[X] Close

அதிமுகவின் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெருமிதம்


sengotaiyan-speech-about-admk

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 11:32 am
  • அ+ அ-

மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அனைத்தும் செயல் படுத்தப்படுவதால், அதிமுகவின் ஆட்சிகாலம் பொற்காலம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஆவின் தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

அதிமுகவை அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர். இந்த இயக்கத்தை சிலர் ஆட்டி, அசைத்து விடலாம் என நினைக்கின்றனர். இந்த இயக்கத்தை 100 ஆண்டுகள் வரை யாரும் அசைக்க முடியாது என ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறினார். விலையில்லா வேட்டி, சேலை, சத்துணவு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை இந்தியாவே வியக்கும் வகையில் செயல்படுத்தியவர் எம்ஜிஆர்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, கள்ள லாட்டரி, கள்ளச்சாராயம் விற்பது கிடையாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் தூய்மையாகவும், நேர்மையாகவும், மனித நேயத்துடன் இருக்கின்றனர். இந்த கட்சியில் மட்டும் தான் குடும்ப அரசியல் கிடையாது. கட்சிக்காக உழைப்பவர்கள் முன்னுக்கு வரலாம். ஜனநாயகம் நிறைந்த கட்சி அதிமுக. மின்வெட்டினால், தி.மு.க.வின் ஆட்சிக்காலம் இருண்ட காலமாக இருந்தது. தமிழகத்தை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி செய்த காலங்கள் எல்லாம் பொற்காலமாக விளங்குகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலம் தமிழகத்தின் பொற்காலம். அதைப்போல், மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படுவதால், அதிமுகவின் ஆட்சிகாலம் பொற்காலம்.

சித்தோட்டில் இருந்து நீலகிரி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் 1 வாரத்தில் தொடங்கும். நம்பியூர் மற்றும் சுற்றுப்புறப்பகுதியை வளமாக்கும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும். இந்த அரசு நல்ல அரசு என்பதால்தான் தினமும் மழை பெய்து வருகிறது, என்றார்.

முன்னதாக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் நடிகர் ஏ.கே.ராஜேந்திரன் பேசினார். மாவட்ட கழக துணைச்செயலாளர் சுலோச்சனா நடராஜ், மாவட்ட பேரவை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close