[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 34 – கேம் ப்ளான்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 06 Dec, 2018 16:24 pm
  • அ+ அ-

”அது என் வேலை இல்லை சார்” என்று ஸ்ரீதர் சொன்ன மாத்திரத்தில் சுரேந்தர் விர்ரென எழுந்தார்.

“எதுத்து பேசுறே? எதுத்தா பேசுறே?” என்று அவனை நெருங்கி வந்தார். அருகில் இருந்தவர்கள் ஏதாவது ரசாபாசமாகி விடுமோ என்று பயந்து அவரை தடுக்க வர, அவருக்கு இன்னும் குஷி ஏறியது அதீதமாய் திமிறினார்.

அவர் திமிறியதைப் பார்த்து பல பேருக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டார்கள். குறிப்பாய் வின்சென்ட்.. ஸ்ரீதர் அசராது அப்படியே நின்ற இடத்தில் நின்றான்.  அவன் அப்படியே நிற்பதை பார்த்து சுரேந்தர் சற்று ஆசுவாசமானார்.

அதை சாக்கிட்டு அல்லக்கைகள் மேலும் அவரை இறுக்கி உட்கார வைத்தார்கள். “சார் கிட்ட கோவம் வர மாதிரி பேசாதீங்க டைரக்டர்” என்றார்கள்.

சுரேந்தர் விறுவிறுவென தன் அறைக்குள் போய் கதவை திறந்து “உள்ள வாங்க” என்றார்.

ஸ்ரீதர் ஒரு முறை அனைவரையும் சுற்றிப் பார்த்துவிட்டு அமைதியாய் உள்ளே சென்றான். உள்ளே நுழைந்த மாத்திரத்தில் கதவை சாத்தினான். அது படீரென பெரும் சத்தத்துடன் சாத்தியது.

சுரேந்தர் சட்டென நிமிர்ந்து கோபமாய் பார்த்தார். ஏதோ சொல்ல நினைத்து வாயை திறக்க முற்பட்ட போது ஸ்ரீதர் கையமர்த்தினான்.

“என்ன ஷூட்டிங்கை நிறுத்திருவீங்களா?. சும்மா இதைச் சொல்லி சொல்லி ஒரு படத்த முடக்காதீங்க. .எனக்கு படம் பண்ணனும். உங்களூக்கு ப்ரேமியை…

என் ஆசைய நான் பப்ளிக்கா சொல்லி படமெடுக்கலாம். ஆனா உங்க ஆசைய பப்ளிக்கா சொல்ல உங்களுக்கு வேணா கஷ்டமா இல்லாம இருக்கலாம். ஆனா அந்த பொண்ணுக்கு?

இப்படி பப்ளிக்கா பேசினா உங்களோட படுத்த அடுத்த நாளு ஆளாளுக்கு தனித்தனியா கூப்பிடுவான். எப்படி அவளை வச்சி ஷூட் பண்றது?

ஆர்டிஸ்ட் கோவாப்ரேஷன் இல்லாமல் ஒரு ….. புடுங்க முடியாது. அதுக்கு நீங்களே ஷூடிட்ங்கை நிறுத்திக்கலாம்” என்று கோபத்தோடு பேசிய ஸ்ரீதரை ஏதும் பேசாமல் பார்த்தார்.

அவன் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் என்று தோன்றியது. ப்ரேமி தான் முக்கியம். அதுவரை எல்லாம் அமைதியாய் போவது முக்கியம். ஒரு கணம் ப்ரேமியின் குழந்தைத்தனமான முகமும் அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத அவளது உடலும் அவர் மனக்கண்ணில் வந்து போனது.

ஏதும் பதில் சொல்லாமல் ஸ்ரீதரை பார்த்து “பப்ளிக்கில எதுத்து பேசாத. எனக்கு கோவம் வந்திரும்” போ என்று சைகை செய்தார். ஸ்ரீதர் அவரை இனி எப்படி டீல் செய்வது என்று புரிந்தது போல நமுட்டு சிரிப்புடன் வெளியே வந்தான்.

அவன் சிரித்துக் கொண்டே வெளியே வருவதை பார்த்த அனைவரும் ஒன்றும் புரியாமல் அவனையே பார்க்க, “வின்செண்ட்.. உள்ளே வாங்க.. அவுட் டோர் கிளம்பணும் அதுக்கான ப்ளானிங் இருக்கு” என்று அவனது அறைக்குள் சென்றான்.

அவனை உதவியாளர்கள் அனைவரும் பின் தொடர, வின்செண்ட் யோசனையாய், சுரேந்தர் அறையை பார்த்தபடியே உள்ளே போனான்.

*****************

திருப்பூர் மணி ரெண்டு நாளைக்கு அலுவலகத்துக்கே வரவில்லை.. ராமராஜ் அவரது அறைக்கு சென்று பார்த்துவிட்டு வந்தார். ரவி மிக அமைதியாய் வளைய வந்தான். வருகிற எல்லாருக்கும் அதீத மரியாதை கொடுத்தான்.

