[X] Close

'24' சலனங்களின் எண் - பகுதி 05


cable-sankar-series-24-series

  • கேபிள் சங்கர்
  • Posted: 04 May, 2018 10:49 am
  • அ+ அ-

”நீங்க எடுத்தது சினிமாவே இல்லை சார்” என்ற ஸ்ரீதரை பிரேமி மாத்திரம் அல்ல, அந்த அறையில் இருந்த அத்தனை பேரும் திடுக்கிட்டு நிமிர்ந்தார்கள். ஸ்ரீதரை கோல்ட் ப்ரேம் என்.ஆர்.ஐ சின்னமனூர்.சி.சுரேந்திரனும் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தார்.

அந்த அறையில் ஒர் அதீத அமைதி உருவானது. அதை கலைக்கும் விதமாய் அல்லக்கைகளில் ஒன்று ‘யார் கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?” என்று ஒருமையில் ஆரம்பிக்க, சுரேந்திரன் கையுயர்த்தி, அவரை அமைதிப்படுத்திவிட்டு, “அப்ப நீ ஒரு நல்ல படம் எடுத்து காமி பார்கலாம்” என்றார்.

அவரிடமிருந்து அந்த பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ”சாருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்துச்சுன்னா. அவரோட படத்தப் பத்தி தப்பா சொல்லியும் உன்னை டைரக்டராக்க ஆசைப்படுவாரு” என்று மீண்டும் துதி பாட ஆரம்பிக்க, ஸ்ரீதருக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

முகத்தில் அடித்தார்ப் போல உண்மையைச் சொல்லியும் தன்னை டைரக்டராய் பிக்ஸ் செய்கிறேன் என்கிறாரே.. நிஜம்தானா? இல்லை பிரேமியை வைத்து விளையாடுவது போல, என்னையும் வைத்து விளையாடுகிறாரா? என்று குழப்பமாய் பார்த்தான்.

“என்னடான்னு ஆச்சர்யமா இருக்கா? நீ சொன்னத வச்சி நான் உன்னை செலக்ட் பண்ணலை. இதோ இந்த பாப்பா.. காலையிலேர்ந்து முகத்தை நிமிர்த்த அத்தனை பாடு பட்டுட்டிருதேன் நீ சொன்ன பதில்ல முகத்தை நிமிர்த்திருச்சே. அதுக்காக” என்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளியபடி பேசினார்.

ஸ்ரீதர் அமைதியாய் இருந்தான். இப்போது பிரேமியை முழுமையாய் பார்த்தான். தெலுங்கு பெண்களுக்கே உரிய மெல்லிய உதடுகளும், அகன்ற தோளுமாகவும் இருந்தாள்.  அவள் கண்களில் இன்னமும் ஸ்ரீதர் மேல் இருந்த ஆச்சர்யம் போகவில்லை.

“சார் கதை என்னைக்கு கேக்குறீங்க?”

“அதுக்கு நாளு நட்சத்திரம் பாக்கணுமா என்ன? இப்பவே சொல்லு” என்றார் சுரேந்திரன்.

ஸ்ரீதர் தயக்கமாய் ‘இல்ல சார்..” என்று இழுத்தான்

“என்னய்யா.. இதுக்கும் ஏதாச்சும் கருத்து வச்சிருக்கியா?” என்றார் கிண்டலாய்.

சம்பந்தமேயில்லாத அல்லக்கைகள், வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு முன்னால் கதை சொல்ல ஸ்ரீதருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. “சரக்கடிக்கிறப்போ கதை கேட்டா சரியா ரிசீவ் பண்ண முடியாது சார்” என்றான்.

“அப்ப நான் குடிய விட்டுட்டு திருந்தும் போது கூப்ட்றேன். வந்து கதை சொல்லு” என்று ஓக்காளமாய் சுரேந்தர் அல்லக்கைகளுடன் சேர்ந்து சிரிக்க, பிரேமி ஸ்ரீதரின் முகம் வாடி நிற்பதை பரிதாபமாய் பார்த்தாள்.

சட்டென அம்மாவின் காதில் ரகசியமாய் ஏதோ சொல்ல, பெரிய பொட்டுக்கு முகம் கோணியது. “டேட்டு இப்புடு லேதே” என்று முணுமுணுத்தபடி, சுரேந்தரின் காதருகில் குசுகுசுக்க, “இது ஒண்ணு உண்மையா இல்லையான்னு பாக்கவா முடியும். சரி கிளம்புங்க” முகத்தை ஒரு மாதிரி சுளித்தபடி சொல்ல, பொட்டுக்காரி தயக்கமாய் “கன்வேயன்ஸூ” என்று இழுத்தாள்.

சுரேந்தர் கடுப்பாய் சட்டை பையிலிருந்து ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். சந்தோஷமாய் வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு கிளம்ப, போகிற போது பிரேமி ஸ்ரீதரை பார்த்துக் கொண்டே சென்றாள்.

