[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 25 May, 2018 12:34 pm
  • அ+ அ-

”நான் இனிமே கோ டைரக்டரா எல்லாம் வேலைப் பார்க்கப் போறதில்லை” என்ற ராமராஜின் குரலில் ஒர் அழுத்தம் இருந்தது.

“என்னண்ணே சொல்றீங்க?”

“ஆமா ராம். எத்தினி நாளைக்குத்தான் இவனுங்களுக்கு சொம்பு தூக்கிட்டே இருக்கிறது.”

”அண்ணே.. ஸ்ரீதர் கம்பெனி நல்ல கம்பெனி. அவனேத்தான் உங்களை கூப்பிடச் சொன்னான்.. நீங்க அங்க இருந்தா எனக்கும் ஒரு விதத்துல நல்லதுண்ணே. எனக்காக ரெகமெண்ட் பண்ண உள்ளே ஒரு ஆளு இருப்பீங்கன்னு தான்..” என்று இழுத்தான்.

”டேய்.. எல்லாம் நான் பாத்துக்கறேன் உடனே நம்ம ஜில்ஜில் ஒயின்ஸுக்கு வா” என்றார்.

பழைய ஒயின்ஸ் எல்லாம் டாஸ்மாக் கடைகளாய் ஆகி வருடங்கள் ஆனாலும் வடபழனி சினிமாக்காரர்களுக்கு பிரபா, ஜில்ஜில்,என பழைய பேர்தான் இன்றைக்கும்.

ராம் அங்கே போன போது நல்ல கூட்டமிருந்தது. ராமராஜ் வழக்கம் போல அவரது கார்னர் டேபிளின் உட்கார்ந்திருந்தார். இரண்டு ஆப் பாட்டில்கள் அவர் முன் வீற்றிருந்ததை பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.

வழக்கமாய் ஒரு குவாட்டர், கொஞ்சம் சோகம் அதிகாமாய் இருந்தால் ஒரு கட்டிங். அதற்கு மேல் எப்போதும் அடிக்க மாட்டார். யாராவது வரப் போகிறார்கள் என்று ஊகித்தான். ராமராஜ் அப்படியொன்றும் வாங்கிக் கொடுத்து குடிப்பவர் அல்ல. என யோசித்தபடியே அவரை பார்த்து விஷ் செய்து அமர்ந்தான்.

பார் பையனிடம் ஒரு சிகரட் பாக்கெட் கேட்டார். வழக்கமாய் இரண்டு தான். முதல் பெக் முடிந்ததும் ஒன்று, கடைசியாய் இன்னொன்று. எல்லாமே வழக்கத்துக்கு மாறாய் இருக்க, என்ன இது என்று கேட்காமல் அவரின் முகத்தைப் பார்த்தான்.

அவனின் பார்வையில் இருந்ந்த கேள்வியை புரிந்து கொண்டவர். போல தலையாட்டி “தம்பி..படம் கமிட்டாயிருச்சு.” என்றவரின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

ராமுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே நாளில் இரண்டு நண்பர்களுக்கு பட வாய்ப்பா? என்ற சந்தோஷம் அதிகமாகி “என்னன்னே இப்படி சாதாரணமா சொல்றீங்க? நிஜமாத்தானா? யாரு ப்ரொடியூசர்? என்ன பட்ஜெட்? எந்த கதை? யாரு ஹீரோ ? என்று தொடர் கேள்விகளால் அவரை திக்கு முக்காட வைத்தான்.

அவர் பதில் சொல்லுவதற்குள் அவரது நண்பர் வந்து சேர்ந்தார். அவரை நீங்கள் பல டிவி சீரியல்களில் பார்த்திருப்பீர்கள். சீரியல் பாக்கும் பழக்கமில்லை என்றால் வாரத்துக்கு நாலு படம் ரிலீஸாகும் தமிழ் சினிமா உலகில் ஏதாவது ஒரு படத்தில் அஸிஸ்டெண்ட் கமிஷனர், டாக்டர், கலெக்டர் என்று ஆங்காங்கே பார்த்திருக்க வாய்ப்புண்டு.

அவரிடமும் விஷயத்தை  சொன்ன மாத்திரத்தில்   இதே கேள்விகளை கேட்க, “அடடா.. இருங்கப்பா. ரெண்டு பேருக்கும் சொல்லுறேன்” என்று தொண்டைய கனைத்துக் கொண்டு “தயாரிப்பாளர் திருப்பூர்க்காரர். சின்ன வயசிலேர்ந்து சினிமா ஆர்வம். நல்லா சம்பாரிச்சு ஒரு படம் பண்ணிரணும்னே தனியே காசை எடுத்து வச்சிட்டு படம் தயாரிக்க இறங்கியிருக்காரு. நல்ல மனுஷன். அவர் என்னை செலக்ட் பண்ணதுக்கான மொத காரணமே என்னோட எக்ஸ்பீரியன்ஸ்தான்.”

