சிருக்கீங்க?. நீங்க சொல்லுற டேட் பொங்கலுக்கு அப்புறம். ரெண்டு பெரிய படம் ஒரு சின்னபடம் வருது. சரியா பத்து நாள் கேப்புல. ஏதாச்சும் ஒரு படம் தான் ஓடும்ங்குற நம்பிக்கை இருக்கு.  அப்படின்னா டேட் எடுக்க சான்ஸ் நிறைய இருக்கு. லெட்ஸ் சீ” என்று கிளம்பினார்.

அவர் பேசும் விதம் ஸ்ரீதருக்கு நம்பிக்கை கொடுத்தது.  அடுத்த நாள் அலுவகத்திற்கு வந்து அமர்ந்தார். ரிலீஸ் டேட் கன்பார்ம் செய்தார். டிவி விளம்பரங்களுக்கான  ஸ்பாட்டுகளை கிரிஸ்பாய் எடிட் செய்திருந்தான். ரேடியோ விளம்பரங்களையும் கார்க்கி தயார் செய்து வைத்திருக்க, சரியாய் ரிலீஸுக்கு பதினைந்து நாள் முன்பு விளம்பரம் கொடுக்க ஆரம்பித்தார் விதூரன்.

சுரேந்தரின் அலுவலகத்திலேயே தினமும் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார். அவருடய நடவடிக்கையில் பெரிய பரபரப்பே இல்லை. அது சுற்றியிருந்தவர் எல்லாரையும் கலவரப்படுத்தியது. ‘என்னாங்க பதினைஞ்சு நாள்ல ரிலீஸ் வச்சிட்டு இன்னும் தியேட்டரே சொல்லலை” என்று ஸ்ரீதரிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

“படத்தோட ரிலீஸுக்கு தியேட்டர் ப்ளாக் பண்றது எல்லாம் அந்தக்காலம். இன்னைக்கு சினிமாவே வாரக்கடைசி மூணு நாள்னு ஆனபொறவு. அடுத்த வாரப் படத்துக்கு தியேட்டர் லிஸ்ட் திங்கட்கிழமைலேர்ந்து தான் ஸ்டார்ட் ஆகும். சிட்டி, செங்கல்பட்டு தியேட்டர்கள் முக்கியமா மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களை நாம கன்பார்ம்  பண்ணிரலாம்.

ட் எத்தனை ஷோ, எந்த ஷோ எல்லாம் புதன் வியாழன்லதான் தெரியும். சின்ன படங்களுக்கு மார்னிங் ஷோ கொடுக்குறதும், இல்லாட்டி சனி, ஞாயிறு காலைக் காட்சி கொடுக்கிறதும் எல்லாமே புதன் தான் தெரியும். என்ன சின்ன படங்களுக்கு இந்த ஷோ கொடுத்து பிரயோஜனமில்லை.

காலைகாட்சிக்கு படம் நல்லாருக்கா இல்லையான்னு தெரியாம ஆடியன்ஸ் வர மாட்டான். அதே போல காலங்கார்த்தால அதுவும் வீக்கெண்டுல பெரிய ஆர்டிஸ்ட் படத்தை தவிர சின்ன படங்களுக்கு சுவாரஸ்யமே காட்டமாட்டாங்க மக்கள். அந்த ரெண்டு ஷோ கொடுத்தாலும் ஒண்ணுதான் கொடுக்காட்டாலும் ஒண்ணுதான். க்யூபுக்கு பிடிச்ச தண்டம்.

பட் வேற வழியில்லை. காலை காட்சி படம் பார்த்து மக்களுக்கு பிடிச்சிப் போய்  மவுட் டாக்குல அடுத்த நாள் காலைக்காட்சி புல் ஆச்சுன்னா.. சனி, ஞாயிறுல பிக்கப் ஆகி, அடுத்த வார திங்கட்கிழமையிலேர்ந்து ஈவின்ங் ஷோ கொடுத்து ஹிட்டான சின்னப்படம் எத்தனையோ இருக்கு. பட்.. அது நாம எந்த மாதிரி டைம்ல வர்றோம். கூட வர்ற படம் எப்படி ஓடுது அப்படிங்கிறத வச்சித்தான் முடிவு செய்வாங்க.

