[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 39 – திட்டம்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 14 Jan, 2019 11:06 am
  • அ+ அ-

கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மெசேஜ்கள். எல்லாவற்றிலும் “ப்ளீஸ் கால் மீ”யைத் தவிர வேறேதும் இல்லை. அவளின் நம்பருக்கு போன் செய்தான் ஸ்ரீதர். ஒரு ரிங் அடிப்பதற்குள் எடுத்தாள் ப்ரேமி. 

”என்ன விஷயம்?”

“இன்னைக்காம்” என்றாள் ப்ரேமி.

ஸ்ரீதர் சிறிது நேரம் அமைதியாய் இருந்தான்.  ப்ரேமி லைன் கட்டாகிவிட்டதோ என்ற பதைப்பில் ரெண்டொரு முறை “அலோ..அலோ” என்று கூப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். சட்டென நிலைக்கு வந்து “ம்..தெரியும் சொல்லு” என்றான் ஸ்ரீதர்.
ப்ரேமியும் அமைதியாய் இருந்தாள்.  “வேற வழியில்லை ஒத்துக்கிட்டாச்சு” என்று அழ ஆரம்பித்தாள். 

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சற்றே எரிச்சல் பட்டு “இது என்ன புதுசா? டோண்ட் சே தட் யு ஆர் எ வர்ஜின் ” என்று காட்டமான குரலில் சொன்னதும் அவளின் அழுகை இன்னும் அதிகமானது. 

“ஸாரி.. தபாரு ப்ரேமி. அழாதா.. சாரி.. எனக்கும் என்ன பண்ணுறதுன்னு தெரியலை.”

“எஸ். நான் வர்ஜின் இல்லைதான் ஸோ வாட். அதுனால வருத்தப்படகூடாதா? ஒரு திமிரு புடிச்ச அசிங்கமானவனோட போய் படுக்கணும்னு வருத்தப்படக்கூடாதா?. ஒரு பொண்ணு வர்ஜினா இல்லையாங்குறத அவளைத் தவிர மத்தவங்கதான் அதிகமா கவலைப்படறாங்க”

தான் அப்படி கேட்டிருக்கக் கூடாது என்று ஸ்ரீதர் ஒரு பக்கம் வருந்தினாலும், இப்படி கேட்டதற்கே வருத்தப்படுகிறவளிடம் ஊருக்கே போன் போட்டு அவளோடு படுக்கப் போவதை பிரஸ்தாபம் செய்து கொண்டிருக்கும் சுரேந்தரைப் பற்றி தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று கவலைப்பட்டான்.

“எனக்கு பிடிக்கலை”

”என்ன பண்ணலாம். இன்னைக்கு நடக்கலைன்னா நாளைக்கு ஷூட்டிங் நடத்த மாட்டான். லூசுக் … “என்று கெட்ட வார்த்தை சொல்ல வந்து சட்டென நிறுத்தினான். எதிர் முனையில் ப்ரேமி சட்டென சிரித்தாள். அவள் சிரிப்பில் விரக்தி இருந்தது. 

“ஒரு ஆம்பளைய திட்டக்கூட பொம்பளயோட குறிதான் தேவையா இருக்குற ஊர்ல வாடின்னா படுக்குறத தவிர வேறென்ன எதிர்பாக்க முடியும். சரி.. நான் கிளம்புறேன்”  என்றாள்.

“ப்ரேமி.. சாரி.. ஒரு ஐடியா.. சொல்லுறேன். அட்லீஸ்ட் கொஞ்ச நேரத்துக்கு இதை போஸ்ட் போன் பண்ணலாம். என்ன சொல்லுறே?” என்று ஆர்வமாய் கேட்டான்.

“என்ன சொல்லு?” என்ற அவளின் குரலில் பெரிய ஆர்வமில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும்  சலிப்பு இருந்தது. ஸ்ரீதர் சொல்ல ஆரம்பித்தான். ப்ரேமி ‘ம்..ம்…ம்” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

********************************

“மணி.. அதான் ஷெட்டியூல் முடிஞ்சிருச்சு இல்ல. சுப்புராஜை மீட் பண்ணிருவோமா?” என்றான் ரவி.