என்று பேசியபடியே ரெண்டு க்ளாஸ்களை எடுத்து நண்பருக்கும் அவருக்குமாய் ஊற்றிக் கொண்டு, “டேய் உனக்கு ஏதாச்சும் நல்ல சைட்டிஷ்ஷா ஆர்டர் பண்ணிக்க” என்றார். ராமராஜ் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறார் என்பது அவரது குரலிலும், நடவடிக்கைகளிலும் தெரிந்தது.

“அண்ணே.. இந்த வாட்டி தப்பாதில்லைன்ணே?” என்ற கேள்வியை அவருடய நண்பர் கேட்ட மாத்திரத்தில் சட்டென கோபத்துடன் “தூ.. அபசகுனமா பேசாதா?” என்று சொல்லிவிட்டு சரக்கை ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவனையே மேலும் உற்று கோபத்துடன் பார்த்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அமைதியாகி, “நீ கேக்குறதும் சரிதான். இத்தோட முப்பதாவது ப்ரோடியூசர். அதுல பாதி ஆபீஸ் போடக்கூட இல்லை. 12 படம் ஆபீஸ் போட்டு பூஜையோட நின்ருச்சு.. மூணு படம் ரெண்டு நாள் மூணு நாள் ஷூட்டிங்கோட ஸ்டாப்பாயிருச்சு. தமிழ் சினிமாவுலேயே இத்தனைபடம் பூஜை, ஆபீஸ், ஷூட்டிங் பார்த்தவன் நானாத்தான் இருப்பேன்” என்றார் விரக்தியில்.

எதுவும் பேசாமல் எதிரில் ஆள் இல்லாததைப் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

டாஸ்மாக்கின் இறைச்சலை மீறி அங்கு அமைதி நிலவியது.

”இந்த வாட்டி அப்படி எதுவும் நடக்காது ராம். ஜெயிக்கிறேன். இத்தனை வருஷமா மத்தவனுக்காக உழைச்சதை இனிமே எனக்காக உழைக்கப் போறேன். நல்ல கதை இருக்கு. வேலை நல்லா தெரியும். ஒத்த அசிஸ்டெண்ட் கூட இல்லாம என்னால படம் பண்ண முடியும். இந்த முறை நிச்சயம்” என்று சூளூரைத்து கடைசி பெக்கை இருவரும் அடித்துவிட்டு. ராமைப் பார்த்து “ஹீரோ” என்று கன்னம் வழித்து கொஞ்சினார்.

ராம் ஏதும் பேசாமல் சிரித்தபடி இருக்க.. “உண்மையாத்தாண்டா.. நீ தான் என் படத்தோட ஹீரோ” என்றார்.

ராமுக்கு சந்தோஷமாய் இருந்தாலும் சினிமாவில் நடக்கும் வரை ஏதும் உண்மையில்லை என்ற நினைப்பிலேயே இருக்க பழகிக் கொண்டதினால் சற்றே அமைதியாய் இருந்தான். ஆனால் அவன் பெரிதும் மதிக்கும் ராமராஜ் சாரின் படம். பல வருட போராட்டத்துக்கு பின் கிடைத்திருக்கும் வாய்ப்பு. அதில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கப் போகிறது என்பது இத்தனை நாள் காத்திருப்புக்கான பலன். எல்லாம் சரியாய் நடந்து வெற்றி பெற வேண்டுமே என்ற பயமும் உள்ளே ஓடியது.

உடன் வந்திருந்த நண்பர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மையமாய் கைகுலுக்கி “சாரி உங்க பேரைக் கேட்கவே இல்லை?” என்றான்.

“நாகப்பன்ங்கிறது என் பேரு. சினிமாவுக்காக நாக்ராஜுனு வச்சிக்கிட்டேன்.. கேரக்டர் ஆர்டிஸ்ட்.. இது வரைக்கும் 124 படம் பண்ணியிருக்கேன். துப்பார்க்கு துப்பாய படம் பார்த்தீங்களா? “ என்று கேட்டவர் ராமின் பதிலுக்காக காத்திராமல் “ப்ரகாஷ் ராஜ் இன்ஸ்பெக்டர். நான் படம் பூரா அவரோட அஸிஸ்டெண்டா வருவேன்.

செராமிக் பூக்கள் படத்துல இந்துஜாவோட அப்பா. நீ வருவாய் என ஜீ டிவி சீரியல் பார்த்திருக்கீங்களா? அதுலே நான் தான் வில்லனோட லாயர்” அவர் சொன்ன எதையும் ராம் பார்த்ததில்லை துப்பார்க்கு துப்பாய படம் பார்த்திருந்தாலும் இவர் முகம் நியாபகம் வரவில்லை. மையமாய் சிரித்தான்.

’18 நாள் நடிச்சேன். மொத்தம் இரண்டு பக்க டயலாக் இருந்துச்சு. எல்லாம் எடிட்டிங்குல போச்சு. என் கூட நடிக்க வந்தவங்க எல்லாம் நல்லா செட்டிலாயிட்டாங்க.. நான் தான் டிவில ஒருகால் சினிமால ஒரு கால்னு மாட்டிக்கிட்டு அவஸ்தப்படறேன். சீரியல்ல சினிமா ஆர்டிஸ்ட் ஒழுங்கா டேட் தர மாட்டீங்கன்னுவானுங்க. இங்க சினிமால கேட்டா சீரியல்ன்னா திடீர்னு ஓடிருவீங்க. நமக்கு செட்டாவாதுனு சொல்லுவானுங்க.