தியேட்டர்காரங்களையும் தப்பு சொல்ல முடியாது. ஒரு தியேட்டர்ல 120 டிக்கெட் இருக்குனு வச்சிக்கங்க. .50 சதவிகித ஷேர்ல புல் ஆனால் டேக்ஸ் எல்லாம் போக ஆறாயிரம் ஏழாயிரம் தான் தியேட்டர் பக்க வருமானம். அங்க பெரிய நடிகர் படம் போட்டு, அது நல்லாயில்லைன்னு ரிப்போர்ட் வந்தாக்கூட பாதி தியேட்டராவது புல்லாகும்.

ஆனா சுமார்னு ரிப்போர்ட் வர சின்ன படத்துக்கு 20 பேர் கூட வர மாட்டாங்ககுற போது அவங்களோட மல்ட்டிப்ளெக்ஸ் செலவுக்கு கட்டுப்படியாகாது. அவங்களைப் பொறுத்தவரை ஆட்கள் எத்தனைப் பேர் வர்றாங்களோ அத்தனைப் பேரால் விற்கப்படும் காண்டீன் வியாபாரம் தான் லாபம். ஸோ.. எதுக்கு அதிக மக்கள் வருவாங்களோ அவங்களுக்கு முன்னுரிமை. தட்ஸால்.’

விதூரன் எல்லோருக்கும் புரியும்படி பாடமெடுத்தார்.  ஆ வென சுரேந்தர் உட்பட வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.  “இங்க இருக்குற நம்மள எத்தனை பேர் முதல் நாள் முத ஷோ சின்னபடத்துக்கு போறோம்? பெரிய படம்னா ரிப்போர்ட் எப்படி இருந்தாலும் மொத நா மொத ஷோ.. ஏன் அஞ்சு மணிக்கு கூட போய் பார்க்கப் போறோம். எது விக்குதோ அதை விக்குறதுதானே வியாபாரம்?” என்றார்.

மிகச் சரி. ஆனால் எல்லா காலத்திலும் வலியவர்களுக்குத்தான் வியாபாரம் என்று ஆகி அதற்கான காரணங்களை சொல்லி நியாயப்படுத்திட்டிருக்கோம். எல்லாரும் நின்னு ஆடுறதுக்கு இடம் கொடுக்காம எப்படி ஒருத்தனை நீ நல்லா விளையாட முடியாதுனு சொல்றது?” என்ற கேள்வி ஸ்ரீதரிடம் இருந்தாலும், கேட்டு விவாதமாக்க விரும்பவில்லை. எப்படியாவது படம் நல்லபடியாய் ரிலீஸ் ஆனால் போதுமென்று தோன்றியது.

நாட்கள் நெருங்க, நெருங்க பரபரப்பு அதிகமானது. விதூரனுடன் சென்னை விநியோகஸ்தர்கள் அலுவலகம், தியேட்டர் மேனேஜர்கள், அவர்களுக்கான கட்டிங்க் என பல முறைமைகளை தெரிந்து கொண்டான்.  ரிலீஸான மூன்று படங்களில் பெரிய பட்ஜெட் படமும், சின்னபட்ஜெட் படமும் ஹிட். கூடவே வந்த இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தின் ரிசல்ட் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை என்ற செய்தி அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

படம் ரிலீஸுக்கு இன்னும் எட்டு நாட்களே இருக்கும் பட்சத்தில் அலுவலகமே பரபரப்பானது. போஸ்டர், பேனர்கள் விளம்பர கம்பெனி பேமெண்ட் என பணம் மீண்டும் தண்ணீராய் செலவானது.  சுரேந்தர் பணம் கொடுக்கும் போதெல்லாம் ‘இத்தினி செலவு இருக்கா? ரிலீஸுல?”என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.

பட தயாரிப்பு எப்படி ஒரு கலையோ? அது போல விநியோகமும் ஒரு கலை தான். படம் தயாரிக்கும் போது ஒரு வருடம் கூட எடுத்துக் கொள்ளலாம் ஆனால் விநியோகத்திற்கு  ஒரு வாரம் மட்டுமே அதிலும் கடைசி நிமிடங்கள் மிக பரபரப்பானவை.