சமயங்களில் அவனது மரியாதையைப் பார்த்து மணிக்கு சிரிப்பு கூட வந்தது. அப்படியே சிரித்தாலும் அதை ரவி கண்டு கொள்ளாமலேயே இருந்தான். கொஞ்சம் சுரணையற்றவனாய் உலவினான் என்றே சொல்ல வேண்டும்.

ராமராஜ் அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பிக்க, அனுமதி கேட்க “ நீங்க பாட்டுக்கு உங்க வேலைய  பாருங்க” என்றார் மணி.

ஆபீஸுக்கு வந்து உதவி இயக்குனர்களை அழைத்து உடனடியாய் ஷூட்டிங் போவதற்கான வேலைகளை மூடுக்கி விட்டார். முதல் ஷெட்டியூலை ஒரு வாரத்துக்கு முடிவு செய்தார். அதற்கான லொக்கேஷன்களை  ஏற்கனவே பார்த்து வைத்திருந்ததால், கடகடவென வேலை நடந்தது.

கைவசம் நாயக, நாயகியரின் டேட்ஸ் இருப்பதால் அவர்களை வைத்தே ஆரம்பித்துவிடலாம் என்று முடிவு செய்தார். அலுவலகம் எங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முதல் ஷெட்டியூல் சென்னையிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்கான காஸ்ட்யூம்கள் ரெடி செய்யப்பட்டது.

ராமிடமும் நித்யாவிடமும், டேட் சொல்லியாகிவிட்டது. முக்கியமாய் ராமிடம் தான் முதலில் டேட் சொன்னார். “நாளை பின்ன உனக்கு ரெண்டு படத்துக்கு க்ளாஷ் வந்திரக்கூடாதுல்ல. முத படம் வர வரைக்கும் நடிப்பு வரலைன்னா கூடபரவாயில்லை. ஆட்டிட்டியூட் தப்புன்னு பெயர் வந்திரக்கூடாது” என்றார் அக்கறையுடன்.

ஸ்ரீதர் வேறு அவுட் டோர் ஷெட்யூல் போடப் போகிறேன் என்று சொன்னதிலிருந்து வயிற்றில் புளியைக் கரைத்தது.

தயங்கித் தயங்கி அடுத்த வாரம் முழுவதும் தன்னால் ”டேட்” தர முடியாது என்ற போது எகத்தாளமாய் சிரிப்பான் என்று நினைத்தான் பதிலுக்கு ஏதும் சொல்லாமல் “பார்த்துட்டு சொல்லுறேன். டோண்ட் ஒர்ரி” என்றதை நினைத்து சந்தோஷப்படுவதா? கவலைப்படுவதா? என்று புரியாமல் இருந்தான்.

நித்யா அவ்வப்போது “டோண்ட் ஓர்ரி” என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

*****************

”ப்ரேமி.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்ற ஸ்ரீதரை ஆச்சர்யமாய் பார்த்தாள் ப்ரேமி. சாதாரணமாய் இப்படி சாந்தமாய் பேசக்கூடியவனில்லை அவன்.

“ நியாயமா இது நான் உனக்கு பண்ற ஹெல்ப்புன்னுதான் சொல்லணும்” என்றான்.

“எதுக்கு இவ்வளவு பேசுறீங்க. என்ன வேணும்னு சொல்லுங்க ஸ்ரீதர்.”

ஸ்ரீதர் கொஞ்சம் தயங்கியபடியே “அடுத்த ஷெட்டியூல் அவுட்டோர் பத்து நாள்” என்றான்.

அவன் அவுட்டோர் என்றதும் ப்ரேமிக்கு புரிந்தது. “ இவ்வளவு சீக்கிரமா?” என்று கேட்ட அவளின் குரலில் துக்கம் தெரிந்தது.

“வேற வழியில்லை. அவுட்டோர் போடலைன்னா படத்தை ட்ராப் பண்ணிருவாரு. நிலைமை அப்படி.  பட் முடிஞ்ச வரைக்கும் அவுட்டோர்ல உன் கமிட்மெண்டை முடிக்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. இப்படியே போஸ்ட் போன் செய்துட்டா படத்த முடிச்சிரலாம். உன் இஷ்டப்படி” என்று தேவையில்லாமல் கண் சிமிட்டினான்.

ப்ரேமி எப்படி என்றெல்லாம் கேட்கவில்லை. அவளுக்கு புரிந்தது. சுரேந்தருடனான சந்தர்ப்பத்தை தன்னை கொண்டு தவிர்க்க வைத்து, தன் ஷூட்டிங்கை நடத்த விரும்புகிறான். 