“என்னய்யா கதை சொல்லுறியா? இல்ல கிளம்புறியா?” என்று சுரேந்தர் கிண்டலான குரலில் கேட்க, வேறு வழியேயில்லாமல் ஸ்ரீதர் கதை சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பத்தில் சுவாரஸ்யமில்லாமல் கதை கேட்ட குழு, மெல்ல அவன் கதை சொல்லும் பாணியில் ஆழ்ந்து போனார்கள். கண்முன் படம் ஓடியது போல இருந்தது. ஸ்ரீதர் கதை சொல்லி முடித்த போது ரெண்டு மணி நேரம் கடந்து சுரேந்தரின் ஆஷ்ட்ரேயில் சிகரட் துண்டுகள் வழிந்தோடியிருந்தது.

அல்லக்கைகள் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். வெள்ளை சட்டை “சூப்பர் தம்பி” என்று சொல்லிவிட்டு, “இல்லண்ணே” என்று அவரின் ஆமோதிப்புக்காக காத்திருந்தார். சுரேந்தர் எழுந்து ஸ்ரீதரின் கையை எடுத்து குலுக்கி, “சூப்பர் படம் பண்றோம்.” என்று பக்கத்திலிருந்த பெட்டியிலிருந்து செக் புக்கை எடுத்து பில் செய்து கிழித்து “அட்வான்ஸ் வச்சிக்கங்க. நாளைக்கு ஆபீஸ் வந்து மேனேஜர்கிட்ட அக்ரிமெண்ட் சைன் பண்ணிருங்க’ என்றார்.

ஸ்ரீதருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “தேங்க்ஸ் சார்.. தேங்க்ஸ் சார்..” என்று அவரின் கையை அழுத்தமாய்பிடித்து குலுக்கிக் கொண்டேயிருந்தான். சட்டென உணர்ந்து கை விலக்கி, “நாளைக்கு வர்றேன் சார்” என்று கிளம்புவதற்கு எத்தனிக்க, சுரேந்தர் ஒரு க்ளாஸை எடுத்து அதில் சரக்கை நிரப்பி, “இப்ப அடிங்க. ஒரே ஒருபெக். கொண்டாட்டத்துக்காக’ என்றார்.

ஸ்ரீதர் தயங்கினான்.  நிச்சயம் ஒரு பெக்கோடு நிற்காது. அப்படி போனால் வீணான பேச்சுக்கள் நிச்சயம் உண்டாகும். நம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள சரியான நேரம் இது இல்லை. சினிமா டைரக்‌ஷன் என்பது போர் போல. நமக்காக வேலை செய்ய தேர்தெடுத்தவர்களோடே சண்டையிட வேண்டிய களம். கொண்ட்டாட்டத்தில் இறங்கினால் கவனம் சிதறும்.

“இல்லை சார். போலீஸ் பிரச்சன இன்னைக்கு வேணாம். இன்னொரு நாள்.” என்று தயக்கமாய் மறுக்க, நீட்டிய கையில் க்ளாஸோடு இருந்த சுரேந்தரின் முகம் லேசாய் மாறினாலும், கையை கீழிறக்கி, டேபிளின் மேல் க்ளாஸை வைத்துவிட்டு, “சரி கிளம்புங்க” என்றார்.

”தேங்க்ஸ் சார்” என்று எழுந்தவனிடம் “தம்பி… முக்கியமான விஷயம் ஹீரோயினா பிரேமியை போட்டுறலாமா?” என்றார்.

பிரேமி சின்னப் பெண்ணாய் இருந்தாள். அவள் பொருத்தமானவளாய் இருப்பாள் என்று தோன்றவில்லை. “இல்ல சார்.. அவங்க ரொம்ப சின்னப் பொண்ணா இருக்காங்க.. செட்டாவாது. உங்களுக்கே தெரியும் நம்ம கதை ஹீரோயின் கொஞ்சம் மெச்சூர்டு.” என்று இழுத்தான்.

“ஆமாம் மெச்சூர்டுதான். ஆனா எனக்கு மெச்சூர்ட் பொண்ணு பிடிக்காதே. இளசா இருந்தாத்தான் பிடிக்கும். அதனால் அதையே ஓக்கே பண்ணு. இல்லாட்டி இளசா இருக்கிற வேற எவளையாவது ஓகேன்னு சொல்றவள பிக்ஸ் பண்ணு அது உன் வேலை” என்று சொல்லி க்ளாஸ் சரக்கை மடக்கி அடிக்க,

“சார்.. அது என் வேலை இல்லை சார்..”

