[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 37 – ஸ்டண்ட்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 29 Dec, 2018 12:53 pm
  • அ+ அ-

”மாஸ்டர்.. நல்லா பாத்துக்கங்க. எது எப்படி பண்ணனும்னு நல்லா ப்ளான் பண்ணிக்கங்க. பின்னாடி சொதப்பிறப் போவுது. ஏன்னா.. நீங்க பண்ண படங்கள்ல இந்த மாதிரியான சேஸிங்  காட்சியெல்லாம் இருந்ததே கிடையாது. நியாயமா வேற நல்ல எக்ஸ்பீரீயன்ஸ் மாஸ்டரை வச்சி எடுக்கணும்.” என்று வின்செண்ட் சொன்ன மாத்திரத்தில் மாஸ்டருக்கு சுர்ரென கோபம் வந்தது.

“சார்.. நானும் நாற்பது படம் மாஸ்டரா பண்ணியிருக்கேன். நீங்க மட்டும் இதுக்கு முன்னாடி பாகுபலி பண்ணா மாதிரியும், நானென்னவோ நேத்துத்தான் மாஸ்டரானாப் போலவும் பேசக்கூடாது. எனக்கெப்படி இப்படியான ஆக்‌ஷன் படங்கள் பெரிய விஷயமோ, உங்களுக்கும் அதே மாதிரிதான். சும்மா நக்கல் அடிக்காம வேலை எப்படி செய்யுறதுன்னு பேசுவோம்” என்றபடி, ஸ்ரீதரைப் பார்த்து “நீங்க சொல்லுங்க சார்” என்று தொடர்ந்தார். 

ஸ்ரீதர் மேலும் அதை வளர்க்க விரும்பாமல் தான் சொல்ல வந்ததை பேச ஆரம்பித்தான். வின்செண்ட்,  மாஸ்டர் வெளியேறும் அமைதியாய் இருந்துவிட்டு “ஒரு மொக்க மாஸ்டர் என்னை கலாய்க்கிறான். நீ அமைதியா இருக்கே? என்ன பழிவாங்குறியா?” என்றான். 

"நீ பேசுனது தப்பு. எல்லாருக்கும் ஒரு ஆரம்பம் இருக்குல்ல. சின்னச் சின்ன படங்கள் பண்ணித்தான் எல்லாருமே பெரிய படம் பண்ணுறாங்க. ப்ருவ் பண்ண சான்ஸ் கிடைச்சி வேலை செய்ய ஆர்வமா இருக்கிறவரை கலாய்க்கிற?”

“மளிகை கடையில வேலை செய்ய வேண்டியவனெல்லாம் மாஸ்டர். இவன் சொல்லுறத எல்லாம் நான் கேட்கணும். நீயும் கண்டுக்காம இருப்ப?. ரைட் ஓக்கே.. முடிஞ்சிருச்சு இல்ல.. நான் என் ரூமுக்கு போய் படுக்குறேன். குட் நைட்” என்று கிளம்பினான்.

அவன் அப்படிப் போனது குறித்து ஸ்ரீதருக்கு ஆச்சர்யமாய் இருந்தது. சுரேந்தர் அவன் போன் எடுக்காமல் போனதிலிருந்து அவனின் நடவடிக்கையில் இருந்த திமிர்த்தனம் மாறியிருக்கிறதாய் அவனுக்கு தோன்றியது.

**********************

ஆனால் அது தவறு என்று அடுத்த நாள் ஷூட்டில் தெரிய ஆரம்பித்தது.  பெரும்பாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் எப்போதும் இயக்குனர் விரும்பியதை, ஆக்‌ஷன் மாஸ்டர் தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு அவர் தான் கேமராமேனுக்கு ஷாட் சொல்லுவார்.

பெரிய இயக்குனர்கள் அவர்கள் களம் இறங்கி மாஸ்டருடன் இணைந்து ஷாட்களை சொல்லுவதும், வைப்பதுமாய் இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் மாஸ்டர் தான் சண்டைக் காட்சிகளுக்கு இயக்குனர். வின்செண்ட் காலையிலிருந்தே மாஸ்டர் சொன்ன ஷாட்களை வைக்க, நேரமெடுத்துக் கொண்டான்.

நேரமெடுத்துக் கொண்டது மாஸ்டருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், அமைதி காத்தார்.  ஆனால் தன் கோபத்தை தன் உதவியாளர்களிடம் கெட்ட வார்த்தைகள் மூலம் காட்ட ஆரம்பித்தார். அவரின் கோபக்குரல் ஸ்டண்ட் ஆட்களின் கவனத்தை சிதறடிக்க ஆர்மபித்தது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட கோ-ஆர்டினேஷன் இல்லாமல் டேக் மேல் டேக்காய் போய்க் கொண்டிருக்க, வின்செண்ட் சிரித்தபடியே இருந்தான்.

