[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 43 - டப்பிங்


24-salanagalin-enn

  • கேபிள் சங்கர்
  • Posted: 08 Feb, 2019 12:22 pm
  • அ+ அ-

அடுத்த நாள் ஷூட்டிங் இருக்கிறது என்று அன்றிரவே மேனேஜர் மெசேஜ் செய்திருந்தார். ஏனோ தெரியவில்லை ஸ்ரீதருக்கு அழுகை வந்தது. ஷுட்டில் ப்ரேமி எதுவுமே பேசவில்லை.  சொன்னதை செய்தாள். மிக இயல்பாய் இருப்பது போலக் காட்டிக் கொண்டாள். ராமிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள்.

வின்செண்ட் அவளிடம் பேச்சுக் கொடுக்க முற்பட்டு அவளின் ரியாக்‌ஷன் பார்த்து அமைதியானான். ஷூட் முடிந்து போகும் போது, அருகில் வந்து நின்றாள். வேறு யாருமே இல்லாத தருணத்தில் ஏதோ சொல்ல வந்து, சொல்லாமல் “வர்றேன் சார்” என்று கிளம்பிவிட்டாள். அவள் சார் என்று கூப்பிட்டது மிகவும் அந்நியமாய் பட்டது.

தனியான தருணங்களில் அவள் அப்படி கூப்பிடுவதில்லை. பெயர் சொல்லியே கூப்பிடுவாள். அவள் போன பிறகு ராமிடம் அவள் ஏதாவது சொன்னாளா? என்று தனியே அழைத்துக் கேட்டான். ராம் எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லாமல், ஸ்பெஷலா ஒண்ணுமில்லை. ஜஸ்ட் லைக் தட் ‘ என்று தோள் குலுக்கினான். மேலும் அவனிடம்  கேட்க ஸ்ரீதரின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.

அவுட்டோர் ஷூட் முடிந்து, ஊருக்கு சென்ற ரெண்டாவது நாளே மிச்சமிருக்கும் ஒரு சில நாள் ஷூட்டை ஏற்பாடு செய்யச் சொன்னார் சுரேந்தர்.  அதே பரபரப்பில் டாக்கி எல்லாமே முடிந்து ஒரே ஒரு பாடல் காட்சியும், இரண்டு ஆக்‌ஷன் ப்ளாக் மட்டுமே படமாக்க வேண்டிய நேரத்தில் கனடாவிலிருந்து வந்த போன் சுரேந்தரை திடுக்கிட வைத்தது.

வியாபாரத்தில் ஏதோ பிரச்சனை என ஒரு வாரத்தில் வருவதாய் சொல்லி போனவர் வரவேயில்லை. வழக்கமாய் சரக்கை போட்டுவிட்டு ”அப்புறம் என்னைப் பத்தி இண்டஸ்ட்ரில என்ன பேசிக்கிறாங்க?” என்று அபத்தமாய் கேட்டபடி தொடரும் பேச்சும் இல்லை.

அலுவலகத்தில் அவரது மேனேஜர்கள் தங்களுக்குள் ரகசியமாய் பேசிக் கொள்வதும், பட ஆட்கள் வந்தால் பழைய பந்தாவுமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். “என்ன சார் ஆச்சு? அடுத்த ஷெட்டியூல் எப்பப் போறோம்?” என்று ஸ்ரீதரின் நச்சரிப்பை பொறுக்காமல் ஒரு நாள் மேனேஜர் விஷயத்தை சொல்லிவிட்டார்.

“தபாருங்க டைரக்டர். பணம்னாலே சார் டென்ஷனாகிடறாரு. அங்கிட்டு ஏதோ வியாபாரப் பிரச்சனையாம். பேங்க் அக்கவுண்ட் ப்ரீஸ் பண்ணுற அளவுக்கு. ரெண்டொரு நாள்ல சொல்றேன்னு சொல்லிருக்காரு. அது வரைக்கும் அமைதியாய் இருக்குற வேலைய முடிக்கப் பாருங்க..

நானே மெல்ல பேச்சுக் கொடுத்து அடுத்த வேலைய ஆரம்பிக்க சொல்லுறேன். இத்தனை வந்து நிக்குறது இதான் நம்ப கம்பெனியில மொத தடவ” என்றார்.

இது முதல் தடவை இல்லை என்று ஸ்ரீதருக்கு தெரியும். ஆனால் அப்படங்கள் எல்லாம் நின்றதற்கு காரணம் சுரேந்தர் மற்றும் இயக்குனரிடையே ஏற்பட்ட பிணக்கு. பணமில்லாமல் இல்லை. இப்போது நடந்திருப்பது பணம் இல்லாமல்.  சினிமாவில் பணம் இருக்கிறவர் இல்லாமல் போவதும், இல்லாதவர் பணத்தில் திளைப்பது ஒன்றும் புதிது இல்லை என்றாலும் எங்கே படம் நின்று போய்விடுமோ?