மொத்தமாய் 142 தியேட்டர்கள் ரிலீஸுக்கு ரெண்டு நாள் முன்னாள் விதூரன் கன்பார்ம் செய்தார். இவர்களுக்கு கிடைத்த தியேட்டர்கள் பெரும்பாலும், சுமாராய் ரிப்போர்ட் வந்த பெரிய பட்ஜெட் படத்தின் தியேட்டர்கள் தான் கொடுத்திருந்தார்கள்.

ஸ்ரீதர் சந்தோஷமாய் இருந்தான். நூற்றுச் சொச்சம் தியேட்டர்களில் ஒரு புதுமுகம் நடித்த படத்திற்கு கிடைப்பது நல்ல விஷயம். பி.ஆர்.ஓ மூலமாய் பல சேனல்களுக்கு ராம், ப்ரேமியுடன் பயணப்பட்டான். நிறைய, நிறைய பேசினான். எங்கேயும் எல்லா இடங்களிலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நல்ல விதமாகவே இருப்பதாய் அவனுக்கு பட்டது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு ராமுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. டிவி சேனல்களில் தமிழ் நாட்டில் ஸ்மார்ட்டான ஹீரோக்கள் வலம் வந்து நாளாகிவிட்டது என்று புகழ்ந்தார்கள். ப்ரேமி தன்னை மிகவும் க்ரேஸ்புல்லாக காட்டிக் கொள்ள பழகியிருந்தாள். முகத்தில் எப்போது ஒரு குழந்தைத்தனத்தை மெயிண்டெயின் செய்தாள். அது அவளை இன்னமும் இன்னொசெண்டாய் காட்டியது.

தனக்கு இது முதல் படமென்றாலும், ஒரு நாயகிக்கான முக்கியத்துவம் உள்ள கேரக்டரை கொடுத்து சிறப்பாக நடிக்க வைத்ததுக்கு ஸ்ரீதருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றாள். ப்ரேமி அப்படி சொன்னதை பற்றி சுரேந்தர் புலம்பினார்.

“நான் வாய்ப்பு குடுக்கலைன்னா. எங்கயாவது ஒரு லாட்ஜுல இருந்திருக்க வேண்டியவ” என்று கோபப்பட்டார். நேரிலும் வெளிப்படுத்தினார். ப்ரேமி கோபப்படாமல் அவர் அருகில் அமர்ந்து லேசாய் அணைத்து. “அய்யோ.. சாரி.. நேனு.. மறந்துட்டேன். இனிமே வர்ற இண்டர்வியூல நிச்சயம் சொல்லுறேன்” என்றாள். அவளின் சாகமான அணைப்பு சுரேந்தரின் கோபத்தை தணித்தது.

ராம் இம்முறை யாரையும் விட்டு விடவில்லை. மிக தெளிவாய் யார் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் சரியாய் சொல்லி தன்னை, தன் படத்தை, வரப் போகும் படங்களைப் பற்றி சொல்லி நிலைநிறுத்திக் கொண்டான்.

ஸ்ரீதருக்கு பட ரிலீசுக்கு பின் வந்து லைன் சொல்லும்படி ஆடியோ லாஞ்சின் போது சொன்ன தயாரிப்பாளர் அழைத்து நியாபகப்படுத்தினார். நிச்சயம் வருவதாக சொல்லி போன் கட் செய்யும் போதே இன்னொரு நிறுவனத்திலிருந்து கால். அவர்களுக்கும் ஒரு நல்ல திரில்லர் வேண்டுமென்றார்கள். சந்திப்பதாய் சொல்லி குதூகலமாய் இருந்தான். எல்லா சேனல்களிலும் பேசிப் பேசி தொண்டை வரண்டு போயிருந்தது.

ராம், ப்ரேமி மேனேஜர், ஸ்ரீதர் என ஒரே காரில் தான் இண்டர்வியூக்களுக்கு பயணப்பட்டிருந்ததால் ஒவ்வொருவராய் ட்ராப் செய்துவிட்டு, ஸ்ரீதர் அலுவலகத்திற்கு வரும் போது  மணி பத்து. விதூரன் மட்டுமே அமர்ந்திருந்தார்.

“என்ன சார் வீட்டுக்கு போகலையா?” என்று கேட்டபடி ஷுவை கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

“உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றார். அவருடயை பீடிகை கொஞ்சம் படபடப்பை கொடுத்தது.

“என்னா சார்?”

“நாம படத்தை தள்ளி வைக்க முடியுமா?”என்றார் விதூரன்.

- தொடரும்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close