“டேய்.. நிஜமாவே காசு வச்சிருக்கானா? இல்ல உன்னைப் போல கதவுட்டுட்டு கிட்ட வந்ததுக்கு அப்புறம் கடன் கேக்கப் போறான்” என்றார் மணி.  அவர் குரலில் எகத்தாளம் இல்லை. சற்று சீரியஸாய்த்தான் சொன்னார். ஏனென்றால் அவருக்கு ரவியின் மேல் அவ்வளவு நம்பிக்கை. ஊர் பூராவும் பெயர் கெட்டுப் போனவனிடம் கெட்டுப் போய் ஜெயித்தவன் குலாவ மாட்டான்.

ஜெயித்தவனுக்கு இன்னொரு ஜெயித்தவனை எப்படி நெருங்குவது என்று சுலபமாய் தெரியும். ஒரு வேளை ரவியை கருவியாய் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதே தவிர, அவனை கூட வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது என்று அவருக்கு தெரியும்.

“வச்சிருக்கான் மணி. ஆளே தவுலத்தா திரியுறான். போடுற ஜீன்ஸ் என்னா? வாட்ச் என்ன? எப்பவும் மணக்குற செண்ட் என்னான்னு? ஒரு ரேஞ்சாத்தான் திரியுறான்”

“சரி.. வரச் சொல்லு மீட் பண்ணுவோம்.”

”அவன் நம்மளை வரச் சொல்லுறான் மணி. அவனோட கெஸ்டவுஸுக்கு” 

‘அட கெஸ்ட் அவுஸ் எல்லாம் வச்சிருக்கிற அளவுக்கு வளர்ந்துட்டானா?’ என்று மனதிற்குள் நினைத்தபடி “எங்கடா ?” என்று கேட்டார்.

“ஈ.ஸி.ஆர்ல”

“சரி வா.. கிளம்புவோம்.” என்ற மணியிடம்.  “மணி.. வர்ற வழியில சுப்புராஜ் அவரோட ரெண்டு ப்ரெண்ட பிக்கப் பண்ணிட்டு வர முடியுமான்னு கேட்டான். நான் உன்னை கேட்டுட்டு சொல்லுறேன்னு சொல்லிட்டேன். என்ன சொல்ல பிக்கப் பண்ணிட்டு போலாமா? இல்ல.. .” என்று இழுத்தான். 

வழக்கமாய் இம்மாதிரியான ஆப்ளிகேஷனை எல்லாம் மணி ஒத்துக் கொள்ளவே மாட்டார். யாரை சந்திக்கப் போகிறோமோ அவன் சம்பந்தப்பட்டவன் என்பதால் சரி என்றார். சுப்புராஜைப் பற்றி ரவியிடம் மேலும் வாயைக் கிளறி விஷயங்களை வாங்கிக் கொண்டு அவனை சந்திப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருந்தார். இப்போது அது சரிப்படாது என்பது கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.   

“வண்டிய நான் ஓட்டுறேன்” என்று ரவி சாவியை வாங்கிக் கொண்டான். அதுவும் சரியனெப்பட்டது. வேற்று ஆட்களையெல்லாம் வைத்துக் கொண்டு டிரைவர் போல் தான் கார் ஓட்டுவது சரியில்லை எனத் தோன்றியதால் ஒத்துக் கொண்டார்.

எது சொன்னாலும் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மணி இருப்பது குறித்து ரவிக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. கிளம்புகையில் தன் வாட்சப்பை எடுத்து ‘கிளம்பிட்டோம்” என்று மெசேஜ் போட்டு விட்டு அதை பார்த்தாவிட்டது என்கிற ப்ளூ டிக் வந்தவுடனேயே மெசேஜை அனைவருக்குமான டெலிட்டை செய்துவிட்டு, காரை எடுத்தான். 

மணி தன் படத்தின் பாடல்கள் அடங்கிய பென் ட்ரைவை கொடுத்து “இதப் போடுறா.. கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்ல சொல்லியிருக்காரு டைரக்டர்” என்றார்.

