[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 36 – டபுள் கிராஸ்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 25 Dec, 2018 12:14 pm
  • அ+ அ-

”நீயா ஒருத்தனை கூட்டிட்டு வந்து இவனை வீரன், சூரன்னு சொல்லுவே. நீயா அவன் வேணாம்னு சொல்லுவே. கேட்டுட்டு இருக்க நான் என்ன கேணயனா?. இந்த படத்துல ஒர்க் பண்ணுற டெக்னீஷியன்கள் எல்லாருமே நீ செலக்ட் பண்ணவங்கதான். ஸோ.. அவங்களோட செயலுக்கு நீ தான் பொறுப்பு. இன்னைக்கு கேமராமேன் வேணானுவே. நாளைக்கு ஆர்ட் டைரக்டர் வேணான்னுவே.. அப்புறம் ஹீரோவ மாத்துறேன்னு கிளம்புவ.. திரும்ப திரும்ப எடுத்ததையே எடுத்து சிரைக்குறதுக்கு நானா கிடைச்சேன்?” என்ற சுரேந்தரின் முகம் ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தது.

ஸ்ரீதர் அவர் கத்தி முடிக்கும் வரை அமைதியாய் இருந்தான். இருந்துதான் ஆக வேண்டும். இம்மாதிரியான சினிமா தெரியாத ஒருவனிடம் வந்து மாட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழியேயில்லை. சுரேந்தர் சற்றே அமைதியானார்.

“சார்.. நீங்க பேசிட்டீங்கன்னா.. நான் கொஞ்சம் பேசலாமா?”

சுரேந்தர் அவனை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்துவிட்டு “ம்’ என்றார்.

“சார். நீங்க சொன்னா மாதிரி இந்த படத்துல எல்லா டெக்னீஷியன்களையும் ரொம்ப யோசிச்சுத்தான் செலக்ட் பண்ணேன். என்ன மாதிரி ஒரு புது டைரக்டருக்கு அந்த சுதந்திரத்தை கொடுத்ததுக்கு உங்களூக்குத்தான் முதல்ல நன்றி சொல்லணும்” என்று ஆரம்பித்தான். சுரேந்தரின் முகத்தில் சற்றே கடுமை குறைந்தது.

”பட்.. நாம எடுத்த சில முடிவுகள் தப்பாயிருச்சுனு தெரிஞ்ச பின்னாடியும், நாமதானே இதுக்கு காரணம்னு கில்டியா இருந்துட்டு  அவங்களோடயே வேலை செய்யுறது நாம நம்புற தொழிலுக்கு, நம்பின உங்களுக்கு நான் செய்யுற துரோகமா பாக்குறேன். அந்த துரோகத்தை நான் செய்ய விரும்பலை.”

“செண்டிமெண்டலா பேசுறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நாளைக்கு அவன் யூனியனுக்கு போய் பஞ்சாயத்து பண்ணான்னா? அதுக்கு யாரு மொய் வைக்குறது?”

“தப்பு அவன் மேலங்க. அதுக்கு மேல அவன் செய்தான்னா. நான் பாத்துக்குறேன். இன்னைக்குள்ள அவன் வந்து என்னைப் பார்த்து பேசணும். அப்படியில்லைன்னா.. நான் அவனோட வேலை செய்ய மாட்டேன். அவன் இல்லாததுனால வேலை நிக்காது. அதுக்கு நான் கேரண்டி. ஒரு ஷூட்டிங்குல ஒரு டைரக்டர் தான்சார் இருக்கணும். நாலு பேர் வேலை செய்தா அது படமா வெளிவராது.

சொல்லுறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. ப்ரேமி வேணும்னா உங்களுக்கு பிடிச்ச பொண்ணா இருக்கலாம். எனக்கு அவன் என் கதையோட நாயகி. அவளை என்னை விட அழகா காட்ட விரும்புறவங்க வேற யாரும் இருக்க முடியாது. நீங்க அதை புரிஞ்சிட்டீங்கன்னா.. நான் சொல்றதும் உங்களுக்கு புரியும்.

இல்லைனு நீங்க நினைச்சீங்கன்னா. எனக்கான முடிவை நீங்களே சொல்லிருங்க. எதுக்கும் நான் தயாரா இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அமைதியாய் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சுரேந்தர் எடுக்கவிருக்கும் எந்த முடிவுக்கும் ஸ்ரீதர் தயாராகவே இருந்தான். இனி பயந்து எந்த புண்ணியமும் இல்லை. தலைமை ஏற்பவன் குற்றசாட்டுக்கும், தவறுக்கும் பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும். அதனால் கிடைக்கப் போகும் வீழ்ச்சிக்கும் தயாராய் இருக்க வேண்டும். தன் சுய கெளரவத்தை விட்டு, வேலை செய்வது தற்கொலைக்கு சமம் என்று அவனுக்கு தோன்றியது.

