[X] Close

தொங்கட்டான் 9: நகையில் ஏறும் மெருகு!


nagayil-erum-melugu

  • மானா பாஸ்கரன்
  • Posted: 30 Apr, 2018 14:36 pm
  • அ+ அ-

முருகேசனின் வீடு வடவேரில் முடிகொண்டான் ஆற்றங்கரையில் இருந்தது. வீட்டு திண்ணையிலேயே பட்டறை வைத்திருந்தான் முருகேசன். எப்போதாவது, எவராவது  இவனைத் தேடி தோடு - மூக்குத்தியில் எண்ணெய் எடுக்க வருவார்கள்.  இல்லையென்றால் தாங்கள் போட்டிருக்கும் சங்கிலி அல்லது வளையல்களுக்கு மெருகு போட்டுத் தருமாறு வருவார்கள்.

நகைகளுக்கு மெருகு போடுதல் என்றால்…  முருகேசன் தனது வீட்டுத் திண்ணையில் வைத்திருக்கிற பட்டறையிலேயே போட்டுவிட முடியாது. பக்கத்தில் இருக்கும் சிறுநகரமான நன்னிலத்துக்கோ, குடவாசலுக்கோதான் செல்ல வேண்டும். 

அங்கே போனதும், இவன் கொண்டு சென்ற சங்கிலியை அல்லது வளையலை முதலில் நெருப்பில் போட்டுக் காய்ச்சுவார்கள். அப்படி காய்ச்சும் (சூடேற்றுவது) போது அந்த நகைகளில் இருக்கும் எண்ணெய்க் கசடுகள், அழுக்குகள் போய்விடும். அப்புறம் அதை எடுத்து  சல்ப்பர் (சல்ஃப்யூரிக்அமிலம்) கலந்து வைத்திருக்கும் தண்ணீர்க் கலவையில் கொஞ்ச நேரம் போட்டு வைத்திருப்பார்கள். பிறகு, அதை எடுத்து பூந்திக்கொட்டை கலந்த தண்ணீரில்  முக்கி எடுப்பார்கள். பூந்திக்கொட்டை என்பது ஒரு தாவரத்தின் காய். அந்தக் காயை உலர்த்தி வைத்திருப்பார்கள்.

அது, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அந்தக் கொட்டைகளை நசுக்கித் தண்ணீரில் போட்டால் சோப்பு நுரை மாதிரி நுரை கொப்பளித்துக் கொண்டு வரும். அந்த நுரையைக் கொண்டுதான் அந்தக் காலத்தில் பட்டுப் புடவைகளைச் சுத்தம் செய்வார்கள். பட்டுப் புடவைகளை அப்படி சுத்தம் செய்யும்போது புடவையில் இருக்கிற தங்க ஜரிகையோ, வெள்ளி ஜரிகையோ கருக்காது.  கோயில் சிலைகளை எல்லாம்கூட அப்படித்தான் சுத்தம் செய்வார்கள். 

பூந்திக்கொட்டை நுரையைக் கொண்டு நகைகளை சுத்தம் செய்ய, பித்தளை பிரஷ்களைப் பயன்படுத்துவார்கள். அந்தப் பித்தளை பிரஷ்கள் தோற்றத்தில் இப்போது உள்ள பல் துலக்கும் பிரஷ்களைப் போன்று மிகப் பெரிதாக இருக்கும். நரம்புகள் பித்தளையில் இருக்கும்.

அடுத்த நிலையில், ஒரு பெரிய பேசினில் - அரை கிராம் தங்கம், ஒரு டீ ஸ்பூன் மராட்டி எனப்படும் திரவம், 30 கிராம் சயனைடு  கலந்து ஒருலிட்டர் நீர் எடுத்துக்கொள்ளப்படும். இந்த தங்கக் கரசைல் திரவத்தில் சுத்தம் செய்த சங்கிலியை அல்லது வளையலை முக்கி எடுப்பார்கள். அப்படி முக்கி எடுக்கும்போது  2 பக்கங்களிலும்குறைந்த அளவு மின்சாரம் பாயும் வொயரின்  (ஒரு பக்கம் பிளஸ் - இன்னொரு பக்கம் மைனஸ்) ஒரு பக்கம் செப்புத் தகடும், இன்னொருபக்கம் பாலீஷ் போடப்பட வேண்டிய நகையையும்  இணைத்து கரைசலில்உள்ளே விடப்படும்.

 அப்படி முக்கி எடுத்தால் செம்போ அல்லது பித்தளையோ அல்லது கவரிங் நகைகளோ தங்கக் கலரில் பளபளக்க ஆரம்பித்துவிடும். இதற்கு - மெருகு போடுதல், பாலீஷ் போடுதல், கலர் கட்டுதல், முலாம் பூசுதல் என்றெல்லாம் பேச்சு வழக்கில் பெயர்கள் உண்டு.  ஆனால், அதற்கு எலக்ட்ரோ கோல்டு பிளேட்டிங் என்கிற அறிவியல் பெயர் இருப்பது தட்டார்கள் சிலருக்குத்தான் தெரியும்.

