[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 42 - சம்பவம்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 02 Feb, 2019 11:46 am
  • அ+ அ-

சிறிது நேரம் பூட்டிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தான் ரவி. அவன் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் சலனம் இருந்தது. உள்ளிருந்து சுப்புராஜுவும், மணியும் சிரிக்கும் சத்தம் கேட்டது. ஆழமாய் மூச்சிழுத்து விட்டபடி அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அவர்கள் சிரித்த சிரிப்பு நிற்காமல் இருக்க, ரவியும் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பில் கலந்து கொண்டான். இருவருமே நீ எதுக்கு சிரிக்கிற? என்று ஒரு சேரக் கேட்டார்கள். அதை அவன் எதிர்பார்க்கவில்லை.

“அட.. நீங்க சிரிச்சீங்க? நானும் சிரிச்சேன். ஒரு பெக் அடிச்சதும் இது கூட பண்ணலைன்னா எப்பூடி?” என்று அபத்தமாய் சிரிக்க, அவர்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

சிரிப்பு கொஞ்சம் அடங்கியவுடன் “சரி சொல்லு சுப்பு  என்ன பண்ணலாம்னு ப்ளான்?’ என்றார் மணி.

“உங்களை கொல்லலாம்னு” என்றான் சுப்புராஜ். மணி சட்டென முகம் இறுகி, “டேய் என்னைய கொல்ல போறியா? ரவி என்னைக் கொல்லப் போறானாம்டா? பாட்டு ஏதாச்சும் பாடப் போறியா? உன் காந்தர்வ குரல்ல?” என்று மீண்டும் சிரித்தார்.

“இல்ல மணி. ஒரு கோடி ருபா கொடுத்தா உன்னை கொல்லாம விட்டுறலாம்னு சொல்லியிருக்கான்  உன் ரவி. என்ன கொடுத்துருவ இல்லை” என்று சுப்புராஜ் சொன்னதைக் கேட்டதும் மணி பதறியடித்து எழுந்தார். ஏற்கனவே மூன்று பெக் போயிருக்க , பதற்றத்தில் எழுந்ததில் வேட்டி தடுக்கி, மல்லாக்க தடேலென விழுந்தார்.

அவர் எழுந்த பதற்றத்தை வைத்து தங்களை தாக்க வருகிறார் என்று புரிந்து கொண்ட சுப்புராஜும், ரவியும் அதை தடுக்க பாய்ந்து அவர் மேல் விழுந்தார்கள். ஒரே நேரத்தில் இருவரும் தன் மேல் விழுந்ததை அவருக்கு திடீரென மூச்சு முட்ட, திமிறினார். அவர் திமிறுவது மூச்சுக்காக என்று புரியாத இருவரும் அவரின் போராட்டத்தை அடக்குவதற்காக அவரின் நெஞ்சின் மேல் கை வைத்து அழுத்தியபடி அவரின் வாயைப் பொத்தினான் சுப்புராஜ்.

அதே நேரத்தில் மணியின் காலின் மேல் ஏறி குதித்து உட்கார்ந்தான். காலில் உட்கார முனைந்தது தொடையில் மாறிவிட, வழுக்கி வேகமாய் விழுந்தான் ரவி.  என்பது கிலோ எடையுள்ளவன் திடீரென காலின் மேல் தொப்பென உட்கார முற்பட்டதன் தாக்கத்தை தாங்க முடியாமல் தன் பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு, அவர்கள் இருவரையும் தள்ளிவிட்டு, வேட்டி இல்லாமல் அந்த அறையை விட்டு ஓடி வாசல் கதவை நோக்கி ஓடினார்.

அது பூட்டியிருக்க, அவருக்கு புரிந்தது. என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் அமைதியாய் இருந்தார்.

உள்ளிருந்து வேக வேகமாய் வெளியே ஓடி வந்த இருவரையும் பார்த்த போது அவர்களிடம் இருந்த தீவிரம் அவருக்கு புரிந்ததால் அமைதியாய் பேசி தீர்ப்போம் என்று அவர்களை நோக்கி வேகமாய் வர, பதற்றமான ரவி அருகே இருந்த சேரை தன் கையினால் இழுந்து சுழற்றினான். சேர் எடுப்பதைப் பார்த்த கணத்தில் தன் தலையை குனிந்து கொண்டவர் சேரின் காலின் முனையில் பொட்டில் அடிபட்டார். அடிப்பட்ட நொடியில் கிறுகிறுவென தலை சுற்றி கணத்தில் அப்படியே சரிந்தார் மணி.

