[X] Close

'24' சலனங்களின் எண் - பகுதி 04


cable-sankar-series-24-series

  • கேபிள் சங்கர்
  • Posted: 27 Apr, 2018 10:55 am
  • அ+ அ-

குமரன் பிக்சர்ஸ்  அலுவலகம் சாலிக்கிராமத்தில் இருக்கிறது. ஆனால் அதன் தயாரிப்பாளர் சின்னமன்னூர். சி. சுரேந்திரன் எப்போதும் அங்கே இருக்கும் ஒர் ஸ்டார் ஓட்டலில் தான் தங்குவார். அவர் ஒரு என்.ஆர்.ஐ.

கனடாவில் பிசினெஸ். வேலைக்கு போய் அங்கேயே குடியுரிமை வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் செட்டிலானவர். கனடாவில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி குழுவுக்கு இவரும் ஒரு நிர்வாகியாய் இருக்கப் போய், கிட்டத்தில் நான்கைந்து நடிகர், நடிகைகளை பார்த்த மாத்திரத்தில் சினிமாவில் மாயையில் வீழ்ந்தவர். குறிப்பாய் வளர்ந்து வந்த ஸ்ரீசாலினியிடம்.

பெரிய நிர்வாகிகள் எல்லாரிடமும் நெருக்கம் காட்டியவள், இவரை மட்டும் தொக்காய் பார்த்தாள். நானும் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்று சொல்ல விருப்பமென்றாலும் அவரது ஈகோ தடுத்தது.

அதற்கடுத்து சென்னை வரும் போதெல்லாம் “ஆர்ட்டிஸ்ட் ஆராச்சும் கிடைப்பாங்க?” என்ற தேடும் நேரத்தில் பரிச்சயமான ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் பாபு. க்ரூப் டான்ஸில் எட்டாவது ரோவில், மூன்றாவதாய் ஆடியவளையெல்லாம், விஜய் படத்துல டான்சர் என்று ஒர்ருவா, எழுபத்தஞ்சு, என ரேட் கேட்டு கொண்டாட்டமாய் இருக்க ஸ்ரீசாலினியை கேட்டால் ஐந்து விரலை விரித்துக் காட்டி இதுக்கு குறையாது என்றான்.

தான் ஏமாற்றப்படுகிறோமோ என்று பேரம் பேச ஆரம்பித்தவரை “சார்.. இதுக்கு மட்டும்னு கூப்டாத்தான் அதிகம். அதே நாம ப்ரோடியூசர்னு ஆயிட்டோம்னு வச்சிக்கங்க. கூப்பிட்ட குரலுக்கு ஒடோடி வரும். ப்ரோடியுசர்னா சும்மாவா.. உங்க ஊரு பணத்துல டிப்ஸ் கொடுக்குற செலவுக்கு இங்க ரெண்டு படமெடுக்கலாம். நீங்க ம்ம்னு சொல்லுங்க நான் ஏற்பாடு பண்றேன்” என்று பாபு சொன்ன சுகுரான ஐடியாவின் பேரில்  ஆரம்பிக்கப்பட்டததுதான் குமரன் பிக்ஸர்ஸ்.

இதுவரை நான்கு படங்கள். முதல் படத்தின் நாயகி ஸ்ரீசாலினிதான். அவருக்கும், படத்திற்கும் நாயகியாய் மாற, மொத்தமாய்  பதினைந்து லட்சத்திற்கு மேல் செலவானது. நடுவில் சொச்சம் நகைகள், ட்ரஸ்கள் என பல +கள்.

நெருக்கமாய் போட்டோ எடுத்து, கனடா நண்பர்களுக்கு அனுப்பினார். ஊருக்க்கு போனதும் அனைவர் மத்தியிலும் பெருமையாய் “இங்க என்னா சீனு போட்டா. அங்க நான் சொன்னா சொன்னத செய்வா” என்று பெருமை பீத்தினார். உடனிருந்தவர்கள் வேறொரு பிரபல நடிகையை பற்றிக் கூற,”அடுத்த படத்துல…….’ என்று கடைசி வார்த்தையை அழுத்தமாய் சொல்லி எக்காளமாய் சிரித்தார்.