“தபாரு தம்பி.. நான் ஒரு வாட்டி வாக்கு கொடுத்திட்டன்னா. அதுலேர்ந்து மாற மாட்டேன். தம்பி வின்செண்டோட உனக்கு என்ன பிர்ச்சனைன்னு எனக்கு புரியலை. ஆனா அவன் தான் கேமராமேன். நீ மிரட்டுவியோ, கெஞ்சுவியோ. நான் அதுல தலையிடலை.. இந்த வாட்டி நீ சொல்லுறதுக்கு நான் தலையாட்டுவேன். பட்.. அவன் தான் கேமராமேன். அதுக்கு ஏத்தாப்போல நீ வேலை செய்” என்று சொல்லிவிட்டு கிளம்பிய போது அவரின் போன் அடித்தது வின்செண்ட் தான் அழைத்தான்.

“பாரு.. தம்பி தான் கூப்பிடுது. நான் இன்னைக்கு பூரா எடுக்கலை. நீ பேசி முடிவு பண்ணப்புறம் தான் நான் எடுப்பேன். பேசுவேன். என்ன ஓகேயா?” என்று ஸ்ரீதரைப் பார்த்து புன்னகைத்தபடி வெளியேறினார்.

சுரேந்தரின் ஆட்டம் ஸ்ரீதருக்கு பிடித்திருந்தது. ஆனால் இவருடன் நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்றும் உரைத்தது.

அவர் போன பிறகு அமைதியானான். வெளியே வந்து பொறுமையாய் இரண்டு சிகரெட்டுகளை இழுத்து முடிந்த போது அவனிடமிருந்த ப்ரஷர் எல்லாம் வடிந்து தெளிவானது போல் இருந்தது. காசி அவன் முகத்தை பார்த்து “என்ன குழப்பமெல்லாம் தீர்ந்துச்சா?”என்று சிரித்தான். கார்க்கி அடுத்த ஷெட்யூலுக்கான லிஸ்டை எடுத்து அவன் முன் கம்ப்யூட்டரில் ஓப்பன் செய்து அவன் முன் நீட்ட, அதில் மூழ்கிப் போய் எழுந்திருக்கும் போது மணி மூன்றாகியிருந்தது.  மேனேஜர் கதவை தட்டி திறந்து “சாப்பாடு வந்து ஆறி போயிருச்சு.” என்றார்.

“என்ன நீங்க எல்லாம் சாப்டீங்களா?”என்று உதவியாளர்களை பார்த்து கேட்டான். அனைவரும் மையமாய் இல்லை என்று சொல்ல, புரிந்து கொண்டு “போய் சாப்பிடுங்க’ என்று சொல்லிவிட்டு நிமிர்ந்த போது, வின்செண்ட் அவன் முன் நின்றிருந்தான்.

**********************

”மானத்தை விட்டு மன்னிப்பு கேட்டாச்சு. பேசியும் பார்த்தாச்சு. இன்னமும் நம்மளை நாய் மாதிரியே பாக்குறான்னா அவனை என்னான்னு சொல்லுவே?” என்று போனில் கத்திக் கொண்டிருந்தான் ரவி. எதிர்பக்கம் அவனின் மனைவி.

“அமைதியாத்தான் இருக்கேன் கண்ணு. ஒரு காலத்துல எத்தனை உதவி பண்ணியிருப்பேன். இன்னைக்கு என்னை இப்படி அவமானப்படுத்துறான். நான் விட மாட்டேன்” என்றவனின் குரலுக்கு எதிர்முனையில் அழுகை பதிலாய் வந்தது.

“சரி.. சரி.. அழுவாத.. நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லி போனை வைத்தவன். எதிரே இருந்த சரக்கு க்ளாஸை எடுத்து ஒரே கல்ஃபில் குடித்துவிட்டு “நான் யாருனு காட்டுறேன் மணி” என்றான் ரவி.

அடுத்தடுத்த நாட்களில் மணி எத்தனை அவமானப்படுத்தினாலும் பதில் பேசாமல் அமைதியாக இருக்க பழக்கிக் கொண்டான். எதிர் பேச்சு பேசாமல், முறைக்காமல், காத்திருக்கச் சொன்னால் காத்திருந்து, சொல் பேச்சு கேட்கும் ஒரு நாயைப்  போல இருந்தான். மணி கொஞ்சம் கனிய ஆரம்பித்தார்.

மணி அடிப்படையில் நல்லவர். குரூரமானவர் கிடையாது. ரவி. கொஞ்சம் அவசரக்காரன். தொழில் நேர்த்தி இல்லாதவன். ஆனால் எல்லாவற்றிக்கும் மேலாய் நண்பன். அதனால் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மீதான கோபம் குறைந்து மீண்டும் நெருக்கமாக ஆரம்பித்தார். ஷூட்டிங் நாட்களில் அழைத்துப் போக ஆரம்பித்தார். தனக்கான உதவியாளனாய் வளைய வரச் செய்தார்.  அது ரவிக்கு மீண்டும் மரியாதையை பெற்றுக் கொடுத்தது.