*************************************

”என்ன இருந்து பார்த்துட்டுப் போறியா?” என்ற சுரேந்தரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு, அது உடைந்து முகம் முழுக்க ரத்தமாக்க நினைத்து வந்த கோபத்தை அடக்கிக் கொண்டான்.

ஏதும் பேசாமல் “நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தவனை “உட்காரு” என்றார் சுரேந்தர்.  அதை மதிக்காமல் கிளம்ப நினைத்து திரும்ப, அல்லக்கைகள் அவன் தோள் அழுத்தி மீண்டும் சேரில் உட்கார வைத்தார்கள். உடல் சிலிர்த்து அவர்கள் கை உதறி உட்கார்ந்தான்.

“என்ன லவ் பண்றியா?”

ஸ்ரீதர் அமைதியாய் அவரைப் பார்த்தான்.

“த பாரு.. நீலவ் பண்றதைப் பத்தி எனக்கு கவலையில்லை. நான் என்ன அவளை லவ்வா பண்றேன். லவ் மேக்கிங் மட்டும் தான்” என்று தன் இங்கிலீஷ் புலமையை காட்டிவிட்டதாய் அனைவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். அங்கிருந்த ஒரிருவரைத் தவிர, மற்றவர்களுக்கு புலமை இல்லாததால் சிரிப்பதா வேண்டமா? என்ற குழப்பத்தோடு அவர் முகத்தையே பார்த்தார்கள்.

வருகிற கோபத்துக்கு எல்லாரையும் ஒரு எத்தி எத்தி அடித்துத் தள்ளிவிடலாமா? என்ற கோபம் பொங்கிக் கொண்டிருந்தது ஸ்ரீதருக்கு. “மச்சான். நாம சினிமா பண்ண வந்திருக்கோம். அவன் எவளையாச்சும் பண்ணலாம்னு வந்திருக்கிறவன். அவனுக்கு அவன் காரியம் நமக்கு நம்ம காரியம். இதுல கோபப்பட்டா அவனுக்கு நஷ்டமில்லை. ஏன்னா அவன் அதைப்பத்தி கவலைப்பட மாட்டான். ஆனா படம் நின்னுருச்சுன்னா நாம கஷ்டப்படுவோம். நல்லதோ கெட்டதோ படம் முடிக்கணும். அது வெளியாகணும். அதான் உனக்கு நல்லது” என்று ஒவ்வொரு முறை கோபம் வரும் போதும் காசி சொல்லிக் கொண்டேயிருப்பான்.

அது மீண்டும் நினைவுக்கு வர கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “சார்.. நான் அவளை லவ் எல்லாம் பண்ணலை. அவளோட நீங்க படுக்குறது பத்தி எனக்கு கவலையுமில்லை. அது உங்க ரெண்டு பேருக்குமான விஷயம். நான் அவகூட பேசினது உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற பிரச்சனையில ஷூட்டிங்கில ஒழுங்கா பர்பார்ம் பண்ணாம இருக்கா அதுக்காக. ஸோ. நான் கிளம்புறேன். நாளைக்கு ஷூட்டிங் இருக்கு இல்லையா?” என்று அவர் முகத்தைப் பார்த்தான்.

அவன் முகத்தில் எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லாமல் அமைதியாய் வைத்துக் கொண்டு, கொஞ்சம் அடக்கமாய் கேட்டது அவருக்கு பிடித்திருந்தது. “இன்னைக்கு ஷூட்டிங் நடக்கட்டும். அப்புறம் வைச்சிப்போம். உன் ஷூட்டிங்கை” என்று கையால் உடலுறவு செய்கையை செய்து சிரித்தார். சிரித்தார்கள். ஸ்ரீதர் அமைதியாய் அறையை விட்டு வெளியேறினான்.