சரி அப்படி எதையாவது ஒண்ணை விட்டாத்தான் ஜெயிக்க முடியும்னு நம்ம சூப்பர் ஆக்டர் படத்துல ஒரு ரோலுக்காக ரெண்டு சீரியல்ல வந்த கேரக்டரை வேண்டாம்னேன். மாசத்துல பத்து நாளுன்னுட்டு, எட்டு மாசம் சூட்டிங் நடத்துனாங்க. படம் ரிலீஸாச்சு. மிகப் பெரிய பெயிலியர்.

என்னை யாரும் கண்டுக்கவே இல்லை. ஜெயிக்கிறவங்களோட இருந்தாத்தான் நமக்கான அங்கீகாரம் இல்லாட்டி தெருவோரம் தான் என்று தன்னுடய ரைமிங்கை நினைத்து தானே சிரித்தார்.

“சினிமாவுல நடிக்கிறதுக்காக வரலை. ஆனால் தமிழ் நாட்டுல இருக்குற பாதி பேரைக் கேளுங்க எல்லாருக்குமே இந்த ஆசை இருந்திட்டே தான் இருக்கும். உண்மையச் சொன்னா வறுமைக்காகத்தான் இந்த வேலைக்கு வந்தேன்.

நண்பர் ஒருத்தரோட பிஸினெஸ் பண்ணிட்டிருந்தேன். பெரிய லாஸ். ஊரு முழுக்கக் கடன். பொண்டாட்டிக்கு பெரிய படிப்பில்ல. கிடைச்ச வேலைக்கு போனாலும் பத்தலை. தெனம் க்ரெடிட் கார்டு, ஈ.எம்.ஐனு க்யூ கட்டி நிக்க ஆரம்பிச்சானுங்க..

பசங்க ரெண்டு பேரும் பத்து, பண்ணெண்டு க்ளாஸ்.  நான் வேலைக்குனு போய் பதினேழு வருஷம் ஆயிருச்சு. என் சர்டிபிகேட் கூட எங்கருக்குனு தெரியாது.

கடன் காரன் ஒருத்தனுக்கு பயந்து காலங்கார்த்தால வடபழனி பஸ் ஸ்டாப்புல உக்காந்திருந்தேன். ஒருத்தர் வந்தாரு. சார்.. உங்களுக்கு நடிக்க ஆசையிருக்கான்னு கேட்டாரு. பணம் கொடுத்தா  குட்டிக்கரணம் கூட போடுவேன்னேன். சரி வாங்கன்னு கூட்டிட்டு போனாரு. அன்னைலேர்ந்து இந்த குட்டிக்கரணம்.

கொஞ்சம் கொஞ்சமா ஏஜெண்டுங்க ஆர்டிஸ்ட்லேர்ந்து, அஸிஸ்டெண்ட் டைரக்டர்களை பிடிச்சி சின்னச் சின்ன கேரக்டர் வாங்கிட்டிருக்கேன். சேர்ந்தாப்புல நாலு டயலாக் வந்தா படத்துல இல்லாம போயிரும். இல்லாட்டி பெரும்பாலும் டாக்டர், வக்கில், போலீஸ்னு ஒடிட்டிருக்கு.

மாசத்துல 20 நாளு அப்படி இப்படினு நாளைக்கு 1500 தேத்திருவேன். சாப்பாடு, டிபன் எல்லாம் ஷூட்டிங்கிலேயே. ராச்சாப்பாடு மட்டும் தான் வீட்டுல. மிச்ச நாள்ல லோக்கல் கேபிள் டிவி விளம்பரம், ராசிக்கல்லு, முக்கியமா இந்த குறும்படப்பசங்க மாட்டினா மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்கலாம்.

நல்லா டயலாக் கிடைக்கும். என்ன படம் யூட்யூப்புல தான் வரும். அதை வச்சித்தான் கொஞ்சம் அங்க இங்க சமாளிச்சிட்டிருக்கேன். என்னைக்காச்சும் ராமராஜ் சார் போல நம்ம திறமை அறிஞ்சு வாய்ப்பு கிடைக்கும்னு காத்திட்டிருக்கேன்” என்று சொல்லியபடி, சப்ளை செய்தவனை அழைத்து “பில் எவ்வளோ” என்றார்.

ராமராஜ் முழு போதையில் இருந்தார். ராமுக்கு நாக்ராஜை பார்ப்பதற்கு வருத்தமாய் இருந்தது. தனக்கான எந்தவிதமான தனித்தன்மையும்  இல்லாமல் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆவது அவ்வளவு சுலபமில்லை என்று  எப்படி அவருக்கு சொல்வது என்று புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 07https://bit.ly/2GOBZp1

பகுதி 06 - https://bit.ly/2INuNyy

பகுதி 05 - https://bit.ly/2Ita6rC

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close