[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 40 – சதி


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 17 Jan, 2019 18:57 pm
  • அ+ அ-

காலை ஷூட்டிங்கிற்கு அசெம்பிள் ஆன மாத்திரத்தில் ஸ்ரீதர் பரபரப்பாய் இருந்தான். ப்ரேமி இல்லாத ஷாட்களை தொகுத்து அதை எடுப்பது பற்றி தன் டீமுடன் விவாதித்துக் கொண்டிருந்தான். உதவியாளர்களில் கடைக் குட்டிப் பையன் மட்டும் “ஏன் அவங்க இங்கதானே இருக்காங்க? ஏன் வர மாட்டாங்க?” என்று வெள்ளெந்தியாய் கேட்டதை யூனிட்டில் உள்ள அனைவரும் பெரிதாய் சிரித்தார்கள்.

அவர்களின் சிரிப்பு ஆபாசமாய் இருந்தது. பையன் கொஞ்சம் நேரத்தில் எதையோ புரிந்து கொண்டவனாய் மேலும் ஏதும் கேட்காமல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

ஸ்ரீதரும் ப்ரேமி லேட்டாய் வருவாள் என்று தெரிந்துதான் தன் வேலையை அதற்கேற்றார்ப் போல மாற்றிக் கொள்ள முடிவு செய்தான். அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வதில் பெண்களுக்கு ஈடாய் யாரையும் சொல்ல முடியாது என்று அவனது இயக்குனர் ராஜா சொல்லிக் கொண்டேயிருப்பான். ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளிடம் குழையவே மாட்டான். கடுகடுவெனவே இருக்க வேண்டும் என்பான்.

’கொஞ்சம் இடம் கொடுத்தா தலை மேல ஏறி உட்கார்ந்திருவாளுக’. அவன் சொல்வது கொஞ்சம் ஆணாதிக்கத்தனமாய் தெரியும். ஆனால் பல சமயங்களில் இரண்டாம் கட்ட நடிகைகளிடம் கொஞ்சம் சிரித்துப் பேசினால் அவர்களை ஷாட்டுக்கு கூட்டி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுவதை உணர்ந்து அவனும் ராஜாவைப் போலவே கடுகடுவென ஷூட்டிங் வரை இருப்பான்.

மொத்த யுனிட்டும் ஸ்ரீதரை டைரக்டர் ஜெராக்ஸ் என்று பட்டப் பெயர் வைத்துத்தான் அழைப்பார்கள். அதை ஸ்ரீதர் அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டு ஷூட்டிங் என்றதும் அந்த முகமுடியை மாட்டிக் கொள்வான். பல சமயங்களில் அந்த முகமுடியால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறான்.

’நீ அவனோட படுப்பியோ இல்லையோ.. காலையில ஷூடிங்கிற்கு சரியா வந்திரணும்” என்று சொல்லக்கூடியவன் தான் ஸ்ரீதர். ஆனால்  ஏனோ ப்ரேமியிடம் அப்படி பேச மனம் வரவில்லை.  நேற்றிரவு பேசிய விஷயங்கள் அவளுக்கு எந்த விதத்தில் உதவியது என்று மனம் யோசித்துக் கொண்டேயிருந்ததை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது.

ஏன் இத்தனை கரிசனம் ஒரு நடிகையிடம் என்ற கேள்வி அவனுக்குள் எதுக்களித்து சாப்பிடும் போது புறைக்கேறியது. கண்களில் கண்ணீர் பொங்க நிமிர்ந்த போது ப்ரேமி அவளின் காரிலிருந்து இறங்கினாள். இறங்கிய மாத்திரத்தில் ஸ்ரீதரைப் பார்த்து பெரிய சிரிப்போடு கையாட்டி “ஹாய்” என்றாள்.

ஸ்ரீதர் மையமாய் கையாட்டியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வந்ததும் யூனிட்டில் பரபரப்பு கூடியது.  அவளுக்கு முன் சின்ன டேபிள் போட்டு டிபன் சாப்பிட ஏற்பாடு செய்தார்கள். மேக்கப் மேன் மாரி அவளையே குறுகுறுவென பார்த்தபடி இருந்ததை உணர்ந்து “என்ன?”என்பது போல சைகையால் கேட்டாள். மாரி அதிர்ந்து “ஒண்ணுமில்லைங்க” என்றது பெரிதாய் கேட்டது.

ப்ரேமி வரமாட்டாள் என்று நினைத்து மாற்றி எடுக்க ப்ளான் பண்ணிய காட்சிகளை எல்லாம் அப்படியே வைத்துவிட்டு, வழக்கமான ஷெட்டியூலை எடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளை பணிக்க ஆர்மபித்தான். மானிட்டரில் அமர்ந்து செட் லைட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்த போது அவன் முகத்துக்கருகில் சூடான மூச்சு பட்டது. சட்டென நிமிர்ந்தான் ப்ரேமி.

“நான் ரெடி டைரக்டர் சார்”  என்றாள்.

