[X] Close

மக்களவைத் தேர்தலில் போட்டியிட திருச்சி தொகுதியை குறிவைக்கும் வி.ஐ.பி.க்கள்


competition-for-trichy-election-seat

  • kamadenu
  • Posted: 24 Oct, 2018 13:18 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு கட்சியும் ரகசிய ஆய்வுகள் மூலம் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து, அமையவிருக்கும் கூட்டணியிடம் இருந்து அவற்றைக் கேட்டுப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனடிப்படையில் திருச்சி மக்களவைத் தொகுதியைக் கேட்டுப் பெறவும் இங்கு போட்டியிடவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில் திருச்சியில் களமிறங்க முயலும் விஐபிக்கள் குறித்த தகவல்கள் வருமாறு:

காங்கிரஸ்- சு.திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள தீயத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியைக் காட்டிலும், திருச்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதுவதால் இங்கு போட்டியிட சு.திருநாவுக்கரசர் முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன்

தற்போது திருச்சி மன்னார்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரான கே.எம்.காதர் மொய்தீன், 2004-ம் ஆண்டு வேலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியை திமுக கூட்டணியில் கேட்டுப் பெற்று, காதர்மொய்தீனை வேட்பாளராக்க அவரது கட்சியினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

பாஜக- லலிதா குமாரமங்கலம்

கடந்த 1998, 1999ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ரங்கராஜன் குமாரமங்கலம் இத்தொகுதியில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகவும் இருந்தார். உடல்நலக்குறைவால் அவர் மறைந்த பிறகு, 2004-ல் நடைபெற்ற தேர்தலில் அவரது சகோதரியான லலிதா குமாரமங்கலம் திருச்சியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தற்போது மகளிர் ஆணையத் தலைவராக உள்ள இவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கட்சியின் மேலிட நிர்வாகிகள் இதை விரும்புவதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இவர் போட்டியிட விரும்பாத பட்சத்தில் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி அல்லது திருச்சி தொகுதி பொறுப்பாளரான பொறியாளர் சுப்பிரமணியம் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதிமுக- ப.குமார்

ஆளும்கட்சியான அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள ப.குமார், திருச்சி தொகுதியில் கடந்த 2009, 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர். வரும் தேர்தலில் அமமுகவும் களத்தில் இருப்பதால், அதிமுக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் குமாரையே இத்தொகுதியில் போட்டியிட வைக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, திருச்சி தொகுதியில் 3-வது முறையாக களமிறங்குவதற்கான பணிகளை ப.குமார் தரப்பினர் தொடங்கிவிட்டனர்.

திமுக- மு.அன்பழகன்

திருச்சி மாநகர திமுக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான மு.அன்பழகன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழ லால் திமுகவினர் உற்சாகமாக பணியாற்றி வரும் நிலையில், இம்முறையும் திருச்சி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட மு.அன்பழகன் முயற்சி செய்து வருகிறார்.

இதுதவிர புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக நிர்வாகியான அப்துல்லா என்பவரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அமமுக- சாருபாலா தொண்டைமான்

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான், கடந்த 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பா ளராக போட்டியிட்டு ப.குமாரிடம் தோல்வியடைந்தார்.

தற்போது அமமுக அமைப்புச் செயலாளராக உள்ள இவர், இம்முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட முயற்சிப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியைக் காட்டிலும், திருச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதுவதால் இங்கு போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- அ.வேலுச்சாமி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close