இப்படி சின்னச் சின்ன வேலைகள் வருவது கூட நாளடைவில் முருகேசனுக்குக் குறைந்துகொண்டே வந்தது. முருகேசனின் திராவிட இயக்க சிந்தனைகள் இவனது தொழிலை பெரிதும் பாதித்தது.

’எப்பவும் விதண்டாவாதம் பேசுகிறவன்கிட்டேயா நம்ம நகைகளை செய்யக் கொடுக்கணும்?” என்பது சமுதாயத்தின் பெரும் கேள்வியாக இருந்தது. அந்தக் கேள்விக்கு தனது எதிர்வினைகளை எப்போதும் பதிவு செய்யவே மாட்டான் முருகேசன். அதற்காக தனது முதுகுத் தண்டை வளைத்து நெளித்து கீழ்ப்படியவும் விரும்பாதவன்.

இவனுடைய அப்பா நாதமுனியிடம் வடவேர், நன்னிலம், குடவாசல், அகர ஓகை போன்ற அதன் சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்தெல்லாம் தாலி செய்ய கொடுப்பார்கள்.  நாதமுனி தொட்டது துலங்கும் என்று மக்கள் நம்பினார்கள். கைராசியான பத்தர் என்று பேரெடுத்திருந்தார் அவர். அப்படி தாலி செய்யக் கொடுக்க வரும்போது, நல்ல நாள் – கிழமை - நேரம் பார்த்துதான் வருவார்கள். குடும்பத்தோடு வந்து பச்சரிசி, வாழைப்பழம், ஒரு கவுளி வெற்றிலை - கொட்டப்பாக்கு, பூ எல்லாம் ஒரு தாம்பாளத்தில் வைத்து, அதனுடன் தாலி செய்வதற்கு தங்கம் அல்லது பணம் வைத்துக் கொடுப்பார்கள்.

தாலி என்று பேச்சு வழக்கில் சொன்னாலும் அதற்கு திருமாங்கல்யம், திருப்பூட்டு, திருநாண் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் இருக்கின்றன. தாலி அணிந்த தமிழ்ப் பெண்களை ‘வாலிழை மகளிர்’ என்கிறார் வெள்ளி வீதியார்.  இலக்கிய தமிழ்  தாலியை  சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கல வாணி என்றழைக்கிறது.

தாலி செய்து முடித்தவுடன் – அதைப் போலவே நல்ல நாள், கிழமை, நேரம் பார்த்து வரச் சொல்வார்கள். அந்த வீட்டார் விரும்புகிற, அவர்கள் சொல்கிற நல்ல நேரத்தில் நாதமுனி தான் செய்து வைத்திருந்த தாலியை எடுத்துக்கொண்டு போவார். அந்த வீட்டு முகப்பிலேயே மணப்பெண் வீட்டார், மணமகனின் வீட்டார் சிலர் நின்றுகொண்டு வரவேற்று வீட்டுக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.

அங்கே சாமி மாடத்துக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு  தாம்பாளத்தை எடுத்து, நாதமுனி  தான் செய்து கொண்டுபோன தாலியை வைத்துத் தருவார். அவர்கள் எல்லோரும் கைநீட்டி அந்தத் தாம்பாளத் தட்டை வாங்கிக்கொள்வார்கள். அன்றைக்கு நாதமுனியை சாப்பிட வைத்துதான் அந்த வீடு அனுப்பி வைக்கும். இதுதான் காலாகாலமாக அந்த ஊரில் நடக்கும் சம்பிரதாயம்.

நாதமுனி தாலி செய்துகொடுத்து திருமணம் நடந்தேறி… வெளியூர் சென்று கணவனோடு கண்ணுக்கு லட்சணமாக குடும்பம் நடத்தும் பெண்கள் வடவேரில்  சித்திரை மாதத்தில் நடைபெறும் ஊர்த் திருவிழாவுக்கு வரும்போது, வழியில் பாதையில் நாதமுனியை பார்த்தால். அவரிடம் தன்னுடைய கணவனை அறிமுகம் செய்து வைத்து, வாழ்த்து பெறுவார்கள்.

ஆனால் அது எல்லாம் நாதமுனியோடு போய்விட்டது. அவரது மகன் முருகேசனிடம் தாலி செய்ய வர, ஊர் மக்கள் பெரும் தயக்கம் காட்டினார்கள். கடவுள் மறுப்பாளனாக அவன் இருந்தது மட்டுமல்ல… முருகேசனின் சம்சாரம் கோகிலாவின் கழுத்தில் தாலி இல்லாமல் இருந்ததுதான் முக்கிய காரணம்.

தொங்கட்டான் அசையும்…  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close