[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 06 - பிரேமி


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 10 May, 2018 17:59 pm
  • அ+ அ-

“என்னை ஹீரோயினா செலக்ட் செய்துறாதீங்க” என்று சொன்ன பிரேமியின் கண்களில் நிஜம் தெரிந்தது.

ஸ்ரீதர் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மையமாய் பார்த்தாள். “அதேண்டிவே அலா செப்பேசாவூ” என்று பெரிய பொட்டு பதட்டமடைந்தததைப் பார்த்து அவள் புன்முறுவல் பூத்ததை மட்டும் கவனித்தான்.

பிரேமிக்கு சொந்த ஊர் பாலக்கொல்லு. தற்போதைய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மேற்கு கோதாவரி மாவட்டக்காரி. ஏற்கனவே அவளை வர்ணித்திருப்பதால் விவரணைகள் உங்களுக்கு தேவையில்லை. 

சிறு வயது முதலே பிரேமியின் அம்மாவுக்கு சினிமாவில் சேர வேண்டுமென்று விருப்பம். சற்றேறக்குறைய பழைய ஜெயந்தி போல இருப்பாள். என்ன ஏது என்றே தெரியாத வயதில் கல்யாணம். பிரேமி. பிரேமியின் அப்பா இருந்தவரை அவளின் ஆசைக்கான வாய்ப்பு அமையவேயில்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் அவன் வேறொருத்தியை கூட்டிக் கொண்டு ஓடிப் போன போது பிரேமிக்கு நான்கு வயது.

தற்போது பிரேமியுடன் உடன் வந்திருக்கும் பெரிய பொட்டு அவளுடய அம்மா இல்லை. சித்தி.

எட்டு வயதில் ஸ்கூல் நிகழ்வு ஒன்றில் “அப்பனி தீயனி தெப்பா” என்ற ஸ்ரீதேவியின் பாடலுக்கு  பிரேமி காட்டிய எக்ஸ்பிரசன்களை பார்த்து “நுவ்வு பெத்த ஸ்டார் ஆவப்போத்துன்னாவூ” என்று  பிரேமியின் கன்னத்தை கிள்ளி பாராட்டிய ஏதோ ஒரு ராவ் இயக்குனர் சொன்னதை வேத வாக்காய் எடுத்துக் கொண்டு, அவளுடய அம்மாவுக்கு இவளை மீடியாவில் ஏதாவது ஒன்றாய் ஆக்க வேண்டுமென்ற ஆசை ஆவேசமாய் மாறி ஆந்திராவில் உள்ள அத்தனை சேனல்கள்களில் வரும் டான்ஸ் ஷோக்களில் அவளை பங்கேற்க வைக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள்.

குட்டிக் குட்டி சேனல்களில் ஆரம்பித்து, பெரிய சேனல்கள் வரை முட்டி மோதி வாய்ப்பு வாங்கி, செமி பைனல் வரைக்கும் தான் வர முடிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அடுத்த லெவல் வருவதற்கு திறமையை விட ஏகப்பட்ட இடை நிலை தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது.

முக்கியமாய் ஜாதி இன்ப்ளூயன்ஸ். ஆனால் அது கூட முதல் நிலை வரைக்கும் தான். அடுத்த நிலைக்கெல்லாம் பல அட்ஜெஸ்ட்மெண்ட் ப்ரெஷர்கள் குழந்தைகளை விட அம்மாக்களுக்குத்தான் அதிகம்.

செமிபைனல் ஹிட்டை வைத்து  ரெண்டொரு சின்ன பட்ஜெட் படங்களில் தலைகாட்டினாள். ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை. எப்போதுமே உள்ளூர் நடிகைகளுக்கு உள்ளூர் சினிமாவில் மரியாதை இல்லை நீ அவளை இங்க அனுப்பு நான் பார்த்துக்குறேன் என்று பிரேமியை அழைத்து வந்தவள் பெரிய பொட்டு ஸ்ரீ.

சின்ன வயதிலேயே காதல். ஸ்ரீயின் கணவன் வீட்டை விட்டு ஓடிவந்த நான்கைந்து வருடங்களுக்குள் ஒரு வெய்யில் கால குளிர் ஜுரத்தில் அகாலமாய் இறந்து போனான்.