”இந்த ஷெட்டியூல் மட்டுமில்லாம எல்லா ஷெட்டியூலும் ஒழுங்கா நடக்கணும்னா நான் கோவாப்ரேட் செய்யாம இருக்கணும் இல்லையா?”

“முடிஞ்ச வரைக்கும். அதுக்கு நானும் ஹெல்ப் பண்ணுறேன்” என்றான்.

“ட்ரை பண்ணுறேன். என் சித்தி சொதப்பாம இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் ராமின் போன் வந்தது. அவனின் டேட் அடுத்த வாரம் முழுவதும் இல்லை என்று சொன்ன போது இது என்னடா சோதனை என்று யோசனை வந்தாலும் சட்டென மனதினுள் சிரிப்புத்தான் வந்தது.

“டோண்ட் ஒர்ரி உன் கற்பை ஒரு வாரத்துக்கு காப்பாத்த வழி வந்திருச்சு” என்று சந்தோஷமாய் காபி ஷாப்பிலிருந்து கிளம்பினான். அவன் போய் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரேமி.

*****************

“அடுத்த வாரம் அவுட்டோர் போகலை சார். டேட்ஸ் ப்ராப்ளம்”

“யாருக்கு ப்ரேமிக்கா? “ என்று சொல்லிவிட்டு “ஓ” வென சிரித்தார் சுரேந்தர். ஸ்ரீதர் அமைதியாய் அவர் சிரித்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்துவிட்டு, “இல்லை சார் ராம் டேட் இல்லை. அந்த படம் ஷூட் ஆரம்பிக்குது ஒரு வாரம் தொடர்ந்து” என்று சொன்ன அவன் குரலில் கிண்டல் இருந்ததைப் போல பட்டது சுரேந்தருக்கு.

அடுத்த வாரம் இந்நேரம் ப்ரேமியுடனான நாளை நினைத்து மனதில் கற்பனை ஓட்டிக் கொண்டிருந்தவரின் பலூன் படாரென வெடித்து சிதறியதைப் போல ஆனது அவரது மனது.  ராம் மீது கோபம் வந்தது. 

“அவன் என்ன அவ்வளவு பெரிய புடிங்கியா?நம்மளைக் கேட்காமல் எப்படி அவங்களுக்கு டேட் தருவான்?” என்று கோபமாய் கொந்தளித்தார்.

“உடனே அவனுக்கு போனப் போடு. அவன் படத்துல இருக்கணுமா? வேண்டாமானு கேளுங்க?” என்றார்.

இப்படியெல்லாம் பேசுவான் என்று முன்பே ஸ்ரீதருக்கு தெரியுமாதலால் ராமிடம் சொல்லி வைத்திருந்தான். ’எல்லா விதமான கோபமான பேச்சுக்கும் தயாராய் இரு’ என்று. 

போன் போட சொன்ன போது ட்ரை செய்வது போல நடித்து “நாட் ரீச்சபிள் சார்” என்றான். அவரே தன் மொபைலிருந்து போன் போடப் போக.. “வேணாம் சார். அந்த ப்ரோடியூசர்  கிட்டக் கூட பேசினேன். மொத ஷெட்யூல்ங்கிறதுனால ரொம்ப ப்ளான் பண்ணிட்டம். மாத்தினா செண்ட்டிமெண்டலா பீல் ஆகும்னு சொல்லுறாரு. வேணும்னா உங்க கிட்ட வந்து கூட பேசுறேன். அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தாங்கன்னு கேட்டாரு.

நான் கூட சொன்னேன் சார் அந்த மாதிரி பந்தா பண்ணுற ஆளு எல்லாம் கிடையாது எப்ப வேணா ஈஸியா பாக்கலாம்னேன். நீங்க சொன்னா கூட்டிட்டு வர்றேன்னு ராம் சொல்லியிருக்கான். இதை எப்படி உங்க  கிட்ட சொல்லுறதுன்னு பயந்துட்டேயிருக்கான்” என்று பெரிதாய் ஏற்றி விட சுரேந்தருக்கு பெருமையாய் இருந்தது.

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். என்ன ஓரு வாரம் தானே தள்ளிப் போவுது.”

“அவுட்டோர் மட்டும் தான் சார்.. இங்க ஹீரோயின் ஆபீஸ் போர்ஷன், வீட்டு போர்ஷன் எடுத்துரலாம் ஹீரோ தேவையில்லை” என்ற ஸ்ரீதரைப் பார்த்து மையமாய் தலையாட்டிய சுரேந்தரைப் பார்த்தால் பாவமாயிருந்தது ஸ்ரீதருக்கு. 

ஆனால் இப்படி சுரேந்தரை அலைக்கழிக்க வைப்பது அவ்வளவு நல்ல முடிவு இல்லை.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 33 - https://bit.ly/2E2ZYTK

பகுதி 32 - https://bit.ly/2FPlaza

பகுதி 31 - https://bit.ly/2DMmKjA 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close