பாடல் பென் ட்ரைவை போட்டான். ஒவ்வொரு பாடலாய் பாட ஆரம்பித்தது. காரும் மெல்ல ட்ராப்பிக்கிலிருந்து ஊர்ந்து அவுட்டர் ரிங் ரோட்டை பிடிக்க ஆரம்பிக்க, மீண்டும் மீண்டும் அதே பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டே வந்தார் மணி. அவருக்கு பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது. மனக்கண்ணில் அப்பாடல்களை விஷுவலாய் ஓட்டிக் கொண்டு வந்தார்.  போனை எடுத்து மனைவிக்கு போன் போட்டார்.

“கண்ணு.. ஒரு நிமிஷம் போனை அப்படியே வச்சிக்க.  நம்ம படத்துப் பாட்டு போடுறேன் கேட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லு பாக்கலாம்” என்று மீண்டும் பாடல்களை ஆரம்பத்திலிருந்து ஓடவிட்டு, ஸ்பீக்கரின் மேல் அவரது போனை வைத்து கொண்டே வந்தார். அவரது மனைவி அங்கே கேட்கிறாள் என்கிற சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது. ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் “எப்படி?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்கு எதிர்பார்க்காமல் அடுத்தப் பாட்டை ஓட விட்டார்.

மொத்த பாடல்களும் முடிந்த பின் “எப்படி கண்ணு இருந்துச்சு பாட்டு?” என்று கேட்டார். எதிர் முனையில் வந்த பதிலால் சந்தோஷப்பட்டார். “என் ஆசை கனவு இந்த சினிமா எடுக்குறது கண்ணு. அதான் எல்லாம் நல்லா வர சந்தோஷமாயிருச்சு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல பாரு.. ஊரே உன் புருஷன் பேரை சொல்லிட்டு அலையும் பாரு” என்று சந்தோஷமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ரவி வண்டியை ஓரம்கட்டினான். 

“என்ன ?” 

“சுப்புராஜ் பிக்கப் பண்ண சொன்ன ஆளுங்க நிக்குறாங்க” என்றான் ரவி.

வண்டி ஓரமாய் நின்றவுடன் இரண்டு பேர் வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு தடி தடியாய் நின்றிருந்தார்கள். பார்க்க ரியல் எஸ்டேட் ஆட்கள் போலத் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் மணிக்கு பிடிக்கவேயில்லை. “டேய்.. இவங்கதானா?” என்று மீண்டும் ஒரு முறை ரவியிடம் கேட்டான். 

“அட. அவங்கதான் போன் நம்பர்ல கூப்டு சொன்னான் இல்லை” என்று ரவி காரின் கதவை திறந்து விட, பின் சீட்டில் இருந்த மணியைப் பார்த்து பின்னாலா? முன்னாலா? என்று யோசனையாய் முன்னும் பின்னும் பார்க்க, மணி நகர்ந்து கொண்டு, அவர்கள் இருவரையும் பின்னால் அனுமதித்தான். இருவரின் ஒருவன் தடியாய் இருக்க, அவன் மறுபக்கம் வந்து நடுவில் மணி, இடது வலதாய் இருவரும் உட்கார்ந்தார்கள்.  ”அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிருங்க பிக்கப் பண்ணிட்டேன்னு” என்று ரவியைப் பார்த்து சொன்னார்கள். 

ரவி தன் போனை எடுத்து சுப்புராஜுக்கு போன் செய்து “பிக்கப் பண்ணிட்டேன். இன்னும் ஒன் அவர்ல வந்திருவேன்’ என்று சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். கார் ஸ்பீக்கரில் மணி தன் படப் பாடலை மீண்டும் வந்திருக்கும் இருவருக்காக ப்ளே செய்யச் சொன்னார்.  மெல்ல பாடல் சத்தம் காற்றில் கரைந்து அமிழ்ந்தது. மணியின் கார்  ஈ.சி.ஆரின் வழுக்கும் ரோட்டில் போய்க் கொண்டிருந்தது.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 38 - https://bit.ly/2RMISAK

பகுதி 37 - https://bit.ly/2AqAAog

பகுதி 36 - https://bit.ly/2ESTnfd

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close