பிழைப்புக்கு ஜுனீயர் ஆர்டிஸ்டாய் வலம் வந்தவள். கூட்டத்தோடு கூட்டமாய் ஓடும் காட்சியில் தடுக்கி விழுந்து கால் ஒடிந்து வீழ்ந்த போது, உடல் குண்டானது குறையவேயில்லை. நடிப்பு பிழைப்பும் காலியாக வேறு வழியில்லாமல் தன் வீட்டை தன்னுடன் ”தொழில்” செய்யும் பேமிலி பெண்களுக்கு வாடகைக்கு விட்டும், கூட்டிக் கொடுத்தால் கமிஷன் பெற்றும் இருந்தவளுக்கு பிரேமி தான் பொக்கிஷம்.

அதீதமான உடலும், சொப்பு உதடுகளும், அத்தனையும் மீறிய குழந்தைத்தனம் நிறைந்த முகம். நிச்சயம் வெற்றி பெறக்கூடிய முகம். தேவை ஒரு நல்ல ப்ரேக். அவள் தான் தன் முதலீடு என்று தன் பெருத்த உடல் பிரச்சனையை மீறி தீயாய் பிரேமியை நாயகியாக்குவேன் என்று முயன்று கொண்டிருப்பவள்.

ஆனால் பிரேமியை பார்க்கும் அனைவருக்கும்  அவளின் நடிப்பு, அழகை விட, அவளின் உடலின் மேல் தான் விருப்பம் அதிகமாய் இருந்தது.

எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டுமென்ற வெறி பிரேமியிடம் இல்லவே இல்லை. சந்திக்கிறவர்கள் எல்லாருமே முகத்தை பார்த்த மாத்திரத்தில் நெஞ்சைப் பார்ப்பதும், பக்கத்தில் உட்கார வைத்து தொட்டுத் தொட்டு பேசுவது கோபமாய் கொடுத்தது. அவளுக்கு அது பிடிக்கவேயில்லை.

ஆனால் சித்தி விட மாட்டாள். அம்மாவிடம் சொன்னால் நீ தான் பார்த்து நடந்துக்கணும் கண்ணு என்பாள். அவளுக்கு பிரேமி எங்கே திரும்பி வந்துவிடுவாளோ என்ற பயம் அதிகம். சமீபத்தில் தான் அங்கே ஒரு ரெட்டிகாருவிடம் செட்டிலாக முயன்று கொண்டிருக்கிறாள். பிரேமியின் வருகை அவளிடத்தை ஆட்டுவிக்கும். அந்த அளவுக்கு ரெட்டி வீக்.

புதுப்புது நாயகிகளை திரையில் பார்க்கும் போதெல்லாம் இவங்களுக்கெல்லாம் இப்படி நடக்காதோ? என்று பிரேமிக்கு தோன்றிக் கொண்டேயிருக்கும். ஆனால் அவளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இயக்குனர்கள்.

பல ஆடிஷன்களைத் தாண்டி கடைசியாய் தயாரிப்பாளரிடம் நிற்கும் போது அட்ஜெஸ்ட் மெண்ட் என்பதில் தான் நின்றாள் . முடியாது என்றாள். ப்ராஜெக்டில் அவளில்லை அவ்வளவுதான்

போன வாரம் அப்படியான ப்ராஜெக்ட் ஒன்றின் இயக்குனன். முதல் படம். போன் செய்து காபி ஷாப் வரச் சொன்னான். தான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறேன். எவ்வளவு போராட்டம், அவமானம் என்று சொல்லிக் கொண்டே போனான்.

பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாய் அவள் கண்களை பார்க்காமல் “அவன் கிழவன். ஒண்ணும் பண்ணமாட்டான் சும்மா தடவிட்டு ஊரெல்லாம் பெருமை பேசுவான். அவ்வளவுதான் எனக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்க. இந்த படம் உன்னை எங்க கொண்டு போய் விடும்னு எனக்கு தெரியும். யோசி” என்றான்.

பிரேமிக்கு அவனைப் பார்க்க பாவமாய் இருந்தது. ஒரு கிரியேட்டர். வாய்ப்புக்காக எதையெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட தன் நிலைதான் அவனுக்கும் என்று புரிந்தது.  அதை வெளிப்படுத்தாமல் ” எவ்வளவு டேலண்டான ஆளூ. உங்கள இந்த வேலை பண்ண வச்சிட்டாங்களே?” என்றதும் திடுக்கென நிமிர்ந்து பார்த்தான். கண்களில் அடிப்பட்ட பார்வை தெரிந்தது. விருட்டென எழுந்து போய்விட்டான்.

சற்று நேரம் கழித்து “சாரி.. நான் அப்படி கேட்டிருக்க கூடாது. ஐ லவ் யுர் செல்ப் ரெஸ்பெக்ட்” என்று வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினான். அந்த படம் ட்ராப் ஆனது.