ஸ்ரீதருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. மாஸ்டரிடமோ, வின்செண்ட்டிடமோ போய் ஏன் லேட் என்று கேட்க முடியவில்லை. வின்செண்ட் லேட் செய்தாலும், டேக்கள் போவது கோ – ஆர்டினேஷன் இல்லாதது புரிந்தது.

ப்ரேக்கில் “மாஸ்டர் என்ன பிரச்சனை? சின்ன சின்ன ஷாட் எல்லாம் ரீடேக் போவுது?. ஏதாச்சும் ப்ராப்ளமா?” என்று தனியே அழைத்துக் கேட்டான்.

”சொன்னா தப்பா நினைச்சிக்காதீங்க.. வின்செண்ட் பண்ற டார்ச்சர்ல நான் அவங்க மேல கோவப்பட்டு, பாய்ஸ் கான்செண்ட்ரேஷன் இல்லாம போறாங்க. எனக்கு புரியுது.  கோபத்த கண்ட்ரோல் பண்ணத்தான் ட்ரை பண்ணுறேன். ப்ரஷர் அதிகமாவுது. அவன் முன்னாடி என் ஆளுங்க தப்பு பண்றது இன்னும் டென்ஷன் ஆவுது” என்றார்.

ஸ்ரீதருக்கு புரிந்தது. நேற்று மாஸ்டர் பேசியதற்கு பழிவாங்குகிறான் வின்செண்ட். கொஞ்சம் கொஞ்சமாய் அவரது மனோதிடத்தை உடைப்பது. சைக்கலாஜிக்கலாய் வீக்காக்குவது. உனக்கு வேலை தெரியாது என நாலு பேர் முன்னிலையில் நிர்வாணமாக்க முற்படும் வேலை.  

முதல் நாள் ஷூட்டிலேயே இந்த மாதிரியான உரசல்கள் சரிப்படாது. போய் பேசித்தான் ஆக வேண்டும். என முடிவெடுத்து வின்செண்டை அழைத்தான்.  உடன் வந்தவன் ’என்ன’ எனபது போல பார்த்தான். 

“மாஸ்டரை ஏன் டென்ஷன் ஆக்குற? பாவம் அவரு.. “

“ஹ..ஹா..ஹா..” என கெக்கலித்து சிரித்தபடி, “அதுக்குள்ள கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டானா? மளிகைக்கடை. இன்னும் ஆரம்பிக்கவேயில்லை” என்றான்.

இப்படி வெளிப்படையாய் ஒத்துக் கொள்வான் என்று ஸ்ரீதர் நினைக்கவில்லை. ”வின்செண்ட். வேலை நடக்கணும். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மொத்தமே 8 நாள் தான் ஒதுக்கியிருக்கோம். நாலு சேஸ் இருக்கு. அரை நாள்ல ரெண்ட் ப்ளாக் முடிக்கணும்னு நேத்து பேசினோம். இன்னமும் ஒண்ணே முடிக்கலை. நீ கொஞ்ச விட்டுக் கொடுத்து வேலைய முடிக்கப் பாரு.” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினான் ஸ்ரீதர்.

மதிய செஷனில் கொஞ்சம் சுமூகமாய் போனது. மாஸ்டர் கொஞ்சம் கூலாய் எடுத்துக் கொண்டு பாய்ஸ்களிடம் வேலை வாங்க, சட்சட்டென ரெண்டு ப்ளாக்குள் முடிந்து லாரியை வைத்து எடுக்க வேண்டிய ஒர் ஆக்‌ஷன் ப்ளாக்கை ப்ளான் செய்து கேமரா கோணம் பிக்ஸ் செய்யச் சொல்லி வின்செண்ட்டிடம் சொல்ல “அது நல்லாருக்காது மாஸ்டர்.” என்றான். 

“நேத்து நாம ஒக்காந்து பேசும் போது இப்படித்தான் எடுக்கணும்னு ரெபரன்ஸ் எல்லாம் காட்டுனீங்க மறந்துட்டீங்களா? நேரத்துக்கு ஒண்ணு பேசுறீங்களே?” என்ற அவரது குரலில் நக்கல் இருந்தது.

“ஆமா மாஸ்டர் சொன்னேன் தான் பட்.. அதெல்லாம் நல்ல திறமையாய் ஆக்‌ஷன் கம்போஸ் பண்ற மாஸ்டர்களோட வைக்குற ஷாட். ஷாட் வச்சா மட்டும் போதுமா? ஆக்‌ஷன் வர வேணாம்? நான் சொல்லுற்படி ஆங்கிள் வையுங்க்” என்று சத்தமாய் மொத்த ஆக்‌ஷன் க்ரூப் பாய்ஸ்களுக்கு முன்னால் அப்படி சொன்னதை மாஸ்டரால் ஜீரணிக்க முடியவில்லை.

நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு மாஸ்டராய் பணிபுரிந்தவரை “நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே” என அவரின் ஸ்டண்ட் பாய்ஸுக்கு முன்னால் சொல்வது அவரின் திறமையை பழி சொல்வது. எந்த ஒரு கலைஞனும் அதை ஏற்க மாட்டான். பாய்ஸ் எல்லோரும் மாஸ்டரையே பார்க்க, அவர்கள் பார்வையில் ஏதாச்சும் செய்யுங்க என்ற செய்தி இருக்க, கோபமாய் ஸ்ரீதரிடம் நெருக்கமாய் வந்து நின்று “பேக்கப் சொல்லிருங்க” என்று சொல்லிவிட்டு, பாய்ஸ் என்று பின்னால் வாங்க என்பது போல கை காட்டி அனைவரையும் அழைத்துச் சென்றார்.  

மாஸ்டர் என்ற ஸ்ரீதரின் குரலுக்கு அவர் செவி சாய்க்கவேயில்லை. 

”என்னாங்க.. இன்னும் அரை மணி நேரம் இருக்கு. அவர் கிளம்புறாரு.. “ என்று பதட்டப்பட்டபடி ப்ரடக்‌ஷன் மேனேஜர் ஓடி வந்தார்.

அரை மணி நேரம் இருக்கும் போது ஷூட்டிங் பேக்கப் ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் இவர்களது பிரச்சனையை வைத்துக் கொண்டு எப்படி அடுத்தடுத்த நாள் ஷூட்டிங் போவது என்பது ஒரு முக்கிய கேள்வியாய் கண் முன் தெரிய, அதை விட பெரிய விஷயமாய் நான்கு படமெடுத்தும் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத சுரேந்தரின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

**********************

”மணி.. நம்ம சுப்புராஜு வெளிநட்டுலேர்ந்து  வந்துருக்கான்” 

“எந்த சுப்புராஜு?. ஊர் பூரா கடன் வச்சிட்டு ஓடிப் போனானே அவனா?. உன் ப்ரெண்டுன்னு சொல்லு. கடன் காரனெல்லாம் உனக்குத்தான் க்ளோஸு” என்ற மணியின் குரலில் இருந்த எகத்தாளத்தைக் கண்டு ரவி கடுப்பானாலும், கோபத்தை அடக்கிக் கொண்டு “இப்ப வந்து எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டான். உன்னைப் பத்திக் கேள்விப்பட்டானாம் கையில எட்டுப்பத்துக் கோடியிருக்காம் ஏதுலயாச்சும் இன்வெஸ்ட் பண்ணலாம்னு நினைக்கிறான். அதான் உன்னை பாக்கணும்னான் உன்னைக் கேட்டு சொல்லுறேன்னு சொல்லியிருக்கேன்.” என்றான்.

”அட நீ கூட உருப்புடியா பிஸினெஸ் எல்லாம் கொண்டு வர ஆர்மபிச்சிட்டே?.. என்ன  பண்ணணுமாம்?”

“எதுலயாச்சும் நல்ல ரிட்டர்ன் வர்ற மாதிரி வேணுமாம். நீ சினிமா எடுக்குறத சொன்னேன். அதப் பத்தியும் பேசலாம்னு சொல்லியிருக்கான்.”

“சினிமா எல்லாம் கடன் வாங்கி எடுக்க மாட்டேன்”

“அத நான் சொல்லிட்டேன்பா.. இருந்தாலும் உன்னோட பேசணுங்கிறான். ஒரு மீட் ஏற்பாடு பண்ணட்டுமா?” 

“ம்ம்…சரி அடுத்த வாரம் ஷூட் ஷெட்டியூல் முடியட்டும். மீட் பண்ணுவோம்” என்று சொல்லிவிட்டு, கிளம்பினார் மணி.

அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரவி சற்று நேரம் கழித்து “அண்ணே ஒரு க்ரீன் டீ கொடுங்க”என்று ப்ரொடக்‌ஷன் ஆளைப் பார்த்து சொல்லியபடி தன் போனை எடுத்து நம்பரைப் போட்டு ரிங் வரும் வரை மணி போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த ரவி நம்பர் எடுத்ததும் “பிக்ஸ் பண்ணியாச்சு அடுத்த வாரம் முடிச்சிருவோம்’ என்றான்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 36 - https://bit.ly/2ESTnfd

பகுதி 35https://bit.ly/2BDZgJH

பகுதி 34 - https://bit.ly/2LiQaXo

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close