சின்னமன்னூர் சி.சுரேந்திரன் இது வரை மூன்று படங்கள் எடுத்திருக்கிறார். முதல் படம் வந்தது போனது கூட தெரியாமல் போய்விட, அடுத்த படம் ரிலீஸுக்குள், மூன்றாவதாய் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு, அவருக்கும் இயக்குனருக்குமிடையே  ஆன பூசல் காரணமாய் கிட்டத்தட்ட முடிந்த படத்தை நிறுத்தி வைத்திருந்தார். காரணம் குணாலினி கபூர்.

இந்தியாவில் வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறவளை கரெக்ட் செய்வதற்காக அண்டார்டிகாவின் பக்கத்தில் உள்ள ஒர் நாட்டில்  பாட்டு எடுக்கப் போன நேரத்தில் இயக்குனர் கரெக்ட் செய்து விட, ஐம்பது லட்சம் செலவு செய்து அமெரிக்க ஹோட்டலில் குப்புற படுத்த கோபத்தில் படத்தை ட்ராப் செய்து “மண்ணா போச்சு 2.5கோடி.” என்றார்.

நிஜமாகவே அவருக்கு அது பெரிய காசில்லை. உபரி வருமானத்தில் தான் அவருடைய எல்லா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும். ரொம்பவும் அடிப்படையிலிருந்து வந்தவர். திரும்பவும் கீழே போய் நசுங்க முடியாது என்பதை அறிந்தவர். அவர் தயாரிப்பாளர் ஆவதற்கு முன் மொத்தமாய் 25 படங்கள் பார்த்திருந்தால் அதிகம்.  தயாரிப்பாளர் ஆன பிறகு படமே பார்ப்பதில்லை.

தயாரிப்பாளர் என்கிற மரியாதை. சுற்றிலும் துதி பாடும் கூட்டம். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று உள்ளுணர்வில் புரிந்தாலும், அதை ஏற்க மறுத்து கொண்டாட்டமாய் குடியும், தினம் ஒருத்தியுடன் குடித்தனமுமாய் புகழ் போதையோடு வளைய வருவது என தன் பாக்கெட் மணியில் இத்தனை கொண்டாட்டத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர். 

ஸ்ரீதர் அவரைப்  பார்க்க சாலிகிராமம் அலுவலகத்தின் வாசலில் ராமுடன் போன போது மேனேஜர்  வாசலில் தம்மடித்துக் கொண்டிருந்தார். “நீங்கதானா ஸ்ரீதர்? சார்.. க்ரீன் பார்க்குல  201ல இருக்காரு. போய் பார்த்திருங்க.” என்றார்.

201க்கு போய் பெல் அடிப்பதற்கு முன் கதவு தானாய் திறந்தது. உள்ளே நான்கைந்து பேர் இருந்தார்கள். டேபிளின் மேல் ரெமி மார்ட்டின்  புல் பாட்டிலும், ரெண்டு மார்பிஸும், சிதறிக்கிடந்த சைட்டிஷ்களுமாய் இருக்க, அரசியல்வாதி போல வெள்ளை வேட்டி சட்டை போட்டபடி ரெண்டு பேர் கையில் க்ளாஸுடன் இருக்க, ஒரு குண்டு பெண்மணி, நெற்றி நிறைய பொட்டுடன் அமர்ந்திருக்க, கோல்ட் ப்ரேம் போட்ட கண்ணாடியுடன் ரெமிமார்ட்டினை எடுத்து ஊற்றிக் கொண்டிருந்த சுரேந்திரனுக்கு நடுவில் மிகவும் தயக்கத்துடன் பிரேமி உட்கார்ந்திருந்தாள்.  முகத்தில் பதட்டம் இருந்தது. தலைகுனிந்தே இருந்தாள்.