பின்னொரு நாளில் ஒர் பெரிய படத்தில் கமிட்டானான். நேரில் போய் சந்தித்து வாழ்த்து சொன்னாள். “இதுல உனக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. பெரிய டீம் எல்லாருமே எஸ்டாப்ளிஷ் ஆர்டிஸ்ட். ஹீரோயின் மட்டும் மும்பை மாடல். ப்ரொடக்ஷன் சாய்ஸ்” என்று சொல்லி தலை குனிந்தான். நெக்ஸ்ட் ப்லிம்ல பார்க்கலாம்” என்ற போது அவன் பேச ஆரம்பித்த குரல் இல்லை. கரகரத்ததிருந்தது.

நிஜம் புரிந்தாலும் பிரேமிக்கு ஏனோ ஒப்பவில்லை. அதுவும் இன்று பார்த்த சுரேந்திரன் இம்சை. அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க வேண்டுமாம். அதற்காக என்னென்ன செய்தான்? அதுவும் அத்தனைப் பேர் முன்னிலையில்? ஒரே அடி முகத்தை பேத்து விடலாமா? என்று கூட யோசித்தாள். ஆனால் அப்படி செய்ய முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாய் இந்த மாதிரியான சீண்டல் தடவல்களுக்கு அவள் பழகிவிட்டாள்.

அசந்தர்ப்பமாய் எங்கெல்லாமோ தடவுவார்கள். ரியாக்ட் செய்யாமல் இருந்தால் முன்னேற்றமடைந்து தடவல் அழுத்தலாய் மாறும். பிரேமி சிலிர்ப்பாள். சின்ன ஜெர்க்கைக் கொடுப்பாள். அது அவர்களிடம் ஒரு சின்ன தயக்கத்தை ஏற்படுத்தும், முகத்தை ஏறெடுத்து பார்க்க மாட்டாள்.

நிறைய பேரை கோபப்படுத்தும். கொஞ்சமாவது மானமுள்ளவன் இப்படி தாவாங்கட்டையை பிடித்து மூணு மணி நேரம் கெஞ்ச மாட்டான்.

முதலில் அவளுக்கு சுரேந்திரனை பிடிக்கவில்லை. நிச்சயம் அவளை நாயகியாய் ஆக்க வேண்டுமென்று சொல்லியிருப்பான் என்று நம்பினாள். அதனால் தான் “என்னை ஹீரோயினா போட்டுறாதீங்க” என்றாள்.

“இன்னும் எதுவுமே ஸ்டார்ட் ஆகலை. ஆபீஸ் ஆடிஷன்னு நிறைய இருக்கு” என்று சிரித்தபடி பிடிகொடுக்காமல் சொன்னான்.

பிரேமி ஏதும் பேசாமல் சிரித்தபடி “ராம்மா.. வெல்தாம்” என்று சித்தியை அழைத்துக் கொண்டு கிளம்பும் போது ராம், ஸ்ரீதரின் கையை பிடித்து “ ஆல் த பெஸ்ட்” என்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டு கிளம்பினாள்.

அவள் போவதையே ஸ்ரீதர் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்ப்பதை மேலிருந்து சுரேந்தரனும், வெள்ளைச்சட்டை அல்லக்கையும் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“பையன் அதுக்குள்ள பிக்கப் பண்ணிட்டான் போல?  என்று எடுத்துக் கொடுக்க, கையில் இருந்த சிகரெட்டை ஆழமாய் இழுத்தபடி, “அவனா? வச்சிருவான்? கமிட் மட்டும்தான் ஆயிருக்கான். படம் முடிஞ்சாலும் ரிலீஸ் பண்றது என் கையிலனு அவனுக்கு புரியும்” என்று எகத்தாளமாய் சிரித்தபடி புகையை விட்டார்.

ஹோட்டலுக்கு வெளியே வந்ததும், ஸ்ரீதர் போனை எடுத்து இயக்குனர் ராஜாவுக்கு போன் அடித்தான்  ராஜா போன் எடுத்த மாத்திரத்தில் “எங்கடா புடுங்க போயிட்ட?”  என்றான்.

”எனக்கு படம் கமிட்டாயிருச்சு சார்.” என்றான்

எதிர் முனையில் சிறிது நேரம் பதிலேயில்லை. “ என் படம் முடிக்காம நீ போனா வெளிய என் அஸிஸ்டெண்டுன்னு சொல்லிக்கவே கூடாது” என்றான் ராஜா.

”சரிடா “ என்றான் ஸ்ரீதர்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 05 - https://bit.ly/2Ita6rC

பகுதி 04 - https://bit.ly/2wp2l10

பகுதி 03 - https://bit.ly/2I6M3Lo

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close