படங்களில் தன்னால் உருவாக்கப்படும் ஹீரோக்கள் மட்டும் நியாயத்துக்காக போராடுகிறவர்களாய் இருக்க, தான் இப்படி கோழையாய் அறையை விட்டு வெளியே வந்தது உறுத்தலாகவும், அவமானமாகவும் இருந்தது. அங்கிருந்து கிளம்ப ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டேயிருக்க, காரிடார் ஜன்னல் பக்கமாய் நின்று ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான்.

பாண்டியின் பீச் காற்று சில்லென அடிக்க, போராடி ஒரே குச்சியில் பற்ற வைத்து ஆழ இழுத்தான். தொண்டையில் கட்டியது. பின்னால் லிப்ட் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். லிப்டிலிருந்து ப்ரேமி வெளியேறிக் கொண்டிருந்தாள். அவள் நடையில் துள்ளல் இல்லை. ஒரு ரோபோ போல நடந்து போய்க் கொண்டிருந்தாள். சுரேந்தரின் அறைக் கதவருகில் சட்டென நின்று காரிடாரின் ஜன்னல் முனையைப் பார்த்தாள். அதை எதிர்பார்க்காத ஸ்ரீதர் சட்டென முகத்தை திருப்பிக் கொண்டான். திரும்பிய வேகத்தில் மீண்டும் ப்ரேமி பக்கம் திரும்பிய போது அவள் அங்கு இல்லை.

*************************************

“டேய்.. ஏண்டா? ஏண்டா இப்படி பண்ணே?” என்று பதறினான் சுப்புராஜ். உள்ளே நடந்த கடமுடா சத்தத்தை கேட்டு வாசல் கதவை தட்டினார்கள் வெளியே சரக்கடித்துக் கொண்டிருந்த நண்பர்கள். சுப்புராஜு பரபரப்பாய் போய் கதவை திறந்தான். உள்ளே நுழைந்தவர்களுக்கு அங்கிருக்கும் நிலவரத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார்கள். “என்னா ஆச்சு?”  என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்கள். ”பேசினே இருக்கும் போது சேரைத் தூக்கி அட்சிட்டான்” என்று குற்றம் சொன்னான் சுப்புராஜு.

ரவிக்கு ஏதும் புரியவில்லை. மணியை இந்த இடத்துக்கு கொண்டு வர ப்ளான் செய்த போதிலிருந்தே பதட்டமாய் இருந்தான்.

”அண்ணே.. அண்ணே.. மணி அண்ணே.. எழுந்துருங்க.. ” என மணியை உலுக்கினான் சுப்புராஜு. அவனின் உலுக்கலுக்கு ஏற்றார்ப் போல தலையாடிக் கொண்டேயிருக்க, அதிர்ந்து போய், மூக்கருகில் கை வைத்துப் பார்த்தான். மூச்சிருப்பதாய் தெரியவில்லை. “டேய் செத்துட்டான் போலயே?” என்று அலறியவன் சட்டென ரகசியமாய் குரல் மாற்றினான். ரவி அப்படியே சரிந்து மணியின் முன் அமர்ந்தான். “மணி.. டேய்.. மணி.. எழுந்துருடா..” என்று அவன் பங்கிற்கு உலுக்கினான்.

“டாக்டருங்க நெஞ்சுல பம்ப் பண்ணுவாங்க இல்லை அது போல பண்ணுவோமா?” என்று கேட்ட சுப்புராஜுக்கு ஏதும் பதில் கிடைக்காததால், மணியை எப்படியாவது உயிர்ப்பிக்க வேண்டுமென்ற முனைப்பில் நெஞ்சில் கை வைத்து ‘ஒன்..டூ. த்ரி.. ‘ என சொல்லிக் கொண்டே அமுக்கினான்.

இரண்டு கை வைத்து அமுக்கியதில், உட்கார்ந்து கொண்டு செய்ததால் சுப்புராஜுவின் மொத்த நூறு கிலோ எடையும் சேர்ந்து அழுந்த எசகு பிசகாய் மணியின் நெஞ்செலும்பு ஒன்று கடக்கென்ற சத்தத்தோடு உடைந்து அவரின் கடைசி மூச்சையும் பறித்தது. மணி நிச்சயமாய் இறந்திருந்தார்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 41 – https://bit.ly/2SbCB2D

பகுதி 40 - https://bit.ly/2CIThDX

பகுதி 39 - https://bit.ly/2VZWRT3

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close