செட்டில் எல்லோரும் வணக்கம் வைக்க ஆரம்பித்தார்கள். ப்ரொடக்‌ஷனில் பிரச்சனைக்கு அப்புறம் சிகரட் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். இப்போது அவனுடய ப்ராண்ட் ஒரு பாக்கட் வாங்கி வைக்க ஆரம்பித்தார்கள்.

மணி சாப்பிட்ட பிறகு தான் ரவி சாப்பிடுவான் என்பதால் அவனுக்கு மட்டுமே ஸ்பெஷலாய் நான் வெஜ் பீஸுகளை எடுத்து வைத்து பரிமாற ஆரம்பித்தார்கள். எப்படியாவது மீண்டும் தன் பழைய பொசிஷனுக்கே வர கடுமையாய் தன்மானத்தை அடகு வைத்து பயணித்தான் ரவி.

**********************

பாண்டிச்சேரியில் அவுட்டோர் ஷுட் பரபரப்பாய் போய்க் கொண்டிருந்தது.  முதல் நான்கு நாட்கள் வெறும் சேசிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே என்பதால் ஹீரோ, ஹீரோயின் யாருமில்லாமல் மற்றவர்களை மட்டுமே அசெம்பிள் செய்திருந்தான் ஸ்ரீதர்.

“ப்ரேமிக்கு எப்ப டேட்டு?’ என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார் சுரேந்தர். அவரின் அவசரம் அவனுக்கு புரிந்தது. அசடு வழிய சிரித்தபடி, அடுத்தவாரத்துலேர்ந்து தொர்ந்து எட்டு நாள் சார்” என்றான். வின்செண்டை அழைத்து மாஸ்டருடன் ஆக்‌ஷன் காட்சிகளை பற்றிப் பேச வேண்டும் என்று தன் அறைக்கு வரச் சொன்னான்.

ரெண்டாவது ஷெட்டியூல் பிரச்னைக்கு பிறகு வின்செண்ட் ஆபீஸ் வந்த போது ஸ்ரீதர் ஏதுவுமே பேசவில்லை. காலையிலிருந்து சுரேந்தருக்கு போன் அடித்து ஓய்ந்து, வேறு வழியில்லாமல் ஸ்ரீதருக்கு வாட்சப்பும், மெசேஜுமாய் அனுப்பி வைத்திருந்தான். வேலையில் இருந்ததால் சைலண்டில் வைத்திருந்த ஸ்ரீதரின் போனை யாருமே கவனிக்காமல் இருக்க, வேறு வழியேயில்லாமல் வின்செண்ட் ஆபீஸுக்கு வந்திருந்தான்.

அவனை உட்காரச் சொல்லிவிட்டு போனைப் பார்த்த ஸ்ரீதருக்கு அவன் ஏன் இங்கு வந்தான் என்று புரிந்தது. சுரேந்தரும் போன் எடுக்கவில்லை. தானும் ரெஸ்பாண்ட் செய்யவில்லை என்றதும் பயந்திருக்கிறான். அவன் பயத்தை நாம் இன்னும் மெருகேற்ற வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஸ்ரீதர் அவனிடம் ஏதும் பேசாமல் உட்காரச் சொல்லிவிட்டு தன் டேபிள் மீதிருந்த லேப் டாப்பை அவனின் பால் திருப்பி, “வர்ற வாரம் போற அவுட்டோர் ஷுட் ஷெட்டியூல்” என்றான்.

காட்டுக் கத்தல் கத்துவான் என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு அவனுடய இந்த அமைதி ஆச்சர்யத்தை கொடுத்தது. அதே நேரத்தில் அவன் தன் ஆளுமையை காட்டுகிறான் என்றும் புரிந்தது.எதுவும் நடக்காதது போல வின்செண்டும் ஷெட்டியூலைப் பார்க்க ஆரம்பித்தான். அனைவருக்கும் பிரச்சனை சுமூகமாய் முடிந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். வின்செண்ட் மட்டும் மனதில் கருவருத்தான். “உன்னை நிம்மதியா படமெடுக்க விடமாட்டேன்”

ஸ்ரீதரின் அறையில், மாஸ்டருடன் நாளை எடுக்கப் போகும் காட்சிகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான் வின்செண்ட். ஆனால் அவன் கவனம் காட்சியில் இல்லை.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 35https://bit.ly/2BDZgJH

பகுதி 34 - https://bit.ly/2LiQaXo

பகுதி 33 - https://bit.ly/2E2ZYTK

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close