மொத படமே அரைகுறை என்ற பெயர் பெற்றால் அடுத்த படம் என்பது சாதாரணமாய் நிகழக்கூடிய விஷயம் இல்லை என்ற பயம் ஸ்ரீதருக்கு ஏற்பட்டது. உதவியாளர்களிடம் சொன்ன போது எல்லாருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

காசி இம்மாதிரியான அனுபவங்களை தாண்டி வந்தவனாகையால் “சம்பளம் வந்திருமா? இல்ல அதுவும் பிரச்சனையாமா?” என்று இயல்பாய் கேட்டான்.

“சார்.. அப்ப அந்த ஆக்‌ஷன் ப்ளாக்? அவ்வளவுதானா?” என்று வருத்ததுடன் கேட்டான் கார்க்கி.  காசியும் ஸ்ரீதரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு சிரித்தார்கள்.

சமயங்களில் உள்ளுணர்வை நாம் மதித்தே ஆக வேண்டும். ஒர் வேலையில் 100 சதவிகிதம் உண்மையாய் உழல்பவனுக்கு பல சமயங்கள் எதிர்வரப் போகும் பிரச்சனைகள் குறித்து ஏதோ ஒரு தகவல் அவனுக்குள் இயற்கை தெரிவித்துக் கொண்டேயிருக்கும். அப்படித்தான் கடைசி நாட்கள் டாக்கி போர்ஷன் போதே ஆக்‌ஷன் ப்ளாக்கிற்கு பதிலாய் அதை காட்சியில் கொஞ்சம் வசனத்தோடும், ரியாக்‌ஷன்களோடும், மற்றதை சவுண்ட் மிக்ஸிங்கிலும் காட்டும் வண்ணம் ஒரு காட்சியை எழுதி, அதையும் அன்றைக்கு எடுக்க வேண்டிய காட்சி லிஸ்டுலேயே வைத்து எடுத்தான்.

உதவியாளர்களுக்கு ஸ்கிரிப்ட் மனப்பாடம் என்பதால் அன்றைக்கு முழுக்க திரு திருவென விழித்துக் கொண்டிருந்தனர். எக்ஸ்ட்ராவாக சீன் என்றால் ப்ரொடக்‌ஷனில் வேறு கேள்வி கேட்பார்கள் என்பதால். வின்செண்டிடன் மட்டும் காட்சி எடுக்கப்படும் போது சட்டென சொல்லி எடுக்கச் சொன்னான். அவனும் இதற்காக ஏதும் பெரிதாய் மெனக்கெடப் போவதில்லை,  கேமரா, லைட்டிங் என எல்லாமே  அதே அதே என்பதால் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் எதையாவது எடுத்துக்கங்க என்கிற மனநிலையில் இருந்ததால் சுலபமாய் போனது.

எடிட்டரிடம் அக்காட்சியை எடிட் செய்து தனியே வைக்கச் சொல்லியிருந்தான் ஸ்ரீதர். காட்சிக்கு டம்மி சவுண்ட் எல்லாம் போட்டு சிங்க் செய்து பார்த்ததில் அவனுக்கு திருப்தியாகவே இருந்தது. ஆனாலும் ஒரிஜினலாய் ப்ளான் செய்த ஆக்‌ஷன் ப்ளாக் கொடுக்கும் இம்பாக்ட் வரவே வராது என்பது அவனுக்கு புரிந்தும் இருந்தது.

வேறு வழியில்லை. அந்த ஒரு காட்சிகாக படம் நிற்கக்கூடாது. ஒரு வேளை படம் முடிகையில் பைனான்ஸ் பிரச்சனை முடிந்ததென்றால் மீண்டும் அதை ப்ளான் செய்து எடுக்கத்தான் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தான்.

”எடுத்த வரைக்கும் டப்பிங் போயிரலாங்க. டாக்கி எல்லாம் ஆர்டர் பண்ணியாச்சு. எப்படியும் பேக்கேஜுலதான் டப்பிங் போகப் போவுது. என்னா சொல்றீங்க?” என்று வேலை நிற்காமல் போக நினைத்து மேனேஜரிடம் கேட்டான்.

“அதுவும் சரிதான்” என்று யோசிக்காமல் தலையாட்டிவிட்டு ‘பரணில சொல்லிடறேன் நீங்க ப்ளான் பண்ணிக்கங்க. தலைவர் கிட்ட நான் சொல்லிக்கிறேன்’ என்றார். ஸ்ரீதருக்கு நிம்மதியாய் இருந்தது.

அடுத்த ரெண்டொரு நாட்களில் டப்பிங் வேலை ஆரம்பமானது. நாயகிக்கான டப்பிங் குரலுக்கு வாய்ஸ் டெஸ்டிங் முடிந்து ஆள் செலக்ட் செய்து பிக்ஸ் செய்தான். அவரின் சம்பளம் குறித்து பஞ்சாயத்து வர, அவரிடம் கம்பெனி நிலைமையை சொல்லி, தனக்காக உதவும்படி கேட்டுக் கொண்டான்.

நடிகைக்கு ஏற்கனவே ஸ்ரீதரை தெரியும் என்பதால் அவளும் புரிந்து விட்டுக் கொடுத்து ’ரெண்டு நாள் தான் தருவேன் அதுக்குள்ள முடிச்சிக்கங்க’ என்றாள் கண்டீஷனோடு. சொன்ன மாத்திரத்தில் மற்ற எல்லாருடய டப்பிங்கையும் தள்ளி வைத்துவிட்டு, நாயகியின் டப்பிங் போனது.