சுரேந்தர் முறைத்தார். வெள்ளை வேட்டி அல்லக்கை எழுந்து ஸ்ரீதரை தள்ளிக் கொண்டு வெளியே வந்து “தம்பி. ஏன் எல்லாத்துக்கு முட்டுக் கொடுத்துட்டேயிருக்க.  சார் ஒரு மாதிரியான ஆளு. நாம கதை சொல்லி அசத்திப்புட்டோம்னு எல்லாம் நினைச்சு கனா கானாத. என்னைக்கு டேஞ்சரான ஆளு உங்க தயாரிப்பு. இருவது வருஷமா நான் அவர் கூட இருக்கேன்

தலையாட்டிட்டே போ.. நடக்குறது நடக்கட்டும். உன் படமாவது எங்க கம்பெனிக்கு பேர் வாங்கித்தரட்டும்” என்று சொல்லி, ஸ்ரீதரை வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டு “என்னப்பா சின்னப் பையன் மொத நாளே இப்படி அலமத்துவிடறே..?” என்றார் சுரேந்தரைப் பார்த்து. இப்போது அவர் பேச்சில் அல்லக்கை தொனியில்லை. நட்பும் நெருக்கமும் தெரிந்தது.

“நான் எடுத்தது எல்லாம் படமேயில்லையாமே.. இவன் என்ன எடுக்குறானு பாக்குறேன்.” என்ற சுரேந்தரின் குரலில் கோபமிருந்தது.

“அட என்னப்பா பணம் நம்முது. அது வரலைன்னா நமக்குத்தானே லாஸு. “

”லாஸு” என்று அழுத்தமாய் சொல்லியபடி பாக்கெட்டிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து தன் பின்பகக்த்தில் தேய்த்து தூக்கிப் போட்டார். வெள்ளைச்சட்டை ஏதும் பேசாமல் கீழே விழுந்த பணத்தை எடுத்து அவரிடமே கொடுத்தார். “நான் துடைச்சு போட்டது கூட திரும்ப என்கிட்டேயேத்தான் வரும். அது  போல இவனும் வருவான் என் இழுப்புக்கெல்லாம்” என்று அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தார்.

லிப்டிலிருந்து லாபிக்கு வந்து எது இடது வலது என்று தெரியாமல் அங்குமிங்கும் திரும்பிய போது பிரேமி தன் பெரிய பொட்டு அம்மாவோடு அமர்ந்திருந்தாள். அவளுக்கு பின் பக்கமாய் இருந்த டேபிளில் ராம் அமர்ந்திருக்க, அவனை பார்த்து ஸ்ரீதர் கையாட்டினான். பிரேமி தன்னை நோக்கித்தான் கையாட்டுகிறான் என்று நினைத்து அவளும் கையாட்ட, ஸ்ரீதர் அவளையும் பார்த்தான். மெல்ல அருகில் வந்து “ஹாய்’ என்றான்.

“கதை ஓக்கே ஆயிருச்சா?” அவளின் குரல் மெல்லியதாய் இருந்தது.

“ஆமா அட்வான்ஸ் கொடுத்துருக்காரு”  என்றவனின் கையை அவளேபிடித்து குலுக்கி, “வாழ்த்துக்கள்’ என்றாள். அவள் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. “உங்களுக்கு அன்கம்பர்டபிளா இருக்குமேன்னுதான் அங்கே பொய் சொல்லிட்டு கிளம்பிட்டேன். கீழே வந்தா இன்னொரு ப்ரோடியூசரு இங்கேயே தங்கியிருக்காராம் அவரை பார்க்க அம்மா இருக்க சொல்லிட்டா” என்று சந்தோஷமேயில்லாமல் சொல்ல, அதற்குள் ராம் இருவர் பேசுவதையும் மாற்றி, மாற்றி முகம் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“ராம்.. .இவங்க.. “ என்று இழுக்க,

“பிரேமி”

“ராம்”

”இவங்க அப்கம்மிங் ஹீரோயின். இவரும் ஹீரோ ஆகறதுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காரு” என்று இருவரையும் ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினான். ராமிடம் அட்வான்ஸ் செக்கைக் காட்டி, அடக்கமாய் சந்தோஷித்தான்.

பெரிய பொட்டு அம்மா “நீங்க உள்ளார வரும் போதே தெரிஞ்சுச்சு.. தேஜஸ்.. பெரிய ஆளா ஆவீங்கனு” என தெலுங்கிலேயே தமிழ் பேசினாள். பிரேமியிடம் அந்த ஆக்ஸென்ட் இல்லை. ஸ்ரீதருக்கு டீயுடன் ஒரு தம் அடிக்க வேண்டும் போலிருந்தது.

“சரி நான் கிளம்புறேன். திரும்ப நாம சந்திப்போம்” என்று கையாட்டி கிளம்பும் போது பிரேமி அவன் கைபிடித்து “தயவு செய்து என்னை ஹீரோயினா செலக்ட் பண்ணீறாதீங்க” என்றாள்.

- தொடரும்

 

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 04 - https://bit.ly/2wp2l10

பகுதி 03 - https://bit.ly/2I6M3Lo

பகுதி 02 - https://bit.ly/2G08TCy

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close