அவ்வளவு கிட்டத்தில் அவளது மேலுதட்டில் லேசாய் அரும்பியிருந்த வேர்வை கிளர்ச்சியை கொடுத்தது. கூடவே அவளது பர்ப்ஃபியூம்.  நாசி முழுவது நிரம்ப ஆரம்பித்த வேளையில் ப்ளாஷ்கட்டில் சுரேந்தரும், ப்ரேமியும் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் படுக்கையில் உருளும் காட்சி வர, விதிர்த்து விலகி “ரெடியா.. சரி.. போய் காஸ்ட்யூம் மாத்திட்டு வாங்க.. டேய் கார்க்கி.. “ என்று தேவையில்லாமல் கடுகடுவென முகத்தை மாற்றிக் கொண்டு கத்தினான்.

ப்ரேமி அதை எதிர்பார்க்கவில்லை. முகம் சட்டென மாறி பதட்டத்தோடு அங்கிருந்து விலகி கிட்டத்தட்ட ஓடினாள். அவள் போவதையே மொத்த யூனிட்டு பார்த்தது.

வின்செண்டிடம் காட்சியை விவரித்துவிட்டு மெல்ல தன் வேலையில் மூழ்கினான் ஸ்ரீதர். ப்ரேமி உடை மாற்றிக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்க, கடகடவென மாஸ்டர், க்ளோஸ என காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, சுரேந்தர் வழக்கம் போல ஆரவாரமாய் தன் அல்லக்கை படைகளோடு நுழைந்தார். வரும் போதே ஷாட்டில் இருந்த ப்ரேமியைப் பார்த்து கையசைத்தார். ப்ரேமி கவனம் சிதறினாள். லுக் மாறியது.

“கட்.. என்ன ப்ரேமி.. ஒரே இடத்துல லுக் வைக்க மாட்டியா?” என்று கத்தினான். ப்ரேமியின் கண்களில் சட்டென கண்ணீர் துளிர்த்தது. 

“சாரி.. டைரக்டர்.. என்னாலத்தான் ப்ரேமி டிஸ்ட்ரப் ஆயிருச்சு.. திட்டாதீங்க” என்று சுரேந்தர் குரல் கொடுக்க, திரும்பிப் பார்த்தான். மிகவும் அபத்தமாய் சிரித்தார் சுரேந்தர். அவரின் சிரிப்பு ஸ்ரீதருக்கு எரிச்சலாய் இருந்தது.  அல்லக்கைகள் சிரித்தது இன்னும் எரிச்சலைக்  கிளப்பியது. ஏதும் சொல்லாமல் “கமான் டேக் கெட் ரெடி” என்று சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்தான்.

நான் அவளை புணர்ந்துவிட்டேன் என்ற ஜம்பமும், அதை வெளிப்படுத்த விழையும் ஆணவமும், சுரேந்தரின் சிரிப்பில் இருந்தது. சுரேந்தர் வந்தபின் ப்ரேமியின் நடிப்பு இயல்பாய் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.  கார்க்கியை கூப்பிட்டு “அவளுக்கு ப்ரேக் வேணுமானு கேளு” என்று கேட்டு வரச் சொன்னான்.

“சார் மேடம் உங்களை கூப்பிடுறாங்க” என்று காதோரமாய் வந்து சொல்ல, மெல்ல கேஷுவலாய் எழுந்து அவளருகில் போய் என்ன என்பது போல நிற்க “தயவு செய்து லஞ்சுக்கு முன்னாடி ப்ரேக் விட்டுறாதீங்க. அவன் இம்சை தாங்காது” என்றாள்.

“ஏன் ?”

“நேத்து நடக்கலை” என்றாள் ப்ரேமி.

******************************

ஈ.சி.ஆரில் பயணித்த வண்டி மெல்ல எம்.ஜி.எம்மை தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.  ஓரிடத்தில் மெல்ல வேகம் குறைத்து வழியை யோசித்து, சின்னதாய் திரும்பிய யுடர்னில் வண்டியை திருப்பி, இடது பக்க தெருவில் நுழைந்தது. சில ஏக்கர் காலி இடங்களைத் தாண்டி வண்டி போய்க் கொண்டேயிருக்க, ”ரவி எங்கடா வச்சிருக்கான் கெஸ்ட் அவுசை. சுத்தும் முத்தும் ஆள் நடமாட்டமே இல்லை காடாயிருக்கு?” என்றார் மணி.

“பெரிய ஆளுங்க எல்லாம் இப்படியான இடம் தானே கேட்குறாங்க. தனிமையா.. யாருமில்லாத இடமா?” என்றான் ரவி

கார் இப்போது ஒரு தோப்பு போன்ற இடத்திற்குள் நுழைந்தது. பெரிய இரும்பு கேட் மூடப்பட்டிருக்க, ஒரே ஒரு முறை காரின் ஹார்னை ‘ட்வீக்’ என்று அழுத்தினான். கதவு திறந்தது. மெல்ல காரை போர்ட்டிக்கோவில் நுழைத்து பார்க் செய்தான் ரவி. காரிலிருந்து அனைவரும் ஒவ்வொருவராய் இறங்க, சுப்புராஜு பெரிய சிரிப்புடன் “வரணும் வரணும் மொதலாளி வரணும்” என்றான் அதீதமாய் வரவேற்றான். சுப்புராஜு கொஞ்சம் குண்டாகியிருந்தான்.