ரெண்டாவது நாள் முடிவில் எல்லா வாய்ஸையும் கேட்டுவிட்டு, சில கரெக்‌ஷன்கள் வேண்டும் என்ற போது அவள் கோபப்பட்டாள். “சம்பளமும் குறைவு. வேலையும் பின்னி எடுக்குற. ரெண்டு நாள் தானே சொன்னேன்” என்றவளை கெஞ்சலாய் பார்த்தான் ஸ்ரீதர். 

அவனின் பார்வையில் உள்ள கெஞ்சல் தாளாமல் சிரித்தபடி “கட்டைல போறவனே.. கெஞ்சாத வா.. நாளைக்கு மதியம் பேசிக் கொடுக்குறேன்” என்றாள்.

ராம் தன் டப்பிங் எப்போது எப்போது என்று கேட்டுக் கொண்டேயிருந்தான். ”ப்ரேமியோடது முடியட்டும் ஆரம்பிச்சிருவோம்” என்றான். ப்ரேமி தொடர்பு கொள்ளவேயில்லை. பாண்டிச்சேரி நாளுக்கு பிறகு இருவரிடையே பேசுவதற்கு ஏதுமில்லாமல் போனது போல இருந்தது ஸ்ரீதருக்கு.

ராம் தன் முதல் திரைப்பட டப்பிங்கை பயபக்தியோடு ஆரம்பித்தான். சீக்கிரமே சோர்வடைந்தான். அவன் சோர்வடையும் போதெல்லாம் வேறு சின்னச் சின்ன கேரக்டர்களுக்கான டப்பிங் பேச வைத்தான். அப்படி தயாரிப்பாளரின் நண்பரை பேச வைக்கும் போதுதான் பஞ்சாயத்து ஆரம்பித்தது. 

அவர் ஒரு போலீஸ் ஆபீஸர் கேரக்டர் செய்திருந்தார். ஷூட்டிங்கின் போதே படுத்தியெடுத்து வேறு வழியில்லாமல் அவரை வைத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் நடிக்க வைத்திருந்தான். அவரின் குரலில் போலீஸுக்கான கம்பீரம் இல்லாமல் இருக்க, அவருக்கு பதிலாய் வேறொருவரை வைத்து எடுத்துக்குறேன் என்று சொல்லிவிட, அவருக்கு ஈகோவாகிப் போனது.

இது நாள் வரை மொத்தம் பத்திருபது படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் தான் நடித்திருக்கிறார். எல்லா படங்களிலும் அவரே டப்பிங் பேசியிருப்பதாகவும் அவர் குரல் இல்லாவிட்டால் ஊருல மதிக்க மாட்டாங்க என்றார்.

“உங்க குரலை வச்சி அடையாளம் காணுற அளவுக்கு எல்லாம் நீங்க நடிச்சிடலைங்க” என்று காட்டமாய் சொல்லியதன் விளைவு. இதுநாள் வரை டப்பிங் நடக்கிறதா? இல்லையா? என்று கூட கேட்காமல் இருந்த சுரேந்தர் போன் செய்தார்.

“என்ன பிரச்சனை?” என்று வினவ, அவர் குரல் கொஞ்சமும் செட்டாகவில்லை என்று உறுதியாய் சொல்ல, சிறிது நேரம் அமைதியாய் இருந்தார்.

“உங்களுக்கே தெரியும் ஷூட்டிங்கின் போது என்ன நடந்திச்சுன்னு?” என்றதும் அவரின் அமைதி அதிகமானது. ஏனென்றால் ஷுட்டிங் அன்று பதினேழு பதினெட்டு டேக் வாங்கி இம்சித்துக் கொண்டிருந்ததை அவர் மறக்கவில்லை.

“சரி.. ரொம்ப வருத்தப்படுறாரு. இல்லாட்டி இன்னொரு ஐடியா சொன்னாரு. அவருக்கு நான் குரல் கொடுத்தா நல்லாருக்கும்னு பீல் பண்ணுறாரு? என்ன சொல்றீங்க?” என்றதும் சிரிப்பு வந்தது.

அதே நேரத்தில் அந்த நடிகரின் கயமைத்தனம் புரிந்தது. தன்னை வேண்டாம் என்று சொல்ல முடியும் உன் தயாரிப்பாளரை முடியாது என்று எப்படி சொல்வாய்? என்ற எக்காளமிடும் கேள்வி இருந்ததை உணர்ந்தான்.

கோபம் வந்தது. “கடைசி வரைக்கும் படம் நல்ல வரணும்னு உங்க நண்பர் ஆசை படவேயில்லை” என்றான் சர்காஸ்டிக்காய். அது அவனுக்கும் அவன் படத்திற்கும் பின்னால் உலை வைக்கப் போவதை அறியாமல்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 42 https://bit.ly/2E8AkN1

பகுதி 41 – https://bit.ly/2SbCB2D

பகுதி 40 - https://bit.ly/2CIThDX

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close