[X] Close

தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்: தங்கத் தமிழ்ச் செல்வன்


thangatamilselvan-interview

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Oct, 2018 14:06 pm
  • அ+ அ-

தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கூறியிருக்கிறார்.
முன்னதாக நேற்று 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும் சபாநாயகர் முடிவில் தவறில்லை என்றும் உயர் நீதிமன்ற 3-வது நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கூறியிருக்கிறார்.

மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச் செல்வன், "சட்டப்பேரவைத் தலைவர் ஒவ்வொருமுறையும் பழிவாங்கும் நோக்குடன் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கிறார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். டிடிடிவியின் பக்கம் நாங்கள் நின்றதன் காரணத்துக்காகவே பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மாறிப்போட்ட 11 பேர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை வெளிச்சத்துக்கு கொண்டுவரவே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்.
18 பேரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு நாங்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வருவோம்.
மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் தேர்தலில் நிற்கத் தடையில்லை என தேர்தல் ஆணையரே தெரிவித்திருக்கிறார்.
30 நாளில் இருந்து 90 நாட்களுக்குள் நாங்கள் மேல்முறையீட்டுக்கு செல்வோம். முன்னதாக மேல்முறையீடு செல்ல மாட்டோம் எனக் கூறினோம். ஆனால், இப்போது இந்த மைனாரிட்டி அரசைப் பார்த்து பயமாக இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் பழிவாங்குகிறார்கள். நாங்கள் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போதுகூட அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியிழக்கச் செய்வார்களோ என்ற அச்சம் உள்ளது. அதனாலேயே மேல்முறயீடு செல்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close