“என்ன ராஜு வசதியாயிட்ட போல “

“அட அதெல்லாம் ஒண்ணூமில்ல மொதலாளி”

“ஒண்ணுமில்லைங்குற உடம்பப் பார்த்தா அப்படி தெரியலையே?”

என்றபடி அனைவரும் உள்ளே போனார்கள். அது ஒரு பழைய பங்களா. சின்ன ஹாலும் , மூன்று பெட்ரூம்களாய் அறைகள் இருந்தது. காரில் பிக்கப் செய்தவர்கள் கொஞ்சம் மரியாதையாய் வராண்டாவிலேயே உட்கார்ந்துவிட, ரவி, சுப்புராஜு, மணி மட்டும் உள்ளே போனார்கள். அங்கேயிருந்த ஒர் பெரிய பெட்ரூமில் சோப்பாக்களும், சுவரோரமாய் டபுள் காட்டும் இருக்க, நடுவில் டேபிளின் மேல் உயர்ரக மதுவகைகள் அணிவகுத்திருந்தது. அதைப் பார்த்த மணி  “ என்ன சுப்பு.. வரவேற்பு எல்லாம் தடபுடலா இருக்கு?” என்று ரவியை பார்த்தார். ரவி அதை ஆமோதிப்பதைப் போல அசட்டுத்தனமாய் சிரித்தபடி சுப்புராஜைப் பார்த்தான்.

“அண்ணே உட்காருங்க. நீங்க என்னை பார்க்க வந்தது ரொம்ப சந்தோஷம்ணே. ஒரு வழியா உங்க கனவை நிஜமாக்குற வேளை வந்திருச்சு. வாழ்த்துக்கள்” என்று கை கொடுத்தான்.

“ஆமாம் சுப்பு. ரொம்ப வருஷக் கனவு. எத்தனை தடை. அதையெல்லாம் தாண்டி இன்னைக்கு படம் நல்லா வந்திட்டிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்ற அவரின் குரலில் பெருமிதம் இருந்தது.

“அப்படியே நம்மளையும் கொஞ்சம் கவனிங்கணே”

“உனக்கு என்ன ஏதோ பெரிய ஆளாயிட்டேன் பிசினெஸ் பேசணும்னு இல்லை வரச் சொன்னியாம்”

“ஆமாம்ணே.. வெளிநாட்டுல போய் கொஞ்சம் சம்பாரிச்சுட்டு வந்திருக்கேன். சரியா இன்வெஸ்ட் பண்ணனும். நம்பிக்கையான ஆளு வேணுமில்லையா? அதான் தேடிட்டேயிருந்தேன். அப்பதான் ரவி காண்டேக்ட் பண்ணாப்ல. உங்களைப் பத்தி சொன்னாப்ல. எனக்கும் கலைத்துறையில நல்ல எதிர்காலம் இருக்குனு ஜோசியர் சொல்லியிருக்காரு. சுக்கிரன் நல்ல இடத்துக்கு வராராம். சரி அவரு தான் உங்களை ரவி மூலமா அறிமுகப்படுத்துறார்னு தோணிச்சு. வரச் சொல்லிட்டேன். ஒரு ரெண்டு சி இருந்தா போதுமான்ணே படம் முடிக்க” என்று பவ்யமாய் கேட்டான்.

சுப்புராஜின் பவ்யம் மணிக்கு ரொம்பவே பிடித்திருந்தது. குறிப்பாய் சினிமா பற்றி தன்னிடம் அறிவுரை கேட்கிறவனை ஏனோ சமீபகாலமாய் அவருக்கு ரொம்பவே பிடிக்கிறது. 

“த பாரு சுப்பு” என்று அவர் ஆர்மபிக்க, “அண்ணே.. இருங்க ஒரு பெக் அடிச்சிட்டு பேசுவோம்” என்று க்ளாசை எடுத்து அனைவருக்கும் ஒரு பெக் ஊற்றி விட்டு “சியர்ஸ்” என்று பெரும் குரலோடு க்ளாஸை இடித்தபடி டேபிளின் மேல் இருந்த இன்னொரு பாட்டிலை எடுத்து ரவியிடம் கொடுத்து ‘வெளிய உக்காந்திருக்காங்க இல்லை அவங்களுக்கு கொடுத்துட்டு வந்துரு” என்று அனுப்பினான். 

ரவி பாட்டிலை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் நடந்து வெளியே வந்து அவர்களிடம் பாட்டிலை கொடுத்துவிட்டு கண் காட்டினான். அவர்கள் தலையசைத்துவிட்டு, பாட்டிலை வாங்கிக்  கொண்டு டேபிளின் மேல் உள்ள க்ளாஸ் மற்றும் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியேறி, கதவை வெளியே பூட்டினார்கள்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 39 - https://bit.ly/2VZWRT3

பகுதி 38 - https://bit.ly/2RMISAK

பகுதி 37 - https://bit.ly/2AqAAog

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close