”இப்படி வெக்கப்பட்டா எப்பூடி?. பெரிய ஹீரோயினாக வேணாம்?” என்று சுரேந்திரன் அவளடு மோவாய்கட்டையில் கைவைத்து முகத்தை தூக்க எத்தனித்து கொண்டிருக்க, “சூடு பேபி.. சாரை சூடு” என்று பெரிய பொட்டு பெண்மணி அவள் முதுகை தடவிக் கொண்டே சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஸ்ரீதரின் நுழைவு அங்கே சட்டென்ற அமைதியை ஏற்படுத்தியது.

பிரேமி எழுந்து கொள்ள எத்தனிக்க, அவள் தொடையில் கைவைத்து சுரேந்திரன் அழுத்தியபடி, “ஸ்ரீதர்தானே நீங்க?  பேஸ்புக் போட்டோவ விட வயசானவரா இருக்கீங்க?” என்றதும் உடனிருந்தவர்கள் எல்லோரும் பெரிதாய் சிரித்தார்கள்.

“நீங்க ஒருத்தர் தான் பாஸு அன்னைக்கு பார்த்தாப்லேயே போட்டோலேயும் சரி நேர்லேயும் சரி. அப்படியே இருக்கீங்க” என்ற அல்லக்கையின் பாராட்டை மிகவும் ரசித்து கெக்கேவென  சிரித்தார். மீசை, தலைமுடியெல்லாம் அதீத கருப்பாய் இருக்க, ஸ்ரீதர் பதிலுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் மையமாய் சிரித்தபடி நின்றான்.

”உட்காருங்க. ஒரு பெக் போடுறீங்களா?” என்று அவன் பால் சரக்கை சுரேந்திரன் நகர்த்தினார். மொதல் மீட்டிங்கிலேயே தயாரிப்பாளருடன் சரக்கு சரியில்லாத ஒன்று. பல பிரச்சனைகளை ஆரம்பிக்க கூடியது என்பதை இதற்கு முன் பல சமயங்களில் உணர்ந்திருந்தான். அவரின் குருநாதர் அட்வான்ஸ் வாங்கியபின் தான் சரக்கடிப்பார். ஷூட்டிங்கின் போது எக்காரணம் கொண்டு தயாரிப்பாளருடன் பார்ட்டி கிடையாது.

படம் முடிவதற்கு முன்பாகவோ, அல்லது ஏதோ பணப்பிரச்சனை காரணமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலோ நிச்சயம் சரக்கு கிடையாது. அந்நேரத்தில் அவர் இழுத்துவிட்ட செலவீனங்களைப் பற்றிய பேச்சு வருமென்று தெரிந்ததால். பார்ட்டி என்றால் ரிலீஸுக்கு முன்னாடி அவருக்கு செட்டில் செய்ய வேண்டியிருந்தால் மட்டுமே. இல்லாவிட்டால் வெற்றி விழாவில் மட்டுமே.

தயாரிப்பாளருக்கும் இயக்குனருகுமிடையே சரக்கடிக்கவே இவ்வளவு அரசியல் இருக்கிறது என்று தெரிந்ததால் ஸ்ரீதர் வேண்டாம் என்றான்.

“தம்பி நான் ஓப்பன் டைப் என்னடா மொத நாளே ப்ரோடியூசர் சரக்கடிக்க கூப்புடுறானேனு யோசிக்காதே. கமான்.” என்றார்.

“இல்லை சார்.. வண்டியோட்டிட்டு வந்திருக்கேன். குடிச்சிட்டு வண்டியோட்ட முடியாது. இன்னொரு நாள் வச்சிப்போம் சார்.”

“ஓ. ட்ரிங்க் அண்ட் ட்ரைவ். ஆமாம நீங்க் தான் பேஸ்புக் போராளியாச்சே. ஆமா நல்ல படம் நல்ல படம்னு சொல்லிட்டேயிருக்கீங்களே.. நல்ல படம்னா என்னா?”

ஸ்ரீதர் அமைதியாய் இருந்தான்.

”ப்ரதர் சொல்லுங்க ப்ரதர். பாஸு கேட்குறாரில்லை. பதில் சொல்லைன்னா பாஸுக்கு பிடிக்காது” என்று அல்லக்கை பேசியது.

“எல்லாவிதமான மக்களுக்கு பிடிச்சி தயாரிப்பாளருக்கும் வாங்குனவங்களுக்கும் எந்த ப்ராஜெக்ட் லாபம் வருதோ அது நல்ல படம் சார்.”

”அப்ப ஓடாத படத்தையெல்லாம் பேஸுபுக்குல ஆஹா ஓஹோன்னு எழுதுறீங்களே அதுக்கு என்ன அர்த்தம்? என் படமெல்லாம் பார்த்திருக்கீங்களா?”

இவரை சந்திப்பதற்காக வேறு வழியேயில்லாமல் ஸ்ரீதர் பார்த்திருந்தான். கோரம்.

“ம்..”

“எல்லாத்தையும் பத்தி கருத்து சொல்றீங்க இல்லை. அந்த படத்தைப் பத்தி கருத்து சொல்லுங்க” என்றபடி மேலும் ஒர் பெக்கை க்ளாஸில் ஊற்றி குடித்தபடி திரும்பவும் பிரேமியின் முகத்தை நிமிர்த்த முயன்று கொண்டிருக்க, ஸ்ரீதர் அமைதியாய் இருந்தான்.

“அலோ.. அப்பவே சொன்னோமில்லை. பாஸுக்கு பதில் சொல்லைன்னா பிடிக்காதுன்னு” என்றது அல்லக்கை.

ஸ்ரீதருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இம்மாதிரியான ஒரு சந்திப்பை அவன் எதிர்பார்திருக்கவில்லை. பேஸ்புக்கில் பழக்கமான காரணத்தாலும் தன் தொடர் நேர்மையான கருத்தாலும் தான் கவரப்பட்டதால் உன்னை வைத்து படமெடுக்கிறேன் வா. சென்னை வரும் போது கூப்பிடுகிறேன் என்று ஆறு மாசமாய் தொடர்ந்து பாலோ செய்து இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டவன்.

கேட்பவன் அகங்காரம் கொண்டவானாய், உடனிருப்பவர்களை மதிப்பவனாய் தெரியவில்லை. பணமும், கொண்டாட்டமும், அவன் கீழ் இருப்பவர்களை மதிக்க தெரியாதவனாய் தான் அவனுக்கு தெரிந்தது. இல்லாவிட்டால் ஒர் பெண்ணை நான்கு பேர்களுக்கு நடுவில் வைத்து இப்படி இம்சை செய்தபடி இருக்க மாட்டான். 

தான் சொல்லப் போகும் பதிலை சுரேந்திரன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியவில்லை. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். உண்மையைச் சொல்லி ஏதாவது எசகு பிசகானால் மீண்டும் அந்த துரோகி ராஜாவிடம் தான் போய் நிற்க வேண்டும். கொஞ்சமே கொஞ்சம் தன்மானத்தை விட்டுக் கொடுத்தால் போதும். பணமிருக்கும் ஆள். சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் பணத்தை இறக்கும் ஆடம்பரக்காரன். அகம்பாவி. பைனாஸியருக்கும் தயாரிப்பாளருக்கும் வித்யாசம் தெரியாதவன். பல சமயம் தமிழ் சினிமா இவர்களைப் போன்றவர்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இவர்களை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போவதில் ஏதும் குறைந்துவிடப் போவதில்லை. என்றாலும் மனசாட்சி தடுக்கிறது. பட். சொல்லித்தான் ஆக வேண்டும். எல்லோரும் ஸ்ரீதரின் முகத்தையே அவனின் பதிலுக்காக பார்த்திருக்க “இதுவரைக்கும் நீங்க எடுத்தது சினிமாவே இல்லை சார்.” என்றான். பிரேமி சட்டென நிமிர்ந்து ஸ்ரீதரைப் பார்த்தாள்.

(தொடரும்...)

 

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 03 - https://bit.ly/2I6M3Lo

பகுதி 02 - https://bit.ly/2G08TCy

பகுதி 01 - https://bit.ly/2HZRVdD

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close